மனில் மிகக் கடுமையான உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வரும் சூழலில் அப்போரில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தலையிட்டுவரும் சவுதி அரேபியாவிற்கு கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 43 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை ஜி-20 நாடுகள் வழங்கியுள்ளன என்பதை ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல ஒரு பக்கத்தில் தாக்குதல் நடத்த சவுதிக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு, மறுபக்கத்தில் ஏமனுக்கும் உதவித் தொகையை வழங்கியுள்ளன ஜி20 நாடுகள். சவுதிக்கு ஆயுதங்கள் வழங்கிய மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு உதவித்தொகையை வழங்கியுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் (Oxfam) அறிக்கை கூறுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களால் உலகின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை ஏமன் சந்தித்து வருகிறது. கிட்டதட்ட 1 கோடி மக்கள் பட்டினியாலும், காலரா நோயினாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதி மருத்துவமனைகள் மட்டுமே செயல்படுகின்றன. மேலும், பத்து நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், நீர்த்தொட்டிகள் மற்றும் குடிநீர் கிணறுகளின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடப்பதாக ஆக்ஸ்ஃபாம் கூறியிருக்கிறது.

படிக்க :
♦ பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
♦ கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !

சவுதி அரேபியாவில் ஜி-20 மாநாடு நவம்பர் 21, 22 ஆகிய நாட்களில் நடப்பதற்கு முன்னரே, அடுத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் சவுதிக்கு அயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்த போவதாக கூறியுள்ளார்.

ஆனால், ஒபாமா-பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் அதற்கு அரசியல் ரீயிலான பாதுகாப்பையும் வழங்கியது. ஏமனில் குழந்தைகள் மீதான சவுதியின் தாக்குதலை ”உலகின் வெட்கங்கெட்ட செயலில் ஒன்றாக” அன்று ஐ.நா பட்டியலிட்டது. சவுதிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வாய்ப்புகள் வந்தபோது, ஒபாமாவோ பைடனோ பேசாமல் வாய்மூடி இருந்தனர். மாறாக, ஐநாவின் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி வரும் நிதியாதாரத்தை நிறுத்துவதாக ரியாத் தலைமை மிரட்டியதாக கூறி சவுதியின் பெயரை அந்த பட்டியலிலிருந்து நீக்கினார் அன்றைய ஐ.நா தலைவர் பன்-கி-மூன். அமெரிக்க அரசின் தலையீடோ ஒப்புதலோ இல்லாமல் இது நடந்திருக்க சாத்தியமே இல்லை. ஆகவே பைடனின் இந்த அறிவிப்பும் கூட முதலைக் கண்ணீர் வடித்த கதைதான்.

சவுதி தலைமையிலான 8 நாடுகள் ஏமன் அரசுக்கு  ஆதரவாக உள்நாட்டு மோதலில் தலையிடத் தொடங்கியது பிரச்சினையை தீவிரப்படுத்தியது. அனைத்து வான் வழித் தாக்குதல்களுக்கும் இந்த நாடுகளே பொறுப்பானவையாகும். அதற்கு தேவையான உத்திகள், தொழில்நுட்ப வசதிகளை அமெரிக்க செய்து கொடுத்தது. சவுதி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு 2015-2019 காலப்பகுதியில் சுமார் 31.4 பில்லியன் டாலர் மதிப்பிலான அயுத ஏற்றுமதி நடந்துள்ளது. இக்காலகட்டத்தில் ஜி-20 நாடுகள் ஏமனுக்கு அளித்த மனிதாபிமான உதவிகளை ஒப்பிடும் போது ஆயுத ஏற்றுமதி ஐந்து மடங்கு அதிகமானதாகும். கூடுதலாக சவுதியும் தன் பங்கிற்கு 3.8 பில்லியன் டாலர் நிதியை நிவாரணமாக வழங்கியது.

ஏமன் : சவுதியின் வான் வழித்தாக்குதலில் இடிந்த கட்டிடத்திலிருந்து சிறுமியின் உடலை மீட்டு வருகிறார்..

“பல ஆண்டுகளாக உயிர்பலிகள், இடம் பெயர்தல் மற்றும் நோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக நாடு தழுவிய போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டு திரும்புவதற்கு சர்வதேச சமூகத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களின் உதவி தேவை” என்று ஏமனுக்கான ஆக்ஸ்பாமின் இயக்குனர் முஹ்சின் சித்திகி (Muhsin Siddiquey)கூறினார். “ஆயுத ஏற்றுமதியிலிருந்து பில்லியன்கணக்கான டாலர் ஈட்டுவதும், அதே நேரத்தில் ஏமனுக்கு அதில் ஒரு சிறிய பகுதியை மனிதாபிமான உதவியாக செய்வதும் ஒழுக்கக்கேடானது மற்றும் பொருத்தமற்றது. ஏமன் மக்களின் துயரத்தில் உலகின் பணக்கார நாடுகள் தொடர்ந்து இலாபம் பார்க்கும் அவல நிலை இனி தொடரக்கூடாது” என்று மேலும் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டாலும் சவுதி-கூட்டணி தொடர்ந்து நாடு முழுவதிலும் தாக்குதலை நடத்தி வருகிறது. நாட்டின் வடக்கில் உள்ள மரிப்(Marib) மற்றும் அல்-ஜவ்ஃப்(Al-Jawf) மாநிலங்கள் வான்வழித் தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மத்திய ஏமனில் உள்ள தைஸ்(Taiz) மாநிலத்தில் மிக மோசமான தரை வழித்தாக்குதல் நடக்கிறது. 2 கோடி மக்களுக்குத் தேவைப்படும் உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவ பொருள்கள் கொண்டு வர மையமான துறைமுக நகரமான ஹுடாய்தாவில்(Hudaydah) சமீபத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகள் ஏமனுக்கு தாங்கள் வழங்கும் உதவித்தொகையை விட பன்மடங்கு ஆயுத விற்பனையை செய்கின்றன. ஜப்பான் ஏமனுக்கு உதவித்தொகையை வழங்குகிறது ஆனால் சவுதிக்கு ஆயுதங்கள் எதுவும் ஏற்றுமதி செய்யவில்லை.

படிக்க :
♦ சவுதி பயங்கரவாதத்தை எதிர்த்து ஏமன் மக்கள் பேரெழுச்சி
♦ ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி

ச’அடா(Sa’ada) நகரில், ஏவுகணைகள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களால் சேதமடைந்த தன்னுடைய வீட்டில் 35 வயதான முன்னாள் ஆசிரியரும் மூன்று குழந்தைகளுக்கு தாயுமான இப்திசம் சாகீர் அல் ரசேஹி(Ibtisam Sageer Al Razehi) வசித்து வருகிறார். அவரது கணவர் 2015-ல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். “என்னுடைய கணவரை நான் இழந்துவிட்டேன். என்னுடைய குழந்தைகள் அவர்களது அப்பாவை இழந்துவிட்டனர். போரினால் என்னுடைய வேலையும் போய் விட்டது. குடும்பத்திற்கு பொருளீட்டிய ஒரெயொருவரையும் நாங்கள் இழந்துவிட்டோம்” என்று துயரத்துடன் கூறுகிறார் ரசேஹி.

“மனிதாபிமான உதவி பெரும்பாலும் குறைந்துவிட்டது; ஒவ்வொரு மாதத்திற்கும் பதிலாக ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தற்போது உணவைப் பெறுகிறோம். ஏமனின் குழந்தைகள் மீது கருணை காட்டவும், இந்த போரை நிறுத்தவும் நான் உலகிற்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். பல ஆண்டுகளாக போரினால் நாங்கள் மிகவும் சோர்வடைந்து இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் அழகான அனைத்தையும் இழந்தோம், அமைதியின் எளிய நம்பிக்கையையும் கூட இழந்துவிட்டோம்” என்று கூறினார்.

ஒவ்வொரு நாடுகளிலும் உள்நாட்டுப் போர்களை ஊக்கப்படுத்தி வளர்த்துவிட்டு, பில்லியன்கணக்கான டாலர்களை ஆயுத ஏற்றுமதி மூலம் சம்பாதித்துக் கொண்டே, மற்றொரு புறத்தில் தாம் உருவாக்கி வளர்த்த போரால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கு உதவி அளிப்பதாக “தர்ம பிரபு” வேடம் போடுகின்றன ஏகாதிபத்தியங்கள்.

பெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.


ஆறுமுகம்
செய்தி ஆதாரம் :
OXFAM

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க