.எஸ்..எல் பயங்கரவாதிகளை முறியடித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பழம்பெரும் மொசூல் நகரின் நிலை

மொசூல் (அல் – மொசூல்), ஈராக்கின் பழம்பெரும் நகரங்களுள் ஒன்று. தலைநகர் பாக்தாக்கிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. டைக்ரிஸ் (Tigris) ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. உலக நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெசொபொதாமியாவின் (Mesopotamia) ஒருங்கிணைந்த பகுதியான இது அஸ்சிரியன் இன மக்களுக்கு (Assyrians) வரலாற்றுரீதியில் இன்றியமையாத இடம்.

எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும் மேற்கு ஆசியாவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஈராக்கின் மீதான அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்புடன் தொடங்குகிறது, மொசூல் நகரின் இன்றைய சோக வரலாறு. ஈராக் உடனான போரில் அமெரிக்கா மண்ணைக் கவ்வினாலும் அது விதைத்த அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எல் மற்றும் இன்ன பிற பயங்கரவாத அமைப்புகளின் தோற்றங்களுடனும்; முடிவுறாத சோகத்துடனும் மொசூல் தன்னை புதைத்துக்கொண்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் (Islamic State of Iraq and the Levant) பயங்கரவாதிகளை முறியடித்து மொசூலை மீட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் 3,00,000 மக்கள் நகருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக நார்வே அகதிகள் மன்றம் (Norwegian Refugee Council) தெரிவிக்கிறது.

மோதலின் போது நகரிலுள்ள 1,38,000 வீடுகள் சிதைக்கப்பட்டன. மேற்கு மொசூலில் மட்டும் 53,000 வீடுகளுக்கு மேல் இன்னும் தரைமட்டமாகிக் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லாததால் மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்தே வாழ்கின்றன. அவர்களின் 4 விழுக்காட்டினர் மட்டுமே இந்த ஆண்டில் நகருக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக நார்வே அகதிகள் மன்றம் கூறுகிறது.

படிக்க:
♦ பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை
♦ நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !

நகருக்கு திரும்ப முடிவு செய்தவர்கள் வீடுகளை மீண்டும் தாங்களாகவே கட்டியெழுப்ப வேண்டும். வெடிக்காத குண்டுகள் மற்றும் அவசர சட்டங்களின் மிச்சசொச்ச அச்சங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நகருக்கு திரும்ப வந்தவர்கள் உடைந்த வீடுகளிலும், நொறுங்கிய கட்டிடங்களின் அடித்தளங்களிலும் எவ்வித வசதியும் இல்லாமலே வாழ்ந்து வருகின்றனர். அவர்களது சமூக மக்களின் உதவி மற்றும் ஆதரவை பெரும்பாலும் நம்பியிருக்கும் அதே வேளையில் அரசின் இழப்பீட்டையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பழைய நகரமான மொசூலின் இடிபாடுகள் வழியாக ஒருவர் நடந்து செல்கிறார்.

லிகாவும் அவரது குடும்பத்தினரும் பழைய மொசூல் நகரின் ஒரு அடித்தளத்தில் வசித்து வருகின்றனர். “பணம் இல்லாதவர்கள் வேறு வழியில்லை என்பதால் திரும்ப வருகிறார்கள். நாங்கள் எப்படி வாழ்கிறோமோ அப்படியே அவர்களும் வாழ்வார்கள்” என்று அவர் கூறினார்.

“எனக்கு 5 குழந்தைகள். நாங்கள் அடித்தளத்தில் வாழ்கிறோம். நாங்கள் இங்கேயே சாப்பிடுகிறோம், குடிக்கிறோம், உறங்குகிறோம்” என்கிறார் லிகா.

அடித்தளத்தின் நுழைவாயிலில் லிகாவின் கணவர் அவர்களின் இரண்டு குழந்தைகளுடன் காணப்படுகிறார். “இங்கே எந்த வசதிகளும் இல்லாததால் யாரும் திரும்ப வரமாட்டார்கள். இப்பழைய நகரத்தில் எங்களுக்கென்று வசதிகளும் எதுவும் இல்லை. அருகில் மருத்துவமனை எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றாலும் மருந்து இல்லை. வெளியில் இருந்துதான் வாங்க வேண்டும். உங்களிடம் பணம் இல்லையென்றால் நீங்கள் எப்படி வாழ முடியும்? ” லிகா வினவுகிறார்.

ஹுசைன் அப்பாஸ், சிதைக்கப்பட்ட தன்னுடைய வீட்டிலிருந்து அல்-நூரி பள்ளிவாசலைப் (al-Nuri Mosque) பார்க்கிறார். பழைய நகரமான மொசூலின் மையத்தில் அப்பாஸின் வீடு உள்ளது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தை மீட்கும் நடவடிக்கைகளின் போது அவரது வீட்டின் மீது குண்டு வீசப்பட்டது. இது ஐ.எஸ்.ஐ.எல்-ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இன்னும் அது சேதமடைந்தே காணப்படுகின்றது. வெடிக்காத பீரங்கி குண்டுகள் சுவர்களில் புள்ளிகளாக இருக்கின்றன.

மொசூலைச் சேர்ந்த 41 வயதான முகமது ஹசன் யூனிஸ் தனது குடும்பத்தினருடன் நகரத்தில் உள்ள ஹமாம் அல்-அலீல் இடம்பெயர்ந்தோர் முகாமில் (Hamam al-Alil IDP camp) மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவருக்கு ஆறு குழந்தைகள். மூத்த குழந்தை இதய நோயால் அவதிப்படுகிறது. இளைய குழந்தைக்கோ மன அழுத்தம் உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கும் நிபுணர்களின் சிறப்பு சிகிச்சை உடனடியாக தேவை.

“நான் மொசூலுக்குத் திரும்ப விரும்புகிறேன் ஆனால் வாடகை மிக அதிகம். கூடுதலாக, மிகக் குறைந்த வேலை வாய்ப்புகளே உள்ளதால் அங்கு வேலை தேடுவது மிகவும் கடினம்” என்று யூனிஸ் கூறுகிறார்.

மொசூலில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் செல்ல யூனிஸ் விரும்புகிறார். ஆனால் அவர் தனது வீடு, வேலை மற்றும் அவரது சுற்றுப்புறத்தை இழந்து தவிக்கிறார்.

பழைய நகரமான மொசூலில் ஒருவர் தனது மிதிவண்டியை ஓட்டிச் செல்கிறார். மொசூலை சேர்ந்த 3,00,000-க்கும் அதிகமானோர் இன்னும் திரும்பிச் செல்ல வீடுகள் இல்லாமல் இடம்பெயர்ந்துள்ளனர்.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க