கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி, வங்கதேச தொழிலாளி வர்க்கம் ஒரு மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதலை – முதலாளித்துவ பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டது. அன்றுதான், டாக்கா நகரில் 8 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமான இளம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்; 300-க்கும் அதிகமானவர்கள் கை-கால்களை இழந்தனர்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியில், வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் “ஷாப்பிங் மாலு”க்காகக் கட்டப்பட்ட ‘ராணா பிளாசா’ என்ற கட்டிடம், ஆயத்த ஆடை உற்பத்தித் தொழிலகமாக மாற்றப்பட்டுச் செயல்பட்டு வந்தது. 5,000-த்திற்கும் அதிகமான தொழிலாளர்கள், அந்தக் கட்டிடத்தில் வேலை செய்து வந்தனர். நெகிழ்வான நிலத்தில் கட்டப்பட்ட அந்தக் கட்டிடம், ஒவ்வொரு தளத்திலும் மிகப்பெரும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இயங்கி வந்தது.
ஏப்ரல் 23-ஆம் தேதியன்று அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது தளம் பிளந்து தொங்கிவிட, போலீசார் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். ஆனால், மறுநாளே அதே கட்டிடத்தில் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மறுத்தால், அந்த மாதம் முழுவதும் வேலை செய்ததற்கான சம்பளம் கிடைக்காது என நிர்வாகம் மிரட்டியதால், வேறுவழியின்றித் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். காலை நேரத்தில் மின்தடை ஏற்பட, ஜெனரேட்டரை பயன்படுத்தியுள்ளனர். அதன் அதிர்ச்சியைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் மொத்தக் கட்டிடமுமே இடிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களின் கூக்குரல் கேட்டு, அக்கம் பக்கத்துக் கட்டிடங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஓடி வந்தபோது, அவர்களை வெளியே செல்ல விடாமல் அந்தந்த நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின. அதையும் மீறித்தான் தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சாவகாசமாக இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதற்குள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட, அவர்களது பிணங்களைத் தோண்டியெடுக்க இராணுவம் 20 நாட்களுக்கும் மேல் எடுத்துக் கொண்டது.
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் வங்கதேசம், அந்தத் தொழிற்கூடங்களில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையிலும் முன்னணியில் இருக்கிறது. தற்போதைய இந்த விபத்து ஏற்படுவதற்குச் சில மாதங்கள் முன்புதான் ‘தஸ் ரீன்’ என்ற நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 317 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்னரும் பலமுறை தீவிபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் இதுவரை ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொருமுறை விபத்து ஏற்படும்போதும் வங்கதேச அரசு சில நிறுவனங்களை மூடி சீல் வைக்கும் சடங்கை நடத்தும். தற்போதுகூட அந்நாட்டு அரசு ஒன்பது நிறுவனங்களை மூடி சீல் வைத்துள்ளது.
அங்கே தொடர்ந்து நடைபெற்றுவரும் விபத்துகளுக்கு, உலக ஆயத்த ஆடை தொழிலைக் கட்டுப்படுத்தும் வால்மார்ட், டெஸ்கோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிதான் காரணமாக இருக்கிறது. இந்த ஏகபோக நிறுவனங்களின் இலாப இலக்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர்களது லாப இலக்கை அடைய அவர்கள் மேற்கொள்ளும் ஒரே வழிமுறை, உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும்படி அவர்களுக்குத் துணிகளை ஏற்றுமதி செய்யும் ஏழைநாட்டு முதலாளிகளை நிர்பந்திப்பதுதான்.
இதன் காரணமாக வங்கதேசத்து முதலாளிகள் தொழிலாளர்களது கூலியைக் குறைப்பது, வேலை நேரத்தை அதிகரிப்பது, அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர மறுப்பது, தொழிலாளர்களது பாதுகாப்புக்கான நிதியைக் குறைப்பது போன்றவற்றின் மூலம் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து தங்களது ஒப்பந்தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அது மட்டுமன்றி, ஆண் தொழிலாளர்களை விட பெண் தொழிலாளர்களுக்குக் கூலி குறைவு என்பதால், ஆயத்த ஆடை உற்பத்தி முழுவதிலும் பெண்களையே அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர்.
இத்தனையையும் செய்து ஓராண்டுக்கு துணிகளை ஏற்றுமதி செய்தாலும், அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தங்களை இந்த முதலாளிகள் எளிதில் பெற்றுவிட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டின் இலாப விகிதத்தை விடப் பல மடங்கு அதிக இலாப விகிதத்தை எதிர்பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள், உற்பத்திச் செலவுகளை மேலும் மேலும் குறைக்கக் கோருகின்றன. இதற்குமேல் உற்பத்திச் செலவுகளைக் குறைக்க முடியாது எனும் நிலை வரும்போது, வங்கதேசத்தைவிடக் கீழான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்ட ஏழை நாடுகளைத் தேடிச் சென்று விடுகின்றனர்.
தற்போது இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஐந்து ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றில் உற்பத்தியான ஆடைகள் டெஸ்கோ, வால்மார்ட் உள்ளிட்ட பிரபல பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே இந்த விபத்தில் பலியானவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இப்பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் இழப்பீடு தரவேண்டும் என வங்கதேசத்து தொழிற்சங்கங்கள் கோருகின்றன. ஆனால், ஆடை தயாரித்துத் தரும் வங்கதேச நிறுவனங்கள் வேறு, தாங்கள் வேறு என்று சட்டவாதம் பேசி, கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி நடந்து கொள்ளும் இப்பன்னாட்டு நிறுவனங்கள், இழப்பீடு தர மறுத்து வருகின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் பகற்கொள்ளைக்கு ஏழை நாடுகளின் அரசுகளும் துணை போகின்றன. ஒட்டுண்ணியைப் போல நாட்டின் இயற்கை வளத்தையும், தொழிலாளர்களின் இரத்தத்தையும் உறிஞ்சிக் கொழுக்கும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களை அடித்து விரட்டுவதன் மூலம்தான் அவற்றின் கோரப்பிடியிலிருந்து ஏழை நாடுகளின் தொழிலாளி வர்க்கம் தப்பிக்க முடியும்; இதுபோன்ற விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தடுக்கவும் முடியும்.
– அன்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________
எங்க எளவு விழுந்தாலும் அமெரிக்கவா காரணம் கட்டின எப்படி?. வங்க நாட்டில் நாடாகும் மத ரீதியான ஆச்சியும் அதனால் கொல்லப்பட்டவர்கள் பற்றி எதாவது சொல்லலாமே