சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்!
வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!
05.08.2024
பத்திரிகை செய்தி
மாபெரும் வங்கதேச மாணவர் போராட்டம் மக்கள் எழுச்சியாக பரிணமித்து சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை வங்கதேசத்தை விட்டே விரட்டி அடித்து இருக்கிறது. இந்த எழுச்சி பாசிஸ்டுகள் மக்களால் மட்டுமே ஒழித்துக் கட்டப்படுவார்கள் என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறது.
ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டார், நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று ராணுவ தளபதி அறிவிக்கிறார். ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் பிரதமர் மாளிகையினுள் நுழைகிறார்கள்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை கண்டித்து தொடங்கிய போராட்டம், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் இட ஒதுக்கீட்டின் அளவு 5 சதவீதமாக குறைத்த பிறகும் கூட நிற்கவில்லை. ஏனெனில் சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவின் ஆட்சியில், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பசி, பஞ்சம், பட்டினி, வேலை வாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு என பாதிக்கப்படாத மக்களே வங்கதேசத்தில் இல்லை என்ற நிலை தான் உண்மை. இவை எல்லாவற்றையும் மூடி மறைத்து நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அனைவரின் மீதும் கடுமையான அடக்குமுறையை ஏவி, ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார கும்பலே அடக்கி ஆண்டது. இதனால் முதன்மையான எதிர்க்கட்சி கடந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை. அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த சர்வாதிகாரி ஷேக் ஹசீனா, மக்களை மீண்டும் வாட்டி வதைக்கும் அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்து வந்தார்.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து சர்வாதிகாரி ஷேக் ஹசினாவுக்கு எதிரான இயக்கங்களை முன்னெடுத்தனர். சர்வாதிகார கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு அரசு கட்டமைப்பின் பசப்புகளுக்கும் மயங்காமல் ஷேக் ஹசீனாவை விரட்டியடிப்பது தான் ஒரே தீர்வு என்ற குறிக்கோளினை மக்கள் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தினம் எதிர்க்கட்சிகள் அறிவித்த மாபெரும் பேரணியை (LONG MARCH)-ஐ கண்டு பயந்த ஷேக் ஹசீனா உயிர் பிழைக்க தப்பி ஓடுகிறார். தப்பி ஓடியவருக்கு பாசிச மோடி இந்தியாவில் அடைக்கலம் கொடுத்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
படிக்க: வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!
கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பேரெழுச்சி ராஜபக்சே பாசிச கும்பலை நாட்டை விட்டு விரட்டிய போதும் ஒரு புரட்சிகர கட்சி இல்லாத காரணத்தால் மீண்டும் அந்த கும்பல் இலங்கைக்குள் வந்திருக்கிறது. அதன் காரணத்தினாலேயே இலங்கையில் உள்ள ஆளும்வர்க்கத்தின் இன்னொரு பிரிவு அதிகாரத்தை கைப்பற்றி ராஜபக்சே மேற்கொண்ட அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளது. மாற்றுத்திட்டத்தை முன்வைத்து போராட வேண்டியதன் அவசியத்தையும் அப்போராட்டம் நமக்கு உணர்த்தியது.
ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது. வங்கதேச மக்களின் இந்த மாபெரும் எழுச்சி இந்தியாவில் உள்ள மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விரட்டியடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.
மேலும் இலங்கை பேரழுச்சியின் அனுபவங்களிலிருந்து, வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் மாற்றுத்திட்டத்தை முன்வைத்து மக்களைத் திரட்டி போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube