னிநபர்களை மரபணு அடிப்படையில் அடையாளப்படுத்துவதற்கு வகை செய்யும் “மரபணு தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா” பாராளுமன்றக் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று (ஜூலை 8-ம் தேதி) இந்த மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் ஆட்சேபங்களுக்கு இடையே அறிமுகம் செய்துள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதே போன்ற ஒரு மசோதா கடந்த ஜனவரி மாதம் கீழவையில் நிறைவேற்றப்பட்டது; எனினும், மேலவையில் பாரதிய ஜனதாவுக்குப் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.

முந்தைய பாராளுமன்றக் கீழவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அப்போது நிறைவேற்றப்பட்ட மசோதா செல்லாததாகி விட்டதால், மீண்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவது முறையாக பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்மசோதாவுக்கான அடித்தளம் 2003-ம் ஆண்டே (வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே) போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திருத்தங்களுக்குப் பின் 2015-ம் ஆண்டு இறுதி வடிவத்தை எட்டிய இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

விசாரணைக் கைதிகளின் மரபணுக்களை சேகரிப்பதற்கு வகை செய்யும் இந்த மசோதா அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என பாராளுமன்றக் கீழவையின் காங்கிரசு உறுப்பினர்களின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். மேலும் மரபணுத் தரவுகளை சேமித்து வைப்பது குறித்து தனிநபர்களின் விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என காங்கிரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இம்மசோதா “கண்காணிப்பு அரசு” (“surveillance state”) என்பதை நிறுவனமயமாக்கி விடும் என்கிறார் காங்கிராசு கட்சியின் மற்றொரு உறுப்பினர் சசி தரூர். முதலில் மரபணுத் தரவுகளுக்கான பாதுகாப்புச் சட்டமே இல்லாத நிலையில் மரபணுக்களை சேகரிக்க வகை செய்யும் சட்டம் என்பது “குதிரைக்கு முன் வண்டியைப் பூட்டுவதற்கு” ஒப்பானது என அவர் விமரிசித்துள்ளார்.

எனினும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளில் எந்தப் பொருளும் இல்லை என்கிறார். பலசுற்று விவாதிக்கப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த சட்ட மசோதா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் நிறைவேற்றப்படாமல் இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதாவின் படி, மரபணு தரவுகளை சேமிக்க தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் “தரவு வங்கிகள்” நிறுவப்படும். இதில் சந்தேகத்திற்குரியவர்கள், விசாரணைக் கைதிகள், குற்றவாளிகள், இறந்து அடையாளம் தெரியாதவர்கள் ஆகியோரின் மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு இந்த வங்கிகளில் சேமிக்கப்படும். அதே போல் மரபணு ஒழுங்கமைப்பு வாரியம் ஒன்றும் அமைக்கப்படும். மேலும், மரபணுச் சோதனைச் சாலைகள் இந்த ஒழுங்கமைப்பு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

படிக்க:
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
♦ ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !

மசோதாவின்படி, தனிநபர்களிடம் மரபணுக்களை சேகரிக்க எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை. அதே நேரம், ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்களிடம் எந்த அனுமதியும் இன்றி மரபணுக்களை சேகரிக்க முடியும். நீதிமன்ற உத்தரவைப் பெற்றே மரபணு விவரங்களை நீக்க முடியும். மரபணு தடய அறிவியலின் மூலம் சட்டபரிபாலனத்தை பராமரிக்க முடியும் என்கிறது மத்திய அரசு.

இந்த மசோதாவை உருவாக்கும்போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. “புட்டசாமி எதிர் இந்திய அரசு” வழக்கின் தீர்ப்பில் தனியுரிமை என்பது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை என்கிறது உச்சநீதிமன்றம். எனினும், இந்த தீர்ப்பை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதற்கு மத்திய சட்ட கமிசன் ஏராளமான விளக்கங்களை அளித்துள்ளது. “இந்திய நிலைமைகளின் கீழ் தனியுரிமை என்பது அரசியல் சட்டப் பிரிவு 21-ன் கீழ் வருமா இல்லையா என்பது துறைசார் வல்லுநர்களால் விவாதிக்கப்பட வேண்டியது. மேலும் இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்கிறது மத்திய சட்டக் கமிசன்.

இரண்டாவதாக, நீதியரசர் சிறீகிருஷ்ணா அறிக்கையில் இந்தியர்களுக்கு தங்களைக் குறித்த “மின் தரவுகளின்” மேல் உள்ள உரிமைகளைக் குறித்து சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என முன்மொழிந்துள்ளது. அதன்படி தனிநபர்களின் மின் தரவுகளை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அபராதத்திற்குரிய குற்றமாக கருத வேண்டும் என்கிறது அந்த அறிக்கை. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதா மரபணு தரவுகளை சேகரிப்பது குறித்து பேசுகிறதே தவிர, அப்படி சேகரிக்கப்பட்டு மின் தரவுகளாக இருக்கும் விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கவில்லை.

மூன்றாவதாக, மத்திய அரசு மரபணு தரவுகளை சேமிக்கும் தரவு வங்கிகளுக்காக 20 கோடி செலவிட்டாலே போதும் என்கிறது. ஆனால், தி வயர் இணையதளம் நடத்திய ஆய்வின் படி தற்போது கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மட்டுமே மரபணுக்களை சேகரிக்க ரூ. 1,800 கோடி செலவாகும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் இவ்வாறு மரபணு ரீதியில் வகைபிரிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளோ, அதைக் குறித்த தொழில்நுட்ப அறிவோ, குற்ற விசாரணைகளில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டுதலோ இந்தியாவில் இல்லை. அடுத்து, மரபணு சேகரிக்கும் மத்திய அரசு அமைப்பான CDFD, தன்னிடம் மாதிரிகளை சமர்ப்பிப்பவர்களின் சாதி விவரங்களையும் கட்டாயமாக கோரிப் பெறுகிறது. இவ்வாறு மரபணு ரீதியிலான வகைபிரித்தல் குடிமக்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதற்கே வகை செய்வதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, மரபணு வங்கிகளை நடத்தும் பொறுப்பை அம்பானி – அதானி போன்ற முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. மொத்த நாட்டின் மக்கள் அனைவரின் மரபணு விவரங்கள் சில தனியார் முதலாளிகளின் கையில் சிக்குவது நமது எதிர்காலச் சந்ததியினரின் குடுமியை நாமே அவர்கள் கையில் பிடித்துக் கொடுப்பதற்கு ஒப்பானதாயிருக்கும்.

மேலும் இந்த மசோதா அமலுக்கு வரும்பட்சத்தில் அரசியல்ரீதியான போராட்டங்களில் கைதாகி சிறை செல்லும் புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரையும் மரபணு வங்கிகளில் சேகரித்து வைத்து போராடும் சக்திகளை ஒடுக்க முடியும். ஆதார் அடையாளத்தோடு இனி மரபணு அடையாளமும் நாட்டு மக்களை ஒடுக்க கண்காணிக்க, மிரட்ட வந்து கொண்டிருக்கிறது.


சாக்கியன்.

செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க