பிரிட்டன் சகோதரிகளுக்கு ஜெர்மானிய சகோதரிகளின் அறைகூவல் || க்ளாரா ஜெட்கின்1
(டிசம்பர் 1913)
ன்புக்குரிய சகோதரிகளே!
ஜெர்மானியப் பாட்டாளிவர்க்கப் பெண்கள் சோசலிசத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் இன்றைய காலக்கட்டத்தில் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்ற இச்செய்தியை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றார்கள்.
இந்த நூற்றாண்டு நாகரிகத்தையும் மனிதாபிமானத்தையும் உயர்த்திப்பிடிக்கின்ற நூற்றாண்டு எனப் பீற்றிக்கொள்கின்றார்கள். ஆனால் சமீபத்திய பால்கன் (Balkan) போரின்2 கொடூரமான மனித உயிர்ப்பலிகளையும் பேரழிவுகளையும் காட்டுகின்ற கொடுமையான புகைப்படங்களைப் பார்த்தபின் அந்த அச்சத்திலிருந்து மீள முடியாத நிலையில் நாங்கள் உறைந்துள்ளோம்.
எங்கள் கண்முன்னே குருதி கொப்பளிக்கும் உடல்கள்; சகமனிதனை இன்னொரு மனிதன் கொன்றுசாய்ப்பதால் கொப்பளிக்கும் குருதி; தரைமட்டமாக்கப்பட்ட கிராமங்கள் நகரங்கள்; கால்களும் கைகளும் பிற உறுப்புக்களும் அறுத்து எறியப்பட்ட நிலையில் ஏற்கனவே செத்துமடிந்தவர்களின் அருகில் செத்துக்கொண்டே இருக்கும் மனிதர்கள் எழுப்பும் தீனமான அவலக்குரல்கள்…இவை யாவும் எம் காதுகளில் விழுகின்றன. தங்கள் வாழ்வின் பொருட்டே பிழைப்புத்தேடி சென்று போரில் உயிரை மாய்த்துக்கொண்ட அன்புக்குரியவர்களின் மனைவியரும் சகோதரிகளும் தாய்மார்களும் குழந்தைகளும் விசும்பி அழும் அவலமான கேவல் ஒலிகள் எங்கள் காதுகளில் விழுகின்றன.
ஐரோப்பாவின் பெருந்தேசங்களின் மக்கள் கடந்த சில மாதங்களாகவே மிகக்கொடூரமான பேரழிவுப்போர்களின் விளிம்புக்குச் செல்வதும் மீள்வதுமான வாழ்வா சாவா என்ற கெடுநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பதை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம். இத்தகைய அவலநிலையை இவ்வுலகம் இதற்கு முன் கண்டதில்லை. நாங்கள் இதனை நினைத்து அச்சத்தில் நடுங்குகின்றோம். அப்பேரழிவின் இறுதிநாள் இன்றில்லை எனினும் பிரிதொரு நாள் வந்தே தீரலாம். நாகரிகமடைந்த நாடுகளின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அந்த சிறுபான்மையினரின் கரங்களைப் பாருங்கள்! அவர்கள் பேசுவதைக் கேளுங்கள்! அவர்களின் கரங்களில் இருப்பதுதான் என்ன?
படிக்க :
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா
உழைக்கும் மக்களின் பைகளில் இருந்து திருடிக்கொண்ட பணத்தைக்கொண்டு அவர்கள் ராணுவத்தளங்களையும் போர்க்கப்பல்களையும் கட்டுகின்றார்கள்; தரையிலும் கடலிலும் ஆகாயத்திலும் மக்களை கொத்துக்கொத்தாகக் கொன்றழிக்கக் கூடிய மிகத்துல்லியமான கடற்படைத் துப்பாக்கிகளையும் பிற ஆயுதங்களையும் வாங்கிக் குவிக்கின்றார்கள். பல இலட்சம் இளம்தொழிலாளர்களுக்குப் பயிற்சியளிப்பதாகச் சொல்லிக்கொண்டு அவர்களைத் துன்புறுத்துகின்றார்கள். வெளிநாடுகளில் உள்ள இவர்களது சகதொழிலாளிகளின் காயின்களாக3 (Cain) அவர்களை மாற்றும்பொருட்டே இப்பயிற்சி அளிக்கப்படுகின்றது.
அவர்களது சுயநலமிக்க ஆயுதக்குவிப்புப்போட்டிக்கும் போர்களுக்கும் வசதியாக, சாமானியமக்கள் தமது உடைமைகளையும் செங்குருதியையும் தியாகம் செய்யும் பொருட்டு மக்களை ஆயத்தமாக வைத்திருக்கும் கள்ளநோக்கத்துடன் சகநாடுகளின் மக்களுக்கிடையில் பகைமையும் வெறுப்புணர்வும் எப்போதும் நிலைத்திருக்கும்வண்ணம் இச்சுயநலமிகள் எப்போதும் வாய்கிழியப்பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நாட்டின் நலன்பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனில் அடுத்த நாட்டின் மீது போர்தொடுத்து மரணத்தைக் கட்டவிழ்த்துவிடத்தக்க வகையில் ஆகப்பெரும் ராணுவங்களும் போர்க்கப்பல்களும் இருப்பது அவசியம் என்று கூச்சலிடுகின்றார்கள்.
இங்கிலாந்தில் உள்ள எங்கள் அன்புச்சகோதரிகளே! பகைமையுணர்வும் வெறுப்புணர்வும் விசிறிவிடப்படும் வெறிக்கூச்சல்கள் வதந்திகளாகப் பரப்பப்படுகின்றன என்பதை அறிந்து ஜெர்மனியில் இருக்கின்ற சோசலிச உழைக்கும் பெண்களாகிய நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஆனால் ஜெர்மன் மக்கள் மீது பிரிட்டிஷ் மக்கள் பொறாமையும் வெறித்தனமான பகைமையுணர்வும் கொண்டுள்ளதாக இங்கே ஜெர்மனியில் இருக்கின்ற அரசியல்வாதிகளும் செய்தித்தாட்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள புரளிகளை நாங்கள் நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம்.
பயங்கர சேதத்தை விளைவிக்கும் போர்க்கப்பல்கள் புதிதுபுதிதாகக் கட்டப்படுவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. போலித்தேசியவாத வெறிப்பேச்சுக்களை விசிறிவிட்டுக்கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இப்புரளிகளை நம்பவில்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றோம். இதேபோல் அங்கே உங்கள் நாட்டில் வெளிவரும் சில ஆங்கிலமொழிச் செய்தியேடுகளும் உள்ளூர் அரசியல்வாதிகளும் ஜெர்மன் மக்களின் உணர்வு என்பதாகச் சொல்லிக்கொண்டு உங்கள் மத்தியில் பரப்பிவிடும் வதந்திகளை உண்மை என நீங்கள் நம்பவேண்டாம் என உங்களை உள்ளன்போடு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வலுக்கட்டாயமாக சக்கரவர்த்தியின் சீருடையை அணியக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் அச்சுறுத்தும் துப்பாக்கிகளும் இதுவெல்லாம் உண்மைதானோ என்ற ஐயத்தைக் கிளப்பினாலும் நாங்கள் உறுதியளிக்கின்றோம், இவையாவும் உண்மை அல்ல. இங்கே ஜெர்மனியில் உள்ள போலிதேசியவாதம் பேசுகின்ற சுமார் அரைடஜன் வெறியர்கள் கிளப்பிவிடும் கட்டுக்கதைகளையே இச்செய்தியேடுகள் வெளியிடுகின்றன, எமது பொறுமையையும் சோதிக்கின்றன.
மக்கள் எனப்படுவோர் உண்மையில் யார்? ஜெர்மனியிலும் சரி உங்கள் மகாபிரிட்டனிலும் சரி, நாட்டின் முதல் பத்துப்பணக்காரர்கள், இளவரசர்கள், ராணுவ ஜென்ரல்கள், தங்க இழைப்பின்னல்களை அணிந்த அதிகாரிகள், வலிமைமிகு நிலக்கிழார்கள், ராணுவத்திற்கும் கடற்படைக்கும் ஆயுதசப்ளை செய்கின்ற கம்பெனிகளின் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள், துப்பாக்கிகள், டாங்கிகளின் கவசத்தகடுகள், புகையில்லா வெடிகுண்டுகள், போர் விமானங்களைத் தயாரிக்கின்ற ‘மன்னர்கள்’ – இவர்களில் ஒருவர் கூட சாமானிய மக்கள் அல்லர். ராணுவத்திற்கும் கடற்படைக்கும் தேவையான ஏராளமான ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் போர்க்களங்களில் வழிந்தோடும் குருதியில் இருந்து காசுகளைப்பொறுக்குகின்ற, போர்க்களங்களில் வீழ்ந்துபட்ட பிணங்களே உரமாகிப்போனதால் செழித்துவளரும் வயல்களில் இருந்து லாபத்தை அறுவடை செய்கின்ற ஒரு சிறு பகுதியினரை சாமான்யமக்கள் என்று சொல்ல முடியாது.
இலட்சோப இலட்சம் உழைக்கும் ஆண்களும் பெண்களுமே சாமானிய ஜெர்மன்மக்கள் ஆவர்; இந்த உழைக்கும் மக்களின் கரங்களும் மூளைகளும் இயங்காவிடில் இச்சிறு பகுதியினர் செல்வத்தை குவிக்க முடியாது, மனிதநாகரிகம் என்பதும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும்; ஆயினும் இந்த இலட்சக்கணக்கான மக்கள் செல்வத்தை, வாழ்க்கை வசதிகளை, மகிழ்ச்சியை அனுபவித்தார்களா என்றால் இல்லவே இல்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்ற இந்த சாமானிய மக்கள்தான் உண்மையான ஜெர்மன் மக்கள். தமது எதிரியை எல்லை தாண்டியிருக்கின்ற நாடுகளில் தேடக்கூடாது, வடக்குக்கடலின் மறுகரையில் தேடக்கூடாது என்ற உண்மையை அவர்கள் இப்போது உணர்ந்திருக்கின்றார்கள்.
இரக்கமற்ற தமது எதிரி வேறெங்கும் இல்லை, தமது சொந்தமண்ணில்தான் இருக்கின்றான் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவமே தமது எதிரி, உழைக்கும் மக்களை சுரண்டி அவர்கள் மீது தமது ஆட்சியதிகாரத்தைச் செலுத்தும் சொத்துடைமைவர்க்கமே தமது எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். முதலாளித்துவம் என்னும் இந்த ராட்சசனே உலகெங்கிலும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் பொதுவான எதிரி என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
நாங்களும் உங்களைப்போலவே சங்கிலிகளால் கட்டுண்டுள்ளோம். உங்களது சுமைகள் எங்களது சுமைகளும் கூட, உங்களது துயரங்களை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம். ஆகவே நாங்கள் உங்களுடன் துயருருகின்றோம், உங்களோடு சேர்ந்து நாங்களும் நம்பிக்கை கொள்கின்றோம், ‘துயரங்களின் சமுத்திரத்’துக்கு எதிராக உங்களுடன் நாங்களும் ஆயுதங்களை ஏந்துகின்றோம். எங்கள் கணவர்களுடன், குழந்தைகளுடன், சகோதரர்களுடன் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கிடையே சமாதானமும் சகோதரத்துவமும் நிலைத்திருக்க முன்வருகின்றோம். அவர்களுடன் இணைந்தே முதலாளித்துவத்துக்கு எதிராக, சோசலிசத்துக்காகப் போராடுகின்றோம்.
படிக்க :
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
இங்கிலாந்து என்ற தேசத்தின் முன்னணி அறிவாளிகளின் ஞானமும் கனிவுமிக்க இதயங்களும் தேசிய சோசலிச (National Socialist) இயக்கம் நிலைத்து நீடித்திருக்கவும், அது வெல்லமுடியாத பலமிக்க அமைப்பாகவும் விளங்கிட எத்தகு மகத்தான அரிய பங்குப்பணியை அளித்துள்ளார்கள் என்பதை நாங்கள் ஒருபோதும் மறவோம்.
மகாபிரிட்டனின் உழைக்கும் ஆண்களும் பெண்களும் தமது உணவுக்காக உரிமைக்காக சுதந்திரத்திற்காக முதலாளிவர்க்கத்துக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை மறவாமல் என்றும் நினைவில் இருத்தியுள்ளோம். எரிமலையின் கீழே நிலநடுக்கம் ஏற்படும்போது வெளிப்படும் எரிமலையின் சக்தி மலையின் அடியில் ஒளிந்திருப்பனவற்றை எவ்வாறு வெளியே அள்ளி வீசுகின்றதோ அதேபோல் ‘தொழிலாளர் போராட்டம்’ என்பது சமூகஅடுக்கில் ஒளிந்துள்ள வசதிவாய்ப்புப்படைத்த சிறு சுரண்டும்வர்க்கத்தை அம்பலப்படுத்துகின்றது, இவ்வர்க்கம் ‘தொழிலாளர் போராட்டம்’ என்ற நிலநடுக்கத்தை கண்டு அஞ்சுகின்றது.
இன்றைய நிலை எப்படியுள்ளது? உழைக்கும் வர்க்கத்தை முதலாளித்துவம் அச்சுறுத்துகின்றது, ஆனால் உழைக்கும்வர்க்கமோ சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது.
பிரிட்டனின் சகோதரிகளே! எங்கள் உண்ர்வுகளுடனும் இலட்சியங்களுடனும் நீங்களும் இணைந்திருக்கின்றீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். அனைத்து விதமான குறுகிய தேசியவாதங்கள், வெறுப்புணர்வுக்கு எதிராகவும் ஆயுதக்குவிப்புக்கும் போருக்கும் எதிராகவும் போராடுவதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம். பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்காக பாட்டாளிவர்க்கமே நடத்தும் புனிதப்போரின் முதல்வரிசையில் போராளிகளாக நிற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். நமது குழந்தைகள் சோசலிசத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ளார்கள், நாம் தொடங்கியிருக்கின்ற இந்தப்போரை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவைப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது. முதலாளித்துவம் என்பது நம் அனைவரின் மீதும் நடத்தப்படும் சமூகப்போராகும். பாட்டாளிவர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டம் என்பதன் பொருள் உலகநாடுகளிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் சகோதரத்துவம் என்பதே.
சோசலிசம் என்பது உலகசமாதானமே!
***
குறிப்புக்கள் :
1 க்ளாரா ஜெட்கின் (Clara Zetkin) (1857-1933): ஜெர்மன் நாட்டின் கம்யூனிஸ்ட். அரசியலில் உழைக்கும்பெண்களின் பாத்திரத்தின், போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர், சர்வதேச அளவில் அறியச்செய்தவர். அக்கால கட்டத்தில் ஜெர்மன் நாட்டில் பெண்கள் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருந்தபோதும் பல்வேறு தொழிற்சங்கங்களில் நிர்வாகக்குழுக்களில் பங்கேற்றவர். சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் இயக்கத்தின் (International Bureau of Socialist Women) செயலாளராக இருந்தவர்.
ரோசா லக்சம்பர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோருடன் இணைந்து ஜெர்மானிய கம்யுனிஸ்ட் கட்சியை 1918இல் நிறுவியவர். 1920இல் ஜெர்மானிய ரீக்ஸ்டேக்கின் உறுப்பினராகவும் இருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் (Communist International) செயற்குழுவில் உறுப்பினராகவும், சர்வதேச பெண்கள் தலைமையகத்தின் (International Women’s Secretaraiat) பொதுச்செயலாளராகவும் இருந்தார். பால்கன் போர்கள் முடிந்த நிலையில் 1913 டிசம்பர் மாதம் அவர் இச்செய்தியை வெளியிடுகின்றார்;
ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன நாடுபிடிக்கும் போட்டி, ஆயுதக்குவிப்பு மற்றும் கெடுபிடிகளின் விளைவாக 1914இல் முதலாம் உலகப்போர் தொடங்கியது. நேசநாடுகள் என அறியப்பட்ட ரஷ்யப்பேரரசு, ஃப்ரெஞ்ச் மூன்றாம் குடியரசு, மகா பிரிட்டனும் ஐயர்லாந்தும் இணைந்த ஒன்றிய அரசியம் (United Kingdom) ஆகிய பேரரசுகள் ஒரு புறமும், ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி கூட்டணியில் மத்தியவல்லரசுகள் என்று அறியப்பட்ட நாடுகள் மறுபுறமும் இப்போரில் இறங்கின. போரின் போக்கில் இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை நேசநாடுகளின் பக்கமும், துருக்கியின் ஓட்டோமான் பேரரசும் பல்கேரியாவும் மத்தியவல்லரசுகளின் பக்கமும் சேர்ந்து போரைத்தொடர்ந்தன. போரின் போக்கில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான மாபெரும் ரஷ்யப்புரட்சியால் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 பால்கன் போர்: 1912-13இல் முதலாம் பால்கன் போர் நடந்தது. பால்கன் அமைப்பின் கீழ் அமைந்த கிரீஸ், பல்கேரியா, செர்பியா, மோண்டினெக்ரோ ஆகிய நாடுகளுக்கும் பலஹீனமடைந்து கொண்டிருந்த துருக்கியின் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே இப்போர் நடந்தது. 1913இல் செய்துகொள்ளப்பட்ட லண்டன் ஒப்பந்தத்தின்படி எல்லைகள் மறுவரைவு செய்யப்பட்டு இப்போர் முடிவுக்கு வந்தது. ஆனாலும் தொடர்புடைய சில நாடுகளின் அதிருப்தி காரணமாக 1913ஆம் ஆண்டே மீண்டும் ஒரு போர் நடந்தது. புகாரெஸ்ட் ஒப்பந்தம் வரையப்பட்ட பின் இப்போர் முடிவுக்கு வந்தது.
3 காய்ன் (Cain): கிறித்துவர்களின் பழைய வேதாகமத்தின் ஒரு பாத்திரம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த முதல் மகன். தனது சகோதரன் ஆபெல்லை காய்ன் கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
***************
(புதுவிசை இதழ் எண் 48,செப்டம்பர் 2017இல் வெளியானது) – மீள்பதிவு
முகநூலில் : மு. இக்பால் அகமது
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க