வுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான், மத அடிப்படைவாத நாட்டின் ‘சீர்திருத்தவாதி’யாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படுகிறார். மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியாளர் ஒருபோதும் சீர்திருத்தவாதியாக இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாகவும் அவர் இருக்கிறார். இளவரசரின் போலி சீர்திருத்தங்களை கேள்வி கேட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். இப்படி தலைமறைவான பத்திரிகையாளர் ஒருவர், சவுதி தூதரக வளாகத்துக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கிறார்.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர், ஜமால் கசோகி.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கசோகி என்ற பத்திரிகையாளர் துருக்கி இஸ்தான் புல் நகரத்தில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை திட்டமிட்ட கொலை என்றும் 15 நபர் கொண்ட குழு பத்திரிகையாளர் ஜமாலை கொல்ல பணிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவிக்கிறது.

சவுதி அரசு தன்னை எதிர்ப்பவர்களின் குரலை முடக்கிக் கொண்டிருப்பது ஜமாலின் கொலை மூலம் நிரூபணமாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. சவுதி இளவரசர் பதவியேற்றபின், அதிகாரிகள், தொழில் துறையை சார்ந்தவர்கள், பெண்கள் உரிமை தொடர்பான செயல்பாட்டாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கான நபர்கள் ‘தேசத்தின் பாதுகாப்பு’ என்ற பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ள தலையங்கத்தில், “ஜமால் கொல்லப்பட்டது உண்மையெனில், அது ஒரு கொடூரமான செயலாகவே இருக்க முடியும். ஜமால், ஈடுபாடும் துணிச்சலும் மிக்க பத்திரிகையாளர். தன் நாட்டின் மீதான ஆழமான காதலாலும் மனித கண்ணியத்தின் மீதான ஆழமான நம்பிக்கையாளும் விடுதலை உணர்வாலும் அவர் எழுதினார். அவர் தன்னுடைய நாட்டை மதித்தார், அதுபோல் மத்திய கிழக்கையும் இந்த உலகத்தையும்கூட. அவருடைய எழுத்துக்களை பிரசுரித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்”.

ஜமால், சவுதி அரசு வட்டாரத்தில் செல்வாக்குமிக்க நபராக இருந்திருக்கிறார். சவுதி செய்தி ஊடகம் ஒன்றின் ஆசிரியராகவும் சவுதி உளவுத்துறை தலைவரின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

பத்திரிகையாளராக ஜமால், சவுதி அரச குடும்பத்தின் அளவற்ற அதிகாரம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார். எனவே, சவுதி அரச குடும்பம் அவரை எதிரியாக பார்த்தது. சவுதி இளவரசர்  முகமது பின் சல்மான் பதவியேற்றபின், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவாக இருந்தார்.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் தனது பாஸ்போர்டை புதுப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 2-ஆம் தேதி வந்த அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்கிறது துருக்கி அரசு. ஆனால் சவுதி அரசு இதை மறுக்கிறது. ஜமால் தூதரகம் வந்து சென்றதற்கான சி.சி.டி.வி. ஆதாரங்களை வெளியிடவும் அந்த அரசு மறுக்கிறது.

“பயம், அச்சுறுத்தல், கைது, பொது அவமதிப்பு” என சவுதியின் புதிய தொடக்கம் குறித்து வாஷிங்டன் போஸ்டில் கட்டுரை எழுதியிருந்தார் ஜமால்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.

சவுதி இளவரசரின் சீர்திருத்தங்களின் போலித்தனத்தை கடுமையாக விமர்சித்து வந்தார்.  “உள்நாட்டு சீர்திருத்த முயற்சிகளுக்காக இளவரசர் பாராட்டுக்குரியவர்தான். அதேசமயம், விவாதங்களையோ உரையாடலையோ அவர் ஊக்குவிப்பதும் இல்லை; அனுமதிப்பதும் இல்லை.  அவரே சொல்வது போல ’அடிப்படைவாத சீர்திருத்தங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் அல்லது காணாமல் போவீர்கள்’. அதாவது, பழங்கால மத அடிப்படைவாதத்துக்குள் நாட்டை கொண்டு செல்வதுபோல் தெரிகிறது.” என கார்டியன் இதழில் எழுதிய பத்தியில் விமர்சித்துள்ளார் ஜமால்.  அரசுக்கு எதிரான ஜமாலின் விமர்சனத்தால் உள்நாட்டு அரபு பத்திரிகைகளில் எழுதுவது தடை செய்யப்பட்டது. ஏமனில் நடந்து வரும் போரில் சவுதி அரேபியாவின் பங்கையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தார்.  ஈரானை ஆதரிப்பதற்காக கத்தார் நாட்டை புறக்கணிக்கும் சவுதியின் முடிவை அவர் எதிர்த்து எழுதினார்.

தன் இளமை காலத்தில் இசுலாமிய கோட்பாடுகள் குறித்து பயின்ற ஜமால், பின்நாளில் முற்போக்கு சிந்தனை மீது ஈடுபாடுகொண்டார். 80களில் சவுதி நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றத் தொடங்கியவர். தன்னுடைய முற்போக்கு சிந்தனை காரணமாக 2003-ஆம் ஆண்டு அல் வட்டன்  என்ற சவுதி நாளிதழின் ஆசிரியர் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.

படிக்க:
சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து
இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

இவர் பதவியேற்றபின் கைதுகளும் கொலைகளும் அரங்கேறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், ‘சவுதி விஷன் 2020’ என்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதன்படி, சவுதி பெண்களுக்கு வாகனங்களை ஓட்டும் உரிமை அளிக்கப்பட்டது. இப்போது சவுதி வரலாற்றில் முதன்முறையாக வங்கி ஒன்றின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபராகவும் வங்கி துறை பின்புலத்தில் இயங்கிவரும் லும்னா அல் ஒலயான் என்பவர் சவுதியின் மூன்றாவது பெரிய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது, அடிப்படைவாத சமூகத்தில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு முயற்சி என மேற்கத்திய ஊடகங்கள் சவுதி அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருக்கும் வேளையில், தன்னுடைய அடிப்படைவாத முகத்தை மறைக்க, சீர்திருத்தவாதி முலாமை பூசிக் கொண்டிருக்கிறார் சவுதி இளவரசர். மத அடிப்படைவாதிகள் எப்படி சீர்திருத்தவாதிகளாக இருக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத் சொல்லும் சீர்திருத்தங்களும்கூட இந்த வகையில்தான் சேரும்.

செய்தி ஆதாரம்:

  • Saudi Journalist Killed By ‘Murder Team’ At Consulate In Turkey: Sources
  • Jamal Khashoggi, Journalist Believed Dead, A Sharp Critic Of Saudi Royals
  • Lubna Al Olayan appointed as first woman Saudi bank head