வங்கதேச அரசாங்கம் பரிந்துரைத்த ஊதிய உயர்வை நிராகரித்து 25,000-க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் நவம்பர் 9 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் முடங்கின. போராட்டத்தை ஒடுக்க முயன்ற போலீசுடன் மோதல்களும் நடைபெற்றன.
அக்டோபர் 23 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. போராட்டம் தொடங்கியதில் இருந்து நவம்பர் 8 வரை மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் 3500-க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அந்நாட்டின் வருடாந்திர ஏற்றுமதியில் சுமார் 85 சதவிகிதம் ஆடை ஏற்றுமதி தான். லெவிஸ் (Levi’s), ஜாரா (Zara), எச் & எம் (H&M) உள்ளிட்ட உலகின் பல முன்னணி பிராண்டுகளுக்கான ஆடைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் ஆடைத் தொழிலாளர்களோ தங்களின் அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் தான் இருக்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச மாத ஊதியமானது வெறும் 8300 டாக்கா (6,250 இந்திய ரூபாய்) தான்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையோ மாதம் 23,000 டாக்கா (17,400 இந்திய ரூபாய்) வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் ஷேக் ஹசீனா அரசாங்கமோ 12,500 டாக்கா (9,450 இந்திய ரூபாய்) என்ற சொற்பமான மாதாந்திர ஊதியத்தை வழங்குவதாக நவம்பர் 7 அன்று முன்மொழிந்தது.
இதனை நிராகரித்த தொழிலாளர்கள் வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். போராடிய தொழிலாளர்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube