ல் கொய்தா பயங்கரவாதிகள் அமெரிக்காவில் நடத்திய இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு புதிய எதிரியை உலகுக்கு அடையாளம் காட்டியது அமெரிக்கா. அந்த புது எதிரி, வேறு யாருமல்ல. அமெரிக்காவே உருவாக்கிய ’இசுலாமிய பயங்கரவாதம்’ தான் அந்த எதிரி.

சமூக ஏகாதிபத்தியமாக மாறியிருந்த சோவியத் ரசியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தானை தனது சுரண்டலின் விளைநிலமாக மாற்ற அங்கு இசுலாமிய பயங்கரவாத கும்பல்களை திட்டமிட்டு உருவாக்கி வளர்த்துவிட்டது அமெரிக்கா. அந்த பயங்கரவாத கும்பலுக்கு ஆயுதங்கள் முதல் பண உதவி வரையில் அள்ளி இறைத்தது.

கடந்த 2001-ம் ஆண்டில், அதே இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாகச் சொல்லி ஆப்கான் மேல் அமெரிக்கா படையெடுத்தது. ஆப்கான் மீதான படையெடுப்பைக் கண்டித்த அனைத்து நாடுகளும் மனித குல விரோதியாக சித்தரிக்கப்பட்டன.

2001-ம் ஆண்டு முதல் 2021 வரை சுமார் 20 ஆண்டுகளில் அமெரிக்கப் படைகள் நடத்திய ‘போரில்’ ஆப்கான் குடிமக்கள் எண்ணிலடங்காதோர் கொல்லப்பட்டனர். 2009-ம் ஆண்டு வரை மட்டுமே சுமார் 31,000 ஆப்கான் குடிமக்கள் இந்த ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்பட்டனர்.

படிக்க :
♦ ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்: புதைமணலில் சிக்கியது அமெரிக்கா!
♦ ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

அமெரிக்க விமானப்படை கிரிமினல்கள், வீடியோ கேம் விளையாடுவது போல, வானில் பறந்தபடி கீழே இருந்த சாதாரணக் குடிமக்களை பொழுதுபோக்கிற்குச் சுட்டுக் கொன்றனர் என்ற விவகாரங்கள் எல்லாம் விக்கிலீக்ஸ் உள்ளிட்ட ‘விசில்ப்ளோயர்கள்’ வெளியிட்ட ஆவணங்களில் அம்பலமானது.

புஷ் துவங்கி வைத்த ஆப்கான் ஆக்கிரமிப்பில், ஓபாமா ஆட்சிக் காலத்தில் அல்-கொய்தா தலைவன் பின் லேடனைக் கொன்றதை மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது அமெரிக்கா. மொத்த இசுலாமிய பயங்கரவாதிகளையும் அல்கொய்தாவையும் ஒழித்துக் கட்டி விட்டதாக கதையளந்தது.

கம்யூனிச ‘அபாயத்தை’ ஒழிப்பதற்காக அமெரிக்கா உருவாக்கிய இசுலாமிய பயங்கரவாதத்தை அமெரிக்காவே ’ஒழித்துக்கட்டிய’ இலட்சணம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்த பின்னர், தோஹாவில் தாலிபான்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அம்பலமானது.

புஷ்+ஷபீக் பின் லாடன்
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்

தாலிபான்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பகுதிகள் அதிகரித்துவந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரச் சூழலையும் கணக்கில் கொண்டுதான் ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது அமெரிக்கா. 2001-ம் ஆண்டில் ஆப்கானை ஆக்கிரமிக்கும் போது அது சொன்ன காரணமாகிய இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது ஆப்கானில் ஒரு கட்டத்திலும் நடக்கவில்லை. தற்போது வெளியேறும்போதும் அதே இசுலாமிய பயங்கரவாதிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அளவிற்கு இசுலாமிய பயங்கரவாதம் ஆப்கானில் வலுப்பெற்று விட்டது.

கடந்த 2021 ஏப்ரல்-இல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப்படைகள் படிப்படியாக செப்டம்பர் 11-ம் தேதிக்குள் (அன்றுதான் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய கட்டிடமும் பெண்டகனும் தாக்கப்பட்ட நாள்) ஆப்கானில் இருந்து வெளியேறும் என்று தெரிவித்தார்.

தாலிபான்கள் கூற்றுப்படி நாட்டின் மூன்றில் இரண்டு பகுதிகள் தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில்! பிடெனின் இந்த அறிவிப்பின் பின்னணி இதுதான். தாலிபான்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்கா வெளியேறியது என்ற செய்தி வெளியானால், தனது பெரியண்ணன் பாத்திரம் பறி போய்விடும் என்பதை உணர்ந்து கவுரவமான நிலையில் ஆப்கானிலிருந்து வெளியேறுவது என முடிவெடுத்து அமெரிக்கா வெளியேறுகிறது.

தாலிபான்களின் பயங்கரவாதத் தாக்குதலின் கீழ் ஆப்கானிஸ்தான் !

மே மாதத்திலிருந்து தாலிபான்களின் இராணுவ வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து ஹெராத் போன்ற நாட்டின் முக்கிய நகரங்களும் தாக்குதலுக்குள்ளாகின்றன. சமீபத்தில் கூட காபூலில் உள்ள ஆப்கான் இராணுவ அமைச்சர் பிஸ்மில்லா முகம்மதி மீது தாலிபான் தற்கொலைப் படையின் திட்டமிட்ட தாக்குதல் நடந்து, தற்செயலாக அவர் தப்பித்துக் கொண்டார்.

ஆப்கானுக்கான ஐநா தூதுவர், ’ஆப்கானில் ஒரு பேரவலத்தை தவிர்க்க முடியாது’ என எச்சரிக்கிறார். அமெரிக்காவோ ஆப்கானில் உள்ள அமெரிக்கர்கள் கிடைக்கும் விமானத்தில் ஏறி பாதுகாப்பாக வெளியேறிவிட வேண்டும் என அறிவிக்கிறது. இங்கிலாந்தும் தனது குடிமக்களுக்கு இவ்வாறே அறிவிதுள்ளது.

கிராமப் புறங்களைக் கைப்பற்றி வந்த தாலிபான்கள் தற்போது நகரங்களைத் தாக்கி கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். சாரஞ்ச், ஷெபர்கான், குண்டூஸ் என மூன்று மாகாண தலைநகரங்கள் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ தளபதி மேஜர் லார்ட் டேன்னட், கடந்த மே மாதமே “ஆப்கான் தேசிய இராணுவம் போரிடும் உத்வேகத்தை இழந்துவிட்டது. பல வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடுகின்றனர். அனைத்துலக விமானப் படையானது, இனிமேலும் அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை”, ”ஆப்கான் ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்குவதுதான் நடக்கப் போகிறது” என பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அதுதான் தற்போது நடந்து கொண்டுள்ளது.

படிக்க :
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?
♦ ஆப்கானிஸ்தான் : உயிருக்குப் போராடும் 6 இலட்சம் குழந்தைகள் !

தாலிபான்களின் இராணுவ நடவடிக்கையும் சமாதானப் பேச்சு வார்த்தையும்!

அதே நேரம் மிச்சமுள்ள அமெரிக்க, நேட்டோ துருப்புகள் என சர்வதேச துருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்துவதை தற்போதைக்கு தாலிபான்கள் தவிர்த்து வருகின்றனர். இதை ஒரு உத்தியாக தாலிபான்கள் கையள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை உடனடியாக பெற வேண்டாம் என இப்படி கையாள்வதாகக் கூறுகின்றன.

இதையே 55 வயதில் 25 ஆண்டுகள் தாலிபான்களுடன் இராணுவ கமாண்டராகப் பணியாற்றிய முல்லா ஹமீதுல்லா என்பவர் வேறு வார்த்தைகளில் கூறுகிறார். அராஜகத்தை வெற்றி எனக் கூற முடியாது என்கிற இவர், “(தாலிபான்கள்) சொந்த இசுலாமிய சகோதரர்களுடன் இன்னொரு உள்நாட்டுப் போரில் இறங்குவது உறுதி. அராஜகமான வெற்றியை விட அமைதியான ஆப்கானிஸ்தான் பற்றி தாலிபான்கள் சிந்திக்க வேண்டும்” என்கிறார். ஒரு ஆப்கானியன் இன்னொரு ஆப்கானியனைக் கொல்வதை யாரும் கவனிக்க மாட்டார்கள், உலகின் கவனம் வேறு திசைக்கு சென்றுவிடும் என்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை, 2021-ல் அமெரிக்க பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது மீண்டும் மீண்டும் ஆப்கான் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெருகி வருவதை பெருமையுடன் குறிப்பிட்ட பைடன் ஆப்கான் பற்றிய கேள்விகளை முற்றாகத் தவிர்த்தார். அப்போது ‘மகிழ்ச்சியான விசயங்களை’ மட்டுமே பேச விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

ஆக பயங்கரவாத்தை ஒழிக்க 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, பல்லாயிரம் அமெரிக்க துருப்புக்களை பலிகொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி ஆப்கான் மக்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஒரு போரை நடத்திய அமெரிக்கா, அது பற்றி பேசக் கூட தயாராக இல்லை ! இதே பைடன் தான் ஒபாமா ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த போது, ஆப்கான் போருக்கு (ஆக்கிரமிப்பு) அதிகப் படைகளை அனுப்ப வேண்டும் என மன்றாடிக் கேட்டு, கூடுதல் படைகளையும் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் நினைத்தது போல ஆப்கானில் ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை என்ற தமது தோல்வியை ஒப்புக் கொள்ளவும் முடியாமல், தாம் வெளியே கூறிக் கொண்ட இசுலாமிய பயங்கரவாதம் முறியடிக்கப்படாமல் வளர்ந்துவிட்டதைப் பற்றியும் பேச முடியாமல்தான் பத்திரிகையாளர் சந்திப்பில் வாய் மூடிக் கொண்டார் ஜோ பைடன்.

தாலிபான்களின் சமூகப் பரவல் !

ஒரு சிறுபான்மை பஷ்டூன் இனக்குழுவாக இருந்த தாலிபான்கள் இன்று தமது செல்வாக்கை பரந்து விரிந்ததாக மாற்றிக் கொண்டுள்ளனர். தஜிக்குகள், உஸ்பெக்குகள், ஹஜாரஸ் உட்பட பல்வேறு இனக்குழுக்களும் இன்று தாலிபான்களுடன் இணைந்து வருகின்றனர். அதனால்தான் இவ்வளவு வேகமாக தாலிபான்களால் முன்னேற முடிகிறது. தாலிபான்களின் வளர்ச்சியில் இது முக்கியப் பங்காற்றுகிறது.

தோஹா பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் தாலிபான்கள்

அதுமட்டுமல்ல, அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆப்கான் மக்களின் எதிர்ப்புணர்வையும், அவர்களது மத நம்பிக்கைகளையும், கிராமப் புறங்களில் நிலவும் அறியாமையையும் பயன்படுத்தி தான் தாலிபான் என்ற இந்த மத அடிப்படைவாத காட்டுமிராண்டிக் கும்பலால் ஆதிக்கம் பெற முடிந்திருக்கிறது.

இது 21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமல்ல, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இருபதாம் நூற்றாண்டில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் ஆப்கான் மக்கள் காட்டிய எதிர்ப்பின் மரபும் இதில் அடங்கியிருக்கிறது. அதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது மத அடிப்படைவாத தாலிபான் கும்பல்.

இசுலாமிய சாம்ராஜ்யத்தின் பெயரால்…

தாலிபான்கள் மேற்கத்திய பாணி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். அதனாலேயே ஒரு கூட்டரசாங்கம் அமைவதை விரும்பாமல் இராணுவ ரீதியாக கணக்குத் தீர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். இவர்களின் இலக்கு ’இசுலாமிய சாம்ராஜ்யம்’.

இந்தியாவில் இராம ராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பாசிசக் கும்பல்தான் என்பதை தாலிபான்கள் எனும் மத அடிப்படைவாதக் கும்பலோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. மக்களின் அறியாமையே இவர்களின் ஆயுதம்.

தாலிபான்களின் ‘இசுலாமிய சம்ராஜ்ஜிய’ ஆட்சி ஆப்கானில் வருவது என்பது அங்குள்ள பெண்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு முன்னர் ஆட்சியதிகாரத்தில் தாலிபான்கள் இருந்தபோது, அங்கு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கே அனுமதிக்கப்பட்டதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பெண்களின் மீதான ஒடுக்குமுறை உச்சத்தை அடைந்தது.

இன்றும் ஆப்கான் மக்கள் பரிதவிக்கின்றனர். இசுலாமிய ஆட்சி என்ற பெயரில் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களை அனுபவித்த ஆப்கான் மக்கள் இன்று மீண்டும் அதே கொடுமைகளை எதிர் கொள்ள வேண்டிய அவலத்தில் உள்ளனர்.

தற்போது அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் ஆப்கான் பகுதிகளில், பர்தா அணியாமல் பெண்கள் வெளியே வந்தால் கொல்லப்படும் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளை தாலிபான்கள் தொடங்கி விட்டனர் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

நம்பிய ஆப்கான் அரசைக் கைவிட்ட அமெரிக்கா !!

ஒருபுறம் இராணுவ நடவடிக்கை மூலம் பிரதேசங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டே, மறுபுறத்தில் அரசியல் தீர்வையே தாங்கள் விரும்புவதாக தாலிபான் உச்ச மட்டத் தலைவர் ஹையதுல்லா ஹகிம்ஜடா பேச்சுவார்த்தைகளில் கூறுகிறார்.

தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளும் ஆப்கான் துருப்புகள் சண்டையிடாமல், சரணடைந்து, சமாதானமாக ஒப்படைத்தவையே என தாலிபான் தலைவர்களில் ஒருவரான ஷாகீன் கூறுகிறார். ஆனால் ஸ்பின் போல்டாக் எல்லைப் பகுதியில் நடந்த சண்டையின்போது செய்தி சேகரிக்கச் சென்ற இந்திய நாட்டை சேர்ந்த ராய்டர் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம், தாலிபான்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கிறது.

பொதுவெளியில் தங்களை அமைதியின் நாயகர்களாகக் காட்டிக் கொள்ள விளைகிறது தாலிபான் கும்பல். பல்வேறு நாடுகளுடனான தாலிபான்களின் பேச்சுவார்த்தை, கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்றுவருகின்றன.

ஜூலை மூன்றாவது வாரத்தில் தோகா சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, 7000 தாலிபான் கைதிகளை விடுவிக்கக் கோரியது தாலிபான் கும்பல். அதற்கு ஆப்கான் அரசு மறுத்துவிட்டது.

”….தற்போதைய சூழலைப் பயன்படுத்தி இசுலாமிய நடைமுறை, அமைதி, பாதுகாப்பை நிறுவுவதையே இசுலாமிய சாம்ராஜ்யம் விரும்புகிறது. எதிர் தரப்பினர் (ஆப்கான் அரசு) அன்னிய நாட்டினர் ஆப்கானில் அமைதியை நிலைநாட்டுவர் என நம்பி நேரத்தை வீணடிப்பதாக” ஹையதுல்லா குற்றம் சாட்டுகிறார்.

உண்மைதான், எந்த ஒரு அன்னிய நாடுகளும் தாலிபான்களுக்கு எதிராக ஆப்கான் அரசுக்கு உதவத் தயாராக இல்லை. பெரியண்ணன் அமெரிக்காவின் நிதிநிலையாலேயே தாக்குப் பிடிக்க முடியாத ஆப்கான் ஆக்கிரமிப்புப் போர்ச் செலவை கொட்டும் அளவுக்கு பணபலம் கொண்ட நாடுகளுக்கும் தங்களது பணத்தை அள்ளி கடலில் கொட்ட மனமில்லை.

அஷ்ரஃப் கனி

தற்போதைய நிலையில் அமெரிக்கப் படைகளின் விலக்கத்தால் கதிகலங்கிப் போயிருக்கிறது ஆப்கான் அரசு. ஜூலை மத்தியில் ஆப்கான் நாட்டின் அதிபர் அஸ்ரப் கனி, சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலின் போது, “அமெரிக்கா கைவிட்டு விட்டதா?” என்ற குறிப்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “அப்படி இல்லை. அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்களும் பயிற்சியும் எங்களிடம் உள்ளன” என்றார். ஆனால் ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ஆப்கானில் நடக்கும் வன்முறைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், அமெரிக்க படைகளின் அவசரகதியிலான வெளியேற்றமே ஆப்கானில் நடக்கும் உள்நாட்டு வன்முறைகளுக்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட்டில் நிலைமை படுமோசமாகப் போன பிறகுதான் உண்மை நிலைமையைப் பேசுகிறார் ஆப்கான் அதிபர் அஸ்ரப் கனி. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது பொருளாதார, இராணுவ நிலைமைகளையும் தங்களது அடுத்தகட்ட நகர்வுகளையும் மையப்படுத்தியே இந்த இராணுவ துருப்பு விலக்கத்தை நடைமுறைப்படுத்துகிறது. துளியளவும் கூட ஆப்கான் மக்களைப் பற்றியோ, ஆப்கான் அரசின் நிலைமையைப் பற்றியோ அது கவலைப்படவில்லை.

உதாரணத்திற்கு, கடந்த ஜூலை முதல் வாரத்தில் காபுலிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள பக்ரம் என்ற இடத்தில் உள்ள இராணுவ தளத்திலிருந்து, அமெரிக்கா தனது துருப்புகளை யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கே இது தெரியாது. இதுதான் அமெரிக்கா அங்கு படைவிலக்கம் செய்து கொள்ளும் இலட்சணம். இவ்வளவு காலமும் தமக்குச் சாதகமாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஆப்கான் அரசை கிட்டத்தட்ட அப்படியே கைகழுவி விட்டது அமெரிக்கா.

கடந்த ஒரு மாதமாக தாலிபான் படைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆப்கான் முழுவதையும் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

அண்டை நாடுகளின் நிலை :

பொருளாதாரச் சுரண்டல், எண்ணெய் வளம் மற்றும் பூலோக அளவில் முக்கியமான இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. ஆகவே இங்கு தமக்குச் சாதகமான அரசாங்கம் அமைவதையே அமெரிக்கா, ரசியா, சீனா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அமெரிக்காவைப் பொருத்தவரையில் மத்திய ஆசியாவில் சீனாவுக்கும் ரசியாவுக்கும் நெருக்கடி இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடி கொடுக்க வாய்ப்பான இடமாக ஆப்கான் இருந்தது.

சீனா, ரசியாவைப் பொருத்தவரையில் , அங்கு அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். அதே நேரத்தில் தாலிபான் தலைமையிலான மதவாத பிற்போக்குக் கும்பலின் கடந்த கால ஆட்சி அனுபவங்களும் இனிப்பூட்டுவதாக இல்லை.

ஆகவே தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதை ரசியாவும் சீனாவும் விரும்பவில்லை. ஆப்கானில் சமாதான முறையில் ஆட்சிப் பங்கீடு நடக்க ரசியா நிற்கிறது. இதற்காக 4 மாதங்களுக்கு முன் சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகளைக் கூட்டி வைத்து ஒரு பேச்சு வார்த்தையையும் நடத்தியது, ரசியா.

தாலிபானைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், ரசியா சென்று ஆப்கான் எல்லைக்கு வெளியே தமது இசுலாமிய சாம்ராஜ்ஜிய கருத்துக்களை பரப்பப் போவதில்லை என உறுதி கூறியுள்ளார். தாலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாகீனும், ’ரத்தம் சிந்தி நகரங்களைக் கைப்பற்றுவது தாலிபான்களின் நோக்கமல்ல’ என மாஸ்கோவிற்கு உறுதி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைப் பொருத்தவரையில், அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு தனது நாட்டு தரகு முதலாளிகளின் தொழிலுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றன. அதற்காக தாலிபான்களுடனும் தோஹாவில் இவ்விரு நாடுகளும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தாலிபான்கள் நகரங்களை தாக்கக் கூடாது என பாகிஸ்தான் கூறுகிறது.

படிக்க :
♦ எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !

அமெரிக்கா அங்கு ஆக்கிரமித்திருந்த வரை வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் இந்திய, பாகிஸ்தான் தரகு முதலாளிகள் ஆப்கனுக்குள் புகுந்து கிடைத்த வரை சுருட்டிக் கொண்டிருந்தனர். தற்போது சூழல் தலைகீழாக மாறிய நிலைமையில், ஆப்கான் சிக்கலுக்குள் எந்த வகையிலும் தலையிடும் சூழலில் இந்தியா இல்லை.

இப்போதைய நிலைமையில் தாலிபான்கள் தாங்கள் முன் போல இல்லை என்றும் தாங்கள் மிதவாதிகள் என்றும் காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். அதனாலேயே தோகா பேச்சுவார்த்தையில் பல்வேறு நாடுகளுடன் பங்கேற்கின்றனர்.

ஆப்கானிஸ்தானை அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு இன்றி ஒரே தலைமையின் கீழ் ஆள முடியாது என்ற புரிதலுக்கு தாலிபான்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் ரசியாவுடன் பேசுகிறது. சீனாவின் புதிய பட்டுப் பாதை (RPI) திட்டத்தில் பங்கேற்பதாக சீனாவிடம் உறுதி கூறுகிறது.

உள்நாட்டிலும் பல்வேறு இனக்குழுக்களையும் தமது அணியில் சேர்த்து, தமது அணியை பரந்து விரிந்ததாக தாலிபான்கள் மாற்றி வருகின்றனர். ஆனால், இசுலாமிய அடிப்படைவாதத்தில் இருந்து துளியும் அவர்கள் பின்வாங்கவில்லை என்பது தற்போதைய சம்பவங்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

தாலிபான்களின் இத்தகைய நகர்விலிருந்து, ஒருவேளை அவர்கள் ஆட்சியதிகாரத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், ரசியா, சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் சுரண்டலுக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அனுமதிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது.

தற்போது கூடுதல் பிரச்சினையில் சிக்கியிருப்பது ஆப்கான் மக்கள் தான். மறுகாலனியாக்க சுரண்டலின் கொடுமையை அந்த மக்கள் ஏற்கெனவே அனுபவித்து வரும் சூழலில், தற்போது மத அடிப்படைவாதக் கும்பலின் சமூக ஒடுக்குமுறைகளையும் அவர்கள் சந்திக்கும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்களை இப்படி ஒரு அபாய நிலைமையில் தள்ளிவிட்டு இன்னமும் கூச்சமில்லாமல் ஜனநாயகக் காப்பாளன் வேடம் போட்டுத் திரிகிறது அமெரிக்கா.

அமெரிக்க ஏகாதிபத்தியம் வாய்வைத்த இடங்களில் எல்லாம், அந்த மக்களின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் புறமுதுகிட்டி “துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்” என பின்னங்கால் பிடரியில் பட ஓடிவந்ததே வரலாறு. தான் உள்ளே புகுந்த நாடுகளை கபளீகரம் செய்து அந்நாட்டை மீளமுடியாத நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு, தானும் செருப்படி வாங்கிவிட்டு அமெரிக்கா வெளியேறும்.

ஆப்கானில் நடந்த 20 ஆண்டு ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் அமெரிக்கா தற்போது வெளியேறிய கதையும் இந்த வரலாற்றின் தொடர்ச்சியே !


நாகராசு
நன்றி : countercurrents, frontline

1 மறுமொழி

 1. அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலகமேலாதிக்கத்திற்கான போலீசு பாத்திரத்தை அதன் விரைப்பு டவுசரை உலகத்தின் தொழிற்சாலையாக உருவெடுத்துள்ள சீனா உருவியது. அது சிரிப்புபோலீசுதான் என்பதை உலகுக்கு காட்சிப்படுத்தியது.கொரனோ தொற்று வேறு, நேரம் பார்த்து அமெரிக்காவின் நிர்வாணத்தின் மீது ஈவிரறக்கம் இல்லாமல் காரித்துப்பியது.
  இந்த நிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடாக அடியாள் தாலிபான்களுக்கு தலைமைப்பட்டத்தை விட்டுக்கொடுத்துள்ளது அமெரிக்கா. உலக போலீசு பாத்திரத்தை நிரந்தரமாக இழக்காதிருக்கவும் தனது பேட்டை பங்காளிகள் புதிய தலைமைக்கு இரையாகமால் தடுக்கவுமான யுத்ததந்திரம் இது.
  “2001-ம் ஆண்டில் ஆப்கானை ஆக்கிரமிக்கும் போது அது சொன்ன காரணமாகிய இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது ஆப்கானில் ஒரு கட்டத்திலும் நடக்கவில்லை.” என்று கட்டுரையில் கூறுவது ஏன்?
  ஒரு வில்லன் இல்லாமல் அமெரிக்கா எப்படி உலகத்தின் போலீசாக உலா வரமுடியும்? சோவியத் தகற்ப்புவரை உலகத்தின் வில்லானக அதற்கு இருந்தது சிகப்பு.
  பிறகு, பச்சையை காட்டி பூதம் என்று அலறுகிறது. நமக்கும் பயம் காட்டுகிறது.
  பாசிசம் என்ற தலைமை பூதத்தையே விடாமல் விரட்டியவர்கள் உலக மக்கள்.இப்போது,உலகம் முழுவதும் ஆட்சியை குறிவைக்கும் மத அடிப்படைவாதிகளை விரட்ட பல துயரங்களை அனுபவிக்கிறார்கள்.அதன் மத்தியில்தான் விழிப்புணர்வு பெறும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டியது யார்? பாட்டளி வர்க்க முண்ணனிப்படையின் புரட்சிக்கர சக்திகள்தான்.இதுதான் கசப்பான உண்மை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க