வங்கதேசத்தின் அரசு வேலைவாய்ப்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள்விரோதமான இடஒதுக்கீடு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வங்கதேச மாணவர்களின் போராட்டம், மாணவர் எழுச்சியாக உருவெடுத்து அந்நாட்டு பிரதமரும் சர்வாதிகாரியுமான ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டே விரட்டியடித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பிந்தங்கிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமாக உள்ளது. பணவீக்கம் 10 சதவிகிதமாக உள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் உள்ள 17 கோடி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.2 கோடி இளைஞர்கள் வேலையிலும் கல்வியும் இல்லாமல் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஊழல், மனித உரிமை மீறல்கள், ஜனநாயகமற்ற தேர்தல், எதேச்சதிகார ஆட்சி போன்றவை வங்கதேச மக்களை ஷேக் ஹசீனா அரசிற்கு எதிராக திருப்பியிருந்தது. இந்நிலையில்தான், மக்கள்விரோதமான இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களை வீதிக்கு அழைத்து வந்தது.
சர்வாதிகாரி ஹசீனாவை விரட்டியடித்த
மாணவர் எழுச்சி
வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் சந்ததியினருக்கு அரசு வேலையில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் முறை 2018-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 5 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது ஷேக் ஹசீனாவின் குடும்பத்தினரையும் அவரது அவாமி லீக் கட்சியினரையும் மட்டுமே அரசுத்துறை முழுவதும் நிரப்புவதற்கான திட்டமிட்ட ஏற்பாடு என்பதை அம்பலப்படுத்தி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கெனவே, தனியார்த்துறை வேலைவாய்ப்பு தேக்கத்தாலும் வேலையின்மையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச இளைஞர்களை இத்தீர்ப்பு கொந்தளிக்க வைத்தது. இதனையடுத்து, பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை தவிர பிற அனைத்து இடஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட வேண்டுமென வங்கதேசத்தில் உள்ள ஆறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். சில நாட்களில் வங்கதேசம் முழுவதுமுள்ள அனைத்து பல்கலைக்கழக-கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தில் குதித்தனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நாடுமுழுவதும் மிகப்பெரிய சாலை மற்றும் ரயில் மறியல்களில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை இழுத்து மூடியது ஷேக் ஹசீனா அரசு. அமைதி வழியில் போராடிய மணவர்கள் மீது அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு என்ற பெயரிலான ‘‘சத்ரா லீக்’‘ உள்ளிட்ட குண்டர் படைகளை ஏவியது. இக்குண்டர் படைகள் போராடும் மாணவர்கள் மீது துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதில் நூறுக்கணக்கான மாணவர்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்து ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான நாடுதழுவிய போராட்டமாக வளர்ந்தது.
குறிப்பாக, ஜென் சி (Gen Z – Generation Zoomer) என்று அழைக்கப்படும் வங்கதேசத்தின் 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர். ஜென் சி போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஷேக் ஹசீனா அரசு நாடு முழுவதும் இணையத்தை முடக்கியது, சமூக வலைதளைங்களை தடை செய்தது. வங்கதேசம் முழுவதும் ஊரடங்கு கொண்டுவந்து போராட்டக்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கான உத்தரவு பிறப்பித்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டியது.
போலீசு, விரைவு அதிரடி படை, வங்கதேச எல்லை காவல் படை உள்ளிட்ட பல்வேறு ஆயுதப்படைகள் மூலம் மாணவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இதனால் 32 குழந்தைகள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20,000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 11,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். உண்மையான எண்ணிக்கையை மூடிமறைக்க தகவல்களைப் பகிரக்கூடாது என மருத்துவமனைகள் தடுக்கப்பட்டன. மருத்துவமனை சி.சி.டி.வி. காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிச்சூட்டால் கொல்லப்பட்ட பலர் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டனர்.
ஆனால், இவையெல்லாம் மாணவர்களை முடக்கிவிடவில்லை. மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் மக்களும் போராட்டத்தில் இறங்க, மாணவர்கள் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இதன் காரணமாக, ஜூலை 21 அன்று விடுதலை போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. போராட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் வகுப்புகளுக்கு திரும்புமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டது. ஆனால், மாணவர்கள் மீது செலுத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்கு பொறுப்பேற்று ஷேக் ஹசீனா அரசின் அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் பிரதமர் ஹசீனாவும் பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஷேக் ஹசீனா நயவஞ்சக நாடகமாடினார். ஆனால், ‘‘துப்பாக்கி குண்டுகளுடனும் பயங்கரவாதத்துடனும் எந்த பேச்சுவார்த்தையும்’‘ இல்லை எனக் கூறி மாணவர்கள் உறுதியாக நின்றனர். ஆகஸ்ட் 4 அன்று ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டுமென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஷாபாக் சந்திப்பில் கூடினர். அன்றைய நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஹசீனாவின் சர்வாதிகார அரசால் கொல்லப்பட்டனர்.
அடுத்தநாளில் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி ஷேக் ஹசீனா பதவிவிலக வலியுறுத்தி ‘‘டாக்காவை நோக்கி நீண்ட பேரணியை’‘ அறிவித்தது. எழுச்சிகரமான போராட்டத்தின் ஊடாக ஹசீனாவின் பிரதமர் அலுவலகத்தை மாணவர்கள் கைப்பற்றினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்துகொண்ட ஆளும் வர்க்கங்கள் ராணுவத்தின் மூலம் ஷேக் ஹசீனா பதவிவிலக கெடு விதித்தது. இதனையடுத்து ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பி ஓடினார் ஷேக் ஹசீனா.
படிக்க: வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வங்கதேசத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹசீனா விரட்டியடிக்கப்பட்டதை மாணவர்களும் மக்களும் கொண்டாடி தீர்த்தனர். 2022-ஆம் ஆண்டு இலங்கை உழைக்கும் மக்கள் இனவெறி பாசிஸ்ட் ராஜபக்சேவை விரட்டியடித்த நிலையில் தற்போது வங்கதேச மாணவர் எழுச்சி மேலெழுந்தது, உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளாலும் பாசிஸ்டுகளாலும் ஒடுக்கப்பட்டுவரும் மக்களுக்கும், புரட்சிகர சக்திகளுக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. அதேசமயத்தில், பாசிச மோடி கும்பல் உட்பட பல ஆளும் வர்க்க கும்பல்களுக்கு இவ்வெழுச்சி கிளியூட்டியுள்ளது.
அமெரிக்க பொம்மை
முகமது யூனுஸ் அரசு
வங்கதேசத்திலிருந்து சர்வாதிகாரி ஹசீனா தப்பியோடிதையடுத்து, ராணுவத்தின் துணையுடன் நோபல் பரிசு வென்றவரும் அமெரிக்க கைகூலியுமான முகமது யூனுஸ் தலைமையில் ஆலோசனைக் குழு என்ற பெயரிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 8 அன்று பொறுப்பேற்று கொண்ட இக்குழுவில் மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இரு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினரே இடைக்கால அரசில் பெரும்பான்மையாக உள்ளனர். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரும் ஆதர்வாளர்களும் இக்குழுவிற்கு இடம்பெறாத வகையில் களையெடுக்கப்பட்டுள்ளனர்.
முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அரசானது அமெரிக்க பின்புலம் கொண்டது என்பதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. அதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வங்கதேசத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை வரவேற்றும் புகழ்ந்தும் பேசினார். உண்மையில், அமெரிக்காவும், பாகிஸ்தான் ஆதரவு எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியும் தற்போதைய சூழலை வங்கதேசத்தில் மேலாதிக்கம் செலுத்துவதற்கும் கொள்ளயடிப்பதற்குமான மறுவாய்ப்பாகவே கருதுகின்றன.
ஏனெனில், கடந்த பதினைந்து ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சியானது அமெரிக்காவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் தலைவலி மிகுந்த காலமாகவே அமைந்தது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அடிபணியாமல் ஷேக் ஹசீனா சீன-சார்பு நிலையெடுத்தது அமெரிக்காவை ஆத்திரமூட்டினார்.
இதன் காரணமாக, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு பதிலாக கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்று அமெரிக்கா விரும்பியது. ஆனால், ஷேக் ஹசீனாவோ கலிதா ஜியாவை வீட்டு சிறையிலடைத்து, அவரது மகனை நாடுகடத்தி, எதிர்க்கட்சியினரை சிறையிலடைத்து, கொன்று, காணாமலாக்கி என நரவேட்டையாடி பட்டவர்த்தனமான எதேச்சதிகார தேர்தலை நடத்தினார். எதிர்க்கட்சிகள் போட்டியிடுவதற்கான வெளியே ஒழித்துகட்டப்பட்டு ஒரு கட்சி சர்வாதிகாரம் நிறுவப்பட்ட அத்தேர்தலில் போட்டியிடுவது வீண் என தேசிய மக்கள் கட்சி தேர்தலை புறக்கணித்தது. முகமது யூனுஸை வைத்து ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்கும் அமெரிக்கா முயற்சித்தபோதும் முகமது யூனுஸ் மீது பல்வேறு வழக்குகளை பதிவுசெய்து அவரை ஹசீனா சிறையிலடைத்தார்.
இவையெல்லாம் அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளை ஆத்திரமடையச் செய்தது. இதன் காரணமாகவே ‘‘வங்கதேச தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை’‘ என அந்நாடுகள் கூப்பாடு போட்டன. இன்னொருபுறம், தெற்காசிய பிராந்தியத்தில் சீன மேலாதிக்கத்திற்கு போட்டியாக அமெரிக்காவின் பிராந்திய அடியாளான இந்தியாவும் அமெரிக்க நிலைப்பாட்டை எடுக்காமல், தன் நாட்டு ஆளும் வர்க்க கும்பல்களின் நலனை பிரிதிநிதித்துவப்படுத்தி ஷேக் ஹசீனாவுடன் நெருக்கம் பாராட்டியது. இது அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது.
இந்நிலையில்தான், வங்கதேசத்தில் தன்னெழுச்சியாக எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் அமெரிக்காவும் வங்கதேச எதிர்க்கட்சிகளும் தலையிட்டு ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டியடிப்பதில் வினையாற்றின. வங்கதேச தேசிய கட்சியும் ஜமாத்-இ-இஸ்லாமியும் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் தலையிட்டு அதனை கலவரமாக மாற்றின. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யுடன் நெருக்கமான ஜமாத்-இ-இஸ்லாமியின் மாணவர்-குண்டர் படையான இஸ்லாமிய சத்ரா ஷிபிர் பிரிவு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் வேலை செய்ததாகவும் வங்கதேச தேசிய கட்சியின் செயல் தலைவரும் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரஹ்மான் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்ததாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. மேலும் இவ்விரு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அமெரிக்க உயரதிகாரிகளை சந்தித்து பேசியதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இக்கட்சிகள்தான் இப்போராட்டத்தின்போது ‘‘இந்தியாவே வெளியேறு’‘ பிரச்சாரத்தையும் முன்னெடுத்தன.
இந்த பின்னணியில் இருந்துதான் இவ்விரு எதிர்க்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமெரிக்க பொம்மை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கங்கள் மற்றும் கட்டமைப்பின் மீதான மக்கள் கோவம் தனிவதற்காகவே அறிவாளி, மக்கள் சேவகர் என்றெல்லாம் பார்க்கப்படும் முகமது யூனுசை ஆளும் வர்க்கங்கள் முன்னிறுத்தியுள்ளன.
மாற்று கொள்கையின் இன்றியமையாமை
ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் மூர்க்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
அதன் அங்கமாக, 17 ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் கட்சி தலைவர் கலிதா ஜியா விடுதலையாகியுள்ளார். 17 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த அக்கட்சியின் வங்கி கணக்கும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் நாடு கத்தப்பட்டிருந்த கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளும் வேகமான நடந்தேறி வருகின்றன. அதேபோல், பயங்கரவாத தொடர்பு குற்றஞ்சாட்டி தடை செய்யப்பட்டிருந்த ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள், இதுநாள் வரை அவாமி லீக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி கொள்ளையடித்து வந்த தொழிற்சங்கங்கள், சந்தைகள், மணல் அகழ்வுத் தொழில்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இன்னொருபுறம், ஷேக் ஹசீனாவும் அவாமி லீக் கட்சியினரும் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். நாட்டை விட்டு தப்பியோடியதிலிருந்து ஹசீனா மீது 70 கொலை வழக்குகள் உட்பட 84 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவாமி லீக் கட்சியை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் அக்கட்சியினர் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹசீனா வேறு எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத அளவிற்கு அவரது அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் அக்கட்சி எம்.பி-க்களின் கடவுச்சீட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
படிக்க: அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு
அதேபோல், ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சிக்கு ஏற்ப சிதைக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையம், நீதித்துறை, போலீசு, ராணுவம் போன்ற அரசுக்கட்டமைப்பை தங்களுக்கு ஏற்ப மறு ஒழுங்கமைப்பு செய்யவும் இக்கட்சிகள் முயல்கின்றன. அவாமி லீக் ஆதரவு நீதிபதிகள், அறிஞர்கள் மீது வழக்குகள் பதியப்படுவது, கைது செய்யப்படுவது, கட்டமைப்பிலிருந்து களையெடுக்கப்படுவது போன்ற செய்திகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ராணுவம் உள்ளிட்டு வங்கதேச அரசு கட்டமைப்பின் ஆசிப்பெற்றுள்ள ஹசீனா மீண்டும் அதிகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதில் எதிர் முகாம் தீவிரமாக உள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு விரைந்து தேர்தலை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
மொத்ததில், வங்கதேசத்தில் முற்றிலுமாக சிதைந்துபோயுள்ள சட்ட-ஒழுங்கை சரிசெய்து, ஷேக் ஹசீனாவால் தனக்கு தகுந்தாற்போல் சிதைக்கப்பட்டுள்ள அரசு கட்டமைப்பை மறுஒழுங்கமைப்பு செய்து ஆட்சியை கைப்பற்ற ஆளும் வர்க்கத்தின் மற்றொரு சர்வாதிகார பிரிவான வங்கதேச தேசிய கட்சி-ஜமாத்-இ-இஸ்லாமி கும்பல் துடித்துக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே, சீர்த்திருத்தங்ளை மெற்கொள்வதுதான் இடைக்கால அரசின் முதன்மை நோக்கம் என்று தனது பதவியேற்பில் முகமது யூனுஸ் பேசியிருந்தார். அந்த அடிப்படையிலேயே மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த புதிய ஆளும் வர்க்க கும்பலின் மீட்சியால் அமெரிக்க-சீன ஏகாதிபத்திங்களுக்கு இடையிலான மேலாதிக்க போட்டாபோட்டியும், இந்தியா தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சியும் தீவிரமடைவதன் விளைவாக, வங்கதேச மக்களை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்றவை தீவிரமடையுமே ஒழிய தீராது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களிடம் எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை முகமது யூனுஸ் கோரியிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இதன் காரணமாக வருங்காலங்களில் வங்கதேச மக்கள் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாக்க தாக்குதல்கள் தீவிரமடையும்.
மேலும், பாசிசத் தன்மையை தன்னகத்தே கொண்ட வங்கதேச தேசிய கட்சி-ஜமாத்-இ-இஸ்லாமி கும்பல் இஸ்லாமிய மதவெறியையும் கட்டவிழ்த்துவிடும். அண்மைகாலமாக, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை இந்து மக்கள் மீது இஸ்லாமிய மதவெறி கும்பல் தாக்குதல் நடத்திவருவதே அதற்கு சான்று. எனவே, ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர்-இளைஞர்களும் மக்களும் இந்த ஆளும் வர்க்க கும்பலையும் ஏற்றுக்கொள்ள போவதில்லை, சரிந்துவரும் உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா மேற்கொண்டுவரும் சதிகளையும் முறியடித்து இந்த ஆளும் வர்க்க கும்பலையும் வங்கதேசத்திலிருந்து விரட்டியடிப்பர்.
எனவே, இந்த அரசியல் சூழலை பயன்படுத்தி வங்கதேச புரட்சிகர சக்திகள் மக்கள் மாற்று கட்டமைப்பிற்கான கொள்கையை முன்வைத்து மக்களை அணித்திரட்ட வேண்டும், அதற்கு முன்நிபந்தனையாக உள்ள மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சியையும் கட்டியமைக்க வேண்டும்.
துலிபா
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram