ப்பிரிக்கா கண்டம் என்றதும், போர், பசி, வறுமை, குண்டுகளுக்கு பலி கொடுக்கப்படும் அப்பாவி உயிர்கள், பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகள், சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அகதிகள் – ஆகியவைதான் நம் மனக் கண்களில் வந்து நிற்கின்றன. வை இயல்பாகிப்போன, வறுமையின் குறியீடாக நாம் பொதுவில் அறிந்து வைத்திருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில், இரண்டாவது பெரிய நாடான எத்தியோப்பியா, அங்கு கடந்த 8 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நாடாக எத்தியோப்பியா இருக்கிறது. இந்நாடு பூகோள ரீதியாக கிழக்கு மற்றும் தெற்கு சூடான், சோமாலியா, எரித்திரியா, சிபூத்தி, கென்யா ஆகிய நாடுகளின் எல்லைகளோடு இணைக்கப்பட்டுள்ள – நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். 20-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் தன்னாட்சி பெற்ற ஐ.நா வின் உறுப்பு நாடாகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைநகரமாகவும் (அடிஸ் அபாபா – எத்தியோப்பியாவின் தலைநகர்) எத்தியோப்பியா விளங்குகிறது.

அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்ரிக்க நாடான இது, அக்கண்டத்தின் மூன்றாவது சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் (எரித்திரியா, எத்தியோப்பியா, சிபூத்தி, சோமாலியா) முதன்மையான இராணுவ வலிமை கொண்ட நாடாகவும் உள்ளது.

படிக்க :
♦ தொடர் பஞ்சம் – வறுமை : ஆப்பிரிக்க கொம்பு நாடுகளைக் கைவிடும் அமெரிக்கா | படக் கட்டுரை
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்

1992 வரை எத்தியோப்பியாவில், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்ட போலி கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது தனது அண்டை நாடுகளான சோமாலியா, எரித்திரியா மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திய எத்தியோப்பிய அரசுக்கு, சோவியத் சமுக ஏகாதிபத்தியம் தனது பூகோள நலனுக்காக, ஆயுத உதவிகளைச் செய்து வந்தது. சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்த பிறகு, இங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தியோப்பியாவை தனது பேட்டை ரவுடியாக அமெரிக்க எகாதிபத்தியம் பயன்படுத்தி வந்தது.

எத்தியோப்பியா 10 தன்னாட்சி பிராந்தியங்களை கொண்ட கூட்டாட்சி அரசாகும். இந்நாட்டின் பிராந்தியங்களும், பிராந்திய கட்சிகளும் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இந்நாட்டில் 80-க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும், ஒரோமியா, அம்ஹாரி, திக்ரின்யா போன்றவையே பெரும்பான்மை இனங்களாக இருக்கின்றன.

இவற்றில், தீக்ரே பிராந்தியத்தைச் சேர்ந்த இனவெறிக் கட்சியான “தீக்ரே மக்கள் விடுதலை முன்னணி”யின் (TPLF) தலைமையிலான கூட்டாட்சி அரசே 1992 முதல் 2018 வரை எத்தியோப்பியாவை ஆட்சி செய்தது. 2018 தேர்தலில் டி.பி.எல்.எஃப் தோற்கடிக்கப்பட்டு,எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி”யின் (EPRDF) தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், டி.பி.எல்.எஃப் கட்சி தீக்ரே பிராந்தியத்தை மட்டுமே ஆட்சி செய்யும் நிலைக்கு சென்றது.

தற்போது, எத்தியோப்பிய கூட்டாட்சி அரசின் இராணுவத்திற்கும், தீக்ரே பிராந்தியத்தை ஆளும் டி.பி.எல்.எப்.-க்கும் இடையே, கடந்த 8 மாதங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 2018இல் ஈ.பி.ஆர்.டி.எஃப். கட்சியைச் சேர்ந்த அபி அகமது அலி என்பவரின் ஆட்சி அமைத்ததும், அந்நாட்டின் நீண்டகாலப் பகையாளியான எரித்திரியாவுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உயர் பதவிகளில் இருந்தும், இராணுவத் தலைமைப் பொறுப்புகளில் இருந்தும் டி.பி.எல்.எப் கட்சியைச் சேர்ந்தவர்களை நீக்கியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனால் அந்நாட்டில் ஒரு பதற்றமான சூழல் இருந்துவந்த நிலையில், கொரோனா தொற்றுக் காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருந்த தேர்தலும் ஒத்திவைக்கப்படுவதாக அபி அகமது அறிவித்தார். இதனை எதிர்த்த டி.பி.எல்.எப். கட்சி, தான் ஆளும் தீக்ரே பிராந்தியத்தில் மட்டும் தேர்தலை நடத்தி, பிரச்சினையைத் தீவிரமாக்கியது.

த்தேர்தலைச் சட்டவிரோதமானது என்று அபி அகமது அறிவித்திருந்த நிலையில், நவம்பர் 4, 2020 அன்று அதிகாலையில் டி.பி.எல்.எஃப் கட்சி, தீக்ரேயில் உள்ள கூட்டாட்சி அரசு இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. டி.பி.எல்.எப்–இன் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமாறுராணுவத்திற்கு உத்தரவிட்டார் பிரதமர் அபி அகமது. இதனால் எத்தியோப்பிய படைகள் தீக்ரே பிராந்தியத்தை நோக்கி தாக்குதலைத் தொடர்ந்த. இப்படிக் கடந்த நவம்பரில் தொடங்கிய இந்த உள்நாட்டுப்போர், 8 மாதங்களாக நடந்து வருகிறது.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் இப்போரினால் கொல்லப்பட்டுள்ளனர். 5000 குழந்தைகள் பெற்றோருடனான தொடர்பை இழந்துள்ளனர். 2 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். 60,000 பேர் அண்டை நாடான சூடானின் அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் பெண்களின் மீது இராணுவத்தால் நடத்தப்படும் கோரமான பாலியல் வன்கொடுமைகளும் அடங்கும்.

இத்தைகைய பேரழிவை ஏற்படுத்தியுள்ள உள்நாட்டுப் போரை பற்றியும் அதனால் பாதித்த மக்களைப் பற்றியும் எழுதும் வலதுசாரி பத்திரிக்கைகளோ, அபி அகமதுவின் அரசை மட்டுமே குற்றவாளியாக முன்நிறுத்தி, டி.பி.எல்.எப் மீது ஒரு பரிதாப பார்வையை ஏற்படுத்துமாறும் அவர்களுக்கு நியாயம் கற்பித்தும் எழுதுகின்றன. அதன் மூலம், அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் இந்த உள்நாட்டுப் போரைப் பற்றி சர்வதேச ரீதியில் உருவாக்க விரும்பும் கருத்தை பிரச்சாரம் செய்கின்றன.

ஆனால் இந்த உள்நாட்டுப் போரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள, டி.பி.எல்.எப்.ஐயும் அதன் பின்னணியையும் இப்போருக்குப் பின்னால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நோக்கங்களையும் புரிந்து கொள்வது அவசியமாகும்.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அடியாள் படையே டி.பி.எல்.ப். !

டி.பி.எல்.எப். அட்சி செய்த 2018-ம் ஆண்டு வரையில், எத்தியோப்பியா அமெரிக்காவின் தீவீர அடிவருடியாகவும், ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கும் பேட்டை ரவுடியாகவும் இருந்து வந்தது. 1975 முதல் 1991 வரை அதில் சிக்கல் இருந்து வந்தாலும், 1991-ல் மெங்கிஸ்ட் ஹைலே மரியத்தின் போலி கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி, திக்கிரின்யா இனவெறி கட்சியான டி.பி.எல்.எப் ஆட்சியைப் பிடித்தது, அமெரிக்காவிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

ஆட்சியமைத்த பின்னர், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ உதவியோடு தன்னுடைய இராணுவத்தை பலப்படுத்திக்கொண்ட டி.பி.எல்.எப்.,  அருகில் உள்ள எரித்திரியாவில் நடத்திய ஆக்கிரமிப்பு, சோமாலியாவின் மீதான படையெடுப்பு, தெற்கு சூடானில் மத்தியஸ்தம் என்ற பெயரில் உள்நுழைவது என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாள் படையாகவே செயல்பட்டது. 2018-ல் டி.பி.எல்.எப்–ன் தேர்தல் தோல்வியை சூடான், சோமாலியா, எரித்திரியா, லிபியா ஆகிய நாடுகள் ஆதரித்ததே இதற்கு ஒரு முக்கியமான சான்றாகும்.

அதுமட்டுமன்றி 1991 முதல் 2018 வரை டி.பி.எல்.எப். ஆட்சி செய்த 30 ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் கொலை, இனப்படுகொலை, பெருமளவில் மக்கள் இடம்பெயர்வது, போர்கள், பாலியல் வன்முறை, ஊழல், மோசடி என மனித உரிமை மீறல் கோரத்தாண்டவம் ஆடியது. தீக்ரே பிராந்திய இன மக்களின் நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைத் தன்னுடையை இராணுவத்துக்காக பயன்படுத்துவதன் மூலம் சொந்த பிராந்திய மக்களின் நலன்களுக்கு எதிரான கட்சியாகவும் டி.பி.எல்.எப் இருந்தது. 2018-க்குப் பின்னும் இன மோதல்களை தூண்டும் வகையிலும், அபி அகமதுவின் ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் பல்வேறு தக்குதல்களை நடத்தியது.

இப்படி சொந்த பிராந்திய மக்களுக்கே எதிரான, இனவெறி கொண்ட, அமெரிக்காவின் அடியாள் படையான டி.பி.எல்.எப் கட்சிக்கு ஆதரவாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் வலதுசாரிப் பத்திரிக்கைகளும் கருத்துருவாக்கம் செய்ய வேண்டியதன் பின்னணியை நாம் பார்க்கலாம்.

எத்தியோப்பியாவில் “மனித உரிமை மீறல்” எனக் கூச்சலிடும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் சதித்தனம்!

எத்தியோப்பியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே, ஐரோப்பிய பிரஸ்ஸல்ஸ் கூட்டமைப்பு, அம்னஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை (Amnesty International), யு.என்.எச்.சி.ஆர்.இன் அறிக்கை (UNHCR – United Nations High Commissioner for Refugees), அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் என அனைவரும் இதனைஇன அழிப்புப்” போர் எனக் கூறினர்.

மேலும், “தீக்ரே மக்கள் பசியில் வாடுகின்றனர், அவர்களுக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது, பெரிய பஞ்சம் வரப்போகிறது, எத்தியோப்பியாவின் அருகில் உள்ள எரித்திரிய படைகளால் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர்என அடுக்கடுக்கான அறிக்கைகளின் மூலம், எரித்திரியாவையும் எத்தியோப்பியாவையும் கண்டித்தனர். எத்தியோப்பியாவிற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகள் வழங்குவதில் கட்டுப்பாடு விதித்துள்ளது அமெரிக்கா. இதன்மூலம், பொதுவெளியில் அபி அகமதுவின் அரசு மற்றும் எரித்திரிய அரசை குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சிப்பதன் மூலம் டி.பி.எல்.எப்.-ஐ நியாயப்படுத்துகின்றனர்.

அமெரிக்க தலையீட்டை எதிர்த்துப் போராடும் எத்தியோப்பிய மக்கள்

எத்தியோப்பியாவுக்கு பராமரிப்பாளர் தேவையில்லை” ”நாங்கள் ஒருபோதும் மண்டியிடமாட்டோம்” என்ற முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளுடன் அந்நாட்டு மக்கள் 10,000 க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். “இது உள்நாட்டு விவகாரம் அமெரிக்கா இதில் தலையிடத் தேவையில்லை. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்ற மக்களின் கருத்தில் நின்று அதனை ஆராயத் தொடங்குவோம்.

சமீபத்தில், நைல் நதியில் அணை கட்டும் திட்டத்தினால் எத்தியோப்பியாவுக்கு எகிப்துடன் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை, கிழக்கு ஆப்பிரிக்கா முழுவதும் வெட்டிக்கிளி படையெடுப்பு, வேலையின்மை, பசி, பஞ்சம் என பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், உள்நாட்டுப் போரின் மூலம் மேலும் கடுமையான நெருக்கடியையும், சர்வதேச அளவிலான அழுத்தத்தையும் அபி அகமதுவின் அரசுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதே டி.பி.எல்.எப்ன் நோக்கமாக இருக்கிறது.

முன்னரே நாம் பார்த்தப்படி டி.பி.எல்.எப் தலைமையிலான எத்தியோப்பிய அரசாங்கம் ஏகாதிபத்தியங்களின் புவிசார் நலன்களையும், வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களையும் பாதுகாக்க ஒரு அடிவருடியாக செயல்பட்டது. அதனால் பல்வேறு நாடுகள் அதற்கு வரம்பற்ற இராணுவ மற்றும் பொருளாதாரத்தில் இராஜதந்திர பாதுகாப்பு அளித்தன.

கடந்த 2018-ல் அமைந்த அபி அகமதுவின் ஆட்சி, எரித்திரியாவுடனான சமாதான ஒப்பந்தம், தற்போது நடக்கப்போகும் தேர்தல் வாக்குறுதிகளில் அபி அகமதுவின் கூட்டணி எரித்திரியாவைப் போல நிலங்களை தேசியமயமாக்கப் போவதாக அறிவித்திருப்பது என இவையெல்லாம் டி.பி.எல்.எப்க்கு மட்டுமல்ல ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கும் உகந்ததாக இல்லை.

டி.பி.எல்.எப் மற்றும் ஏகாதிபத்தியங்கள் எத்தியோப்பியாவுக்கு நிகராக எரித்திரியாவையும் கடுமையாக தாக்குகின்றன. உதாரணமாக, ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் தன்னுடைய அறிக்கையில், எரித்திரிய வீரர்கள் தீக்ரேயில் ”மக்களை கொடூரமாக கொல்கின்றனர்” என்றும் ”பெண்களை பாலியல் வல்லுறவு” செய்கின்றனர் என்றும் கூறுகிறது. அமெரிக்காவோ எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரிய படைகள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கிறது. இதை மறுத்த எரித்திரிய பிரதமர், எத்தியோப்பிய உள்நாட்டுப்போரின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறுகிறார்.

இவ்வளவு சிரமப்பட்டு எத்தியோப்பியாவோடு இணைத்து எரித்திரியாவையும் தாக்க முயற்சிப்பதற்குப் பின்னே நீண்ட வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. எனினும், சுருக்கமாகப் பார்த்தால், 1896-ல் காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், கலானியாகாத ஒரே ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாதான். ஆனால் அந்த படையெடுப்பில் அருகாமை நாடான எரித்திரியா அடிமைப்படுத்தப்பட்டது. இந்த அவமானத்தை போக்க முசோலினியின் ஆட்சி காலத்தில் எரித்திரிய துருப்புகளின் உதவியோடு எத்தியோப்பியா மீது மீண்டும் போர் நடத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

படிக்க :
♦ உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை
♦ பூமியை அரிப்பதுதான் உலகமயம் – கேலிச்சித்திரங்கள்

இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்கடிப்பட்டதால் எரித்திரியா, எத்தியோப்பியா ஆகிய இரு நாடுகளும் விடுவிக்கப்பட்டன. ஆனால் எரித்திரியா தனி நாடாக இல்லாமல், எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து எத்தியோப்பியாவால் ஒடுக்கப்படும் எரித்திரிய மக்கள் தனி நாடுக்காக போராடி வந்த நிலையில், 1991-ல் .நா நடத்திய வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் தனிநாடு வேண்டுமென வாக்களித்தன் மூலம் எத்தியோப்பியாவிடமிருந்து விடுதலை அடைந்தது எரித்திரியா.

இந்த விடுதலைக்குப் பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான முன்மாதிரியாக எரித்திரியா விளங்கியது. இரண்டாம் உலாகப்போருக்கு பின் பிரிட்டன் எரித்திரியாவை விட்டு வெளியேறியதும், செங்கடல் கடற்கரையில் எரித்திரியா இருப்பதனாலும், அங்கு இருக்கும் தாதுப்பொருட்களின் வளம் காரணமாகவும், தனது 14-வது மாகாணமாக எத்தியோப்பியா எரித்திரியாவை இணைத்துக்கொண்டதுதான் வரலாறு.

எரித்திரியாவின் விடுதலையை ஏற்காத எத்தியோப்பியாவின் இராணுவம், எரித்திரிய விடுதலைக்குப் பின்பும் ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து நடத்தி வந்தது. ஏனென்றால் எத்தியோப்பியாவின் ஆட்சியின் கீழ் எரித்திரியா இருக்க வேண்டும் என்பது டி.பி.எல்.எப்இன் நோக்கம் என்பதைத் தாண்டி ஏகாதிபத்தியங்களின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதே உண்மை.

இன்னொருபுறம், அமெரிக்காவின் நோக்கத்திற்கு எதிராக, கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கவில், குறிப்பாக எரித்திரியா மற்றும் எத்தியோப்பிய பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 16 பில்லியன் டாலரை சீனா கடனாக வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் (2017-2018) ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் வர்த்தகம் 60 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் 2012-ல் 120 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான வர்த்தக மதிப்பு, 2017-2018 ஆண்டுகளில் 330 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.

எத்தியோப்பியா தனது பெரும்பாலான பொருட்களைச் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. போர் நடக்கக் கூடிய தீக்ரே பிராந்தியத்திலும் அதிக அளவிலான முதலீட்டினை சீனா செய்துள்ளது. அதேபோல் எரித்திரியாவிலும் எரிசக்தி, பொது சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் தன்னுடைய முதலீடுகளைச் செலுத்தி வருகிறது. மிக முக்கியமாக சீனாவின் புதிய பட்டுப்பாதைத் (Belt and Road) திட்டத்தில் எரித்திரிய எத்தியோப்பிய பகுதிகள் முதன்மையான இலக்காக இருக்கின்றன.

இப்படி இந்த இரண்டு நாடுகள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் சமாதான ஒப்பந்தம் போன்ற அமைதி காக்கும் பணிகளுக்கும் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கும் சீனா அதிக அளவிலான நிதியை செலவிடுவதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

புதிய ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரி சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். (அமெரிக்க அடிவருடியான டி.பி.எல்.எப் ஆட்சியில் இருந்தபோது அம்ஹாரா மற்றும் எரித்திரியா உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் திட்டங்களை குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம் போர் நடத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.)

எனவே, சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஒரு பேட்டை ரவுடி அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் எத்தியோப்பியாவையும் எரித்திரியாவையும் மட்டுமே குற்றவாளிகளாக்கி, டி.பி.எல்.எப்.-இன் தாக்குதல்களை இனவுரிமைக்கான பிராந்தியப் போராட்டமாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

உலகம் முழுவதிலும் ஆக்கிரமிப்புகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் நடத்தி, இலட்சக் கணக்கான மக்களைக் கொன்ற ஈவிரக்கமற்ற அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் “மனித உரிமை மீறல், இன அழிப்பு, போர், பஞ்சம்” எனக் கூச்சலிடுவதன் நோக்கம் என்ன?

பயங்கரவாதத்துக்கு எதிரான போர்என்ற பெயரில் ஆப்கான், ஈரான் போன்ற நாடுகள் நேட்டோ கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், “மனித உரிமை மீறல்” என்னும் பெயரில், 2011-ல் லிபியாவில் சர்வாதிகாரி கடாபியின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது ஏகாதிபத்தியங்களின் ஒரு புதிய வகையிலான அணுகுமுறையாக அமைந்தது.

அமெரிக்க சதியால் கொல்லப்பட்ட லிபியாவின் சர்வாதிகாரி கடாபி

அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் லிபியாவில் தனக்கு விசுவாசமான கூலிப்படையை உருவாக்கிக்கொண்டு ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்தது. இந்தப் போரானது லிபிய சர்வாதிகார அதிபர் கடாபிக்கு எதிரானஜனநாயக போராட்டமாக’ சித்தரிக்கப்பட்டு, கடாபியின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியதோடு, நாங்கள் தாக்குதல் நடத்தவில்லையென்றால் நகரமே மயானமாக மாறியிருக்கும் என இதற்கு விளக்கமும் அளித்தது.

இப்படி “மனித உரிமை மீறல்” என்ற பெயரில் தலையிடும் இந்த அணுகுமுறை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு வெற்றியை ஏற்படுத்தியதோடு, ஆப்கான், ஈரான் போன்ற நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்ட போது உலகெங்கும் போராட்டங்கள் நடந்தது போல, லிபியா ஆக்கிரமிக்கப்பட்ட போது போராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “இப்போரில் 200 கோடி டாலரை அமெரிக்கா செலவிட்டது. ஆனால் ஒரு அமெரிக்கன் கூடக் கொல்லப்படவில்லை. கடந்த காலங்களைப் போலன்றி நாங்கள் முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் முக்கியமான விசயம் இது.” எனக் கொண்டாடியவர்தான், அமெரிக்காவின் அப்போதைய துணை அதிபரும் இப்போதைய அதிபருமான ஜோ பைடன்.

தற்போது எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலையிட வேண்டும் என வலதுசாரி பத்திரிகைகள் கூறுவதும், “தீக்ரே மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது”, “மனித உரிமை மீறல் நடக்கிறது” என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கூச்சலும் லிபியாவில் பின்பற்றிய ’மனித உரிமை மீட்பு’ முறையின் மூலம் எத்தியோப்பியாவை தமக்குக் கீழான நாடாகக் கொண்டுவரும் சதித் திட்டமே ஆகும்.


பூபாலன்

உதவி கட்டுரைகள் :

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க