காலை 10 மணியிருக்கும். குறுகலான சந்துக்குள் இருந்த ஓலைக்குடிசையை நோக்கினோம். சென்னை வெயில் அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலிருந்தும், மரக்கிளைகளுக்கு இடையிலிருந்தும் புகுந்து அந்தக் குடிசையைத் தாக்கிக் கொண்டிருந்தது.

ஓலைக் குடிசை நிழலின் தணலில் குத்துக்காலிட்டு, பீடியை ஒட்ட உறிஞ்சிகொண்டிருந்தார் அந்தக் கைவினைஞர். உருட்டி வைத்த மண்ணைச் சுமந்தபடி சுழல்வதை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது சக்கரம்.

பீடித் துண்டை எறிந்த கைகள், களிமண்ணை அணைத்துக்கொண்டது. பின் சக்கரம் சுழல, தானும் கூடவே சுழன்றுகொண்டிருந்தார், 63 வயதான ஆனந்தன். சென்னையிலிருந்து திருவேற்காடு போகும் வழியில் உள்ளது வடக்கு நொளம்பூர் கிராமம்.
அவரிடம் தொழில் அனுபவம் பற்றி கேட்டபோது,

வடக்கு நொளம்பூர் – சேமித்து வைக்கப்பட்டிருக்கும் களிமண் குவியல்.

இந்த ஊர்ல மட்டும் கிட்டத்தட்ட 40 குடும்பங்கள் பானை செய்யும் தொழிலை செய்து வருகிறோம். சின்ன வயசுல 2 ரூபாய் கூலிக்கு வேலைக்கு சேந்தேன். இப்ப சுமார் 20 வருஷமா சொந்தமா தொழில் செஞ்சிகிட்டிருக்கேன். இது எங்களோட பரம்பரை தொழிலு.

எங்கப்பா காலத்துலே நேமம் ஏரி, கூட்டு ரோடு, போரூர் ஏரி இப்படி பக்கத்துல உள்ள ஏரிகளிலிருந்து மாட்டு வண்டியிலதான் மண்ணு எடுத்து வருவோம். இப்போ டிப்பர் லாரியில எடுத்து வர்றோம். ஒரு லோடு ஏழாயிரம் ரூபா. ஒரு தடவ எடுத்து வந்தா ஒரு வருஷத்த ஓட்டிடுவோம். அதுவும் எப்பவும் கிடைக்காது, ஏலம் விடுற நேரம் பாத்து போகணும்.

கொண்டுவர்ற களிமண்ண ஒரு எடத்துல சேத்து வச்சிப்போம். திடீருன்னு மழையேதும் வந்தா ஓலையைப் போட்டு மூடி வைப்போம். மழைக்கு கரைஞ்சது போக மீதியைத்தான் பயன்படுத்த முடியும். ஒரு நாளைக்குத் தேவையான மண்ணை எடுத்து தண்ணீரில் ஊறவைத்துவிடுவோம்.

ஆணி, கூழாங்கற்கள், சிறு சிறு குச்சிகள் நீக்கப்பட்டு நன்றாக பிசைந்து மண்ணை இலகுவாக்குகிறார்.

பிறகு களிமண்ணோடு சவுட்டு மண்ணையும் சேர்த்து நல்லா பெசைஞ்சி பதப்படுத்துவோம். (இந்த மண் சேர்க்கைதான் அதன் தரத்தைத் தீர்மானிக்கிறது. சில இடங்களில் செம்மண்ணும், சில இடங்களிலில் வண்டல் மண்ணும் பயன்படுத்தப்படுகிறது) அப்போது, சின்னச் சின்ன குச்சி, கல்லு, கண்ணாடித் துண்டுக ஒன்னுகூட இல்லாம நீக்கிடுவோம். ஏன்னா சக்கரத்த வேகமா சுத்தி பானை வனையும்போது, அந்த வேகத்துல கைய பதம்பாத்துடும். ஈரத்துலேயே ஊறுன கையில்லையா? சில நேரம் விரல் துண்டாகூட போயிடும். எனக்கு சின்னச் சின்ன கீரல் மட்டும் விழுந்திருக்கு, மருந்தெல்லாம் எடுத்துக்கிறதில்லை. தானாவே ஆறிடும்.

தீட்டிய கத்தி கொண்டு எடுத்தாற்போல் கட்டைவிரலால் நீவி எடுக்கப்பட்ட பதமான களிமண் கலவை.

மழைக்காலங்களில் வேலை செய்ய மாட்டோம். நல்லா வெயிலடிக்கணும். ரொம்பவும் வெயிலா இருந்தா வீறல் விட்டுடும். சில நேரம் திடீருன்னு மழை வந்திடுச்சின்னா அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்கள்லாம் ஓடிவந்து உள்ளே எடுத்து வச்சி உதவி பண்ணுவாங்க.

ஒரு நாளைக்கு 50, 60 பானைச் சட்டிகள் செய்வேன். பானை மட்டுமே தனியாக செய்றதில்ல. குழம்புச் சட்டிகள் போன்ற சின்னச் சின்ன பாத்திரங்களோட சேர்த்துதான் செய்ய முடியும். ஏன்னா பானை செய்ய நேரம் அதிகம் புடிக்கும்.

சக்கரத்தில் திரட்டி வைக்கப்பட்ட மண்ணுக்கு உருக்கொடுக்க தனது முழு பலத்தையும் செலுத்த வேண்டியிருக்கிறது.

சின்ன வயசுல பானைச் சட்டி செஞ்சி மாட்டு வண்டியிலதான் பக்கத்து கிராமங்களுக்கு விக்க கொண்டுபோவோம். ஒரு படி நெல்லுக்கு ஒரு கொழம்புச் சட்டி கொடுப்போம். அப்புறம் தங்கச்சாலை, மண்ணடின்னு டவுனு பக்கமும் லாந்தர் வௌக்க கட்டிகிட்டு விக்கப் போவோம். இன்னைக்கு நெலம தலைகீழா மாறிப்போச்சு. கோடம்பாக்கத்திலேருந்து எப்படா ஆர்டர் வருமுன்னு காத்துகிட்டிருப்போம். ஒரு தடவைக்கு கடைக்காரங்க 200, 300 சட்டிங்க, பூந்தொட்டிங்க ஆர்டர் கொடுப்பாங்க. அவங்களுக்கு 45 ரூபாய்க்கு கொடுப்போம், அவங்க 80, 100 -ன்னு விப்பாங்க. இதைச் செய்யிறதுக்கே எனக்கு ஒன்ற.. ரெண்டு மாசங்..கூட ஆகும்.

ஒருமுறை வேகமாக சுற்றப்பட்ட சக்கரத்தின் சுழற்சி நிற்பதற்குள் ஒரு குழம்புச்சட்டி தயாராகிவிடுகிறது.

அடுத்த தலைமுறை ஆளுங்க, களிமண்ணுல பானை செய்வாங்களான்னு கேப்பாங்க போல. என்ன செய்யிறது… பானை செய்யிறேன்னு சொன்னா எங்க சாதிக்காரங்களே கேவலமா பாக்குறாங்க; பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க. இனி யாருதான் இதச் செய்யப்போறாங்க; எங்களோடவே இந்தத் தொழிலும் அழிஞ்சிரும்போல என்றார்.

உடல் முழுவதும் சொட்டியது முத்துத் துளிகள்,
அது வியர்வையல்ல, ஆற்றாமையின் கண்ணீர்.

வெயிலுதான் நல்லா அடிக்குதே, அப்புறம் ஏன் நடுப்பொழுதே வேலையை முடிச்சிகிட்டீங்க. எப்போதும் அரை நாள்தான் வேலை பாப்பீங்களா என்றதும்,

ஃபேன் போட்டால் விரைவில் மண் உலர்ந்துவிடும்; சிந்தும் வியர்வையைக் கூடத் துடைக்காது, பானையின் வடிவத்திலே கவனம் செலுத்தியாக வேண்டும்.

இல்லையில்லை… ஒடம்பு சரியில்லாம நாலு நாலா ஹாஸ்பிட்டல்ல தங்கியிருந்தேன். இப்போ சரியாயிருச்சான்னு பாக்குறதுக்காக கொஞ்ச நேரம் வேலை செஞ்சி பார்த்தேன் என்றார். சிலருக்கு பொழுது போக்குவதே வேலையாக இருக்கிறது; இவருக்கோ வேலையே பொழுதுபோக்கு.

ஏடறிந்த வரலாற்றுக்கு முன்பே தோன்றிய மட்பாண்டத் தொழில் இன்று அழியும் தறுவாயில்… அதில் வேலை செய்யும் அனைவரையும் 55 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களாகவே பார்க்க முடிகிறது. மட்பாண்டப் பயன்பாடு மிகவும் சுருங்கி விட்டது. வருடம் ஒருமுறை பொங்கல் விழாவிலும், கல்யாண மண்டபங்களிலும், மால்களிலும் வண்ணம் தீட்டப்பட்ட அலங்காரப் பொருட்களாகவே காட்சியளிக்கிறது.

ஆனந்திடம் நடத்திய 2 மணிநேர உரையாடலில் நலிந்துபோன விவசாயியை ஞாபகப்படுத்திச் சென்றார்.

தோட்டம் தொரவுன்னு அனைத்தையும் இழந்த போதிலும் விவசாயி, தனது வீட்டு வாசலில் ரெண்டு குழியைத் தோண்டி பரங்கி, சுரைக்காய் என்று ஏதேனும் சில விதைகளைத் தூவி தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது போல; நூல் விலகிய தறியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படையை நீவிக்கொண்டிருக்கும் நெசவாளியைப் போல; இன்று, பானை வனையும் கைவினைஞர்களின் வாழ்நிலைமை. லாபம் நட்டம் எதுவும் பார்க்க முடியாது, களிமண்ணை பிசைந்து கொண்டே இருந்தால் போதும். அந்த மண்ணின் ஈரத்தில்தான் அவர்களது உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு மூங்கில் பத்தையும் கைவிரல்களுமே பானை வனையும் கலைஞனின் கருவிகள்.

பத்து விரல்களும் சிம்பொனி இசையைப்போல ஒத்திசைவோடு லாவகமாக வளைந்து நெளிந்து வடிவம் கொடுக்கிறது.

உலர்த்தப்படும் பச்சைச் சட்டிகள். அதிக வெயில் பட்டால் விரிசல் விழுந்துவிடும். பதத்தோடு வைத்து எடுக்க வேண்டும்.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சட்டிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க