டந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்தது. இதற்கான பதற்ற சூழல் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலவி வந்தது. ரசிய ராணுவம் உக்ரைன் ராணுவத்தை கடல், வான்வெளி, தரை போன்ற அனைத்து தளங்களிலும் செயலிழக்க வைக்கும் வகையில் ராணுவத் தளங்களின் மீது போர் தொடுத்தது. ஆனால் மக்கள் கூட்டமாக வாழும் பகுதிகளில் தாக்குதல் நடைபெறவில்லை என ரசியா ராணுவம் சொல்கிறது.
ஆனால் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் (OHCHR) அறிக்கைப்படி, மார்ச் 8ஆம் தேதி வரை 516 குடிமக்கள் இறந்திருக்கின்றனர். அதில் 37 பேர் குழந்தைகள். பிரபலங்கள் (Celebrities) சிலர் “போர் வேண்டாம்” என்று கருத்து தெரிவிப்பதன் மூலம் தங்களை மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சரி அவர்கள் பிரபலங்கள் – அரசியலற்றவர்கள். அப்படி தான் பொதுவாக பேசுவார்கள். ஆனால் இங்கே உள்ள அரசியல் கட்சிகள் கூட அப்படி தான் பொதுவாக “போர் வேண்டாம்” என்கிறார்கள். ஆனால் அந்த போருக்கு பின்னணியாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி பற்றி, அதன் வரலாற்று தன்மை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை‌.
“எந்தவகையான ஆத்திரமூட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், இத்தனை பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை எந்த வழியிலும் பிரச்சினைகளை தீர்க்கப்போவதில்லை. உடனடியான போர் நிறுத்தமும், பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” அறிக்கை வெளியிடுகிறார் சீதாராம் யெச்சூரி. ஆனால் பேச்சு வார்த்தைகளால் ஏகாதிபத்தியம் தோற்றுவிக்கும் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் மீதான ரசியாவின் இந்த தாக்குதல் போருக்காக வரலாற்று காரணங்களையும் அதில் அமெரிக்காவின் மேல்நிலை ஆதிக்க கொள்கை எந்த அளவு பங்காற்றி இருக்கிறது என்பதையும் உடைத்து பேசு வேண்டிருக்கிறது. அதன் போக்கில் தான் இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாக்க இடைகட்டத்தில் ஏற்படும் போர்களுக்கான தீர்வை நம்மால் முன்வைக்க முடியும்.
படிக்க :
உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
உக்ரைன் மீதான ரசியாவின் போர் விவகாரத்தில் நமது முதல் கடமை என்பது மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு காவடி தூக்கும் ஊடகங்களின் பாசாங்கு தனத்தையும் பொய்களையும் அம்பலப்படுத்துவதாகும். உக்ரைன் மீதான ரசியாவின் இந்த போர் தேசிய இறையாண்மையையும், சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக கூப்பாடு போடுகின்றன மேற்கத்திய ஊடகங்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றையும், தேசிய இறையாண்மை, சொல்லிக்கொள்ளப்படும் சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை மதிக்காமல் இந்த ஏகாதிபத்தியங்கள் போர் தொடுத்ததையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல், வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்தது, சிலியில் பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு போன்றவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. அப்போதெல்லாம் தேசிய இறையாண்மை, சர்வதேச சட்டங்கள் பற்றிய எந்த கூச்சலையும் மேற்கத்திய ஊடகங்கள் எழுப்பவில்லை.
மேலும் இந்த பாசாங்குதனத்திற்கு பேர்போன இந்த ஊடகங்கள் முன்வைக்கும் தேசிய இறையாண்மை என்பது முரண்பாடானதாக உள்ளது.
2014ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி ரசியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிபர் யானுகோவிச் ஆட்சி, யூரோ மைதான் என்று அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் நவ நாஜிக்களால் (Neo Nazi) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அந்த நிகழ்விலிருந்து உக்ரைன் மீதான அமெரிக்காவின் பிடி இறுகிக்கொண்டேயுள்ளது. அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்க விரிவாக்கத்திற்கு துணை போகும் ஒரு பகடைக்காய் போல்தான் உக்ரைன் இருந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தேசிய இறையாண்மை எங்கே இருக்கிறது?
சர்வதேச நாணய நிதியம் தான் உக்ரைனின் பொருளாதார கொள்கைகளை வழிமொழிகிறது, அமெரிக்க தூதரகம் தான் உக்ரைனின் அரசாங்கங்கள் அமைவதில் முக்கிய பாங்காற்றுகின்றன.
அப்படியென்றால் அமெரிக்க ரசிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் உக்ரைனில் போராக வெடித்திருக்கிறது. இதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.
ரசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகள் 1955ஆம் ஆண்டு வார்சா (Warsaw) ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். மேற்கு ஜெர்மனி அன்றைய தினத்தில் (NATO) நோட்டோவில் இணைந்ததன் எதிர்வினையாகவே இந்த வார்சா ஒப்பந்தம் இருந்தது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தகர்ந்த உடன் வார்சா ஒப்பந்தம் களைக்கப்பட்டது. இது ரசியாவின் சர்வதேச ரீதியான பலவீனத்தை குறித்தது. சோவியத் ஒன்றியம் சிதைந்து போனது, வார்சா ஒப்பந்தம் முடிவுக்கு வந்த உடன் நோட்டோ படை நிலவுவதற்கான தார்மீக கூறுகளும் முடிவுக்கு வந்துவிட்டது. நோட்டோவை களைத்து விட்டு பனிப்போரை முடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இது ஏகாதிபத்தியங்களின் இயல்பல்ல. அது நீடித்து நிலவுவதற்கு போர் ஒரு அவசியமான கருவி. அதனடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புதிய ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்காக நோட்டோ படையை கிழக்கு ஐரோப்பாவை நோக்கி விரிவுபடுத்தியது. இதனால் ரசியாவிற்கு அதன் எல்லைகளை சுற்றி தேசிய பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருந்தது.
பல வண்ணப் புரட்சிகளின் மூலமாக கிழக்கு ஐரோப்பாவில் மேற்கத்திய அமெரிக்க சார்பு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அமெரிக்கா, கிழக்கு ஐரோப்ப நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி ரசியாவின் எல்லையில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. இவையெல்லாம் ரசியாவை ஒரு‌ போருக்கு தூண்டும் விதத்திலானதாக இருந்தது.
தனது எல்லையில் பாதுகாப்பு நெருக்கடிகள் இருப்பதாக தோன்றினாலும், ரசியா தனது பலவீனங்களை கணக்கில் கொண்டும், ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார உயர்ந்தநிலையை கணக்கில் கொண்டும் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார இராணுவ சூழல் சாசுவதமாக தங்கிவிடுவதில்லை. இயக்கவியல் படி எல்லாம் மாற்றத்திற்குரியது தான். அப்படிப்பட்ட மாற்றம் தான் 2008 ஆம் ஆண்டு நடந்தது. ஈராக் மீதான போரால் அமெரிக்கா மிகப்பெரிய பொருட் செலவையும், இழப்பையும் சந்தித்தது. அமெரிக்கா இறங்கு முகத்தில் இருந்தது. அதை பயன்படுத்தி கொண்டு ரசியா, 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா மீது கூர்மையான போர் தொடுத்தது. நோட்டோவினால் ஆயுதங்கள் அளிக்கப்பட்டு, பயிற்சி அளிப்பட்டிருந்த ஜார்ஜியாவின் ராணுவத்தை நாசம் செய்தது. அப்காசியன்‌ மற்றும் தெற்கு ஒசேஷியன் பகுதிகளை துண்டாடி அதில் தனது ஆதரவை உறுதி செய்து கொண்ட பின்பு வெளியேறியது.
அதேபோல், 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் நவ நாஜிக்களால் யானுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, கிரிமியாவை தன்னுடன் இணைப்பதன் மூலம் ரசியா பதிலடி கொடுத்தது. இது கருங்கடல் பகுதியில் ரசியாவின் கப்பற்படைக்கு சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்தது. இப்படி அமெரிக்காவும், ரசியாவும் தங்களது சொந்த ஏகாதிபத்திய நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதில் பாதிக்கப்படும் உக்ரைன், ஜார்ஜியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் இறையாண்மை என்பது மருந்துக்கு கூட மதிக்கப்படவில்லை. ஆனால் ரசிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் இந்த பலப்பரீட்சை, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களை காட்டிக்கொடுத்துள்ளது.
அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பலம் 2008 ஆம் ஆண்டு ஈராக் போர், சப் பிரைம் நெருக்கடி போன்றவற்றால் குறையத் தொடங்கியது. ஆனால், ஒரு மேல்நிலை வல்லரசுக்கே உன்டான கட்டமைப்புகளை அமெரிக்கா கொண்டிருந்தது. சர்வதேச நிறுவனங்களை தனது ஏகாதிபத்திய அரசியல் ஆதாயங்களுக்காக அமெரிக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வதேச அளவில் நிறுவனமயப்பட்டிருந்தது. உதாரணமாக சர்வதேச நாணய நிதியத்தை தனது நலனுக்காக பயன்படுத்தி வந்ததை சொல்லலாம்.
படிக்க :
உக்ரைன்: அமெரிக்காவிற்கு சவால் விடும் ரசியா!
ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா
சர்வதேச நாணய நிதியம் (IMF), என்ற நிறுவனத்தின் முக்கியமான வேலை என்பது, வளரும், பின்தங்கிய நாடுகளின் சந்தையை சர்வதேச ஏகபோக நிதிமூலதனத்தின் சூறையாடலுக்கு திறந்துவிடுவதுதான். அதற்கு அது பிரதானமாக பயன்படுத்தும் வழி, திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை கொடுத்து அதனை கட்ட முடியாமல் தவிக்கும் நாடுகளின் அரசுகளிடம் தனது நிபந்தனைகளை திணிப்பது. இந்த நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று, சர்வதேச ஏகபோக நிதியாதிக்க கும்பல் கொள்ளையடிக்க அந்த நாடுகளின்‌ சந்தையை திறந்துவிடுவது.
2014 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக யானுகோவிச் இருந்த போது, சர்வதேச நாணய நிதியம் உக்ரைனிடம் கூலியை குறைப்பது, அந்த நாட்டில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான செலவுகளை குறைப்பது, இயற்கை எரிவாயுவிற்கான மானியத்தை குறைப்பது போன்ற நிபந்தனைகளை முன்வைத்தது. இது மக்கள் மீது பெருமளவில் சுமையை சுமத்தும் என்பதாலும், மக்கள் தனக்கெதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும் இந்த நிபந்தனைகளை ஏற்க தயக்கம் காட்டிய யானுகோவிச் ரசியாவுடன் பேச்சு வார்த்தைகளை தொடங்கினார். இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிராகரிப்பது மட்டுமல்ல அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் விரிவாக்க முயற்சிக்கு விடப்பட்ட சாவல் என்று கருதிய அமெரிக்கா, இந்த “குற்றத்தை” செய்யத் துணிந்ததற்காக யானுகோவிச் ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தது. அமெரிக்கா ஊட்டி வளர்த்த நவ நாஜிக்களால் யூரோ மைதான் என்னும் போராட்டத்தின் மூலம் யானுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அதன்பிறகு வந்த ஆட்சி, எரிவாயுவிற்கான மானியத்தை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்து, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 27 பில்லியன் டாலர் கடன் வாங்கியது. இது வழக்கமாக இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் கடன்களின் அளவைவிட ஆறு மடங்கு அதிகமாகும். அதுமட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கத்திற்கு மாறாக உள்நாட்டு போர் நடந்துகொண்டிருக்கும் நாடான உக்ரைனுக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாக அளித்துள்ளது. இந்த கடன் திருப்பிச் செலுத்த முடியாதது என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றாக தெரியும்.
சர்வதேச நாணய நிதியம் தனது நிபந்தனைகளால் உக்ரைன் நாட்டின் வளங்களை சர்வதேச ஏகபோக நிதிமூலதனத்திற்கு திறந்துவிடுவதன் மூலம் அதை சூறையாடுவதற்கு நிதியாதிக்க கும்பலுக்கு இயற்கை வளங்களை ஒப்படைப்பதன் மூலம் தனது கடனை சரிசெய்து கொள்ளும். இந்த திருப்பிச் செலுத்த முடியாத கடன் என்பது, அமெரிக்க அரசுக்கும், உக்ரைனின் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், 2014 ஆட்சி கவிழ்க்கபட்ட பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான கள்ளக்கூட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் சர்வதேச நிதி மூலதனத்திற்கு வளரும், பின்தங்கிய நாடுகளின் சந்தையை திறந்து விடுவது
மட்டுமல்ல, அமெரிக்காவின் மேலாதிக்க பிராந்திய விரிவாக்கத்திற்கு துணை செய்யும் நிறுவனமாகவும் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.
சர்வதேச ரீதியில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆழமான வேர்களை கொண்டுள்ளது. கிளின்டன் ஆட்சிக்காலத்தில் இருந்து அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்கை, கடந்த 30 ஆண்டுகளாக நோட்டோவை விரிவுபடுத்துவதன் மூலம் தனது சொந்த மேலாதிக்க நலனை நோட்டோவில் அங்கம் வகிக்கும் பிற வட ஐரோப்பிய நாடுகளின்‌ நலன்களை விட பெரிதாக முன்நிறுத்திக்கொண்டது. அதனால் நல்ல பலன்களையும் அறுவடை செய்துள்ளது.
அமெரிக்க ரசிய போட்டியின் பிடியில் சிரிய மக்கள்
அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டு நவ நாஜிக்களால் 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த யூரோ மைதான் போராட்டம் மூலமான ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தி வரும் யுக்திகளில் ஒன்று. வட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற அமெரிக்க கூட்டாளி நாடுகள், சீனா மற்றும் ரசியாவிடம் வர்த்தகம் முதலீடுகள் ஆகியவற்றில் ஈடுபடுவது அந்த நாடுகளின் மீதான அமெரிக்காவின் மேலாதிக்க பிடியை தளர்த்துவதாக இருக்கிறது. இதை தொடர்ந்து அமெரிக்கா அந்த நாடுகளின் விவகாரங்களில் தலையிடுகிறது. இந்த தலையீடுகள் யாவும் அமெரிக்காவின் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர்களின் (Senators) அரசியல் அல்ல. அமெரிக்காவின் மூன்று துறை சார்ந்த சில ஏகபோக முதலாளிகளின் அரசியல். செனட்டர்கள் இத்தகைய ஏகபோக நிறுவனங்களின் பங்குதாரர்கள் மட்டுமே !
முதல் துறையான, இராணுவ-தொழிற்கூட்டு (Military-Industrial Complex) என்பது ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஏகபோக நிறுவனங்களின் கைகளில் உள்ளது. அவற்றில் சில போயிங், லாக்ஹீட் மார்ட்டின் போன்ற நிறுவனங்கள் ஆகும்.
இரண்டாவது துறை, OGAM என்று அழைக்கப்படும் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஏகபோக முதலாளிகளின் நலன்களை தூக்கிப்படிக்கிறது. இது டாலர் பிரதேசங்களில் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை ஏகபோகமாக நிலைநாட்டுவதை இலக்காக கொண்டது. அதனால் தான் ரசியாவின் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டம் வட ஐரோப்பிய நாடுகளை ரசியாவுடன் நெருக்கமாக இணைக்கும் என்பதால் இதை மூர்க்கமாக எதிர்க்கிறது அமெரிக்கா.
மூன்றாவது துறை, FIRE என்று சொல்லப்படும் நிதி, காப்பீடு மற்றும் நிலமனைகள் ஆகிய தளங்களில் உள்ள ஏகபோக முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்கிறது. நிலமனைகளுக்கு அதிகமான கடன் கொடுப்பவர் மூலம் அந்த கடன்களுக்கான வட்டியின் வருவாய் மூலமே கொழுத்து போனது இந்த துறை.
இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த சில ஏகபோக முதலாளிகள்தான் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார்கள். அதனால் அமெரிக்க அரசியல்வாதிகள், அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் குறிப்பிட்ட மாகாணங்கள் அல்லது மாவட்டத்தை சேர்ந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக இந்த ஏகபோக முதலாளிகளின் நலன்களை தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்த ஏகபோக முதலாளிகளின் நலன்களை பொருட்டே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கை வடிவமைக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவின் தொழிற்துறைக்கோ விவசாய துறைக்கோ எந்த பங்குமில்லை.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ஸ்திரத்தன்மையிலும், நிறுவன ரீதியாகவும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்ற ஏகாதிபத்தியங்களைவிட ஒப்பீட்டளவில் பலமாக உள்ளது. இதற்கு போட்டியாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
2019 ஆட்சிக்கு வந்த அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலையை எடுத்தார். உக்ரைன் நோட்டோவில் இணைவது ரசியாவின் வர்த்தக நலன்களுக்கும், அதன் முதலாளிகளின் நலன்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகளை அமெரிக்கா, ரசியா ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் நடத்திவிட்டனர். ஆனால் ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான இந்த போட்டியை வெறும் பேச்சு வார்த்தைகளால் தீர்க்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 தேதி புதின் தலைமையிலான ரசிய அரசு உக்ரைன்‌ மீதான போரை தொடங்கியது.
இங்கே ரசிய அதிபர் புதின் முன்வைக்கும் “ரசிய தேசிய பாதுகாப்பு” என்பது, ரசியாவின் மக்கள் பற்றியதல்ல. மாறாக ரசியாவின் ஏகபோக முதலாளிகளின் லாபத்தையும், அந்த ஏகபோக மூலதனத்திற்கான செல்வாக்கு மண்டலங்களையும் பாதுகாப்பது பற்றியதுதான்.
ஒவ்வொரு போரை தொடங்குவதற்கும் ஒரு சாக்கு போக்கு வேண்டுமல்லவா? அப்படியொரு காரணம் தான் உக்ரைன் டொனெட்ஸக் மீது நடத்திய தாக்குதலை, இனப்படுகொலை என்று கண்டித்து போரை புதின் தொடங்கி வைத்தார்.
இங்கே விளாடிமிர் புதின் இயற்கையாகவே தனது சொந்த நலன்களையும் பிரதிபலிக்கக்கூடியவராகவும் இருக்கிறார். தேசியவாதத்தை உக்கிரமாக முன்னெடுப்பதன் மூலம் தனது ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்களின் சனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றால் சரிந்துபோன தனது பிம்பத்தை மீண்டும் உயர்த்திக்கொள்கிறார். 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரசியாவுடன் இணைத்த போது கடைபிடித்த அதே தந்திரத்தை தற்போதும் கடைபிடிக்கிறார்.
மேலும் ரசியா என்பது அதனளவில் ஒரு ஏகாதிபத்திய நாடு. அதற்கென்று சொந்த நலன்கள் உள்ளன. இயற்கை மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தான் ரசிய பொருளாதாரத்தின் முக்கிய கூறுகள். ரசியாவின்‌ வெளியுறவுத்துறை கொள்கை பெரும்பாலும் இந்த இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிறவற்றின்‌ வழங்கலுக்கான சந்தையை உறுதிபடுத்துவதன் ( மிக முக்கியமாக ஐரோப்பாவில்) மூலமாக தனது ஏகாதிபத்திய நலன்களை பாதுகாத்துக்கொள்வது பற்றியது தான்.
இந்த எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் கைகளில் அல்ல மாறாக ரசியாவின் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளின் கைகளில் தான் உள்ளன. அதன் நலனையே புதின் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தனது நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக புதின் போராடவில்லை. தான்‌ பிரதிநிதித்துவப்படுத்தும் ஏகபோக முதலாளிகளின் நலன்களை உறுதி செய்யவும் அதனை விரிவாக்கவும் தான் இந்த போரை அவர் மேற்கொள்கிறார்.
ஆனால் உக்ரைன் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அமெரிக்க மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைன்‌ மக்களை காக்க எந்த உதவியும் செய்யவில்லை. “உக்ரைன் போருக்காக ரசியா பதில் சொல்லியாக வேண்டும்” என்று ஆவேசமாக வாய்ச்சவடால் அடிக்கும் அமெரிக்க அதிபர் பைடன் தனது நாட்டின் தரப்பில் இருந்து ஒரு ராணுவ வீரரைக்கூட அனுப்பவில்லை. இந்த போரை அமெரிக்க ஆயுத தளவாடங்கள் உற்பத்தியில் கோலோச்சும் வியாபாரிகளின் ஆயுத விற்பனைக்கான களமாக பயன்படுத்திக்கொண்டார் பைடன். மேலும் இந்தப் போரின் மூலம் உக்ரைன் ரசியா ஆகிய இரண்டு தரப்பிலும் சேதங்கள் ஏற்படும் என்று காத்திருந்து அந்த சேதங்களை தனது மேலாதிக்க விரிவாக்கத்திற்காக மேலும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அமெரிக்கா.
ஒரு பக்கம் ” சாகும் வரை போராடுவோம்” என்றும் இன்னொரு பக்கம் ஒரு ராணுவ வீரரைக்கூட அனுப்பாமல் இருப்பதும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனை எப்படி பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இந்த அமெரிக்கா மற்றும் ரசிய ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கான போரில் அமெரிக்காவிற்கும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பாவின் எரி சக்தி துறை 40% ரசியாவை சார்ந்துள்ளது. குறிப்பாக, ஜெர்மனி தனது 60% எரிசக்திக்கு ரசியாவை சார்ந்துள்ளது. அத்துடன் ஜெர்மனியின் மூலதனமும் ரசியாவில் போடப்பட்டுள்ளது. அதனால் தான் ரசியா மீது பொருளாதார தடை விதிக்க ஜெர்மனி தயக்கம் காட்டி வருகின்றது. ஜெர்மனியால் எரிவாயு மற்றும் எண்ணெய்க்கான நிலையான மாற்று ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெர்மனி அரசு தனது சொந்த நாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக அதை பாதுகாக்க செயல்படவேண்டும். இது இயற்கையாகவே அமெரிக்காவின் மேலாதிக்க கொள்கைக்கு முரணாக இருக்கிறது.
இவ்வாறு சர்வதேச அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வளர்ந்து வருகிறது. தனது செல்வாக்கு மண்டலங்களை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ஏகாதிபத்தியங்கள் போரை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது. அதனால் மீண்டும் நாம் ஒரு முறை வலியுறுத்துகிறோம். போர்கள் இல்லாமல் ஏகாதிபத்தியங்களால் ஜீவித்திருக்க முடியாது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி ரசியா போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது. அதை தொடர்ந்து, மார்ச் 8 ஆம் தேதி “உக்ரைன் நோட்டோ உறுப்புரிமைக்காக இனி அழுத்தும் கொடுக்கப்போவதில்லை”என்று அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். இந்த போர் இத்துடன் முடிந்துவிட்டதா? இல்லை. சர்வதேச ரீதியில் ஏகாதிபத்தியங்களின் பாலபலம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். ஏகாதிபத்தியத்தின் விட்டு விட்டு தாவக்கூடிய வளர்ச்சி விதியின் ( Rule of uneven development) படி புதிய ஏகாதிபத்தியங்கள் தோன்றி வளர்வதும், பழைய ஏகாதிபத்தியங்கள் தங்கள் செல்வாக்கு மண்டலங்களை இழப்பதும் நிகழும். ஆனால் போருக்கான காரணங்கள் சாம்பல் பூத்த நெருப்பின் உள்ளே இருக்கும் கங்குபோல் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும்.
அப்படியென்றால் எப்போதுதான் இந்த போர்கள் முடிவுக்கு வரும் ? என்ற கேள்வி எழுவது இயல்பே. சர்வதேச அளவில் பாட்டாளி வர்க்க மிகவும் பலவீனப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் போராடுவதற்கான காரணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த உக்ரைன் போரில் உக்ரைன் நாட்டு பாட்டாளி வர்க்கம், தேசியவாதத்தின் பெயரில் தங்கள் சொந்த நாட்டு ஏகபோக மூலதனத்திற்கு ஆதரவு தராமல், அதற்கெதிராக போராடவேண்டும். அதே நேரத்தில் ரசியா, அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களையும் எதிர்த்து போராடவேண்டும்.
அதன் மூலமாக தங்கள் விடுதலையை சாதித்துக் கொள்வது மட்டுமின்றி சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும். ஆனால் உக்ரைன் பாட்டாளி வர்க்கம் தேசியவாதத்தின் பெயரில் இழுத்துச் செல்லப்பட்டால், அது உக்ரைன் மண்ணில் வாழும் சிறுபான்மை ரசிய மொழி பேசும் மக்களின் மீதான இனப்படுகொலையில் தான் முடியும். அதனால்தான்‌ உக்ரைன் மட்டுமல்ல ஒடுக்கப்படும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை ஒடுக்கும் பன்னாட்டு, உள்நாட்டு ஏகபோக மூலதனத்தை எதிர்த்து போராடவேண்டும். அதன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டும். இதன் மூலமாக கட்டமைக்கப்படும் சோசலிச குடியரசுகளின் வழியாகவே இந்த உலகை போர்கள் இல்லாத ஒன்றாக மாற்றியமைக்க முடியும்.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க