நமது நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். விடுதலை போராட்டத்தில் துளியும் பங்கு கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலோ “ஹர்கர் திரங்கா” என்று நமக்கு தேசப்பற்று குறித்து வகுப்பெடுக்கிறது. ஆனால், விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் தங்களது ஓய்வூதியத்தை இன்றும் போராடிப்பெறும் நிலையில்தான் நமது ‘சுதந்திர இந்தியா’ உள்ளது என்பதே கசப்பான உண்மை.
சான்றாக, தமிழ்நாட்டைச் சார்ந்த வேலு என்பவருக்கு 97 வயதாகிறது. இவர் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகையைச் சமீபத்தில்தான் பெற்றார். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 2021-லிருந்துதான் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தைப் பெற்று வருகிறார். இருந்தாலும் அவருக்கு கிடைத்த ஓய்வூதியம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இந்த சொற்பமான தொகையைப் பெறுவதற்கே அவர் அரசு நிறுவனங்களில் குறுக்கும் நெடுக்குமாக அலைய வேண்டியதாகிவிட்டது.
வேலு 1924-ஆம் ஆண்டு பர்மாவில் (தற்போதைய மியான்மர்) பிறந்தவர். இளம் வயதிலேயே விடுதலை போராட்டத்தில் ஈடுபாடுகொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் இந்திய தேசிய ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 1945-46 ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு 1970-ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பி தமிழ்நாட்டில் தங்கிவிட்டார்.
படிக்க : 78வது சுதந்திர தினம் | வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்! எதற்காக?
ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும் அவரது போராட்டம் தொடர்ந்தது. 1987-ஆம் ஆண்டு அரசு அறிவித்த ஓய்வூதியத்திற்குப் பதிவு செய்தார். ஆனால் அவரது படிவம் கண்டுகொள்ளப்படவில்லை. 2012-ஆம் ஆண்டு மீண்டும் அவர் பதிவு செய்த விண்ணப்பம் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும், அவரது விண்ணப்பத்தைச் சந்தேகப்பட்டு அரசு நிராகரித்தது. 2021-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகுதான் அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது.
அதன் பிறகும் 2021, 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் அவரது ஓய்வூதிய நிலுவைத் தொகை தொடர்பாக மேலும் மூன்று வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. 1987-ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு வழங்கவேண்டிய ஓய்வூதியம் சம்பந்தமாக 2008-ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த விண்ணப்பம் கண்டுப்பிடிக்கப்பட்டு, அதனடிப்படையில் 2022-ஆம் ஆண்டு அவரது நிலுவைத் தொகையைக் கணக்கிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதன்பிறகும் எந்தவித உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மீண்டும் அரசுக்கெதிராக அவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்தாண்டு ஜூலை 8-ஆம் தேதி அவரது நிலுவைத் தொகையை உறுதிசெய்து உத்தரவிட்டது. 77 ஆண்டுகளுக்குப் பிறகு பல கட்ட போராட்டத்தின் பலனாக தற்போதுதான் அவருக்கு ஓய்வூதியம் கிடைத்துள்ளது.
இதுபோன்று நாட்டு விடுதலைக்காக போராடிய பல வீரர்கள் தங்களுடைய ஓய்வூதியத்திற்காகப் போராடி வருகின்றனர். “வேலு” இதற்கான ஒரு சான்று மட்டுமே. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் காலை நக்கிப்பிழைத்த ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் அதிகாரத்திலிருப்பதும் நமது நாட்டு விடுதலைக்காக ரத்தம் சிந்திப் போராடிய வீரர்கள் ஓய்வூதியத்திற்காக அரசு அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் அலைந்துக் கொண்டிருப்பதும்தான் ‘சுதந்திர’ இந்தியாவின் அவலநிலை.
ஹைதர்
செய்தி ஆதாரம்: பார் அண்ட் பென்ச்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube