அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு

அதானி நிறுவனத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வங்கதேச இடைக்கால அரசையும் தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய ஆளும் வர்க்க கும்பலையும் பணியவைக்க முயல்கிறது, பாசிச மோடி அரசு.

ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இதில் உற்பத்தி செய்யப்படும் 1,496 மெகாவாட் மின்சாரம் முழுவதும் அண்டை நாடான வங்கதேசத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், மின்சார விநியோகத்திற்கான நிலுவைத் தொகையான ரூ.7,000 கோடியை (850 மில்லியன் டாலர்) வங்கதேசம் செலுத்தாததாகக் கூறி, அதானி நிறுவனம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதல் மின் விநியோகத்தை 724 மெகாவாட்டாக குறைத்துள்ளது. மேலும், நவம்பர் 7-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை என்றால் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திவிடுவதாக எச்சரித்துள்ளது.

அண்மையில் வங்கதேசத்தில் மாணவர் எழுச்சி நடந்து ஷேக் ஹசீனா கும்பல் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டு புதிய ஆளும் வர்க்க கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது; அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது ஆகிய பின்னணியிலிருந்து அதானி குழுமத்தின் இந்த எச்சரிக்கை வங்கதேசத்திற்கு மிரட்டலாகவும் நெருக்கடியைத் தீவிரப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

வங்கதேசத்தின் மின் தேவையில் ஏழு முதல் பத்து சதவிகிதம் வரையிலான மின்சாரம் அதானி நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் நிலையில், அது முற்றிலுமாக நிறுத்தப்பட்டால் வங்கதேச அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மீதமுள்ள 90 சதவிகித மின்சார உற்பத்தியும் வங்கதேசத்தில் முழுமையாக நடைபெறவில்லை.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி, எண்ணெய் ஆகியவற்றை இறக்குமதி செய்ய வங்கதேச அரசால் முடியவில்லை. வங்கதேச நாட்டின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கியின் செப்டம்பர் 2024 தரவுகளின்படி, வங்கதேச அரசிடம் அந்நிய செலாவணி 24.9 பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்நிய செலாவணி கையிருப்பு 35.8 பில்லியன் டாலராக இருந்தது.

இவ்வாறு வங்கதேச அரசானது அந்நிய  செலாவணி பற்றாக்குறையில் சிக்கித் தவித்துவரும் போதும், மின்சாரப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக எரிவாயு மற்றும் எண்ணெய் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இந்நடவடிக்கைக்கு மின்சார உற்பத்தி செலவு அதிகமாகும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அவர்கள் வங்கதேசத்தின் தற்போதைய நிலைமையைச் சுட்டிக்காட்டி அதானி நிறுவன மின்சார விநியோகத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.


படிக்க: சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு


எரிசக்தி நிபுணரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான முனைவர் அஜாஜ் ஹொசைன், “வங்கதேசத்தில் நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகள் 50 சதவிகிதம் திறனில் இயங்குகின்றன. மேலும் அந்நிய  செலாவணி நெருக்கடி காரணமாக நாடு போதுமான நிலக்கரியை வாங்க முடியவில்லை. எனவே அதானி பவர் வழங்கும் மின் விநியோகம் முக்கியம். இது உள்ளூர் உற்பத்தியாளர்களை விட சற்று விலை அதிகம். ஆனால் இது முக்கியம்” எனக் கூறுகிறார்.

மேலும், தற்போதைய குளிர்காலத்தில் மின் தேவை குறைவாக இருந்தாலும் 2025 மார்ச்-ஏப்ரல் கோடைக்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறையால் வங்கதேசம் நெருக்கடியில் வீழக்கூடும் என்றும் மின்சார தட்டுப்பாடானது தற்போதே நாட்டின் தொழில்துறையையும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியையும் கணிசமாகப் பாதிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் வங்கதேச அரசை எச்சரிக்கின்றனர்.

மறுபுறம், அதானி குழுமத்திற்கு வங்கதேச அரசு தர வேண்டிய ரூ.7,000 கோடி நிலுவைத் தொகையை உடனே வசூலிக்க வேண்டிய தேவையும் இல்லை. அரசுக் கணக்கின்படி அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு பத்து லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது வங்கதேச அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையான ரூ.7,000 அக்குழுமத்திற்கு மிக சொற்பத் தொகையாகும்.

மேலும், வங்கதேச அரசும் ஜூலையில் 35 மில்லியன் டாலர், செப்டம்பரில் 68 மில்லியன் டாலர், அக்டோபரில் 97 மில்லியன் டாலர் என நிலுவைத் தொகையை அதானி குழுமத்திற்கு படிப்படியாகச் செலுத்தி வந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகர் ஃபவுசல் கபீர் கான், “நாங்கள் பணம் செலுத்துவதை விரைவுபடுத்திய போதிலும், மின் விநியோகங்கள் குறைக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் திருப்பிச் செலுத்தத் தயாராக இருக்கிறோம், மாற்று ஏற்பாடுகளைச் செய்வோம். ஆனால் எந்த உற்பத்தியாளரும் எங்களைப் பணயக் கைதிகளாக வைத்திருக்கவோ மிரட்டவோ அனுமதிக்க மாட்டோம்” என்று பேசியுள்ளார். எனவே வங்கதேச இடைக்கால அரசு நிலுவைத் தொகையைச் செலுத்தி வந்தாலும், அதானி குழுமம் வங்கதேச அரசை நிலுவைத் தொகையை உடனடியாக கட்ட வலியுறுத்தி நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி இயல்பாக நம்மிடம் எழலாம்.


படிக்க: வனநிலத்தை ஆக்கிரமித்து அனல் மின்நிலையம் கட்டிவரும் அதானி குழுமம்


இந்தியாவிலேயே அதானியின் இந்த கோட்டா அனல் மின் நிலையம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. 2015-ஆம் ஆண்டு மோடி வங்கதேசத்திற்குச் சென்று வந்ததையடுத்து, அதானி குழுமத்திற்கும் டாக்காவிற்கும் இடையேயான 25 ஆண்டு காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் அடிப்படையில் இந்நிலையம் நிறுவப்பட்டது. அதானி பவர் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டுமென்று வங்கதேச பவர் டெவலப்மென்ட் போர்டு கடந்தாண்டே கடிதம் எழுதியது. தற்போது இந்திய ஆதரவு ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, அதானியிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான எதிர்ப்பு தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில், வங்கதேசத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட இந்நிறுவனத்திலிருந்து இந்தியா மின்சாரம் வாங்கிக்கொள்ளலாம் என்று மோடி அரசு சட்ட விதிகளைத் திருத்தி அதானியின் பாரத்தை இந்திய உழைக்கும் மக்களின் தலையில் இறக்கியது.

இந்நிலையில்தான், நிலுவைத் தொகையை உடனடியாக திருப்பி செலுத்தும்படி அதானி குழுமம் வங்கதேச இடைக்கால அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது. மேலும் அதானி நிறுவனத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வங்கதேச இடைக்கால அரசையும் தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய ஆளும் வர்க்க கும்பலையும் பணியவைக்க முயல்கிறது, பாசிச மோடி அரசு.

ஆகவே, அதானி குழுமம் வங்கதேச அரசிற்கு மின்சார நிலுவைத் தொகையைக் கட்டக் கூறி நெருக்கடி கொடுப்பது இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி- அதானி பாசிசக் கும்பலால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமே ஆகும்.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க