உணவுக்கிடங்கு தீ விபத்து – வங்கதேசத்தில் தொடரும் தொழிலாளர் படுகொலைகள்

ங்கதேச உணவுக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 52 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் தாக்காவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நாராயன் கஞ்ச் (Narayan ganj) மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த 6 மாடி தனியார் உணவுக் கிடங்கு.

இந்தக் கிடங்கின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ மொத்த கட்டிடத்திலும் பற்றிப் படர்ந்ததில் 52தொழிலாளர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இதனை ஒட்டி இக் கிடங்கு முதலாளி உட்பட 8 நபர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

இது போன்ற விபத்துக்கள் நடப்பது வங்க தேசத்திற்கு புதிதல்ல. இதே போன்ற வெவ்வேறு சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. விபத்துகளைப் போலவே அதற்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கை குறித்த எச்சரிக்கைகள், மற்றும் அறிவிப்புகளும் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன.

சமீபத்திய சம்பவம் 2016 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நடந்த விபத்தை விட மிகவும் மோசமானது. அந்த சம்பவத்தில் தெற்கு சிட்டகாங் நகரில் ஒரு உரத் தொழிற்சாலையில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்த பின்னர் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

படிக்க :
♦ ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி
♦ வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் மட்டும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் நடந்த விபத்துகளில் 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பலியாகினர். குறிப்பாக 2013-ல் ராணா பிளாசா கட்டிடம் சரிந்து விழுந்ததில் மட்டுமே 1100 தொழிலாளர்கள் – அதில் பெரும்பாலும் பெண்கள் – உடல் நசுங்கி மாண்டு போனார்கள்.

வங்க தேசத்தில் தொடரும் இத்தகைய விபத்துகளுக்குப் பின்னால் டார்கெட், ஹெட்ச் & எம் மற்றும் வால்மார்ட் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களின் இலாபவெறி இருக்கிறது. இந்த நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் வங்கதேச தொழிற்சாலைகளின் இலாபவெறியும் அதற்குப் பின்னணியில் இருக்கும் ஏகாதிபத்திய சுரண்டலுமே இந்தத் தொழிலாளர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணம்.

வங்கதேச பொருளாதாரத்தை குறைந்த – நடுத்தர – வருமானம் கொண்ட பொருளாதாரமாக உலக வங்கி வரையறை செய்கிறது. உழைப்பை அடிமாட்டுக் கூலிக்கு வாங்கி ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் ஒட்டச் சுரண்டும் சுரண்டல் நிலமாக இருக்கிறது வங்கதேசம்.

தனியார்மயத்தின், திறந்த சந்தையின் இலாப வெறியினால் நிகழும் இந்த மனிதப்படுகொலைகள் வெறுமனே வங்கதேச அரசின் ஊழலாகவும் திறமையின்மையாகவும் மடைமாற்றப்படுகிறது. இதைப் போன்று தொடர்ந்து நிகழும் மனித பேரவலங்களைக் கொண்டு முதலாளித்துவ சந்தைப் பொருளாதார புதைக்குழி நிரப்பப்படுகிறது.

கடந்த ஜூலை 8-ம் தேதி உணவு தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த தீவிபத்தின் சில காட்சிகள்:

தொழிற்சாலையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் தெரியாத உறவினர்கள் அங்கு துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் ரூப்கஞ்சில் உள்ள குளிர்பானம் மற்றும் உணவுப்பொருள் தயரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து அலையலையாய் புகைமூட்டம்.

கட்டுகடங்காத தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்.

தீயணைப்பு வீரர்கள் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும்தீயை அணைக்க முயற்சிக்கின்றனர்.

விபத்துப் பகுதிக்கு அருகிலுள்ள சாலைகளை மறித்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை போலீசார் கலைத்த பின்னர் தீ விபத்தின் காட்சியை பார்க்கும் மக்கள்.

தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மீட்கின்றனர்.

தீ விபத்து நடந்த ஒரு பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

தீ விபத்து நடந்த தொழிற்சாலைக்கு வெளியே துயரத்தில் நிற்கும் பலியானவர்களது உறவினர்கள்.

கட்டிடத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீப்பிழம்புகள்

ஆறுமுகம்
நன்றி : அல்ஜசீரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க