சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்

தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
(இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் உதவி ஆசிரியர்)

2024-இல் தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

000

தொழில்நுட்பத் துறையில் தொடரும் தற்காலிகப் பணிநீக்கங்கள் (லே-ஆஃப்) உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்களைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. இது, 2024 ஜூலை 5-ஆம் தேதியில் உள்ள நிலைமை மட்டுமே. வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வல்லுநர்கள் ஏற்கெனவே பணிநீக்க அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகாசுரத் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்-இன் தலைமையகம் அமைந்துள்ள ரெட்மாண்ட் (Redmond) நகரமும் இந்த நீரோட்டத்தில் இப்போது இணைந்துள்ளது. இந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை ஒரு புதிய சுற்று பணிநீக்கத்தின் அடிப்படையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்பகாசுரத் தொழில்நுட்ப நிறுவனம், அதிகாரப் பூர்வமாக எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, தங்களது லிங்க்ட்இன் (LinkedIn) என்ற வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புக்கான சமூக ஊடக மேடையைப் பயன்படுத்தினர்.


படிக்க : தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்


கீக் வயர் (Geek Wire) என்ற இணைய தளத்தின் அறிக்கையின்படி, தயாரிப்பு மற்றும் நிரல் (program) நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவன அமைப்புமுறை மற்றும் பணியாளர்களைச் சீரமைத்தல் ஆகியன ஒரு தொழில் நிறுவனத்தை நிர்வகிப்பதில் அவசியமானதும் வழமையானதுமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதை, “எங்கள் எதிர்காலத்திற்கான மூலோபாய வளர்ச்சிக்கும், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாகவும் நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து முதலீடு செய்வோம்” என்று மேற்கோளிட்டு அதே அறிக்கையானது தெரிவித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சோன்ஜா டெலாஃபோஸ், பணிநீக்கம் செய்யப்பட்ட பலரில் ஒருவர். மைக்ரோசாப்ட்-இன் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்முறை மேம்பாட்டு மூலோபாயத்தை மேற்பார்வையிடும் இயக்குநராக பணியாற்றிய டெலாஃபோஸ், லிங்க்ட்இன் (LinkedIn) எனும் சமூக ஊடகத்தில், தான் வேலைக்காக ஒரு புதிய தொழிற்கூறைத் தேடுவதாக அறிவித்தார்.

“அனைவருக்கும் வணக்கம்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பணி நீக்கங்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும், வேலைக்காக புதியதொரு தொழிற்கூறைத் தேடத் தொடங்குகிறேன். உங்கள் ஆதரவைப் பாராட்டுகிறேன்; நீங்கள் வழங்கக்கூடிய இணைப்புகள், ஆலோசனைகள் அல்லது வாய்ப்புகளுக்கு முன்கூட்டியே எனது நன்றி!” – என்று டெலாஃபோஸ் எழுதினார்.

மைக்ரோசாப்ட்-இன் நிதியாண்டானது 2024 ஜூன் 30-ஆம் தேதியன்று முடிவடைந்துள்ளது. மேலும் அந்நிறுவனம், புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அதன் தொழிலை மறுசீரமைக்கும் என்று அறியப்படுகிறது. ஜூன் மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஹோலோலென்ஸ் 2-இல் (HoloLens 2 – மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தலையில் மாட்டிக்கொண்டு பணியாற்றும் கலப்பு நிகரமை காட்சிப் பலகை) பணிபுரியும் கலப்பு மெய்நிகர் பிரிவின் ஊழியர்கள் மற்றும் விண்வெளி பொறியியல் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியவற்றோடு, அசூர் துறையையும் (Azure – மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட மேகக் கணினி மேடை) இப்பணி நீக்கங்கள் பாதித்தன.

மைக்ரோசாப்ட் நிறுவனமானது, இப்படி இன்னொரு சுற்று பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ள நிலையில், மற்றொரு தொழில்நுட்ப நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைநீக்க உத்தரவை (pink slip) வழங்கியுள்ளது. ஜூலை 3-ஆம் தேதியன்று, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான யுகேஜி (UKG), அதன் ஊழியர்களில் சுமார் 2,000 பேரைக் குறைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ் டோட், இம்மென்பொருள் நிறுவனம் தனது பணியாளர்களை 14 சதவிகிதம் வரை குறைத்துள்ளதாக ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

யுகேஜி நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக இருந்த வில்லியம் மேடன், பணிநீக்கங்களால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக லிங்க்ட்இன் ஊடக மேடையில் பகிர்ந்து கொண்டார்.

“அனைவருக்கும் வணக்கம்! அனைவரும் அறிந்ததைப்போல யுகேஜி நிறுவனமானது இன்னொரு சுற்று பணிநீக்கங்களைச் செய்துள்ளது. இந்த முறை நானும் எனது பணியாளர் குழுவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஒரு புதிய வேலையைத் தேடுகிறேன். உங்கள் ஆதரவைப் பாராட்டுகிறேன். எந்தவொரு வேலை வாய்ப்புகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டாலும், அது எனக்கோ அல்லது மென்பொருள் தயாரிப்பு உரிமையாளர்களான எனது பணியாளர்களின் குழுவுக்கோ பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால், எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள்; அல்லது எனது கருத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நான் உங்களுடன் கலந்துரையாடத் தயாராக இருக்கிறேன்!” – என்று அவர் எழுதினார்.

முக்கியத்துவம் வாய்ந்த மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேம்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றான யுகேஜி நிறுவனமானது, ஜூன் 2024 நிலவரப்படி 15,882 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தது.

பல ஆண்டுகளாக யுகேஜி நிறுவனத்தில் பணிபுரிந்த காமெனி மேண்டர்சன், சாத்தியமான வேலை வாய்ப்புகளைப் பற்றி லிங்க்ட்இன் கணக்கில் அவருக்குத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.


படிக்க : மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !


“அனைவருக்கும் வணக்கம்! இன்று, யுகேஜி நிறுவனத்தில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க பணிநீக்கத்தின் ஒரு அங்கமாக நான் இருந்தேன். யுகேஜி-யுடன் பின்னர் இணைக்கப்பட்ட அல்டிமேட் மென்பொருளுடன் (Ultimate Software) 10 வருட உழைப்புப் பயணத்தின் நேர்பயனாக, நான் இப்போது புதிய வேலைவாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அல்டிமேட் மென்பொருளின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான உதவிப் பலகை மற்றும் யுகேஜி-யின் எண்டர்பிரைஸ் எண்ட்பாயிண்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் எனது உழைப்பானது தொழில்முறை ரீதியாக நான் வளரவும், பலருக்கு வழிகாட்டவும் உதவியது” – என்று அவர் எழுதினார்.

கனடா நாட்டின் ஓபன் டெக்ஸ்ட் கார்ப் (Open Text Corp) எனும் வர்த்தக மென்பொருள் நிறுவனமானது, ஜூலை 3-ஆம் தேதியன்று, ஆண்டுக்கு சுமார் 20 கோடி டாலர் அளவுக்குச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்ட வணிக மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,200 பேரின் வேலைகளை குறைப்பதாக அறிவித்தது.

தற்காலிகப் பணி நீக்கங்களால் இந்நிறுவனத்திற்கு சுமார் 6 கோடி கனடிய டாலர் அளவுக்குச் செலவாகும். இது, 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்படும். இருப்பினும், நிறுவனம் 2025-இல் அதன் செலவினங்களை 15 கோடி கனடிய டாலர் அளவுக்குக் குறைக்கலாம் என்று நம்புவதாகக் கருதப்படுகிறது.

ஒன்டாரியோ நகரைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம், அதன் வளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டங்களுக்கு ஆதரவாக, விற்பனை மற்றும் பொறியியல் துறையில் 800 புதிய தொழிற்கூறுகளில் ஆண்டுதோறும் 5 கோடி கனடிய டாலர் அளவுக்கு மீண்டும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதை அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

ஆற்று வெள்ளம் போலப் பெருகியோடும் தொடர்ச்சியான இப்பணிநீக்கங்கள், இந்திய நிறுவனங்களையும் பாதித்துள்ளன. ஜூலை 2-ஆம் தேதி, எட்டெக் (edtech) நிறுவனத்தின் அன்அகாடமி (Unacademy) சுமார் 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 2021-ஆம் ஆண்டில் இது 340 கோடி டாலர் நிதி முதலீட்டைக் கொண்டுள்ள நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.

கொரோனா தொற்றுநோய் தடுப்பு ஊரடங்குகளைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து இந்நிறுவனமானது வேலைகளைக் குறைத்து வருகிறது. சந்தைப்படுத்தல், வணிகம் மற்றும் தயாரிப்புத் துறைகளில் 100 பேரும், விற்பனைத் துறையில் 150 பேரும் இந்நிறுவனத்தின் அண்மைக்கால பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 முதல் இந்நிறுவனம் சுமார் 2,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் திறமையாக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முறைப்படுத்தல்களுமே இப்பணிநீக்கங்களுக்குக் காரணம் என்று அன்அகாடமி-யின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


படிக்க : கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


“நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான இலக்குகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இப்பணிநீக்கங்கள் அவசியமானது. ஏனெனில், நிலையான வளர்ச்சி மற்றும் லாபத்தில் நாங்கள் கவனம் செலுத்தி எங்களது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இதன் விளைவாக, சில தொழிற்கூறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் எளிதானது அல்ல என்றாலும், இந்த மாற்றத்தின்போது பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்” என்று இந்நிறுவனத்தினர் கூறினர்.

தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே மாதத்தில் 49 நிறுவனங்கள் 10,989 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், ஜூன் மாதத்தில் 46 நிறுவனங்கள் 10,083 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பகாசுர நிறுவனங்கள் பெருமளவிலான வேலை வெட்டுக்களை அறிவித்தன. பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், செயல்திறன், சிக்கனச் சீரமைப்பு, கையகப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் மூடல் போன்றவற்றுக்குப் பிறகு மறுசீரமைப்பு செய்தல் முதலானவற்றில் அதிக கவனம் செலுத்துமாறு நிறுவனங்கள் தள்ளப்படும் சூழலே இவற்றுக்குக் காரணங்கள் என்று மேற்கோள் காட்டப்படுகின்றன.

(நன்றி: ஃபிராண்டியர் வார இதழ், Frontier weekly, தொகுதி:57, எண்:5, ஜூலை 28 – ஆகஸ்ட் 3, 2024)

மொழியாக்கம்: கரிஷ்மா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க