வங்கதேச மாணவர்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்வோம்!

வங்கதேச மாணவர்கள் எழுச்சியைப் போல், இந்தியாவிலும் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலை எதிர்த்து இளைஞர்களாகிய நாம் ஒரு மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. இந்த சுதந்திரப் போரில் உயிர் துறந்தோர்களின் சந்ததியினருக்கு அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து பலமுறை நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வந்துள்ளன.

அந்தவகையில், தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஜூலை 19 அன்று மட்டும் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். போராட்டம் தீவிரம் அடைந்ததால் உச்சநீதிமன்றம் (ஜூலை 21) அரசு வேலைகளில் அதிகபட்சம் ஐந்து சதவீத பணியிடங்களை மட்டுமே சுதந்திரப் போர் வீரர்களின் சந்ததியினருக்கு ஒதுக்கலாம் என்று தீர்ப்பு அளித்தது.

17 கோடி மக்கள் வசிக்கும் வங்கதேசத்தில் போராட்டங்கள் புதிதல்ல. இதற்கு முன் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களையும் அடக்கி ஒதுக்கியது பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசு. தற்போது, மாணவர்கள் போராட்டங்களையும் ஒடுக்கி பல மாணவர்களை சுட்டுக் கொன்றுள்ளது.

அமைதியாக பல்கலைக்கழகங்களில் நடந்த போராட்டத்தின் மீது பங்களாதேஷ் சட்ரா லீக் என்ற ஆளும் கட்சியின் மாணவர் பிரிவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வன்முறையை உருவாக்கிவிட்டு அதை கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு உரிமைக்கு போராடியவர்களை சுட்டுக் கொள்கிறது இந்த குண்டர் படைகள்.


படிக்க: வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்


இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் விளைவாக நீதிமன்றம் பணிந்து இட ஒதுக்கீட்டைக் குறைத்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர மாணவர் தலைவர்கள் முடிவு செய்தனர். பாசிச ஷேக் ஹசினா அரசோ போராட்டத்தை ஒடுக்க ஊரடங்கை அறிவித்துள்ளது.

வங்கதேசம் ஒரு வளர்ந்துவரும் பொருளாதார நாடாக இருக்கிறது. அதிலும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், வேலையின்மையோ தலைவிரித்து ஆடுகிறது. 1.8 கோடி இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இங்கு 15 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் ஷேக் ஹசினா ஆட்சியில் பல ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறை வேலைகளிலும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதிக பயன் அடைந்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்தது தேர்தலை நடத்தி வெற்றிபெற்றவர் தான் பாசிச சேக் ஹசீனா. தேர்தல் முறையாக நடக்கவில்லை, தேர்தலில் ஒரு நடுநிலைமை கிடையாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி தேர்தலைப் புறக்கணித்தனர்.


படிக்க: நீட் தேர்வு மோசடிகள்: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் கொள்ளை!


இவ்வாறு மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பின்பு, வங்கதேசத்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் கடுமையாக ஒடுக்கி வருகிறது பாசிச சேக் ஹசீனா அரசு. தனக்கான எதிர்ப்புக் குரலே இருக்கக் கூடாது என்ற வகையில் போராடுபவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அதேநேரத்தில், இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பாசிச பாஜக ஆட்சியில் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் பல மோசடிகள், வினாத்தாள் கசிவு மற்றும் ஊழல்கள் ஆகியவை அரங்கேறி வருகின்றன. இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் பி.ஜே.பி-யுடன் தொடர்பு உள்ளவர்கள் தான். இவற்றை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வங்கதேச மாணவர்கள் எழுச்சியைப் போல், இந்தியாவிலும் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை எதிர்த்து இளைஞர்களாகிய நாம் ஒரு மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவை உள்ளது. இது தான் வங்கதேச மாணவர் போராட்டம் நமக்கு உணர்த்தும் செய்தி.


மணிவண்ணன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க