privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!

உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!

-

2012-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் கடந்த மாதம் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பதினைந்து திரைப்படங்கள் இருபத்து நான்கு பிரிவுகளின் கீழான விருதுகளுக்குப் போட்டியிட்டன. இவற்றில் ஆர்கோ, ஜீரோ டார்க் தர்டி மற்றும் லிங்கன் ஆகிய திரைப்படங்கள் நமது கவனத்துக்குரியவை.

ஆர்கோ சிறந்த திரைப்படத்திற்காகவும் மற்றும் வேறு இரண்டு பிரிவுகளின் கீழும், ஜீரோ டார்க் தர்டி சிறந்த ஒலிப்பதிவுக்காகவும், லிங்கன் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக இரண்டு விருதுகளையும் வென்றுள்ளன.

இந்த மூன்று திரைப்படங்களும் அமெரிக்காவின் இன்றைய உலக மேலாதிக்கத் திட்டத்துக்குப் பொருத்தமான பிரச்சாரத்தை ஒத்திசைவான முறையில் மேற்கொண்டிருக்கின்றன.

ஆர்கோஆர்கோ: 1979 இல் நடந்த இரானியப் புரட்சியின் பின்புலத்தில் சித்தரிக்கப்படும் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள கொஞ்சம் வரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும். 1951 இல் இரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொகமத் மொசாதே, அன்று பிரிட்டனுக்கு சொந்தமாக இருந்த எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கினார். நிலச்சீர்திருத்தம், குத்தகை உச்சவரம்பு, மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை அடுக்கடுக்காக அமலாக்கினார். இதனால் உள்நாட்டு நிலவுடமை சக்திகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் கூட்டணி ஆத்திரம் கொண்டது.

1953 இல் சி.ஐ.ஏ – பிரிட்டன் கூட்டுச் சதியின் மூலம் ஒரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டு, மொசாதே சிறை வைக்கப்பட்டார். அதிகாரம் அமெரிக்க கைப்பாவையான மன்னர் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1953 முதல் 1979 வரை நீடித்த ஷாவின் கொடுங்கோல் ஆட்சி, சித்திரவதைக்கு உலகப் புகழ் பெற்றது. 1979 புரட்சி ஷாவின் இந்தக் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி எறிந்தது. ஷா வுக்கு அமெரிக்கா அடைக்கலம் தந்தது. மக்கள் விரோதியான ஷாவை விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டுமென்றும், அவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரினார்கள் இரான் மக்கள். அமெரிக்கா மறுத்தது. ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராக குமுறிக்கொண்டிருந்த மக்களின் ஆத்திரம் வெடித்தது.

தலைநகர் டெஹ்ரானில் இருந்த அமெரிக்கத்  தூதரகத்தை 1979-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி இரான் போராட்டக்காரர்கள் முற்றுகையிடுகிறார்கள்; பின் கைப்பற்றுகிறார்கள். இந்த நடவடிக்கையில் சுமார் 52 அமெரிக்கர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆறு அமெரிக்கர்கள் போராட்டக்காரர்களிடம் சிக்காமல் தப்பித்து, கனடா நாட்டு தூதரகத்தில் மறைந்து கொள்கிறார்கள். இந்த ஆறு அமெரிக்க அதிகாரிகளையும் விடுவிக்க அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ எடுத்த நடவடிக்கை தான் ஆர்கோவின் கதை. உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே ஆர்கோவின் கதை பின்னப்பட்டிருக்கிறது.

மீட்புப் பணிக்குப் பொறுப்பேற்கும் சி.ஐ.ஏ அதிகாரி டோனி மென்டஸ்,  கனடாவைச் சேர்ந்த நிறுவனம்  ஹாலிவுட் திரைப்படம் ஒன்றைத் தயாரிப்பது போலவும், அதற்கான வெளிப்புறப் படப்பிடிப்பு நடத்த ஈரானில் இடம் தேட வருவது போன்றும் நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார். ஹாலிவுட்டின் நம்பத்தக்க திரைப்பட தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்கள் போன்றோர் சி.ஐ.ஏ வின் இந்த நாடகத்துக்கு  ஒத்துழைக்கிறார்கள். போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டு கனடா நாட்டுக்காரரைப் போல இரானுக்குள் சட்டப்பூர்வமாக ஊடுருவுகிறார் டோனி. பின் கத்தியின்றி ரத்தமின்றி ஈரானிய அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி ஆறு அமெரிக்க அதிகாரிகளையும் டோனி எப்படி மீட்கிறார் என்பதே ஆர்கோவின் கதை.

ஜீரோ டார்க் தர்டிஜீரோ டார்க் தர்டி  என்ற படத்தின் கதை பின்லாடன் வேட்டை. பின்லேடனை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கும் பணி மாயா எனும் சி.ஐ.ஏ பெண் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. சுமார் பத்தாண்டுகள் இந்தக் கதை பயணிக்கிறது. பல்வேறு நாடுகளில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் முசுலீம் இளைஞர்களை, வெவ்வேறு நாடுகளின் சித்திரவதைக் கூடங்களில் துன்புறுத்தி, சேகரித்த சின்னச் சின்ன தகவல்களை ஒரு வரிசையில் கோர்க்கும் மாயா, பின் லாடன் ஆப்கான் குகையில் இல்லை, ஏதோ நகரத்தில்தான் இருக்கிறார் என்று ஊகிக்கிறார்.  இதனடிப்படையில் பின்லேடனின் வெளியுலகத் தொடர்பாக செயல்பட்டு வந்த தூதுவர் அபு அஹமத்தை அடையாளம் காண்கிறார்.

அபு அஹமத்தைப் பின்தொடந்து பின்லேடன் பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் ரகசியமாகத் தங்கியிருக்கும் பங்களாவைக் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் அங்கே தான் பின்லேடன் தங்கியிருக்கிறார் என்பதற்கு உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் மாயாவின் மேலதிகாரிகள் நேரடி நடவடிக்கையில் இறங்க தயங்குகிறார்கள். மாயாவோ அங்கே தான் பின்லேடன் பதுங்கியிருப்பதாக உறுதியாக நம்புகிறார். மேலதிகாரிகளிடம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்துகிறார்.  மாயாவின் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர்தான் நேரடி நடவடிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கிறது. பின்லேடன் கொல்லப்படுகிறார் – கதை முடிகிறது.

மொழி தெரியாத ஒரு நாட்டில், வேறுபாடான ஒரு கலாச்சார, அரசியல், சமூக சூழலில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகப் பழிவாங்க ஜீரோ டார்க் தர்டியில் களமிறங்கும் சிஐஏ அதிகாரிகள். முப்பதாண்டுகளுக்கு முந்தைய கதையான ஆர்கோவிலும் அதே போன்றதொரு சூழலில் ‘அப்பாவி’ அமெரிக்கர்களை விடுவிக்க தங்கள் உயிரையே பணயமாக வைக்கும் சி.ஐ.ஏ அதிகாரி. களத்தில் நிற்கும் சி.ஐ.ஏ  அதிகாரிகள் நாட்டைக் காக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் போது அவர்களது மேலதிகாரிகளோ ஊசலாட்டமான மனநிலையில் இருக்கிறார்கள். ஜீரோ டார்க் தர்டி கதையின் நாயகி இரண்டு முறை மரணத்திற்கு நெருக்கமாகச் சென்று திரும்புகிறாள். ஆர்கோ பட நாயகன் டோனியோ ஈரானிய அதிகாரிகளின் சந்தேகப் பார்வையின் கீழேயே இயங்குகிறான்.

இரண்டு திரைப்படங்களும் அமெரிக்கா நியாயத்தின் பக்கம் நிற்பதாகவே சித்தரிக்கின்றன. இரானில்  1953 இல் அமெரிக்கா நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு,  அரை நிமிடத்திற்கும் குறைவான சுருக்கமான விவரிப்பாக ஆர்கோவில் வந்து செல்கிறது. எனினும், ஷா என்ற கிரிமினலைப் பாதுகாப்பதற்காக,  தனது தூதரக அதிகாரிகளைப் பலி கொடுக்கவும் தயாராக இருக்கும் அமெரிக்க அரசைப்பற்றி, சிக்கிக்கொண்ட பிணையக் கைதிகள் கூட விமரிசிப்பதில்லை. மாறாக, படம் நெடுக கைது செய்யப்பட்டவர்களின் நிர்க்கதியான நிலையும், அவர்களின் கண்ணீரும், ஏக்கங்களும் முன்நிலைப்படுத்தப்பட்டு, அமெரிக்கர்கள் மீது ஒரு பரிதாப உணர்ச்சி உருவாக்கப்படுகிறது.

ஈரானின் போராடும் மக்களோ மூர்க்கமான வெறியர்களாக காட்டப்படுகிறார்கள். டோனி ஈரானுக்குள் நுழையும் போது சாலையோரங்களில் வெள்ளையர்கள் பகிரங்கமாக தூக்கிலிட்டுக் கொல்லப்படும் காட்சிகள் கடந்து செல்கிறான். பதுங்கியிருக்கும் ஆறு பேரின் பயபீதி கொண்ட முகங்கள் திரையையும் திரைக்கும் முன் அமர்ந்திருக்கும் ரசிகனின் கண்களையும் ஆக்கிரமிக்கின்றன. ஒட்டுமொத்த திரைக்கதையும் அமெரிக்க பிணைக்கைதிகளின் பார்வையிலேயே நகர்வதால், ஷாவின் இவிரக்கமற்ற கொடூரமான ஆட்சியும், அதில் பாதிக்கப்பட்ட லட்சோபலட்ச ஈரானியர்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கைக்கும் படத்தில் இடமே இல்லை. சிஐஏ அதிகாரிகள் மனிதாபிமானமிக்க நாயகர்களாகவும், மக்கள் கொலைவெறி கொண்ட கும்பலாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், ஜீரோ டார்க் தர்டியின் திரைக்கதைக்கு ‘கொன்றான் – கொல்கிறோம்’ என்கிற எளிய சூத்திரமே போதுமானதாக இருக்கிறது. படத்தின் துவக்க காட்சிகளில் இரட்டை கோபுரங்கள் தகர்வதன் பின்னணியில் மரண ஓலங்கள் கேட்கின்றன – சில நொடிகளுக்குத் தான். அடுத்த காட்சியில் பாகிஸ்தானின் சித்திரவதைக் கூடமொன்றில் குற்றுயிரும் குலை உயிருமாக கட்டிப் போடப்பட்டிருக்கும் முசுலீம் கைதியை விசாரிக்கும் சிஐஏ அதிகாரி டேனியல், “இங்கே நான் தான் உனது எஜமானன்” என்கிறான்.

கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் முசுலீம் கைதியிடம் “மூவாயிரம் அப்பாவிகளைக் அநியாயமாய்க் கொன்று விட்டீர்களே” என்று டேனியல் கத்தும் போது சி.ஐ.ஏ அதிகாரி மாயா உணர்சிகளற்ற முகத்தோடு, கைதியிடமிருந்து கிடைக்கப் போகும் தகவலுக்காய் காத்து நிற்கிறாள். முப்பதாண்டுகளுக்கு முன் நடக்கும் ஆர்கோ கதையின் நாயகன் டோனிக்கு இந்த சுதந்திரம் இல்லை. முறைத்துப் பார்க்கும் ஈரானிய அதிகாரிகளின் முகங்களை நேருக்கு நேராய்ப் பார்ப்பதைத் தவிர்த்து தலை கவிழ்ந்து செல்கிறான் டோனி. ஆறு அமெரிக்கர்களை வேனில் அழைத்துச் செல்லும் போது எதிர்ப்படும் ஈரானிய மக்களின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தைக் கண்டதும் டோனி பதைத்துப் போகிறான். சிக்கினால் மரணம் நிச்சயம் எனும் நிலையில் அந்த அறுவரின் முகங்களில் மரணபீதி தாண்டவமாடுகிறது.

இரண்டு படங்களிலும் நல்ல முசுலீம் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஆர்கோ படத்தில் அமெரிக்கர்களைக் காப்பாற்றும் ஈரானிய வேலைக்காரி தனது சொந்த தீர்மானத்தின் பேரில் அவ்வாறு செய்கிறாள். முப்பதாண்டுகள் கழித்து நடக்கும் ஜீரொ டார்க் தர்டி கதையிலோ முசுலீம்களின் தேர்வு செய்யும் உரிமையை அமெரிக்கர்களே கட்டுப்படுத்துகிறார்கள். “சொல்கிறாயா, இசுரேலில் இருக்கும் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கவா?” என்று கைதியை மிரட்டுகிறாள் மாயா.

சி.ஐ.ஏ உலகெங்கும் நிறுவியிருக்கும் ரகசிய சித்திரவதைக் கூடங்களையும் சித்திரவதைகளையும் ஜீரோ டார்க் தர்டி  இயல்பாக காட்டிச் செல்கிறது.  டேனியல் தன்னிடம் சிக்கிக் கொண்டுள்ள கைதியைத் தூங்க விடாமல் செய்கிறான்; தன் சக பெண் அதிகாரியின் முன்னிலையில் நிர்வாணப்படுத்துகிறான், பட்டினி போடுகிறான்; கழுத்தில் நாய்ப் பட்டியைக் கட்டி சங்கிலியால் பிணைத்து இழுத்துச் செல்கிறான். இதே போன்ற வழிமுறைகள் பாகிஸ்தான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சித்திரவதைக் கூடங்களிலும் பின்பற்றப்படுவதாக காட்சிகள் வருகின்றன. ஆனால், அதை விட நாம் கவனம் கொள்ள வேண்டியது இவையெல்லாம் எங்கே யாரால் ஏன் நடத்தப்படுகின்றன  என்பது பற்றித் தான்.

எனக்குத் தேவைப்படும் நீதியை உலகின் எந்த மூலைக்கும் சென்று நிலைநாட்டும் உரிமை எனக்கு உள்ளது என்பது தான் அமெரிக்கா ஜீரோ டார்க் தர்டியின் மூலம் சொல்லும் செய்தி. டேனியல் தனது கைதியைப் பார்த்து “எனக்குத் தேவையான தகவல்களைத் தராவிட்டால், உன்னைக் காயப்படுத்துவேன்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறான். அவை உண்மையில் நம்மைப் பார்த்து – நமக்காகச் சொல்லப்படும் வார்த்தைகள். “நீ எங்களோடு இல்லாவிட்டால் எமது எதிரியாவாய்” எனும் புஷ்ஷின் வார்த்தைகள் அவை.

முப்பதாண்டுகளுக்கு முன் அமெரிக்காவால் இப்படிப்  பச்சையாகப் பேச முடியவில்லை.  இன்று அடாவடியாக செய்யும் எல்லா நடவடிக்கைகளையும் அன்று கள்ளத்தனமாகவே அமெரிக்கா செய்யவேண்டியிருந்தது. எனவே தான் ஆர்கோவில் சி.ஐ.ஏ அதிகாரிகள் அடக்கிவாசிக்கிறார்கள்.  உண்மையில் இந்த ஆறு அமெரிக்கர்களும் டோனியின் முயற்சியால் தப்பித்த பின் எஞ்சிய 52 பேரை இரானுடன் பேச்சு வார்த்தை நடத்தி 444 நாட்கள் கழித்தே அமெரிக்கா விடுவித்தது. இதே நிலை இன்று அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்  என்பதை நாம் ஜீரோ டார்க் தர்டியிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆர்கோ கதை நடக்கும் காலப்பகுதியில் நிலவிய உலக அரசியல் சூழலில் அமெரிக்காவுக்கு எதிர்த் தரப்பு என்கிற ஒன்று பெயரளவிற்காவது இருந்தது. இன்றைக்கு இருப்பதைப் போன்ற ஒற்றைத் துருவ மேலாதிக்கம் அன்று இல்லை. தேச எல்லைகளைக் கடந்து, பல்வேறு நாடுகளின் இறையாண்மையை ஊடுருவிச் சென்று தான் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் பூமிப் பந்தின் எந்த மூலையிலும் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்காவுக்கு இன்றைக்கு இருக்கும் அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான ‘சுதந்திரம்’ அன்றைக்கு இல்லை. ரசியா தலைமையிலான எதிர் முகாம் ஒன்று இருந்தது.

இன்றோ ரசிய முகாம் சிதைந்து விட்டது. பிற மேற்குலக வல்லரசுகளின் நலன்களும் அமெரிக்காவின் பொருளாதார இராணுவ நலன்களோடு பிரிக்க முடியாதபடிக்கு இணைந்துள்ளன. பிற நாடுகளின் பொருளாதாரங்கள் அனைத்தும் அமெரிக்க நுகர்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், மொத்த உலகின் பொருளாதார இயக்கமும் அமெரிக்கா என்கிற ஒற்றை எஞ்சினோடு பிணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மரணம் பிற நாடுகளையும் புதைகுழிக்குள் இழுத்து விடும் என்பதே இன்றைய உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் எதார்த்தமாக இருக்கிறது.

எனவே தான் இன்று இரண்டாயிரங்களில் கதை நகரும் ஜீரோ டார்க் தர்டியில் பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து எந்தக் கேள்வி முறையுமின்றி வேட்டையாடும் அமெரிக்காவால் அன்று எந்த இரானியன் மேலும் சுண்டு விரலைக் கூட வைக்க முடியவில்லை.

தற்போது இந்தப் படங்கள் வெளிவந்துள்ள காலம் கவனத்திற்குரியது. இன்று உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மீதும் ஆசிய நாடுகள் மீதும் பொருளாதார நெருக்கடி  எனும் இருள் கவிந்து வருகிறது. இந்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கும், இதனைச் சாக்காக வைத்து தனது உலக மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் அமெரிக்கா முயற்சிக்கிறது.  பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் உலக நாடுகளின் பொருளாதாரங்களையும் பொதுச்சொத்துக்களையும்  இயற்கை வளங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. அதற்குத் தடையாக நிற்கும் நாடுகளின் மேல் நேரடியாகவே அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் தலையிடுகிறது.

ஆப்கானில் நுழைந்ததை பழிவாங்கல் எனும் பெயரில் நியாயப்படுத்தியாகி விட்டது; ஈராக்கை கபளீகரம் செய்ததற்கு ‘பேரழிவு ஆயுதங்களைக்’ காரணம் காட்டியாகி விட்டது;  லிபியாவைக் கைப்பற்றியாகி விட்டது. பாடம் புகட்டப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில், ஈரான், சிரியா, வெனிசுவேலா மட்டுமின்றி பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளும், வட கொரியாவும் கூட உண்டு.

தனது தலையீட்டுக்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் பொய் என்று பின்னர் பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், தனது பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தி விடவில்லை. ஆக்கிரமிப்புகளையும் மேலாதிக்கத்தையும் நிறுத்தி விட்டு அமெரிக்கா உயிர் வாழ முடியாது என்ற காரணத்தினால், பொய்ப்பிரச்சார நிறுவனங்கள் மற்றும் ஐந்தாம்படைகள் என்பவை அமெரிக்க மேலாதிக்கத்தின் கட்டுமானத்தில் நிரந்தரமாக அங்கம் வகிக்கின்றன. புதிய முறைகளில், புதிய வடிவங்களில், புதிய நிறுவனங்கள் மூலம் தனது பொய்யைப் பரப்ப அவை இடையறாது சிந்தித்து செயல்படுகின்றன.

ஜார்ஜியாவிலும், செக்கோஸ்லோவாகியாவிலும், மத்திய ஆசிய நாடுகளிலும் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் வண்ணப்புரட்சிகளையும், தற்போது சிரியாவில் ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றும் நோக்கத்துடன் நடந்துவரும் கலகங்களையும் கருத்தியல் தளத்தில் பின் நின்று இயக்கியது  அமெரிக்க என்.ஜி.ஓவான ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை மற்றும்  ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் போன்ற அமைப்புகள்தான்.

தனது அரசியல் இராணுவக் காய் நகர்த்தல்களுக்கு ஏற்ற முறையில் இயங்கும் கருவிகளாக ஊடகங்களையும், என்.ஜி.ஓக்களையும் பொருத்தமான முறையில் அமெரிக்கா பயன்படுத்துகிறது. சுகாதாரம், கல்வி, மருத்துவம், சுய தொழில், பெண்கள் உரிமை, விளிம்பு நிலை மக்களின் உரிமை, கான்சர், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு என்று சகல தளங்களிலும் புகுந்து புறப்படும் என்.ஜி.ஓக்களின் ஒவ்வொரு சமூக அக்கறைக்கும் பின்னால் குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் நலனோ , அல்லது அமெரிக்க ஐரோப்பிய அரசுகளின் மேலாதிக்க நோக்கமோ இருக்கின்றன.

நேர்மறையான பிரச்சினைகள் சிலவற்றை எடுப்பதன் மூலம் தமது செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஊடகங்களும் தொண்டு நிறுவனங்களும், மக்களிடம் பெற்றிருக்கும் அந்த அங்கீகாரத்தை  உரிய நேரத்தில், உரிய முறையில் அமெரிக்காவின் நோக்கத்துக்குப் பயன் படுத்துகின்றன. நீயா நானா நிகழ்ச்சியில் கருத்து சுதந்திரம், அறம் ஆகியவை பற்றியெல்லாம் பொளந்து கட்டும் விஜய் டிவியின் உரிமையாளரான ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் நெட்வொர்க்தான், இராக்கில் பேரழிவு ஆயுதங்களை சதாம் மறைத்து வைத்திருப்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து ஆக்கிரமிப்பு போருக்கு கொம்பு ஊதியது.

1953 இல் மொசாதேயின் ஆட்சியைக் கவிழ்த்து ஷா வின் ஆட்சியை இரானில் நிலைநிறுத்திய அமெரிக்கா, 1979 இல் ஷா  தூக்கியெறியப்பட்ட பின் தானும் இரான் மக்களிடமிருந்து தனிமைப்பட நேர்ந்த து. அந்த காலகட்டத்தின் தவறுகளிலிருந்து அமெரிக்கா பாடம் படித்துக் கொண்டு விட்டது. சர்வாதிகாரிகளை ஸ்பான்சர் செய்கின்ற அதே நேரத்தில், சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் புரட்சியையும் தானே ஸ்பான்சர் செய்வதன் மூலம் தனது மேலாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்  என்ற அனுபவத்தை அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியஙகளும் கற்றிருக்கின்றன. எனவே, சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளையும் கூட என்ஜிஓ க்களே கொம்பு ஊதி தொடங்கி வைக்கின்றன.  அனைவரையும் முந்திக் கொண்டு அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தையும் என்ஜிஓக்களே முன்கை எடுத்து நடத்துகின்றன.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலை வரையில் ராஜபக்சே அரசுக்குத் துணை நின்ற அமெரிக்காவின் உள்ளத்தில் கடந்த   இரண்டு ஆண்டுகளாக மனிதாபிமானம் சுரப்பதும், போர்க்குற்ற ஆதாரங்கள் தவணை முறையில் வெளியிடப்படுவதும், தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது குறித்த உண்மையை கண்டுபிடித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இப்போது வெளியிடுவதும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

அரசியல் – இராணுவ தலையீடுகள், ஊடகப் பிரச்சாரம், என்.ஜி.ஓக்களின் களச் செயல்பாடுகள் எனும் வரிசையில் தான் ஹாலிவுட் திரைப்படங்களும் வருகின்றன. கம்யூனிச எதிர்ப்பு –  ஜனநாயகம் என்பதற்கு பதிலாக, பயங்கரவாத எதிர்ப்பு – ஜனநாயகம் என்ற முழக்கத்தை முன்தள்ளும் அமெரிக்கா, எந்த நாடுகளிலெல்லாம் தலையிட விரும்புகிறதோ அவை ஜனநயாக விரோதமானவை என்றோ பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவை என்றோ ரவுடி அரசுகள் என்றோ முத்திரை குத்துகிறது.

லிங்கன்இரானின் மீது தாக்குதல் தொடுக்கத் துடிக்கும் அமெரிக்கா, அதற்கு எதிரான புதிய புரட்டுகளை உருவாக்குவதற்கு முன்னர், பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது.  ஆர்கோவில் மூர்க்கத்தனமான இரானியர்களிடமிருந்து  பரிதாபத்துக்குரிய அமெரிக்கர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். ஜீரோ டார்க் தர்டியில், தமது கடமையை நிறைவேற்றுவது ஒன்றைத்தவிர வேறு எந்தப் பற்றோ எதிர்பார்ப்போ இல்லாத மாயாவைப் போன்ற அமெரிக்க அதிகாரிகள், பயங்கரவாத ஒழிப்பு பணிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலைக்  காட்டுவதன் மூலம் கூட அமெரிக்கர்களைப் பாதிக்கப்பட்ட சமூகமாக சித்தரித்து நம்பவைக்க முடியாது என்பதனால், 1979 இன் இரானியப் புரட்சியை துணைக்கழைக்கிறது ஹாலிவுட். விவகாரம் அதோடு முடியவில்லை.  தனது ஆக்கிரமிப்புகளின் நோக்கம் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதுதான் என்பதை எப்படி நம்ப வைப்பது?  அதற்கு புஷ்ஷும் ஒபாமாவும் பயன்படமாட்டார்கள் என்பதனால், அமெரிக்க ஜனநாயகத்தின் மேன்மையையும் தூய்மையையும் நிரூபிக்க ஆபிரகாம் லிங்கன் வரவழைக்கப்படுகிறார். அடிமை முறையை ஒழிக்க அபிரகாம் லிங்கன் நடத்திய போராட்டத்தை யாரேனும் மறுக்க முடியுமா என்ன?

ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கும் இந்த மூன்று படங்களையும் ஒரே திட்டத்தின் கீழ் யோசித்து தயாரித்திருப்பார்கள் என்பது அதீதமான கற்பனை என்று சிலருக்குத் தோன்றலாம். அவ்வாறுதான் நடந்திருக்க வேண்டும் என்று நாமும் கூறவில்லை. உடுக்கை இழந்தவன் கை போல, எந்த திசையை நோக்கி நகர வேண்டுமோ அந்தத் திசையை நோக்கி ஹாலிவுட்டின் கரங்கள் – அதாவது மூளைகள் – யாருடைய தூண்டுதலும் இன்றி, அனிச்சையாக நகர்கின்றன என்பதில்தான்  அமெரிக்க வல்லரசுடைய வெற்றியின் இரகசியம் அடங்கியிருக்கிறது.

– நாசர்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________