அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு

இந்தியாவிலேயே, உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது அதானிக்கு சொந்தமான கோட்டா ஆலை மட்டுமே என்ற சூழலில் இத்திருத்தம் முழுக்க முழுக்க அதானியின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு

ஜார்க்கண்டில் அதானி குழுமத்திற்கு சொந்தமான கோட்டா அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதுமாக வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அண்மையில், நடந்த வங்கதேச மாணவர் எழுச்சிக்கு பிறகு அதானிக்கு சொந்தமான இந்நிறுவனத்திலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வங்கதேசத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனையடுத்து வங்கதேசத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட இந்நிறுவனத்திலிருந்து இந்தியா மின்சாரம் வாங்கிக்கொள்ளலாம் என்று மோடி அரசு சட்ட விதிகளில் திருத்தம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதானி குழுமத்தின் அதானி பவர் நிறுவனமானது மோடியின் ஆசியுடன் 15,250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மிகப்பெரிய தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் குஜராத், மாகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகளுடன் மின்சார விநியோகத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள 1,600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட “கோட்டா அனல்மின் நிலையமானது” முழுவதுமாக வங்கதேசத்திற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கெனவே தொடங்கப்பட்டது. குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு மோடி வங்கதேசத்திற்கு சென்று வந்ததையடுத்து, அதானி குழுமத்திற்கும் டாக்காவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடுத்த ஆண்டே, தனியார் நிறுவனம் மட்டுமே, அதிலும் அதிக மின்சார உபரி கொண்ட அதானியின் நிறுவனம் மட்டுமே வெளிநாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில் சட்ட விதிகள் கொண்டுவந்தது மோடி அரசு. இதனையடுத்து ஜார்க்கண்டில் 50 ஏக்கரில் நிலபரப்பில் வாழ்ந்த 40 குடும்பங்களை போலீஸ், அதிகாரவர்க்கத்தைக் கொண்டு விரட்டியடித்துவிட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி மரங்களை அழித்து மின் ஆலை அமைக்கப்பட்டது.


படிக்க : 78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!


மேலும், அப்பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகள் அதானிக்கு வழங்கப்பட்டன. இத்திட்டத்துக்காக ஜார்க்கண்ட் அரசின் மின் நிதி கழகம் மற்றும் ஊரக மின்மயமாக்கல் கழகம் 80 சதவிகித தொகையை கடனாக மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கியது. இருந்தபோதிலும், அதானி வங்கதேசத்திற்கு எந்தவித வரிச்சலுகையையும் அளிக்கவில்லை. மாறாக, வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை போலியாக காரணம் காட்டி உற்பத்தி செலவைவிட (ஒரு யூனிட் மின்சாரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.4) மூன்று மடங்கு அதிக விலைக்கு (ரூ.11) விற்க வங்கதேச அரசுடன் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த கொள்ளைக்கு எதிராக கடந்த காலங்களிலேயே வங்கதேசத்தில் எதிர்ப்பு கிளம்பியது. அதானி பவர் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டுமென்று வங்கதேச பவர் டெவலப்மென்ட் போர்டு கடந்தாண்டே கடிதம் எழுதியது. தற்போது இந்திய ஆதரவு ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, அதானியிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அதானியிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் அல்லது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் பிற நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்தில் கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், வங்கதேசத்துக்கு அதானி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் எந்நேரமும் ரத்தாகலாம் என்ற நிலை எழுந்துள்ளது.

இதனையடுத்துதான், அண்டை நாடுகளுக்கு பிரத்யேகமாக மின்சாரம் வழங்குவதற்காக 2018-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல் சட்ட விதிகளை கடந்த 12-ஆம் தேதி அவசர அவசரமாக திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது ஒன்றிய மின் அமைச்சகம். அதாவது, “மின் திட்டத்தின் மொத்த உற்பத்தி திறனில் இருந்து முழுமையாக அல்லது பயன்படுத்தப்படாத (விற்காத) மின்சாரத்தை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு வசதியாக அத்தகைய மின் உற்பத்தி நிலையத்தை இந்திய மின் தொகுப்புடன் (கிரிட்) இணைக்க ஒன்றிய அரசு அனுமதிக்கலாம்” என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டாலும் இந்திய மின் தொகுப்பிற்கு மின்சாரத்தை விற்கவும் இத்திருத்தம் அனுமதிக்கிறது.

இந்தியாவிலேயே, உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது அதானிக்கு சொந்தமான கோட்டா ஆலை மட்டுமே என்ற சூழலில் இத்திருத்தம் முழுக்க முழுக்க அதானியின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.


படிக்க : அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி! | மீள்பதிவு


இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனக்கு நெருக்கமான நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் என்று கூறியுள்ளார். மேலும், “அதானி முன்பு நிலக்கரி இறக்குமதியில் லாபம் ஈட்டி வந்தார். இப்போது இந்த மின்சாரத்தை இந்திய மக்களுக்கு விற்பதன் மூலம் இன்னும் அதிக லாபம் பெறுவார். வங்கதேசத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு மின்சாரம் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அதானி குழுமம் இந்தியாவிலேயே மின்சாரத்தை விற்கும் வகையில் ஒன்றிய அரசு சலுகைகளை வழங்கியிருக்கிறது. மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் இதுதான். இது மிகவும் சர்ச்சைக்குரியது” என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் பங்குகளை கொண்டுள்ளனர் என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதையடுத்து அதானியின் பங்குகள் சரிவை சந்தித்தன. அது இந்திய பங்கு சந்தையிலும் தாக்கம் செலுத்தியது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இவ்விசயத்தை பா.ஜ.க-விற்கு எதிராக கையில் எடுத்துள்ளதையடுத்து அதானியின் மோசடி-முறைகேடுகள் பேசுபொருளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஆனால், அதுகுறித்தெல்லாம் துளியும் கவலைப்படாமல் எந்தவித அச்சமுமின்றி, அதானி என்ற ஒற்றை மனிதனின் லாபம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாட்டின் சட்டவிதிகளை திருத்தி எழுதுகிறது, பாசிச மோடி கும்பல். இதேபோல் கடந்த 2022-ஆம் ஆண்டு வேந்தாந்தாவின் அனில் அகர்வாலுக்காக, பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தாமலேயே கார்ப்பரேட் நாசகர திட்டங்களுக்கு அனுமதிபெறும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது சுற்றுச்சுழல் அமைச்சகம். இதன்மூலம், இந்தியாவில் நடப்பது அம்பானி-அதானி;ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கான அப்பட்டமான கும்பலாட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது மோடி தலைமையிலான பாசிசக் கும்பல். மேலும், அதானி மீது இன்னும் எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும் அதானியின் கொள்ளைக்கும் லாபத்திற்கும் துரும்பளவேனும் பாதிப்பு நேராமல் பாதுகாப்போம் என்று அறிவிக்கிறது.

சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க