ந்தியா முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவற்றில் 41 இடங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ள வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் 2 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

திறந்தவெளி உரிமக் கொள்கையின் (Open Acreage Licensing Policy – OALP) கீழான இத்திட்டங்களில் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனமும், சிதம்பரத்தை ஒட்டிய பகுதிகளில் 731 சதுர கி.மீ. பரப்பளவில் ஓ.என்.ஜி.சி.-யும் நிலக்கரி, மீத்தேன், ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு எரிபொருட்களை அகழ்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரம் அடி ஆழத்திற்குப் பூமியைத் துளையிட்டு, அவற்றில் அபாயகரமான நச்சு வேதிப்பொருட்களைச் செலுத்தி, நீரியல் விரிசல் முறையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்களால் நிலத்தடி நீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, நிலம் நஞ்சாக்கப்பட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒட்டுமொத்த டெல்டா பகுதியும் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. எனவே, இத்திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் டெல்டா விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். நெடுவாசல் போராட்டம் 500 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே டெல்டா பாசனப் பகுதியை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்துள்ள மத்திய அரசு, மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதானது ஒட்டுமொத்தத் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இத்திட்டங்கள் கடல் பகுதியில் வருகிறது என உண்மையை மூடி மறைத்தும், விவசாயிகள் தங்கள் எல்லைக் கோடுகளுக்குள் நின்று செயல்படவேண்டுமென எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசி எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியுள்ளார்.

படிக்க:
ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !
ஹைட்ரோ கார்பன் சிறப்புக் கட்டுரை : மோடி ஏவிவிடும் பேரழிவு !

வேதாந்தா நிறுவனத்திற்கும், மத்திய மோடி அரசுக்குமிடையிலான நெருக்கம் ஊரறிந்த இரகசியம். இந்த நெருக்கம்தான் ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று அனில் அகர்வாலைத் திமிருடன் பேசவைத்துள்ளது; மக்களின் எதிர்ப்புகளை முறியடித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றிவிட முடியுமெனக் கனவு காணவைத்துள்ளது.

இலட்சம் மக்கள் திரண்ட போராட்டத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

கோடிக்கால் பூதமெனத் திரண்டெழக் காத்திருக்கும் தமிழக மக்களின் போராட்டத்தால் டெல்டாவைப் பாலைவனமாக்கும் வேதாந்தாவின் கொடுங்கனவும் நிச்சயமாக முறியடிக்கப்படும்.

மக்கள் அதிகாரம் சென்னை
9176801656
ppchennaimu@gmail.com

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க