ங்கதேச மாணவர்களின் எழுச்சியை தொடர்ந்து வங்கதேசத்தில் சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கலிதாஜியா-அமெரிக்கா கூட்டாக அமெரிக்க சார்பு முகமது யூனுஸ்-ஐ இடைக்கால அரசின் தலைவராக நியமித்தது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேசத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பக்கபலமாக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி தற்போது முடிவுக்கு வந்திருப்பது இந்திய ஆளும் வர்க்க கும்பலுக்கு பெரும் பின்னடைவாகும். அதானியிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் இறக்குமதி செய்வதற்கு தற்போது வங்கதேசத்தில் கடும் எதிர்ப்பு குரல்கள் கிளம்பியிருப்பதே அதற்கு சான்று.

இந்நிலையில், ஆகஸ்டு 10 அன்று வங்கதேசம், இலங்கை, நேபாள் ஆகிய நாடுகளை சேர்ந்த ஐந்து புகழ்பெற்ற ஆளுமைகள் கூட்டாக சேர்ந்து, வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்தேறிவரும் மாற்றங்களுக்குள் இந்தியா அரசியல் ரீதியாக எந்த தலையீடும் செய்யாது விலகியிருக்க வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அறைகூவல் விடுத்துள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஆங்கில பேராசிரியரும் மற்றும் நாரிபோக்கோ (Naripokkho) என்கிற பெண்ணிய அமைப்பின் உறுப்பினருமான ஃபிர்தவ்ஸ் அசீம் (Firdous Azim), டாக்காவில் உள்ள பிராக் (BRAC) பல்கலைக்கழகத்தின் நீதி மற்றும் சமாதானத்துக்கான மையத்தைச் சேர்ந்த மன்சூர் ஹசன் (Manzoor Hasan), நேபாளம் காட்மாண்டுவைச் சேர்ந்த எழுத்தாளரும் ஹிமால் சவுத் ஏசியன் (Himal South Asian) எனும் பத்திரிக்கையின் நிறுவன இயக்குனருமான கனக் மணி தீட்சித் (Kanak Mani Dixit), தேசிய உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையர் சுஷில் யாக்குரேல் (Sushil Pyakurel) மற்றும் இலங்கை கொழும்புவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான லட்சுமண் குணசேகரா (Lakshman Gunasekara) ஆகிய ஐவர் வெளியிட்டிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:


படிக்க: சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!


“வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் குடிமக்களாகிய நாங்கள் ஐவரும், வங்கதேசத்தில் நடந்து வரும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் கருத்தொருமித்து இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா அரசியல் ரீதியாக எந்த தலையீடும் செய்யாமல் விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கொழும்பு டாக்கா மற்றும் காட்மாண்டுவில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலைமை தொடர்ந்து நீடிக்கவும், மேட்டுக்குடி கும்பலின் சர்வாதிகார ஆட்சிகள் நிறுவப்படுவதற்கும், இந்தியாவின் அரசியல் ரீதியானதும் அதிகார வர்க்கம் மற்றும் உளவுத்துறை மூலமாக செய்து வந்த சில பத்தாண்டு காலச் செயல்பாடுகளும் பெரும்பங்காற்றி இருக்கின்றன.

இந்தியாவின் தலையீடுகள் அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதுடன் சமூக பொருளாதார முன்னேற்றத்தை பின்னடையச் செய்திருக்கின்றது. மேலும் இவை ஒரு காலத்தில் இந்தியா முன்னிறுத்திய சமாதான சகவாழ்வு என்னும் பஞ்சசீல கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்படுவதுடன் நரேந்திர மோடி அரசாங்கம் விளம்பரப்படுத்திக் கொள்ளும் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்னும் கொள்கையையும் பொய்ப்பித்துவிட்டது.

அதற்கும் மேலாக தெற்காசியா மொத்தத்தையும் ஒரு முழுமை என்று அணுகி, அதன் ஒட்டுமொத்த அரசியல் ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும் வெல்வது இந்தியாவின் சொந்த பொருளாதார நலனுக்கும் சர்வதேச அளவில் அதன் நிலையை உயர்த்திக் கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

1971-இல் வங்கதேசத்தின் விடுதலைக்கு இந்தியா உதவியதற்காக வங்கதேச மக்கள் நன்றி உள்ளவர்களாக இருந்த போதிலும் தொடர்ந்து சில பத்தாண்டுகளாக டாக்காவின் அரசியலை இந்தியா தனது நோக்கங்களுக்கு ஏற்ற வகையிலேயே கையாண்டு வந்துள்ளது.

அவற்றுள், நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேல்நிலை நாடாக இருந்து கொண்டு அதன் தேவைக்கேற்றவாறு தன்னிச்சையாக நீர் பங்கீடு செய்வது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதையாக வங்கதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளை பயன்படுத்துவது, வங்கதேசத்தை இந்திய பொருட்களுக்கான கணிசமான சந்தையாக பயன்படுத்திக் கொள்வது போன்றவை அடங்கும்.

ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த இந்தியா கடந்த பத்து ஆண்டுகள் மும்முரமாக வேலை பார்த்தது. அதற்கான பிரதிபலனாக இந்தியா பல அரசியல் பொருளாதாரச் சலுகைகளை அடைந்துள்ளது. புதுடில்லியின் அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு என்பது 1980-களில் இலங்கைக்கு ஐ.பி.கே.எஃப். எனும் சமாதான படை அனுப்பியதில் அதன் உச்சத்தைத் தொட்டது.

தமிழ் மக்களின் கிளர்ச்சியின் மத்தியிலும் தன்னுடைய தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதே இந்தியாவின் முதன்மை நோக்கமாக இருந்தது. சமாதானப்படை அனுப்பப்பட்டதற்கு முன்பும் அதன் பிறகும் இந்தியாவின் அரசியல் அத்துமீறலை எதிர்த்து அடுத்தடுத்து தொடர்ந்தும் மல்யுத்தம் புரிவதே இலங்கையின் அரசியலாக ஆகிப்போனது. இன்னும் கூடுதலாக இந்தியா தம்நாட்டுத் தொழில் குழுமங்களை இலங்கைக்குள் நுழைப்பதை இன்று வரையிலும் ஊக்கத்துடன் செயல்படுத்தி வருகிறது.

ஒரு காலத்தில் இந்தியா முன்முயற்சியுடன் கூடிய செயற்பாடுள்ள அரசியல்வாதிகள் மற்றும் ராஜதந்திரிகள் மூலம் நேபாள அரசியலில் தலையீடு செய்து வந்தது. ஆனால் இப்பொழுது, அவற்றுடன் உளவுத்துறையினர் மூலமும் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ அடிப்படைவாத செயற்பாட்டாளர்களின் மூலமும் செய்து வருகிறது. நேபாள அரசியலுக்குள் நுழைந்து நேபாளத்தின் நீர் ஆதாரங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்திற்காக இன்று வரையிலும் தொடர்ந்து முயன்று வருகிறது இந்தியா.

2015-இல் நேபாளம் இந்தியாவுக்கு ஏற்பில்லாத ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததை காரணமாக்கிக் கொண்டு, நேபாளம் நில அதிர்வினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த நிலையிலும் கூட பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டது, இந்தியாவின் அச்சுறுத்தி பணிய வைக்கும் நடவடிக்கைக்கு சான்றாகும்.

எங்கள் ஒவ்வொரு நாட்டிலும் தேசிய தேவைகளுக்கும் மேலாக தங்களின் சொந்த நலனை முன்னிறுத்தும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் இருக்கவே செய்கின்றன. அவைதான் இந்தியாவின் தலையீட்டு நடவடிக்கைகளை வரவேற்கின்றன. இருந்தபோதிலும் அண்டை நாடுகளில் இந்தியாவின் தலையீடுகளால், இந்தியாவுக்கு எதிரான எளிதில் அகற்ற இயலாத பகை உணர்வு படிந்து வளரும் என்பதை அறிய முடியாத இந்திய கொள்கை வகுப்பாளர்களை கண்டு நாங்கள் உண்மையில் குழப்பமடைகிறோம்.

இப்போது வங்கதேசத்தில் நடந்ததைப்போலவே இத்தகு தலையீட்டு நடவடிக்கைகளும் திட்டங்களும் இறுதியில் தோற்று வீழ்ச்சியுறும். ஆனால், புதுடில்லையோ ஒரு சதித் திட்டத்திலிருந்து இன்னொன்றுக்கு இயல்பாக மாறிக்கொண்டு நகரும்.

புதுடில்லியின் அறிவுத்துறையினரும் ஊடகங்களும் தங்கள் அரசாங்கத்தின் அனுமானங்கள் மற்றும் நடவடிக்கைகளின்பால் சுதந்திரமான பார்வையுடன் கண்காணிப்பதில்லை என்பதே, அண்டை நாடுகள் பாலான புதுடில்லியின் கொள்கைகளில் தொடர்ந்து இதே போன்ற தவறுகள் நேர்வதற்கு காரணமாகும். அவர்கள் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை எதிர் கேள்வி இல்லாமல் அப்படியே பின்பற்றுகின்றனர்.

இந்தியாவின் தெற்காசியா குறித்த கொள்கைகளை அவற்றின் எதிர் விளைவுகளையும் உள்ளிட்டு ஒரு தீவிரமான சுய பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்வது இந்தியாவுக்கும் மற்றும் துணைக்கண்டம் முழுமைக்கும் (அண்டை நாடுகளையும் உள்ளடக்கிய) பலன் தருவதாக அமையும்.

இந்தியா தன்னுடைய எல்லைப்புற பிராந்திய மக்கள் மற்றும் எல்லைப்புறப் பொருளாதாரம் ஆகியவற்றின் நலனை முன்னிறுத்தி அந்தக் கண்ணோட்டத்தில் தனது அண்டை நாடுகளைப் பார்க்குமானால் அப்போது இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் நல்லிருப்பு அண்டை நாடுகளுக்கும் மிகவும் ஏற்புடையதாக இருக்கும்.

எங்கள் ஒவ்வொருவரது நாடுகளைப் பற்றியும் அபாயம் மிக்கதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இந்தியா உணர்வது பூகோள நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டுதான். அதாவது இந்திய தீபகற்பத்திற்கு தெற்கில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது இலங்கை. அதேபோல் நேபாளம் என்பது இமயமலை பகுதியில் நீண்டிருப்பது. அடுத்து வங்கதேசம் இந்தியாவின் முதன்மை பகுதிக்கும் அதன் வடகிழக்கு மாநிலங்களுக்குமான இடைவெளியில் அமைந்திருப்பது போன்றவையாகும்.

எங்கள் சமூகங்கள் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் வளம் சேர வேண்டுமென்றே விரும்புகின்றனர் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொண்டால் மேற்சொன்ன எதுவுமே பிரச்சினைக்குரியதல்ல என்றாகிவிடும். இந்தியாவின் மீது எமது மக்கள் கொண்டிருக்கும் கடும் கோபம் எங்கள் உள் விவகாரங்களில் புதுடெல்லி தலையீடு செய்வதற்கான எதிர்வினையால் விளைந்தனவே ஆகும்.

மேலும், எங்கள் ஒவ்வொரு நாட்டிலும் சீனா ஈடுபாடு கொண்டிருப்பதைக் கண்டு இந்தியா அச்சம் கொள்வதாக தெரிகிறது. அதாவது இந்தியாவை சுற்றி வளைப்பதற்கான திட்டமிட்ட சதி நடந்துவருவது போல பார்க்கிறது. முதலாவதாக இந்தியா தனது அண்டை நாடுகளை அணுகுவதைப் போலவே எங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் பீஜிங்குடன் உறவுகொள்ள இறையாண்மையுடன் கூடிய உரிமை உள்ளது என்பதை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். அண்டை நாடுகள் சீனாவுடன் உறவு கொள்வதை இந்தியா தடுக்க நினைக்கும் அதேவேளையில், சீனா இந்தியாவுடன் மிகப் பெரிய வணிகப் பங்குதாரராகவே மாறி வருவது முரண்பாடாகவே தெரிகின்றது.

இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய எங்கள் நாடுகள் எதுவும் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை அதேபோல் இந்தியா அல்லது வேறு எந்த நாட்டின் ஆதிக்கத்தையும் ஏற்கவில்லை என்பதுடன் எந்த நாட்டு ஆதிக்கத்தின் கீழும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். எனவே இந்தியாவின் அச்சம் என்பது அவசியமற்றதாகும்.

அதேபோல் மாலத்தீவுகள் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் அவற்றின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் இந்தியாவின் தலையீடு இருந்து வருவதால் பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கிறோம்.

புதுடெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான பெரும் பகை நிரந்தரமாகவும் மேலும் மேலும் மோசம் அடைந்தும் வருகின்றது. இது தெற்காசியாவின் மிகப்பெரிய இரு நாடுகளின் சமூக பொருளாதார நிலைமைகளில் மட்டும் தாக்கம் செலுத்துவதாக இல்லை. மாறாக எங்கள் நாடுகளும் உள்ளிட்டு தெற்காசியாவின் வளர்ச்சி முன்னேற்றம் என்கிற நிகழ்ச்சிநிரலையே பிணைக் கைதியாக முடக்கிப் போட்டு விடுகிறது.

இந்தியா தனது அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையீடு செய்வதை கைவிட்டால் நிலையான அரசு அமைவதற்கும் நீடித்த சமாதானம் நிலவுவதற்கும் இந்தியா பெரும்பங்காற்ற முடியும்.

இந்தியா, தெற்காசிய நாடுகளின் மக்களின் ஜனநாயக வேட்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்தந்த நாடுகளும் தங்களின் எதிர்காலத்துக்கான பாதையை அவரவர் விருப்பம் போல் அமைத்துக் கொள்ளட்டும்.”


படிக்க: வங்கதேச மாணவர்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்வோம்!


தெற்காசியாவின் நிரந்தர அமைதிக்கும் சமாதானத்துக்குமான இந்த ஆளுமைகள் மற்றும் அறிவுஜீவிகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அதேசமயத்தில் தெற்காசிய நாடுகளில் மட்டும் தனித்த சமாதானம் என்பது நடைமுறை சாத்தியமானதல்ல.

ஏனெனில் ஏகாதிபத்தியங்களின் நிதி மேலாதிக்க கும்பல்களின் உலக மேலாதிக்கத்துக்கான மூர்க்கமான கழுத்தறுப்பு போட்டி நடந்து வருகிறது. அதைப் பற்றி அறிந்தோ அறியாமலோ தலையை திருப்பிக் கொள்வதால் போர்களற்ற உலக சமாதானம் சாத்தியமாகி விடாது.

இன்றும் மேற்காசியாவில் காசாவிலும் வடக்கில் ரஷ்யா உக்கரைனுக்கு இடையிலும் பல மாதங்களாக குண்டு மழை பொழியும் யுத்தம் நடந்து வருகிறது. பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும், உடைமைகளை இழந்தும் வாழும் வழியறியாது தவித்து வருகின்றனர்.

மேலும் இன்று எல்லா நாடுகளிலும் பாசிச கும்பல்கள் வெறியூட்டிய மக்களை அணிதிரட்டிக்கொண்டு ஆட்சியை கைப்பற்றி முன்னேறி வரும் நிலையில் உலக மக்களின் எதிரிகளாக விளங்கும் பாசிசக் கும்பல்களையும் உலக மேலாதிக்க சக்திகளையும் வீழ்த்தாமல் உலக சமாதானம் என்பது பகல் கனவே.

இவற்றுக்கெல்லாம் அடிக்கல்லாக அமைய வேண்டியது அந்தந்த நாடுகளிலும் நடக்க வேண்டிய சமூக மாற்றங்களே. அதற்கு முன்னுரிமை கொடுத்துச் சிந்திப்பதும் மக்களை அணி திரட்டிச் செயலாற்றுவதும் இன்றைய வரலாற்றின் தேவையாக உள்ளது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறோம்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க