அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!

வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும்.

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

2014 மக்களவை தேர்தலில் ஆண்டுக்கு 2- கோடி  பேருக்கு வேலை  தருவோம் என  பிரதமர் மோடி வாக்குறுதிஅளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன. வாக்குறுதிப்படி வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, வேலையில் இருந்தவர்கள் வீதிக்கு  விரட்டப்பட்டதோடு புதிய வேலைவாய்ப்புகளும் அருகிவிட்டன. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்  வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதம் 8சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பரில் 8.30சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 16 மாதங்களோடு ஒப்பிடும் போது இதுவே அதிகபட்ச அளவாகும்.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கு அறிஞர்கள், மற்ற கட்சியினர் முன்வைத்த எந்த ஆலோசனையையும் மோடி அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாறாக இந்த நெருக்கடியை பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளையடித்துக் கொடுத்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க எந்தவொரு நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. இதனால் பெரும்பாலான சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிந்து போய் மூடப்பட்டுவிட்டன.

படிக்க : “சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காத மோடி அரசு, ‘ஆத்மநிர்பர்’ என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது பணமயமாக்கல், உள்கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்த்து வருகிறது.

கொரோனா வருவதற்கு முன்பும் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருந்தது. மோடி ஆட்சிக்கு வரும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பேன் என்றார். ஆனால், தற்போது வரை வேலைவாய்ப்பு அதிகரித்ததாக தெரியவில்லை. ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்களும் தற்போது துரத்தப்பட்டு வருகின்றனர். ஐ.டி நிறுவனங்களில் கூட லே-ஆஃப் என்ற பெயரில் வேலையில் இருந்து ஊழியர்கள் துரத்தப்படுகிறார்கள். படித்தப் பட்டதாரி இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் உதிரி வேலைகளைச் செய்துவருகின்றனர்.

இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ச்சவடாலடித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதிகாரத்திற்கு வந்தபின்பு “பக்கோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். இதையே ஆர்.எஸ்.எஸ் “வேலைக்காக காத்திருக்காமல் சுயத்தொழில் தொடங்கி பிழைக்க வேண்டும்” என வேறு வார்த்தையில் சொல்கிறது.

வேலையின்மை, கடன், வியாபார நெருக்கடி பிரச்சினை காரணமாக 2018 முதல் 2020 ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 ஆகும். வறுமை காரணமாக அண்ணன், தங்கை தற்கொலை, பணியைவிட்டு நீக்கியதால் புகைப்படக் கலைஞர் தற்கொலை, கடன் தொல்லை அவதியால் விவசாயி பலி, வேலையின்மையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு” என தற்கொலைகளெல்லாம் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.

படிக்க : அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

வேலையின்மை என்பது பொருளாதார பிரச்சினையாக மட்டுமின்றி ஆழமான சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது. படித்த இளைஞர்கள் வேலையின்மை காரணமாக கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் ஆரம்பிக்கின்றனர். போதைப் பழக்கம் அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக வேலையின்மை பிரச்சினை அமைந்துதுள்ளது.

இந்த வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும். அதனை அமல்படுத்தும் இந்த பாசிச மோடி அரசை படித்த இளைஞர்களும், கடன் சுமையால் தவிக்கும் சிறு-குறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து  இந்த அரசையும், இந்த நாசகார மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் தகர்த்துத்தெரியாமல் நாம் இந்த வேலையின்மையால் அதிகரிக்கும் தற்கொலை பிரச்சினையில் இருந்து மீள முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க