Sunday, June 16, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி

ஆயத்த ஆடை தொழிலாளிகளின் சாவில் வங்கதேச வளர்ச்சி

-

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஆயத்த ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 29-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.  நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இக்கொடூர விபத்து நிகழ்ந்த டாம்பகோ ஃபாயில்ஸ்(Tampaco Foils) நிறுவனத்தின் தரைத்தளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வேதியியல் இரசாயனப் பொருட்கள் தீயின் நாக்குகளை நாலாபுறமும் பரவச்செய்து தொழிலாளர்களின் இன்னுயிர்களைப் பறித்துக் கொண்டது. அபாயகரமான அந்த வேதியியல் பொருளை எந்த பாதுகாப்புமின்றி வைத்திருக்குமளவுதான் வங்கதேசத்தில் தொழிலாளிகளின் உயிருக்கு மதிப்பிருக்கிறது.

bangladesh-fire-dhaka
பாதிக்கப்பட்ட வங்கதேச தொழிலாளர்கள் மருத்துவமனையில்

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாகோ மற்றும் நெஸ்லே போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மேலுறைத் தயாரிக்கும் இந்நிறுவனம் 1978-ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. நெஸ்லே விளம்பரங்களில் வரும் ‘அழகான’ பொருட்களை பயன்படுத்தும் ‘அழகான’ நடிகர்களை பார்த்த கண்களுக்கு தீப்புண்ணுடன் இருக்கும் இந்த தொழிலாளிகள் எப்படி தெரிவார்கள்?

இதுபோன்ற கோரவிபத்துக்கள் நடைபெறுவதும் தொழிலாளர்கள் கொல்லப்படுவதும் வங்கதேசத்திற்கு புதிதல்ல. டாக்காவின் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 2012 அம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்து 100 க்கும் அதிகமான தொழிலாளர்களை காவு வாங்கியது. அடுக்குமாடி ரானா பிளாசா 2013-ம் ஆண்டு நொறுங்கி விழுந்ததில் 1,100 க்கும் அதிகமான ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் பணிப்பாதுகாப்புப் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான அத்துமீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் வரை குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆடைகளை வாங்க போவதில்லை என்று 2011 ம் ஆண்டு வால்மார்ட் தடை விதித்திருந்தது. மார்ஸ் உடைகள்  (Mars Apparels )  என்ற ஏற்றுமதி நிறுவனத்தை 2011-ல் தடை செய்த வால்மார்ட் 2013-லிருந்து மீண்டும் ஆடைகளை அங்கிருந்து வாங்க துவங்கியுள்ளது. வால்மார்ட்டின் இத்தகைய ஒழுக்க வேடமெல்லாம் நம்மூரில் போடப்படும் விசாரணைக் கமிஷன்களின் அளவுக்கு கூட இருப்பதில்லை.

வால்மார்ட் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் ஏனையநாடுகளை விட சொற்பக்கூலிக்காகத்தான் வங்கதேசத்தை தேர்வு செய்கின்றன. மிகக்குறைந்த உற்பத்திக்கூலி மற்றும் உயிரிழப்புகளுடன் தயாரிக்கப்படும் 6,500 கோடி ருபாய் மதிப்புள்ள ஆடைகளை வாங்கி குறைந்த விலைக்கு விற்று தமது இலாபத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்கின்றன. இத்தகைய சொற்ப கூலி கொடுக்காமல் வால்மார்ட்டின் இலாபமில்லை. அதனால்தான் தொழிலாளிகள் தமது உயிரை இழந்து வால்மார்ட்டை வாழ வைக்கின்றனர்.

வங்கதேசத்தில் கிட்டத்தட்ட உள்ள 40 லட்சம் தொழிலாளர்களில் கணிசமானோர் பெண்களாவர். வங்கதேசத்தில் தொழிலாளர்களின் உழைப்பும் ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்து வந்த அதேநேரத்தில் அவர்களுக்கு கிடைத்த கூலியின் அளவும் குறைந்தோ அல்லது எந்த மாற்றமுமின்றியே இருக்கிறது.

வங்கதேசத்தின் தொழிலாளர்கள் 2001-ம் ஆண்டு 93 டாலர்கள்(4,464 ருபாய்) மாதக்கூலியாக பெற்றிருந்தனர். ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2011-ல் 91.45 டாலர்களே(4663) மாத கூலியாகப் பெறமுடிந்தது. வங்கதேசத்தின் ஆடை ஏற்றுமதியின் மொத்தமதிப்பு 2009-ம் ஆண்டில் 15 பில்லியன் டாலர்களாக இருந்து 2013-ம் ஆண்டு 30 பில்லியன் டாலர்களாக எகிறியிருப்பது எப்படி’? வர்த்தக பெருக்கம் இரு மடங்கானாலும் கூலி அப்படியே இருப்பதால் யாருக்கு வளர்ச்சி?

croppedஅமெரிக்க பேஷன் தொழில்துறை கழக ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பு இன்னும் ஒருசில ஆண்டுகளில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இடம்பெயர்ந்து வங்கதேசத்திற்கு செல்லப் போவதாக கூறுகிறது. காரணம், குறைந்தகூலிக்கு தோதான இடம் வங்கதேசம்தான்.

2 லட்சம் கோடி ருபாய் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வங்கதேசம், சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில இருக்கிறது. இதன் மூலம் வங்கதேசத்தின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காடுகளை ஆயத்தஆடை ஏற்றுமதி ஈட்டித்தருகிறது.

வங்கதேசத்தை தவிர ஏனைய ஆசியநாடுகள் ஏற்றுமதியில் பின் தங்கிய போதும் வங்கதேசம் தொழிலாளர்களின் இரத்தத்தையும் உயிரையும் கசக்கிப்பிழிந்து 3.2 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளதை ஊடகங்கள் உச்சிமோருகின்றன.

இதனிடையில் அமெரிக்க வெளியுறவத்துறை செயலர் ஜான் கெர்ரி, ஆகஸ்டு 2016-ல் வங்கதேசம் வந்து, இஸ்லாமிய தீவிரவாதிகளின் தொடர்கொலைகளைத் தடுப்பதற்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம், மனித உரிமைகள் குறித்து வங்கதேச அரசுடன் கலந்துரையாடி சென்றுள்ளார். இது ஒரு பெண்ணை வன்புணரந்தவனே அந்தப் பெண்ணின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவது போன்றது.

தொழில் வளர்ச்சி அதிகம் இருக்கிறது என்று ஒரு நாடு போற்றப்பட்டால் அந்நாட்டில் தொழிலாளிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதற்கு வங்கதேசம் ஒரு சான்று!

செய்தி ஆதாரம்:

Bangladesh factory explosion kills 29 people, officials say
Walmart Accepted Clothing from Banned Bangladesh Factories
The thing that makes Bangladesh’s garment industry such a huge success also makes it deadly
Bangladesh textile industry sets export record

  1. >>>>தொழில் வளர்ச்சி அதிகம் இருக்கிறது என்று ஒரு நாடு போற்றப்பட்டால் அந்நாட்டில் தொழிலாளிகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதற்கு வங்கதேசம் ஒரு சான்று!

    உண்மையிலும் உண்மை……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க