வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்

டந்த வாரம் முதல் நடைபெற்றுவரும் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் காரணமாக, வங்கதேச உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 21) குறைத்துள்ளது. இந்த தீர்ப்பானது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் போராடிய முன்னாள் வீரர்களின் சந்ததியினருக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதத்தை ஒதுக்கும் சர்ச்சைக்குரிய ஒதுக்கீட்டு முறையைக் கடந்த மாதம் உயர் நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியது. இதனையடுத்து மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. ஆளும் கட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களைத் தாக்கியதை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்த சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டு முறையை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள் கோரினர். ஆளும் அவாமி லீக் கட்சியின் கூட்டாளிகளுக்கு இந்த ஒதுக்கீடு சாதகமாக இருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டத்தையடுத்து, விடுதலைப் போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 5 சதவிகிதமும், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சதவிகிதமும் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், 93 சதவிகித வேலைகள் தகுதி அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால், மாணவர்கள் தங்கள் போராட்டங்களை முடித்துக் கொள்ளவில்லை. சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பது மற்றும் வன்முறைக்குப் பொறுப்பான அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஆர்ப்பாட்டங்களைத் தொடரப் போவதாக மாணவர் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஆனால், ஷேக் ஹசீனா அரசோ, காலவரையற்ற ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. மேலும், இராணுவத்திற்கு கண்டவுடன் சுடும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாணவர் போராட்டங்கள் தனது அரசின் இருத்தலுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என்ற அச்சத்தால் ஷேக் ஹசீனா அரசு போராட்டங்களை நசுக்கப் பார்க்கிறது.

தலைநகர் டாக்காவில் போராடும் மாணவர்களைத் தாக்கும் ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீக் உறுப்பினர்கள்

முக்கிய நகரங்களில் நிறுத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு பங்களாதேஷ் துணை ராணுவப் படை

எரிக்கப்பட்ட வங்கதேச பாலங்கள் ஆணைய கட்டிடம்


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க