அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 11

டாக்டர் வரதர்போலத் திரு. T. R. வெங்கடராம சாஸ்திரியார் 1940 பிப்ரவரியில் குடந்தையில், திராவிடராவது ஆரியராவது என்று பேசிய காலை, பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டார். அறிவு மிளிரும் அவர் உரையினை அன்பர்கட்கு அளிக்கிறோம்.

தங்களுக்குத்தான் யோக்கியதையும் புத்தியும் இருப்பதாக இறுமாப்புடன் பேசுவது ‘மகாத்மா’ வின் புதிய யோசனைகளில் ஒன்றுதான் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. தோழர் சாஸ்திரியாரைப் போல விசால புத்தியுள்ளவர் வேண்டுமென்று குறை கூறுவதை, நம்மால் இன்னதென்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எந்த விஷயத்தையும் அலங்காரமாய் ஜோடித்துச் சொன்னால் அதை நம்புவார்கள் என்றும், பண்டைய காலத்துத் திராவிட மக்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொன்னது முட்டாள்தனமே.

அவர் சொன்ன விஷயங்களில், சில கேள்விகள் கேட்பதற்கு நமக்கு நியாயமிருக்கிறது. அதற்கு அவர் பதில் சொல்லியே தீர  வேண்டும். ஏனெனில் அவர் புதியதாய்க் கண்டுபிடித்துச் சொன்ன விஷயங்களைப் பற்றிச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யக் கடமைப்பட்டவர்கள். தமிழர்கள் கலைப்பயிற்சியிலும் பழக்க வழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், ஆரியக் கலப்பற்றதொன்றுமில்லை என்று கண்டுபிடித்ததாய்த் தெரிகிறது.

பரந்த நோக்கமே உறைவிடமாயுள்ளவரிடத்தில், நமக்கு இன்னும் அநேக விஷயம் தெரிய வேண்டி இருக்கிறது.

திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.

தோழர் சாஸ்திரியார் நமது தென்னிந்தியாவில் குடியிருக்கும் ஜனங்கள் பூராவும் ஒரே மதமென்றும், ஒரே கலைஞானமுள்ளவர்கள் என்றும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்.

தென்னிந்தியாவில் உள்ள முகமதிய மதம், கிறிஸ்தவ மதம் போக இந்த ஜனங்கள் என்ன மதம் என்று கேட்கிறோம். அவர்கள் எல்லாரும் வேதத்தை ஆதாரமுறையாகப் பின்பற்றுவார்களென்று சொல்ல முடியாது. பிராமணர்கள் கூட பழக்கங்களில் வேதங்கள் படி நடப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க, எல்லோருக்கும் பொதுவான மதம் என்று சொல்ல எப்படித் துணிந்தார்?

இப்போது பிராமணர்கள், பிராமணரல்லாதார் கோயிலுள் போவதே கிடையாது. அப்படியே பிராமணரல்லாதார் கூட எல்லோரும் தினந்தோறும் கோயிலுக்குப் போவதுமில்லை. வேதமும் வேதத்தின்படி நடப்பதும் பிராமணரல்லாதாருக்குச் சாபத்தீட்டே ஒழிய வேறில்லை.

தமிழ்க் கலைஞானமாகிய சைவசித்தாந்த சாஸ்திரங்களும் ஆகமங்களும், பிராமணர்களுக்கு வேண்டியதில்லை என்றே தள்ளியிருக்கிறார்கள்.

ஆரியர்கள் ஆதிக்கமான திராவிடத் தமிழ் மக்கள் கோயில்களிலும், அல்லது வேதமில்லாத சிவாலயங்களிலும் வேத பாராயணம் செய்து பிராமணர்கள் பிரசாதம் முதலியன வாங்கிக்கொண்டு போன பிறகுதான் தேவாரப் பதிகங்கள் பாடலாம் என்று வைத்திருக்கிறார்கள். இறந்துவிட்டாலும் அல்லது கருமாதி காரியங்களிலும் கூட ஒரு பிராமணனாவது பிராமணரல்லாதவன் இறந்து போன வீட்டிற்குத் துக்கம் கொண்டாட வரும் வழக்கம் கிடையாது. பிறகு இறந்து போனவனுடைய 16 நாள் கழித்துத்தான், ஏதாவது வரும்படி வருமென்று தெரிந்தால்தான் வருவார்கள். அதுவுமில்லை என்று தெரிந்தால் அதுகூட வரமாட்டார்கள்.

எந்த நல்ல காரியங்களுக்குப் பிராமணக் குருக்கள் வந்தாலும், பிராமணனுக்கு உள்ள மந்திரங்களைச் சொல்லாமல் வேறு ஏதோ மந்திரங்களைச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

கம்பல நாயக்கமார்களிடத்தும், இன்னும் அநேக ஜாதியார்களிடத்தும், கலியாண காலங்களிலும் அல்லது நல்ல விசேஷ காலங்களிலும் கூடப் பிராமணர்கள் வந்தால் அபசகுனமென்றும், தங்கள் வீட்டுக்குள் எல்லாக் காரியங்களும் முடிந்த பிறகுதான் வரலாம் என்றும் வழக்கம் இருந்து வருகிறது.

தமிழர்கள், பொதுவில் ஏராளமாகப் பிராமணர்களின் மத விஷயங்கள் தெரியாமலே இருந்து வருகிறார்கள்.

படிக்க:
மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு !
’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

பிராமணர்களின் புரோகிதத்தைத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கிற ஜனங்களின் நம்பிக்கைகளைப் பற்றி, தோழர் சாஸ்திரியார் என்ன சொல்லுகிறார்? இந்து மதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்று தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா? புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இன்னும் மலையில் வாசம் செய்யும் கலைஞர்கள் எல்லோரும் வித்தியாசமில்லாமல் இந்துக்கள் என்று சொல்லுகிறார். எல்லோரும் ஒருவரை ஒருவர் ஒத்துக் கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. புத்தர்களும், ஜைனர்களும், பிராமணர்களுக்குரிய வேதத்தையும் அதன் கிரியைகளையும் கண்டிப்பாக ஒத்துக்கொள்வதில்லை.

பிராமண மதத்திற்கு உறைவிடமாயுள்ள ஜாதி வித்தியாசம் புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கிடையாது. இப்படி இருந்தும்கூட, இவர்களை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லுகிறார். இதைவிட உண்மையில்லாததும், யோக்கியதை இல்லாததும், அர்த்தமில்லாததுமான வார்த்தை ஏதாவது உண்டா? இதுதானா தென்னிந்தியாவிலுள்ள சகல ஜனங்களின் பொது மதம் என்று சொல்லும் யோக்யதை?

இப்போது தோழர் சாஸ்திரியாரின் மற்ற சங்கதியைப் பற்றிக் கவனிப்போம்.

தினந்தோறும் நடை உடை பழக்க வழக்கங்களிலும் நம்பிக்கைகளிலும் மற்ற விஷயங்களிலும், பிராமணரல்லாதார்களுக்கும் பிராமணர்களுக்கும் அநேக வித்தியாசமுண்டு. பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

மற்ற மூன்று வகுப்பு ஜாதியர்களும் பிராமணர்களை எல்லாவிதத்திலும் சிறந்தவர்களென்று ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள்.

பிறப்பால் உயர்ந்த ஜாதியார் என்பவர்கள், மற்ற ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளலாமென்றும், அல்லது வைப்பாட்டியாய் வைத்துக் கொள்ளலாமென்றும், கீழ் ஜாதியார், மேல்ஜாதியார் பெண்களை மணந்து கொள்ளக் கூடாதென்றும், அப்படி எண்ணங்கொண்டால் கூட அவனுக்கு கொடூரமான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்றும், அது நியாயமென்றும் சொல்கிறார்கள். இது என்ன நியாயம்? அநேக ஆண்டுகளாகத் தமிழ்மக்கள் வியாபார முறையாலும், பலவிதமான காரணங்களாலும், பலப்பல ஜாதிகளாகப் பிரிந்தும், ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் என்றும் கூறுவதை ஒத்துக்கொள்வதில்லை.

ஆரியர் என்று சொல்லிக்கொள்ளுவோர், ஏர் உழுவது பாவமென்றும், இழிவான தொழில் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் தமிழர்கள், அதுதான் உயரிய மகத்துவமான தொழில் என்று நினைக்கிறார்கள்.

சவுகரியத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தாற்போல சட்டத்தையும், தமிழர்கள் நடவடிக்கைகளையும் பிராமணர்கள் கண்டிருக்கிறார்கள்.

ஆரியர்கள் ஸ்மிருதிகளில் உயிர் வாழ்வதற்கு மரியாதையை விட்டு விடலாமென்று சொல்லியிருப்பதாயும் சொல்லுகிறார். ஆனால் உயிரைவிட மரியாதையே பெரியது என்று தமிழர்கள் கருதுகிறார்கள்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க