78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!
இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்பு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. சுவிடன் நாட்டின் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் “ஜனநாயக அறிக்கை – 2024”, கடந்த சில ஆண்டுகளில் படுமோசமான எதேச்சதிகார நாடாக இந்தியா மாறிவருகிறது என்று தெரிவிக்கிறது. எதேச்சதிகாரப் போக்கு என்பது திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளது.
கருத்து சுதந்திரம் படிப்படியாக சரிந்து வருகிறது. ஊடக சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்வதும் சமூக ஊடகங்களை ஒடுக்குவதும் அதிகரித்து வருகிறது. அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை துன்புறுத்துவது, அதேபோல் சமூக செயற்பாட்டாளர்களை தாக்குவதும் நடைபெறுகிறது. ஊடக சுதந்திரமற்ற இந்தியாவிற்காக, இந்தியா அழுகிறது!
பன்மைத்துவத்திற்கு எதிரான பா.ஜ.க. அரசு, தேசத்துரோக, அவதூறு, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை கொண்டு தங்கள் மீதான விமர்சனங்களை ஒடுக்குகிறது. அதனுடனே மத சுதந்திரத்துக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை நசுக்குவதும் பரவலாக உள்ளது. எதேச்சதிகார நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியா உள்ளது. தாராளவாத ஜனநாயக குறியீட்டில் 104-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள பல லட்ச மக்கள் பட்டினியில் உழல்கின்றனர். வறுமை சார்ந்த புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் அரசிடம் இல்லை. 2014-லிருந்து 2022 வரை வெவ்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் 2.5 முதல் 29.5 சதவிகிதம் வரையிலான மக்கள் வறுமையில் உள்ளனர். 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் இருப்பது கவலைக்குறியது. வறுமையற்ற இந்தியாவிற்காக, இந்தியா ஏங்குகிறது!
படிக்க : சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஆட்சியாளர்களின் மடியில் கிடக்கிறது. 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குறியீட்டில் 180 இடங்களில் 159-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், எல்லையற்ற நிரூபர்கள் அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி ஊடகத்திற்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது. உண்மையின் பக்கம் நிற்கும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், கொல்லவும் படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். மக்களின் உரிமைக்காக பேசும்போது அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு எதிர்க்கட்சியினர் தடுக்கப் பார்க்கிறார்கள், அவர்களது மைக் அனைக்கப்படுகிறது. இந்தியாவில் காலாவதியாகிப் போன கருத்துரிமை, பேச்சுரிமைக்காக இந்தியா அழுகிறது!
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நீதிக்காக போராடியவர்களை ஒடுக்குவதற்காக இந்தியா அழுகிறது! சமூக செயல்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், சிறையில் அடைக்கப்படுகின்றனர், ஏன் கொல்லவும் படுகின்றனர். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டான் சாமி பீமா கோரேகான் சதி வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் அக்டோபர் 08, 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு உறிஞ்சு குழாய் தராமல் கொன்றனர். அவரது மரணம் என்பது ஒரு நிறுவனக் கொலை. சமூக செயற்பாட்டாளர்களான தீஸ்தா சேதல்வாட், அருந்ததி ராய், போரா. சாய் பாபா, உமர் காலித், மேதா பட்கர் போன்றோர்கள் பா.ஜ.க-வால் பழிவாங்கப்படுகின்றனர்.
இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் இழிவுப்படுத்தப்படுவது, பாகுபாடு காட்டப்படுவது, தாக்கப்படுவதற்காக இந்தியா அழுகிறது! இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள், சீக்கியர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பா.ஜ.க-வின் வகுப்புவாத அரசியலால் பிரிக்கப்பட்ட சமூகத்தில் உள்ளனர். ஜூன் 26-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் வெளியிட்ட சர்வதேச மத சுதந்திர ஆண்டறிக்கையில், இந்தியாவில் மத சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், அவர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், அவர்களது வழிபாட்டு தளங்கள் மற்றும் வீடுகள் இடிக்கப்படுவது என்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழல் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, சுற்றுச்சூழல் சுதந்திரத்திற்காக இந்தியா அழுகிறது! வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, டெல்லியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நாடு முழுக்க ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது சுற்றுச்சுழல் பாதுகாப்பில் நாம் அதீத அக்கறை எடுத்துகொள்ள வேண்டும் என்பதைத்தான். ஆனால், அரசு திட்டங்கள் அனைத்தும் அவர்களின் முதலாளித்துவ நண்பர்களுக்கு சாதகமாக உள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும் சுரண்டுவதற்கும் உரிமம் வழங்குகிறது. சுற்றுச்சூழல் சிதைந்து வருகிறது! 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் 180 நாடுகளில் 176-வது இடத்தில் இந்தியா உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் பல்லுயிர் காடுகள் அழிக்கப்படுகிறது. இதனை 2023-ஆம் கொண்டுவந்த வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா உறுதி செய்கிறது. நம் நாட்டில் உள்ள பல ஆறுகள் மாசடைந்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலங்கள் அரசின் முதலாளித்துவ நண்பர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்களது லாப நோக்கத்தை தவிர இயற்கையின் மீது அக்கறை கிடையாது.
படிக்க : உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்
நாடாளுமன்றங்களில் விவாதங்களின்றி கொண்டுவரப்பட்ட மக்களுக்கெதிரான கருப்பு சட்டங்களுக்காக இந்தியா அழுகிறது! குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 மற்றும் 37A-ஐ நீக்கியது, விவசாயிகளுக்கெதிரான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவர முயற்சித்தது, தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத்தொகுப்புகளை கொண்டு வந்தது, மதமாற்ற தடைச்சட்டம், உத்தராகண்ட்டில் நடைமுறையிலுள்ள பொதுசிவில் சட்டம், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” அறிக்கை, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு போகலாம்.
ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான தரமான கல்விக்காக இந்தியா அழுகிறது! இப்பிரிவில் இருந்து வருபவர்களுக்கு கல்வி பயில்வதற்கான, உத்திரவாதமான வேலைக்கான வாய்ப்புகள் இல்லை. புதிய கல்விக்கொள்கையின் மூலம் இவர்கள் தடுமாறுகின்றனர். மாணவர்களும் இளைஞர்களும் அவர்களுக்கு இக்கட்டமைப்பால் ஏற்பட்ட ஏமாற்றங்களால் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும், இந்தியாவில் கல்வி என்பது சமூகத்திற்கானதாக அல்லாமல் உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இந்தியாவிலிருந்து விடுபட இந்தியா அழுகிறது. நாட்டின் இளைஞர்கள் வேலையின்மைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித வளர்ச்சி நிறுவனம் இணைந்து வெளியிட்ட இந்திய வேலைவாப்பு அறிக்கை 2024-இல், மக்கள்தொகையில் ஏறக்குறைய 83 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. 2000-ஆம் ஆண்டில் 35.2 சதவிகிதமிருந்த இடைநிலை படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 2022-ஆம் ஆண்டு 65.7 சதவிகிதமாக இருமடங்காக உயர்ந்துள்ளது.
ஊழலற்ற இந்தியாவிற்காக இந்தியா அழுகிறது. நம் நாட்டில் ஊழல் என்பது இயல்புநிலையாக உள்ளது. அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாத நிலைமைதான் இருக்கிறது. ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பணமதிப்பிழிப்பு நடவடிக்கைகளிலும் தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலமும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பணம் பெற்றுள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் 70 தொகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. செபியின் தலைவர் மாதவி பூரி புஞ் ஒழுங்குமுறையை மீறி அதானி குழுமத்தில் பங்குகள் வைத்துள்ளார் என்று அண்மையில் வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. ஊழல் புலனாய்வு குறியீட்டில் சர்வதேசிய அளவில் 180 நாடுகளில் 93-வது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதுள்ள உலக நாடுகளில் மோடி ஆட்சிதான் மிகவும் ஊழல் உள்ள ஆட்சி.
அரசமைப்பு நிறுவனங்களின் சுதந்திரத்திற்காக இந்தியா அழுகிறது. இந்திய தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை, தேசிய மனித உரிமை ஆணையம், போலீசு மற்றும் நீதித்துறை என இன்றைய நிலையில் இந்நிறுவனங்கள் அனைத்தும் தங்களது மதிப்பை இழந்து, ஒருபக்க சார்பாகவும் ஊழல் மலிந்தும் சமரசமாகவும் ஆட்சியாளர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாகவும் செயல்படுகின்றன.
இந்தியா வினேஷ் போகத்திற்காக அழுகிறது. வினேஷ் போகத், இந்தியாவின் அனைத்து பெண்களின் துணிச்சலையும் தைரியத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தினார். இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாலியல் பொறுக்கி பிரஜ் பூசன் சரன் சிங்கை தனது சக மல்யுத்த வீரர்களுடன் இணைந்து எதிர்கொண்டார். அனைத்து சக்திவாய்ந்த டான் அவரது தவறான செயல்களுக்காக அவர் எடுத்துக் கொண்டார். வினேஷ் தனித்து விடப்பட்டார்; அவருக்கு திறமை இருந்தபோதிலும், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட மறுக்கப்பட்டது. பல தடைகளை மீறி ஒலிம்பிக்கில் தனது திறமையைக் காட்டினார். உலகின் சிறந்த தோல்வியை கண்டிராத வீரர்களை தனது மனவுறுதியால் வென்றார். ஆனால், இறுதிச்சுற்றுக்கு முன் அவர் ‘தகுதி நீக்கம்’ செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்திற்கு பின் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது.
படிக்க : கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!
மணிப்பூர் குக்கி பழங்குடியின மக்களின் விடுதலைக்காக இந்தியா அழுகிறது! 2023 மே முதல், மணிப்பூரில் உள்ள குக்கி-சோ பழங்குடியின மக்கள், உணர்ச்சியற்ற, பிளவுப்படுத்தும் மற்றும் இரக்கமற்ற ஆட்சிக்கு பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மணிப்பூரை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டன; அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன; அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. வன்முறையின் குற்றவாளிகளுக்கு வெளிப்படையாக பக்கபலமாக உள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அரசியல் விருப்பம் இல்லை என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது.
அனைவரும் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் உண்மையுடனும் நீதியுடனும் பன்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திரம் வேண்டி இந்தியா அழுகிறது; தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பை மேம்படுத்தும் உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள். வெறுப்பு மற்றும் வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, திருட்டு மற்றும் ஊழலில் இருந்து உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்.
சர்வாதிகாரம் அடிபணிவிலிருந்து அனைவருக்கும் சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தியா அழுகிறது; ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கட்டப்பட்டவர்கள், பெண்கள், சிறு விவசாயிகள், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்டவர்கள் அனைவரும் அச்சமற்ற மற்றும் வெளிப்படையான குடிமக்களாக இருக்க சுதந்திரம் கோருகின்றனர்!
நன்றி : countercurrents.org
மொழிபெயர்ப்பு : ஹைதர்