அருண் கார்த்திக்
மோடி அரசு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவு வல்லமை பெற்ற அரசு. இந்த வல்லமையை வைத்து அது என்ன செய்யத் துடிக்கிறது தெரியுமா? மின்சார கட்டணம் நிர்ணயிப்பதில் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையை பிடுங்கி, மக்கள் பிரதிநிதிகளின் எந்தவித குறுக்கீடும் இல்லாத பொருளாதார நிபுணர்கள் மட்டுமே கொண்ட, ஆணையங்களிடம் தாரை வார்க்கத் துடிக்கிறது.

ஏன் அவ்வாறு துடிக்கிறது தெரியுமா? மக்கள் பிரதிநிதிகள் அடுத்த முறை ஓட்டுக் கேட்க மக்களிடம் செல்ல வேண்டும் என்பதனால் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த விரும்புவதில்லையாம். அதனால் மக்களிடம் ஓட்டுக் கேட்க செல்ல தேவையில்லாத நிபுணர்களிடம் மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையை கொடுத்துவிட்டால் அவர்கள் கட்டணத்தை எளிதில் உயர்த்தி விடுவார்கள். மின்சார கட்டணத்தை உயர்த்த இந்த அளவு சிரத்தை எடுக்கிறது நமது நாட்டுப்பற்றுடைய மோடி அரசாங்கம்.

மின்சாரக் கட்டணம் பற்றி விவாதிப்பதற்கு முன் அந்தத் துறையின் சமீபத்திய வரலாற்றையாவது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வருவதற்கு முன் மக்களுக்குத் தேவையான அடிப்படை துறைகள் அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்தபின் தண்ணீர் வழங்குவதிலிருந்து, தொலைத் தொடர்பில் இருந்து, மின்சாரம் வழங்குவதில் இருந்து, அனைத்து முக்கியமான துறைகளும், அடிப்படையான துறைகளும், கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் பி.ஜே.பி. என எந்த வேறுபாடும் இல்லாமல், அனைத்துக் கட்சிகளுமே இந்தக் கொள்கையை அமல்படுத்தி வந்தனர்.

மின்சாரத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க 2003-ம் ஆண்டு மின்சாரச் சட்டம் (electricity act, 2003) என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் அமுலுக்கு வரும் வரையில் மின்சாரம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் அரசு மட்டுமே செய்து வந்தது. மின்சார உற்பத்தி, உற்பத்தியான மின்சாரத்தை கொண்டு செல்லுதல், அந்த மின்சாரத்தை விநியோகம் செய்தல் என அனைத்தையும் அரசே செய்தது. அனைத்து மாநில அரசுகளிலும் ஒரு மின்சாரத் துறை அல்லது வாரியம் இருந்தது. மத்திய அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி நிலையங்களும் இருந்தன.

இந்த மின்சாரச் சட்டம் இரண்டு முக்கிய வாதங்களின் அடிப்படையில் இயற்றப்பட்டது. முதல் வாதம், சுதந்திரம் கிடைத்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும் அரசால் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க முடியவில்லை. அவ்வாறு வழங்க வேண்டும் என்றால் நிறைய முதலீடுகள் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு முதலீடு செய்ய அரசிடம் பணம் இல்லை. இதற்கு ஒரே தீர்வு தனியார் முதலீடுகளை மின்சாரத்துறையில் ஊக்குவிப்பது தான்.

இரண்டாவது வாதம், ஓட்டுவங்கி அரசியலினால் அரசியல்வாதிகள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதே இல்லை. கட்டணம் மிகக்குறைவாக இருப்பதால் இந்தத் துறையில் இலாபமே இல்லை. இலாபம் கிடைக்கவில்லை என்றால் தனியார் முதலீடு இந்த துறைக்கு வராது. ஆகவே இந்தத் துறையை இலாபம் ஈட்டும் துறையாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தனியார் முதலீடுகள் வரும், அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கவும் முடியும். இந்த இரண்டு வாதங்களையும் அடிப்படையாகக் கொண்டே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆக, மின்சாரச் சட்டம் 2003-ன் முக்கிய நோக்கம் மின்சாரத் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது. இதற்காகவே, இந்தச் சட்டம் மின்சாரத்துறையை – மின்சார உற்பத்தி, அதை கொண்டு செல்லுதல், வினியோகிப்பது என 3 பிரிவுகளாகப் பிரித்தது. இதில் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம் என்று சட்டம் சொன்னது. இதன் பிறகுதான் இவ்வளவு மின்சார உற்பத்தி நிலையங்கள் தனியாரால் தொடங்கப்பட்டன.

படிக்க :
கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !

இந்தச் சட்டம் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் மின்சாரக் கட்டணத்தின் மீது அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது. மின்சாரக் கட்டணத்தை முடிவு செய்யும் அதிகாரம் அரசிடம் இருந்தால் ஓட்டு வங்கி காரணத்திற்காக அரசியல்வாதிகள் மின்சார கட்டணத்தை உயர்த்தவே மாட்டார்கள் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது. கட்டணம் அதிகரிக்கவில்லை என்றால் முதலீடு செய்யும் தனியாருக்கு இலாபம் கிடைக்காது. இதற்காக இந்தச் சட்டம் சொன்ன தீர்வு – மின்சார கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து பிடுங்கி ஓட்டு வாங்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லாத ஒரு அமைப்பிடம் கொடுப்பது. இதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (electricity regulatory commission).

இந்த ஆணையத்தில் பொருளாதார நிபுணர்களும் மின்சாரத் துறை நிபுணர்களும் மட்டுமே இருப்பார்கள். சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மின்சார விநியோகம் செய்யும் அரசு நிறுவனம் அதனிடம் இருக்கும் அனைத்து தகவல்களையும் இந்த ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். என்ன விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது, விநியோகிக்க எவ்வளவு செலவாகிறது, ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு, ஒவ்வொரு வகையான வாடிக்கையாளருக்கும் என்ன கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது என அனைத்துத் தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை வைத்து இந்த ஆணையம் கணக்கிட்டு என்ன விலையில் எந்தவிதமான நுகர்வோருக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கும்.

எடுத்துக்காட்டாக மின்சார வாரியம் மின்சாரத்தை சராசரியாக ஒரு யூனிட்டுக்கு நான்கு ரூபாய் செலவு செய்து வாங்குகிறது என்றால், அதற்குக் குறைவான கட்டணத்தில் அந்த மின்சாரத்தை விற்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்காது. விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் அல்லது இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசு விரும்பினால் அதற்கு ஆகும் செலவை மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு அரசு கொடுக்க வேண்டும் என்று ஆணையம் கூறும். அதாவது, நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால், மக்களால் அந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க முடியுமா இல்லையா என்பதைப்பற்றி எல்லாம் ஆணையம் கவலைப்படாது. பொதுவாக மின்சாரத்துறை இலாபத்தில் செல்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்யும். இந்த நோக்கத்தில்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அமைத்து செயல்படுவதன் மூலம் கடும் நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் மின்சாரத்துறை இலாபத்தை நோக்கி திரும்பும் என்று சட்டத்தை இயற்றியவர்களும் கொள்கைகளை முடிவு செய்தவர்களும் நம்பினார்கள்.

ஆனால், இப்போது சட்டம் இயற்றி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், மின்சாரத்துறை இலாபத்தில் இயங்கவில்லை. மாறாக, அந்தத் துறையின் நஷ்டங்கள் அதிகமாகியுள்ளன. இலாபத்தை உறுதி செய்ய ஒழுங்குமுறை ஆணையம் இருந்தும் எவ்வாறு இப்படி நடக்கிறது என்பதற்கான காரணத்தையும் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ஆணையம் உள்ளது. இந்த ஆணையங்களின் உறுப்பினர்கள் என்னதான் பொருளாதார நிபுணர்களாகவும், ஓட்டு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களாகவும் இருந்தாலும் இந்த உறுப்பினர்களை நியமிப்பது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான். ஆளும் அரசின் ஓட்டு வங்கியை பாதிக்கும் வண்ணம் இந்த உறுப்பினர்கள் செயல்பட்டார்கள் என்றால் அவர்களை அரசுகள் உடனே நீக்கிவிட்டு ‘ஒழுங்காக’ செயல்படுபவர்களை நியமித்துவிடும்.

அதாவது, இந்த ஆணையமும் மின்சார கட்டணத்தை அதிகம் உயர்த்தாதபடி அழுத்தத்தை மாநில அரசால் கொடுக்க முடியும், கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதனால்தான் மின்சார வாரியம் கடும் நஷ்டத்திலும், கடும் கடன் சுமையிலும் இருந்தாலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மின்சாரக் கட்டணம் என்பது கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமலேயே உள்ளது. அது மட்டுமல்ல, பல்வேறு விதமான இலவச மின்சார திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இன்னும் சில மாநிலங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக மின்சார கட்டணம் என்பது உயர்த்தப்படவில்லை. பல மாநிலங்களின் மின்சார வாரியங்கள் பல ஆயிரம் கோடிகள் கடன் சுமையில் உள்ளன. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதுதான் இந்தக் கடனுக்குக் காரணம் என வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள். தனியார் மின்சார உற்பத்தியாளர்கள் அதிகம் இலாபம் சம்பாதிப்பதால் அல்லது அதிக விலையில் உற்பத்தி செய்வதால் நஷ்டம் ஏற்படும் என்று இந்த பொருளாதார நிபுணர்கள் சிந்திப்பது கூட இல்லை.

எது எப்படியோ, இந்த மின்சார வாரியங்களின் கடன் சுமையை குறைத்தே தீரவேண்டும் என்ற முடிவுடன் மோடி அரசாங்கம் ‘உதை’ (UDAY) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டமும் மாநில நலன்களுக்கு எதிரான திட்டம்தான் என்பது வேறு செய்தி. அந்தத் திட்டமும் மோடி அரசின் மற்ற திட்டங்களை போல ‘ஃப்ளாப்’ ஆகி விட்டது என்பதுதான் முக்கியமான செய்தி. ஒரு திட்டம் ‘ஃப்ளாப்’ ஆனால் விட்டுவிடக்கூடிய அரசா மோடிஜி அரசு? மின்சார வாரியங்களின் கடனை தீர்க்கும் ஒரு புத்தம் புதிய திட்டத்துடன் வந்துள்ளது மோடி அரசு 2.0.

தேர்தலுக்குப் பின் பதவி ஏற்ற மோடி அரசு, ஒரு புதிய சட்ட வரைவை தயாரித்துள்ளது. அந்த வரைவின்படி புதிய மின்சார ஆணையங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்போது உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா என்று கண்காணிப்பதுதான் இந்த புதிய ஆணையங்களின் வேலை. அதாவது, ‘ஆணையத்திற்கு ஆணையம்’ என்று சொல்லலாம். இது சாதாரண விஷயம் அல்ல. தற்போது உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நியமித்து வருகின்றன. இவர்கள் கூறும் புதிய ஆணையத்தின் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும். ஆக மற்ற துறைகளில் நடப்பதைப் போல மின்சாரத் துறையிலும் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரங்களை மறைமுகமாகப் பிடுங்க மத்திய அரசு இந்தச் சட்டத்தை கொண்டு வருகிறது. இந்த புதிய ஆணையம் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கப்போவது இல்லை. முன்பே சொன்னது போல அவர்களுடைய ஒரே நோக்கம் மின்சாரத் துறையை இலாபம் ஈட்டும் துறையாக மாற்றுவதுதான். கட்டணத்தை அதிகரித்தால், மக்களால் அந்த கட்டணத்தை செலுத்த முடியுமா, செலுத்துவதால் அவர்களுக்கு வரும் சிரமம் என்ன, செலுத்த முடியாத விளிம்பு நிலை மக்கள் என்ன செய்வார்கள், என்பதெல்லாம் அந்த ஆணையத்திற்கு கவலையில்லை. கவலைப்படத் தேவையில்லை! ஏனென்றால், அவர்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டு செல்லத் தேவையில்லை.

இதில் கொடுமை என்னவென்றால் முன்பெல்லாம் மக்களின் நலனுக்காகவே இந்த சட்டங்களும் ஆணையங்களும் உருவாக்கப்படுகின்றன என்று பெயரளவிலேனும் சொல்லி வந்தார்கள். ஆனால், இப்போது அது கூட இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தத்தான் இந்த புதிய சட்ட வரைவு, புதிய ஆணையங்கள் என மோடி அரசு வெளிப்படையாகவே கூறுகிறது.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, அதில் மக்கள் ஓட்டளித்து அரசாங்கங்களை தேர்வு செய்கின்றனர். அரசாங்கங்கள் மக்களுக்காக திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்கின்றது என்றுதான் சொல்லப்படுகின்றது. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் இதை மாற்றி விடுவோம் அதை மாற்றி விடுவோம் என்று அனைத்து தேர்தல் கட்சிகளும் சொல்வது வழக்கமாக உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், அரசாங்கங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை ஏற்கெனவே சட்டங்கள் இயற்றி இந்த மின்சார ஆணையங்களைப் போன்ற ஆணையங்களுக்கு தாரைவார்த்து விட்டார்கள். நீங்கள் எந்த துறையை எடுத்தாலும் அரசியல் குறுக்கீடு, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பங்கேற்பு, எதுவுமே இல்லாத ஆணையங்களை பார்க்க முடியும்.

படிக்க :
மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

எடுத்துக்காட்டாக, தொலைத் தொடர்புக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), இன்சூரன்ஸ் துறைக்கு ஒரு ஒழுங்கு முறை ஆணையம் (IRDAI), பங்குச் சந்தைக்கு SEBI, உயர்கல்விக்கு ஒரு ஆணையம் கொண்டு வருவதாக சொல்கிறார்கள் (HEERA). இந்த ஆணையங்கள் உள்ள துறைகள் அனைத்திலும் இந்த ஆணையங்களை மீறி அரசாங்கங்களால் எளிதில் முடிவெடுக்க முடியாது. அதற்கு எடுத்துக்காட்டுதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். ஆகையால், ஓட்டு போட்டு அரசுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாம் எந்தவிதமான காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

மோடி அரசை பொருத்தவரையில் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் ஒரே விஷயத்தைத்தான் செய்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யப் போகிறோம் என்று வெளியில் சொல்வார்கள். ஆனால், மின்சாரக் கட்டணத்தை அதிகப்படுத்த சட்டம் கொண்டு வருவார்கள். இந்த சட்டத்தை நிறைவேற்ற ‘பாரத் மாதா கி ஜே’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற ஆயுதங்களை உபயோகப்படுத்துவார்கள்.

ஆக, இந்த அரசு அமைப்பு என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் மாற்றம் செய்து பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம் என்று நாம் நம்பினால் அது நாம் இந்த அமைப்பைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இதற்கு ஒரே தீர்வு மக்களின் கையில் அதிகாரங்கள் இருப்பதுதான்!

செய்தி ஆதாரம்: economictimes

அருண் கார்த்திக்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க