ப்பிரிக்க கொம்பு நாடுகள் கிழக்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள தீபகற்ப நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளாகும்.  சோமாலியா, எரித்திரியா, சிபூட்டி மற்றும் எத்தியோப்பா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் என்றழைக்கப்படுகின்றன.

பருவநிலை மாறுபாட்டால் பசுமையாக இருந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி 80 சதவீதம் விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்கள் இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள், கடந்த பல வருடங்களாக கடுமையான தொடர்வறட்சி நிலவிவருவதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் இப்போது இன்னொரு இடியை இந்த மக்களின் மேல் இறக்கியுள்ளது.

உயிர்காக்க உதவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது அமெரிக்கா. இதற்கென ஆண்டு பட்ஜெட்டில் ஒரு குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். டிரம்ப் தலைமையிலான கார்ப்பரேட் அரசு, அப்படி ஒதுக்க இருக்கும் நிதியிலிருந்து 24% சதவீத நிதியை 2020-ம் ஆண்டு பட்ஜெட்டிலிருந்து இரத்து செய்வதற்கான திட்டம் ஒன்றை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.

காய்ந்து கிடக்கும் நதிப் படுகையில் தங்களது ஆட்டு மந்தைகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்லும் எத்தியோப்பிய பெண்கள்

கொம்பு நாடுகள் வரவிருக்கும் சில மாதங்களில் முன்னெப்போதும் கண்டிராத பசிக்கொடுமை, பஞ்சத்தை எதிர் நோக்கியிருக்கிறதென்றும், ஏற்கெனவே விவசாயம் பொய்த்துப் போயிருந்த நிலையில், கூடுதலாக 30% இழப்புக்களும் ஏற்படும் என அண்மையில் வெளிவந்துள்ள வறட்சிகளை முன்னெச்சரிக்கும் அமைப்புக்களின் விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதி மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நலிவடைந்து, விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாகக் கூறுகிறார் கத்தோலிக்க நிவாரண சேவை மையத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிக்கான மண்டல இயக்குனர் மாட் டேவிஸ். இந்த நிலையில் இம்மக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர்.

அமெரிக்க டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல இலட்சக்கணக்கான மக்களைப் புறக்கணித்து வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும் என அஞ்சுவதாகக் கூறுகிறார் மாட் டேவிஸ். ஏற்கெனவே உலகத்தின் மிகவும் வறுமையான நாடுகளாக ஆப்பிரிக்க கொம்பு நாடுகள் அறியப்பட்டுள்ளன. தொடர் வறட்சி, நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகிறது.

படிக்க :
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்
♦ சூப்பர் டீலக்ஸ் : அரதப் பழசான அத்வைதம் | திரை விமர்சனம்

1990-களிலிருந்தே பாரிய அளவிலான பருவ நிலை மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன இந்நாடுகள். சுட்டெரிக்கும் வெயில் அல்லது தொடர் மழை வெள்ளம் அல்லது பஞ்சம் என்ற நிலைதான் மாறி மாறி வந்துகொண்டிருக்கிறது.

நான்கு குழந்தைகளின் தாயான பிர்ஹான், எத்தியோப்பிய நாட்டில், டைக்ரே மாகாணம் ஹாவ்சென் மாவட்டத்தில் வசித்து வருகிறார். பருவநிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவேயில்லை, எனவே விவசாயம் தொடர்ந்து பொய்த்து வருகிறது. ஒருவேளை பயிர்கள் வளரும் பட்சத்தில் வெள்ளம் வந்து அவற்றை அழித்துவிடுகிறது.

அமெரிக்க நிதியின் மூலம் உணவு கிடைக்கப்பெறும் 15 இலட்சம் மக்களில் பிர்ஹானும் ஒருவர்.  அமெரிக்க உதவிகள் கிடைக்காதபட்சத்தில் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுவதுதான் ஒரே வழி, ஆனால் எங்கு போவதென்றே தெரியவில்லை என்கிறார் பிர்ஹான்.

2018-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை கிடைத்திருக்க வேண்டிய பருவ மழையில், 55 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் தெரியவரும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கும் டிரம்ப் அரசு, உலகம் முழுவதும் தனது ஏகாதிபத்திய செல்வாக்கை நிலைநிறுத்தி, குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க ஏழை நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டியதோடன்றி, அந்நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கெடுத்து, இப்போது அவர்களை சவக்குழிக்கு அனுப்பவும் தயாராகி விட்டது.

நான்கு குழந்தைகளின் தாயான பிர்ஹான், நிவாரணப் பொருட்கள் வாங்கச் செல்வதற்கு தயாராக இருக்கிறார். அமெரிக்க நிதி உதவி பெறும் பல இலட்சக்கணக்கானோரில் பிர்ஹானும் ஒருவர்

என்னுடைய விவசாய நிலங்கள் வறட்சியால் பொய்த்துப் போனதால், நிவாரணம் கிடைக்கிறது. இங்குள்ள எல்லோருமே என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள்தான் – பிர்ஹான்

நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் குடிப்பெயர்ச்சி அல்லது மற்ற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படி இடம்மாறும் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் – பிர்டுக்கான் ஜெடிஃபா – பசிக்கு உணவு என்ற சேவை நிறுவனத்தின் ஊழியர்

உலக சுகாதார நிறுவனத்தின்படி, தொடர் பஞ்சம் நிலவும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில், அதிக பாதிப்புக்குள்ளாவது பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். சுகாதாரமான குடிநீர் கிடைக்காதது மற்றும் உணவு பற்றாக்குறை நிலவுவதுதான் இதற்கு பிரதான காரணமாகிறது

வறட்சியினால் பாதிக்கப்பட்ட சுமார் 15 இலட்சம் எத்தியோப்பிய மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காகப் பதிவு செய்யும் எத்தியோப்பிய மக்கள்.

2016-ம் ஆண்டு முதல் அதிநவீன மின்னணு சாதனங்களின் உதவியோடு 99% உணவுப்பொருட்கள் சரியான நபர்களுக்கு வழங்கப்படுகின்றன.

உணவுப் பங்கீட்டு மையமொன்றில், அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய கோதுமை மூட்டைகளை அவிழ்க்கிறார் ஒரு பெண். தங்கள் உணவுத்தேவைகளை தங்கள் நிலங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளும் சக்திபடைத்த எத்தியோப்பிய மக்கள், பருவநிலையில் ஏற்படும் மாற்றத்தால், அந்நிய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் – மாட் டேவிஸ்

நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பட்டாணி, கோதுமை, சமையல் எண்ணெய் வழங்கப்படுகின்றன.

நிவாரணப் பொருட்களை, தன்னுடைய கழுதையின் முதுகில் சுமத்திச் செல்கிறார் ஒரு பெண். வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழிவிலிருந்து காப்பது இந்த நிவாரணப் பொருட்கள். அமெரிக்கா இதற்கான நிதியை இரத்து செய்தால் நிலைமை என்னவாகுமோ?

அடிப்படை உணவுத்தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், பொருளாதாரத் தேவைகள் வெகுவாக நிவர்த்தி செய்யப்பட்டு, தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராகிறார் பிர்ஹான்

என்னுடைய மூத்த மகளுக்கு சவுதியில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பது விருப்பம். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஒருவேளை இந்த முறையும் விவசாயம் பொய்த்து விட்டால், குடிபெயருவதைத் தவிர வேறு வழியேயில்லை – ஃபெபெடு மெஹாரி

ரேஷனில் கிடைக்கப்பட்ட கோதுமை மூட்டைகளை ஒட்டகத்தின் முதுகிலேற்றி, தனது கிராம மக்களுக்குப் பகிர்ந்தளிக்கச் சென்று கொண்டிருக்கும் இளைஞர். கடந்த வருடம் பெய்திருக்க வேண்டிய மழையில் 55% சதவீதம் குறைந்து போனது இவர்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது

எத்தியோப்பாவின் பெரும்பாலான மக்கள், பஞ்சகாலங்களில் தங்களின் கால்நடைகளையே பெருமளவில் நம்பியிருக்கின்றனர். தொடர்  வறட்சியால், ஒன்று இவைகள் அழிகின்றன அல்லது இவர்களுக்கு உணவாகின்றன


கட்டுரையாளர் : Will Baxter
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க