வேண்டாம் ஹைட்ரோ கார்பன் ! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.

கோய் ஆற்றின் கரையில் நிற்கும் எரிக் தூவின் முகம் வியர்வையில் மின்னுகிறது. ஆறும் மின்னுகிறது. அதன் மீது எண்ணெய்ப் படலம். என் பெற்றோர் மிகச்சிறந்த விவசாயிகள்” என்று சொல்லியபடியே ஆற்றோரம் இருக்கும் தனது வயல்வெளியைக் காட்டுகிறார். எங்கும் களைகள் மட்டுமே முளைத்திருக்கின்றன. கடலை, சோளம், மரவள்ளி, கருணைக் கிழங்கு என்று அனைத்தும் விளைந்த நிலம் அது. எங்களுக்குச் சாப்பிடுவதற்கும், விற்பதற்கும், சேமிப்பதற்கும் போதுமான விளைச்சல் இருந்தது. நிலம் வளமாக இருந்தது. இங்கே விவசாயிகள் ஒருபோதும் ஏழையாக இருந்ததில்லை.”

நைஜர் டெல்டா
நைஜர் டெல்டாவை காட்டும் வரைப்படம்

அதெல்லாம் ராயல் டச்சு ஷெல் நிறுவனம் 1950 அங்கே எண்ணெயைக் கண்டுபிடிக்கும் வரைதான். எங்கள் கிராமத்திலிருந்து 70 மைல் தூரத்தில் அவர்கள் எண்ணெயைக் கண்டுபிடித்தார்கள். 80-களின் தொடக்கத்தில்தான் எங்கள் வயல்களில் எண்ணெய் படிவதை நாங்கள் பார்த்தோம். விளைச்சல் மெதுவாகத்தான் குறையத் தொடங்கியது. ஆனால், வரவிருக்கும் அபாயத்தை அப்போது நாங்கள் புரிந்து கொள்ளவில்லை” என்றார் எரிக்.

அந்த டெல்டா பகுதி முழுவதும் குறுக்கு நெடுக்காக ஷெல் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் வந்தன. குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவது வழக்கமாகிவிட்டது. ஒருபுறம் இப்படி விவசாயம் அழிந்து கொண்டிருக்க, மறுபுறம் டெல்டாவிலிருந்து விவசாயிகளை மொத்தமாக வெளியேற்றுவதற்கான சட்டத்தை இயற்றியது நைஜீரிய அரசு. நாட்டின் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம்” என்ற கோட்பாட்டின்படி, நிலத்தின் மதிப்புக்கு இழப்பீடு தரவியலாது என்றும், நிலத்தை கையகப்படுத்தும் ஆண்டில் விளைந்த பயிர்களின் மதிப்பு என்னவோ அதன் அடிப்படையில் கணக்கிட்டு மட்டுமே இழப்பீடு என்றும் அறிவித்தது நைஜீரிய அரசு.

மார்ச் 1993-ல், 3 இலட்சம் ஒகோனி இன மக்கள் கென் சரோ  விவா தலைமையில் மாபெரும் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதன் விளைவாக ஒகோனி பிராந்தியத்தில் இருந்த 30 எண்ணெய்க் கிணறுகளை ஷெல் நிறுவனம் மூடவேண்டியதாயிற்று. இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது நைஜீரிய அரசு. கென் சரோவிவா உட்பட, ஒகோனி மக்கள் வாழ்வுரிமைக்கான இயக்கத்தின் தலைவர்கள் 8 பேர் மீது ஒரு பொய்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டித் தூக்கிலிட்டது நைஜீரிய அரசு. உலகம் முழுவதும் இதற்குக் கண்டனங்கள் எழுந்தன.

மாசடைந்த ஆறு. இந்த ஆற்று நீரைக் குடிக்கவோ அல்லது நீந்தவோ, மீன் பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கும் விளம்பரப்பலகை.

2004-ல் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கசிவின் காரணமாக சுமார் 40 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தன. கோய் கிராமத்தின் வயல்களுக்கும் அந்தத் தீ பரவியது. ஆறுகளிலும் ஓடைகளிலும் இருந்த மீன்கள் அழிந்தன. 2007-ல் மறுபடியும் எண்ணெய்க் கசிவு, மீண்டும் மாங்குரோவ் காடுகள் எரிந்தன. மர்மமான இருமல், புற்றுநோய், நுரையீரல் நோய், பார்வையிழப்பு உள்ளிட்ட இனம்புரியாத பல நோய்கள் பரவத்தொடங்கின. அங்கே வாழவே முடியாது என்ற நிலையில் மொத்த மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

கோய் என்பது இப்போது ஒரு பேய்க் கிராமம். ”தடை செய்யப்பட்ட பகுதி. அருகே வராதீர்கள்” என்று ஒரு எச்சரிக்கைப் பலகையை அந்தக் கிராமத்தில் வைத்திருக்கிறது நைஜீரிய அரசு. இது ஒரு கிராமத்தின் கதை மட்டுமல்ல. நைஜர் டெல்டாவின் கதை.

படிக்க :
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

30,000 சதுர மைல் பரப்புள்ள நைஜர் நதியின் டெல்டா ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது. உலகின் 3-வது மிகப்பெரிய சதுப்புநிலமும், மாங்குரோவ் காடுகளும் கொண்டது. 3 கோடி மக்கட்தொகை கொண்ட இந்த டெல்டாவின் 60% மக்கள் சுயசார்பு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்.

உலகிலேயே எண்ணெயால் சூழல் மாசுபடுத்தப்பட்ட பிராந்தியங்களில் நைஜர் டெல்டா முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடங்களில் கூட இன்றளவும் மண்ணும் நிலத்தடி நீரும் பெரிதும் மாசுபட்டே இருக்கின்றன என்கிறது 2011-ம் ஆண்டு ஐ.நா நடத்திய ஆய்வு. இன்றைக்கும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.1 கோடி காலன் எண்ணெய்க் குழாய்களிலிருந்து கசிந்து நைஜர் டெல்டாவை நாசமாக்கிக்  கொண்டிருக்கிறது.

கென் சரோ விவா
நைஜர் டெல்டாவை சீரழித்த ஷெல் எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்து ஒகோனி இன மக்களை அணித் திரட்டிப் போரடியதற்காக நைஜீரிய இராணுவ சர்வாதிகார அரசால் தூக்கிலிடப்பட்ட போராளி கென் சரோ விவா

சூழலை நாசப்படுத்துவது மட்டுமின்றி, சமூகத்தையும் நாசமாக்குகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இன்று நைஜீரியாவில் எண்ணெய்த் திருட்டு என்பது ஆண்டொன்றுக்கு 60,000 கோடி ரூபாய் புழங்குகின்ற தொழில். ஆயுதம் தாங்கிய கூலிப்படைகள், சர்வதேச கார்ட்டல்கள், அரசு பாதுகாப்புப் படையினருக்கான இலஞ்சம் எனப் பல கோடி ரூபாய் புழங்கும் இந்த தொழிலில் சுமார் 26,000 பேர் வேலை செய்கின்றனர். 60,000 கோடி ரூபாயில் 80% அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் எண்ணெய் வளத்துறையின் அதிகாரவர்க்கத்தினருக்குத்தான் செல்கிறது.

எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல பிரச்சினை. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து நிரந்தரமாக எரிகின்ற எரிவாயுத் தீயின் காரணமாக, சூழல் வெப்பமடைவது மட்டுமல்ல, அது அமில மழையாகவும் பூமிக்குத் திரும்ப வருகிறது. நைஜீரிய அரசின் கணக்குப்படியே ஆண்டொன்றுக்கு 31.3 கோடி கன அடி எரிவாயு எரிக்கப்பட்டு, 1.65 கோடி டன் கரியமிலவாயு டெல்டா பகுதியின் காற்றில் கலந்து வருகிறது.

இவ்வாறு சூழல் மாசுபடுவதன் விளைவாக டெல்டா பகுதியில் எங்கு திரும்பினாலும் தோல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல, விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. எண்ணெய் கசிவையும் மீறி வளரும் தானியங்கள் எண்ணெயையும் உட்கொண்டு வளர்கின்றன. இந்த ஆறுகளிலும் ஓடைகளிலும் வளரும் மீன்களிலும் எண்ணெயின் வீச்சம் தெரிகிறது. இந்த தானியத்தையும் மீனையும்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள்.

விளைவு, இந்தப் பகுதியில் மக்களின் ஆயுட்காலமே குறைந்து விட்டது. நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஓடைகளில் மீனும் நத்தையும் பிடித்து அதை விற்றுப் பிழைக்கும் பெண்கள் இங்கே ஏராளம். இந்த தொழில் செய்யும் பெண்கள் தோல் நோய் முதல் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் சகஜம்.  ஒரு பெண் கருவுற்றாள். ‘‘உன் குழந்தை பிழைக்க வேண்டுமானால்,  ஓடையில் மீன் பிடிக்கப் போகாதே என்று எச்சரித்திருக்கிறார் மருத்துவர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த வேலை தவிர வேறு வழியில்லாத காரணத்தால், தொடர்ந்து மீன் பிடிக்கப் போனாள். விளைவு குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் இறந்து விட்டது. நீ சுவாசித்த நச்சுக்காற்றுதான் உன் மகனைக் கொன்று விட்டது” என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு உடைந்து அழுதாளாம் அந்தப் பெண். இதுபோல ஓராயிரம் கதைகள்.

இச்சூழல் மக்கள் மத்தியில் தோற்றுவித்த கோபத்தின் விளைவாக 2006-ம் ஆண்டில் நைஜர் டெல்டா மீட்பு இயக்கம்” என்ற பெயரில் பல ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவை நைஜீரிய அரசையும் போலீசையும் எதிர்த்து மோதின. 3 ஆண்டுகள் இந்த மோதல் தொடர்ந்தது. பிறகு 2009-ல் இந்த ஆயுதக் குழுக்களுடன் அரசு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஒகோனி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
நைஜர் டெல்டா பகுதியில் ஷெல் நிறுவனம் நடத்திய பச்சைப் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு ஆதரவு தரக்கோரி ஒகோனி இன மக்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அந்த ஒப்பந்தத்தின்படி 30,000 முன்னாள் ‘போராளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை, தொழில் பயிற்சி, எண்ணெய்க் குழாய்களைப் பாதுகாப்பதற்கான காண்டிராக்டுகள்” ஆகியவற்றைக் கொடுத்து அவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்படையாக மாற்றிவிட்டது நைஜீரிய அரசு. இதன் விளைவாகப் போராடிய இளைஞர்களில் பலர் மாஃபியா தலைவர்களாக மாறினர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது மாத உதவித்தொகையை அரசால் கொடுக்க முடியவில்லை. உடனே ’முன்னாள் போராளிகள்’ மீண்டும் ஆயுதம் ஏந்தினர். குழாய்களை உடைக்கத் தொடங்கினர். உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான பாக்கியை செட்டில் செய்தது அரசு. வாழ்விழந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், போராட்டத்தை ஊழல்படுத்தியதன் மூலம் தனக்கான கைக்கூலிகளை அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கிக் கொண்டன.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஷெல் நிறுவனத்துக்கு எதிராக மட்டும் சுமார் 1000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடியாகின்றன அல்லது சிறிய இழப்பீட்டுக்குப்பின் முடிக்கப்படுகின்றன. மற்றவை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.

ஷெல் நிறுவனம், ஆறுகளையும் வயல்களையும் மாசுபடுத்தியதற்கு இழப்பீடு கேட்டும், அவற்றைச் சுத்தம் செய்யக் கோரியும் 1997 எரிக்கின் தந்தை வழக்கு தொடுத்தார். 21 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு முடியவில்லை. ஆனால், பார்வை இழந்து, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு எரிக்கின் தந்தை இறந்து போனார். இப்போது எரிக் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறார்.

மீத்தேன் திட்டம்
எரிக் தூ

இத்தகைய வழக்குகளில் ஷெல் நிறுவனம் ஒரு மோசடியான வாதத்தை வழக்கமாக முன்வைக்கும். எண்ணெய்க் கசிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எண்ணெய்த் திருடர்கள் குழாய்களைச் சேதப்படுத்துவதுதான் காரணம்” என்று வாதிடும்.

ஒரு வாதத்துக்கு அதனை ஏற்றுக் கொண்டாலும், விளைநிலத்திலிருந்து விவசாயிகளை விரட்டி விட்டு, எண்ணெய்க் குழாய் போட்டால், பெண்டு பிள்ளைகளுக்குச் சோறு போடுவதற்காகச் சிலர் திருடத்தானே செய்வார்கள்?

ஆறுகளில் படிந்து விட்ட எண்ணெயை அகற்றுவோம்; விளை நிலத்தைச் சுத்தம் செய்து மீட்டுருவாக்கம் செய்வோம்; மீண்டும் மாங்குரோவ் காடுகளை உருவாக்குவோம்” என்று கூறுகிறது ஐ.நா-வின் ஹைட்ரோ கார்பன் மாசு அகற்றும் திட்டம். அவர்களது கணக்குப்படியே இதற்கு 30 ஆண்டுகள் ஆகுமாம்.

இன்று அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 900 மடங்கு அதிகமாக பென்சீன் கலந்திருக்கிறது. நல்ல குடிநீருக்கும் வழியில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சோதனைகூடச் செய்யப்படவில்லை.

“என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு வசதியான விவசாயியின் மகன். ஆனால், எனக்குக் கிடைத்திருக்கும் சொத்து – வறுமை. பலருக்கு வேலை கொடுத்த நான் இன்று வேலை தேடுகிறேன். குழந்தைகளுக்குச் சோறு போட முடியவில்லை, படிக்கவைக்க முடியவில்லை. என்னுடைய தந்தை வாழ்நாள் முழுவதும் போராடி, நீதியைக் கண்ணால் காணாமலேயே செத்துப்போனார். இப்போது நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் செத்துவிட்டாலும், என் பிள்ளைகள் போராட்டத்தைத் தொடருவார்கள்” என்றார் எரிக் தூ.

அஜித்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க