நைஜீரியாவின் மைதுகுரியை (Maiduguri) சேர்ந்த கோமி காஜேவின் (Komi Kaje) வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்குள் மிக இன்றியமையாத நபர்கள் இருவரை கொன்று விட்டனர் போகோ ஹராம் பயங்கரவாதிகள். அவரது 46 வயதான சகோதரரை பயங்கரவாதிகள் கடந்த 2015, நவம்பரில் சுட்டுக் கொன்றனர்.
”ஏழு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். நான் அங்கு சென்ற போது அவர் இருமுறை தலையில் சுட்டு கொல்லப்பட்டிருந்ததைப் பார்த்தேன்” என்றார் காஜே.
பாரம்பரிய வழக்கப்படி துக்க நாட்கள் கடைபிடிக்கப்பட்டன. காஜே உடைந்துதான் போயிருந்தார். ஆனால் அவரது 35 வயதான ஆண் நண்பர் பீட்டர் ஆடம் அவருக்கு சற்று ஆறுதலாக இருந்தார். சனிக்கிழமை காஜேவின் குடும்பத்தினருடன் துக்கம் கடைபிடித்து மதிய உணவையும் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் போகோ ஹராம் மீண்டும் தாக்குதலைத் தொடுத்து காஜேவின் தற்காலிக ஆறுதலை நிரந்தர துக்கமாக்கிவிட்டனர். “அவரது தலையிலும் மார்பிலும் சுட்டனர். அவர் அருகிலிருந்த அகழியில் விழுந்தார். அவரது மூளையை குண்டு தாக்கியது” என்று காஜே கண்ணீருடன் கூறினார்.

அந்த படுகொலைகளை மறக்க காஜே கடுமையாக முயன்றார். ஆனால் இராணுவ அபாய சங்குகள், துப்பாக்கிச் சூட்டின் சத்தம் மற்றும் அவரது அன்புக்குரியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பார்த்தது அவருக்குள் ஒரு கடுமையான மனக்குமுறலை ஏற்படுத்தியது.
புதிய இடத்திற்குச் சென்றால் அவருக்கு சற்று ஆறுதல் கிடைக்கலாம் என்று நினைத்த அவரது பெற்றோர் நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவிற்கு சென்று சில காலம் தங்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் அது வேலைக்காகாது என்பதை காஜே புரிந்து கொண்டார். “ஏனெனில் போகோ ஹராம் எங்கும் சூழ்ந்திருந்தனர்” என்கிறார் அவர்.
பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம் என்று கருதினார். அதே நேரத்தில் ஆயுதந்தாங்கிய போகோ ஹராம் பயங்கரவாதிகள் பல நகரங்களையும் கிராமங்களையும் இஸ்லாமிய கலிபா (Islamic caliphate) என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தனர். 2009-ம் ஆண்டிலிருந்து 27,000-க்கும் அதிகமான மக்களை படுகொலை செய்ததுடன் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது வீடுகளை விட்டு இடப்பெயர்ச்சி செய்திருந்தது போகோ ஹராம்.
போகோ ஹராமை எதிர்த்துச் சண்டை:
போகோ ஹராமை எதிர்த்த போராட்டத்தில் சேர வேண்டும் என்ற கருத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் முன்வைத்த போது கேலி மற்றும் அலட்சியப்போக்கை காஜே எதிர்கொண்ட்டார். “போகோ ஹராமுடன் ஒரு பெண் எப்படி போராட முடியும்?” என்று அவரிடம் கூறப்பட்டது.
காஜேவும் ஃபதியும் பொதுமக்கள் கூட்டுப் படைக்குழுவில் (Civilian Joint Task force) இணைந்தனர். அது போகோ ஹராமினால் பாதிக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்பட்டது. அது இராணுவத்துடன் இணைந்தும், ஆதரவாகவும் போகோ ஹராமை எதிர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பொதுமக்கள் கூட்டுப் படைக்குழுவில் பெரும்பாலும் ஆண்களே இருந்தனர். ஆனால் பெண்களுக்கென்றே சில குறிப்பான வேலைகளும் இருந்தன.
படிக்க :
♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
♦ ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை
“சண்டைக்கு பலப் பெண்களை போகோ ஹராம் பயன்படுத்திக்கொண்டது. எனவே அதை எதிர்ப்பதற்கான எதிர்-உத்திக்கு பெண்களே தேவைப்பட்டனர்” என்கிறார் காஜே.
சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் இதர பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு போகோ ஹராம் பெண்களை அனுகூலமாக பயன்படுத்திக்கொண்டது.
2011-17 இடைப்பட்ட ஆண்டுகளில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய 338 தாக்குதல்களில் 244 -ல் பெண் தற்கொலை குண்டுதாரிகளையே பயன்படுத்தியதாக அமெரிக்காவின் “பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் மையம்” (Combating Terrorism Center) கூறுகிறது. போகோ ஹராம் 2018-ம் ஆண்டில் தற்கொலை தாக்குதல்காரர்களாகப் பயன்படுத்திய 48 குழந்தைகளில் 38 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத மற்றும் இன்னப்பிற [பிற்போக்கு] கலாச்சார காரணங்களுக்காக நைஜீரிய படையினர் பெண்களை சோதனை செய்வது தடுக்கப்பட்டிருந்தது. இது போகோ ஹராமிற்கு தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

அதன் பிறகு பெண்கள், அதிகாலை முதல் அந்தி சாயும் வரை, தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய மைதுகுரியின் (Maiduguri) சந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுமக்கள் பகுதிகளுக்குச் சென்று பெண் தற்கொலை குண்டுதாரர்களை தேடுகின்றனர். இதனால் பல பெண் தற்கொலை குண்டுதாரர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது கொலைகாரத் தாக்குதல்கள் தோல்வியடைந்தன.
சில சூழ்நிலைகளில், பயங்கரவாத குழுவின் நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுக்க பெண்களை இராணுவம் ஈடுபடுத்துகிறது. இது ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. இதனால் “போகோ ஹராமைப் பற்றி கிசுகிசுப்பவர்கள்” (Gossipers of Boko Haram)” என்ற புனைப்பெயர் அவர்களுக்கு வந்தது.
போகோ ஹராம் குறிப்பிட்ட பகுதியில் தாக்குதல் நடத்த இருக்கிறது என்று இராணுவத்திற்கு துப்பு கிடைத்ததும் கூட்டத்தில் மறையும் பெண் தற்கொலை குண்டுதாரர்களைக் கண்டறிந்து அம்பலப்படுத்த துப்பு கொடுக்கும் பெண்களை பயன்படுத்துகிறது. அரிதான, ஆனால் மிகவும் ஆபத்தான சில சமயங்களில், பெண் போகோ ஹராம் குண்டுதாரர்களை குறிவைத்த இராணுவ நடவடிக்கைகளில் இப்பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கொலை மிரட்டல்கள:
ஆனால் நைஜீரிய பெண்களின் நடவடிக்கைகள் குறித்து எல்லொருமே மகிழ்ச்சியடைவதில்லை. “அக்கம்பக்கத்தினர் எப்பொழுதுமே என்னை கேலி செய்கிறார்கள். ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது” என்று ஃபதி கூறினார்.
படிக்க :
♦ அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !
♦ படக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி !
தூதர்களை அனுப்பி பெண் போராளிகளுக்கு போகோ ஹராம் கொலை மிரட்டல் விடுகிறது. “போகோ ஹராம் பல முறை எனக்கு கொலை மிரட்டல் விட்டிருக்கிறது. இந்த வேலையை விட்டு விடு இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அவர்கள் என்னை எச்சரித்தார்கள். எங்கள் செயல்பாடுகளால் அவர்களது நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் நிறுத்தப் போவதில்லை. ஏனெனில் எனக்காக அல்ல என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் அவர்களுடன் சண்டையிடுகிறேன்” என்கிறார்.
போகோ ஹராமுடைய வன்முறை உச்சத்திலிருந்த போது, அவர்களது ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பாவி குடிமக்களை கைது செய்தல், சிறையிலடைத்தல் மற்றும் கொலை செய்ததாக இராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. யாருக்கெல்லாம் போகோ ஹராமுடன் தொடர்பிருக்கிறது என்று கண்டறிவதற்கு போதுமான தகவல்கள் இராணுவத்திடம் இல்லை.
ஒன்பது வயது சிறுவர்கள் உட்பட 20,000 பேர்கள் எந்த விதமான சட்டபூர்வமான நடவடிக்கைகள் ஏதுமற்று இரணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவும் 1,200-க்கும் மேற்பட்ட ஆண்களும் படுகொலை செய்யப்பட்டதாக ஆம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.
பலர் மடிந்துவிட்டார்கள்:
சில உள்ளூர்வாசிகளுக்கு போகோ ஹராம் பற்றி தெரிந்தாலும் இராணுவத்திற்கு துப்பு கொடுத்தால் தங்களது குடும்பத்தினரை பயங்கரவாதிகள் கொன்று விடுவார்கள் என்பதால் துப்பு சொல்வதில்லை. அதே நேரத்தில் இந்த தடைக்கற்களை உடைத்து, போகோ ஹராம் பற்றி மதிப்பு மிக்க தகவல்களை இராணுவத்திடம் சொல்லும் பெண்களும் அதே சமூகத்தில் இருக்கிறார்கள்.

”இதனால் பல பெண்கள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்” என்று மைதுகுரி திங்கள் சந்தை வாயில்காப்பாளர்களை ஒருங்கிணைப்பாளரான உமர் ஹபிபா கூறினார். கிளர்ச்சியின் மையமான நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் தற்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர் என்று அவர் கூறினார். அச்சுறுத்தல்கள், திருமணம் மற்றும் சமூகத்தின் அழுத்தம் ஆகியவற்றின் விளைவாக ஏனையோர் பணியிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர் கூறுகிறார்.
இப்பணியில் எப்பொழுதுமே ஆபத்து நிறைந்துள்ளது. தற்கொலை குண்டுதாரர்களின் தாக்குதலின் போது இப்பணியில் ஈடுபடும் பெண்களும் பலியாகக்கூடும். “இப்பணியில் வீரமரணம் எய்தினால் என்னுடைய பெற்றோர்கள் என்னைப்பற்றி பெருமையடைவார்கள் என்று எனக்கு தெரியும்” என்றார் காஜே. முன்பு தன்னார்வலராக இந்தப் பணியைச் செய்து வந்த நிலையில் தற்போது மாநில அரசிடமிருந்து 30 டாலரை மாத ஊதியமாகப் பெறுகிறார். “கடுமையான பணி அழுத்தம் காரணமாக பல பெண்கள் இதிலிருந்து வெளியேறிவிட்டனர்” என்கிறார் காஜே.
– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா