Wednesday, September 27, 2023

ஒடிசா : வேதாந்தாவே வெளியேறு !

-

ண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வேதாந்தா அலுமினியத்தின் பாக்சைட் (அலுமினிய தாது) எடுக்கும் திட்டத்தை ஒடிசாவின் நியமகிரி மலைப் பகுதி மக்கள் நிராகரித்திருக்கின்றனர்.

ஜரப்பா கிராமசபை
ராயகடா மாவட்டத்தின் ஜராபா கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் (படம் : நன்றி தி இந்து)

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜராபாவில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வேதாந்தா திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ராயகடா மாவட்டத்திலும் காலஹந்தி மாவட்டத்திலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட 12 கிராம சபை கூட்டங்களில் இது கடைசிக் கூட்டமாகும். அனைத்து கிராம சபைகளும் வேதாந்தா-ஒடிசா அரசின் கூட்டு முயற்சியை 12-0 என்ற கணக்கில் நிராகரித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து சுரங்கம் தோண்டுவதற்கு மாற்று இடங்களை ஒதுக்கும்படி ஒடிசா மாநில அரசின் மீது வேதாந்தா அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

நியமகிரியிலிருந்து பாக்சைட் (அலுமினிய தாது) எடுப்பதற்கான ஒப்பந்தம் ஸ்டெர்லைட்டுக்கும் (இப்போது வேதாந்தா அலுமினியம் என்று பெயர் மாற்றப்பட்டது) ஒரிசா சுரங்க கழகத்துக்கும் இடையே 2003-ம் ஆண்டு போடப்பட்டது. லாஞ்சிகர் என்ற இடத்தில் ரூ 4,500 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 10 லட்சம் டன் அலுமினியம் சுத்திகரிக்கும் ஆலையை வேதாந்தா உருவாக்கியது. அதற்குத் தேவையான தாதுவை நியமகிரி மலைகளிலிருந்து எடுத்து வழங்கும் பொறுப்பு அரசு நிறுவனமான ஒடிசா சுரங்க கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

நியமகிரி மலை சுமார் 8,000 டோங்கரியா கோண்டு பழங்குடியினரும் நூற்றுக் கணக்கான குட்டியா கோண்டு பழங்குடியினரும் வசிக்கும் பகுதியாகும். தமது வாழ்விடத்தை அழிக்கும் வேதாந்தாவின் திட்டங்களுக்கு அம்மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஒடிசா மாநில அரசு மக்கள் போராட்டங்களை முடக்குவதற்கு தொடர்ந்து முயற்சித்தது.

நியமகிரி மலைகளில் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்க உத்தரவிடும்படி ஒரிசா சுரங்க கழகம் தொடர்ந்த வழக்கில் பழங்குடி கிராம மக்களின் வழிபாட்டு உரிமை, தனிநபர் உரிமை, சமூக உரிமைகளை இந்த திட்டம் பாதிக்கிறதா என்பதை பற்றி அந்தப் பகுதி கிராம சபைகளிடம் கருத்து கேட்டு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 18-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

வேதாந்தா ஆலை
வேதாந்தா அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை.

அதன்படி, ஒடிசா மாநில அரசு மலைச் சரிவில் அமைந்துள்ள 12 கிராமசபைகளிடம் மட்டும் கருத்து கேட்க முடிவு செய்து, தன் விருப்பப்படி கிராமங்களை தேர்ந்தெடுத்தது. பழங்குடி மக்கள் தமது கடவுளான நியம் ராஜாவின் இருப்பிடமாக கருதும் ஹூண்டால்ஜி என்ற இடம் சுரங்கம் தோண்டத் திட்டமிட்டுள்ள பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் மக்களை தமக்கு சார்பாக முடிவு எடுக்க வைத்து விடலாம் என்று வேதாந்தாவும், ஒடிசா சுரங்க கழகமும் திட்டமிட்டிருந்தன. அரசு தனது ஆதரவாளர்கள் மூலமும், மிரட்டல்கள் மூலமும் சாதகமான தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அத்தகைய அழுத்தங்களை தாண்டி கடந்த 2 மாதங்களாக நடந்த கிராம சபை கூட்டங்களில் ஒன்றன் பின் ஒன்றாக 12 கிராம மக்களும் வேதாந்தாவின் திட்டங்களை நிராகரித்து விட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், வன உரிமைகள் சட்டத்தின்படியும், ஒரு கிராமசபை திட்டத்தை நிராகரித்தாலும் திட்டத்தை ரத்து செய்து விட வேண்டும் என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருக்கிறார். ஆனால், கிராம சபைகளின் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், இன்னும் பரவலான கருத்து கேட்டல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஒடிசா அரசு கூறியிருக்கிறது. தன்னார்வக் குழுக்களும், வேதாந்தாவை எதிர்த்து போராடும் நியமகிரி சுரக்ஷா சமிதியினரும் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தை சூழ்ந்திருந்தனர் என்று ஒடிசா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். கிராம மக்கள் அச்சுறுத்தல்கள் இன்றி முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவின் உணர்வுக்கு இது எதிரானது என்று வேதாந்தா ஆதரவு அமைப்பான லாஞ்சிகர் விகாஷ் பரிஷத் தலைவர் ஷ்ரீதர் பேஸ்னியா கூறியிருக்கிறார்.

“வேதாந்தாவின் லாஞ்சிகர் சுத்திகரிப்பு ஆலையில் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் தாதுவை பயன்படுத்தி 60% உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. மாநிலத்துக்கு வெளியிலிருந்து வரும் தாதுவை நம்பி நீண்ட காலத்துக்கு செயல்பட முடியாது. அப்படி கொண்டு வருவதால் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ 600 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே நியமகிரியிலிருந்து அலுமினிய தாது தருவதாக அளித்த வாக்குறுதியின்படி அதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை” என்று வேதாந்தாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஒரு வேதாந்தா அதிகாரி, “ஒடிசாவில் அலுமினிய சுரங்கம் தோண்டா விட்டால் வேறு எங்கு தோண்டுவது” என்று கேட்டிருக்கிறார். “நியமகிரியில் இல்லா விட்டால், குர்லாபேட்டா, சன்பார்மல்லி, போஃப்ளமல்லி, சந்தால்கிரி, கொடிகி டோங்கார் அல்லது நியமகிரிக்கு அருகில் உள்ள மற்ற மலைகளில் எங்காவது சுரங்கம் தோண்டும் உரிமத்தை வேதாந்தா வாங்கி விடும்” என்று அந்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

வேதாந்தா அலுமினா
என்ன செய்தாவது, வந்தாரை வாழ வைத்து விட வேண்டும் என்ற அளவுக்கு ஒடிசா அரசின் கடமையுணர்வு.

“பாக்சைட் தாது எடுப்பதற்கு மாற்று இடம் கோரும் வேதாந்தாவின் 26 விண்ணப்பங்களும் பரிசீலனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. கர்லாபட் பாக்சைட் படிமங்களை எங்களுக்கு ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம்.” என்று வேதாந்தாவின் விசுவாச ஊழியராக ஒடிசா சுரங்க கழகத்தின் இயக்குனர் தீபக் மொகந்தி கூறியிருக்கிறார். கர்லாபட் சுரங்கத்திலிருந்து வேதாந்தாவுக்கு பாக்சைட் எடுத்து கொடுக்கலாம் என்பது ஒடிசா சுரங்க கழகத்தின் திட்டம். என்ன செய்தாவது, வந்தாரை வாழ வைத்து விட வேண்டும் என்ற அளவுக்கு ஒடிசா அரசின் கடமையுணர்வு இருக்கிறது.

நீதிமன்றங்களிலும் நிர்வாக அமைப்புகளிலும் தற்காலிகமாக மக்கள் நலனுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வருவது வரை அடுத்தடுத்து மேல் முறையீடு செய்யப்பட்டு அவர்களது திட்டம் நிறைவேற வசதி செய்து கொடுக்கப்படும் என்பதுதான் இதுவரையிலான அனுபவமாக இருக்கிறது.

உதாரணமாக, தூத்துக்குடியை மாசுபடுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், தேசிய பசுமை தீர்ப்பாயம் என்று தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் வரையில் வழக்கு நடைபெறும் இடத்தை மாற்றிக் கொண்டது வேதாந்தா. ஆலையை மூடுவதற்கான உயர்நீதி மன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து ரத்து செய்து கொண்டது.

இத்தகைய பெயரளவு உரிமைகளைக் கூட கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் அந்த பகுதி கிராம சபைகளுக்கு உச்சநீதிமன்றம் கூட வழங்க முடியாது என்பது நிதர்சனம். இந்திய அணுசக்தி கழகத்தின் திட்டங்கள் மக்கள் முடிவுக்கும், பரிசீலனைக்கும் அப்பாற்பட்ட மூடு மந்திரங்கள் என்பதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது.

இதன்படி வேதாந்தாவும் அதன் அடியாளான ஒடிசா அரசும் மாநிலத்தின் வளங்களை கொள்ளை அடிக்கும் முயற்சிகளை பல்வேறு வழிகளில் மீண்டும் தொடர்வார்கள் என்பது தெளிவு. எனினும் ஒடிசாவின் பழங்குடி மக்கள் இந்த பன்னாட்டு நிறுவனத்தை இறுதி வரை எதிர்ப்பார்கள். அதில் வெற்றியும் பெறும் வரை தொடர்ந்து போராடுவார்கள்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க