உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள வனப்பகுதியை ஒன்றிய பா.ஜ.க. மற்றும் மாநில யோகி அரசின் துணையுடன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து 1,600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை (Mirzapur Thermal Energy Private Limited) மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் குழுமம் கட்டி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி இதுகுறித்து விளக்கம் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் அதானியின் அனல் மின் நிலையம், இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள சோம்பல் கரடிகளுக்கான கடைசி வாழ்விடங்களில் ஒன்றான மிர்சாபூர் வனப்பகுதியில் கட்டப்பட்டு வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) என்ற ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டதை அடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
மிர்சாபூர் வனப்பகுதியில் கட்டுமானம் செய்யத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2016 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறியதற்காகப் பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச அரசு, ஒன்றிய அரசு மற்றும் மிர்சாபூர் அனல் மின் நிலையத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மிர்சாபூர் வனப்பகுதியை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விந்தியன் சூழலியல் மற்றும் இயற்கை வரலாற்று அறக்கட்டளை (Vindhyan Ecology and Natural History Foundation) என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் இதே வனப்பகுதியில் 1,320 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க வெல்ஸ்பன் எனர்ஜி (Welspun Energy) என்ற நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய போது அதற்கெதிராக போராடித் தடுத்து நிறுத்திய நபர்களில் விந்தியன் சூழலியல் மற்றும் இயற்கை வரலாற்று அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் ஒருவர்.
படிக்க: அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு
மேலும், விந்தியன் அமைப்பானது தான் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் மிர்சாபூர் வனப்பகுதியானது 2019 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில வனத்துறையால் சோம்பல் கரடிகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு காப்பகமாக முன்மொழியப்பட்ட பகுதி என்றும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இன் அட்டவணை 1 இன் கீழ் சிறுத்தைகள், கழுதைப்புலிகள் உள்ளிட்ட 23 விலங்குகள் தங்கள் வாழ்விடங்களுக்காக இந்தப் பகுதியை நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசும் மிர்சாபூர் வனப்பகுதியில் அதானி குழுமம் அனல் மின் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 395 ஹெக்டேர் வனப்பகுதி அல்ல என்று வாதிட்டு வருகின்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மிர்சாபூர் வனப்பகுதி அதானி குழுமத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த திட்டத்திற்குத் தண்ணீர் குழாய் மற்றும் சாலைகள் அமைக்க 8.5 ஹெக்டேர் “வன நிலம்” மட்டுமே தேவை என்று நாடாளுமன்றத்தில் கூறியது. அதாவது, “அதானி மின்நிலையம் கட்டப்பட்டு வரும் நிலம் வனப்பகுதி அல்ல” என்று கூறியது.
இவ்வாறு ஒன்றிய மோடி அரசானது அதானி குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நோட்டீஸை எல்லாம் அதானி குழுமமும் ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச யோகி அரசும் கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்கப்போவதில்லை. ஹிண்டன்பர்க் அறிக்கை உள்ளிட்ட பல அறிக்கைகள் மூலமும் மோடி அரசின் பல்வேறு பாசிச நடவடிக்கைகள் மூலமும் மோடி-அமித்ஷா கும்பலுக்கும் அதானிக்கும் உள்ள உறவைப் பற்றியும் அவர்களின் சட்டவிரோத மற்றும் மக்கள்விரோத செயல்பாடுகளைப் பற்றியும் நாடே அறியும்.
2023-இல் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, அதானியின் ஊதிப்பெருக்கப்பட்ட சொத்து மதிப்புகள் கடும் வீழ்ச்சி அடைந்த போதிலும், அதானி ஒன்றரை ஆண்டில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். மோடி அரசு சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் அதானிக்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலும், வங்கிகளிலிருந்து மக்களின் சேமிப்பையும் அரசு சொத்துகளையும் தாரை வார்த்ததாலுமே அதானியின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. அதில் ஒரு அங்கம்தான் அதானிக்கு மிர்சாபூர் வனநிலத்தை ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச யோகி அரசும் தாரை வார்த்திருப்பதாகும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram