“சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

சம வேலை சம ஊதியம் கோரி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

“சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

சென்னை நுங்கம்பக்கதில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் “சம வேலை சம ஊதியம்”  என்ற கோரிக்கையுடன் கடந்த 27-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போரட்டத்தை அறிவித்து போராடிவருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2009- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் வேறுபாடு உள்ளது.

இந்த வேறுபாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை  டி.பி.ஐ வளாகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், தொடர்ந்து 5-வது நாளாக போராடி வந்த நிலையில், நேற்று (1.1.2023) நடந்த பேச்சு வார்த்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்களுடைய பிரச்சினையை சட்டமன்றத்தில் தனித்தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளதன் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளனர்.

அரசு இதுபோன்று வாக்குறுதி அளிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 13-வருடங்களாக இவர்களுக்கு மிஞ்சியது இதுபோன்ற ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் போலி வாக்குறுதிகள்தான்.

படிக்க : இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

இந்த ஊதிய வேறுபாடு எப்போதிலிருந்து ஏற்பட்டது என்று அங்கிருந்த ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது “6-வது ஊதிய குழுவிலிருந்துதான் இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதாவது 6-வது ஊதியக்குழுவில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியை குறைத்து, மே-31, 2009-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.8,370-ஆக இருந்த அடிப்படை சம்பளத்தை, அதற்கு பின் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200-ஆக குறைத்து அறிவித்தது தமிழக அரசு. ஒரே பணி ஒரே கல்வித்தகுதி ஆனால் ஊதியத்தில் மட்டும் வேறுபாடு இருக்கிறது. தொடக்கத்தில் இருந்த ஊதிய வேறுபாடு அதாவது அடிப்படை ஊதியத்தில் இருந்த வேறுபாடு என்பது 3170-ஆக இருந்தது, அது நாளாக நாளாக இப்போது 15,000 முதல் 17,000 வரை உயர்ந்துள்ளது. இதை எதிர்த்துதான் போராடி வருகிறோம்” என்றார்.

இது ஏதோ இன்றைக்கு தொடங்கிய போரட்டம் கிடையாது, இதற்கு முன்பு

  • ஜாக்டோ-ஜியோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் போரட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைப்பது.
  • இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தை தொடங்கியது
  • 2016-ஆம் ஆண்டில் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
  • 7-வது ஊதியக்குழு அமைக்கப்படும்போது, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
  • 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம்.
  • 2018 ஏப்ரலில் 4 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம்.
  • 2018 டிசம்பர் 23-ஆம் தேதி டி.பி.ஐ-யில் போராடினார்கள். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்து அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு அளித்து இந்த கோரிக்கையை ஏற்று உடனே சரி செய்ய வேண்டுமென்று அப்போதைய தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

ஒருவேளை அ.தி.மு.க அரசு செய்யவில்லை என்றால் நாங்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவோம் என்று வாக்குறுதியும் அளித்தார்.

அதன்பின்னர்  தி.மு.க-வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கை என்பதில் (அறிக்கை 311-யில்) 2009-மே மாதத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலை சம ஊதியம்” வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி கேட்கும்போது ஒரு ஆசிரியர், “தி.மு.க ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகிவிட்டது. இந்த 20-மாதத்தில் பலமுறை அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் எங்களுடைய கோரிக்கைகளை கொண்டுச் சென்றோம். அவர்களும் உங்களுடைய பிரச்சினை நியாயமானது, ஒரே இடத்தில் பணி செய்பவர்களுக்கு இதுபோன்று ஊதிய வேறுபாடு இருக்கக் கூடாது. இதை சரி செய்வதற்கான முயற்சியை எடுக்கிறோம் என்று கூறினாலும், இதுவரை அதற்கான எந்த உத்தரவாதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை இந்நிலையில்தான் நாங்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 27-தேதி முதல் எங்களுடைய உரிமைக்காக 6 நாட்களாக போராடி வருகிறோம் என்றார்.

இவர்கள் தொடர்ச்சியாக குழந்தைகளின் படிப்பு பாதிக்காத வகையில் பள்ளி விடுமுறை நாட்களில்தான் போரடி வருகின்றனர். இம்முறையும் அதனால்தான் விடுமுறை நாட்களை தேர்வு செய்து போராடி வருகின்றனர்.

கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என அனைவரிடமும் கோரிக்கையை கடிதமாக கொடுத்துள்ளோம். எல்லோரும் இதனை முதலமைச்சரிடம் எடுத்துச் செல்வதாகவும், அவரிடம் இது தொடர்பாக பேசி வருவதாகவும் கூறுகின்றார்களே ஒழிய, இந்த வருடத்துக்குள்  -இந்த மாதத்திற்குள்- செய்து தருகிறோம் என்று எங்களுக்கு எந்த உத்தரவாதமும் தரவில்லை. கடிதத்தின் வழியாகவோ, ஒரு அறிக்கை மூலமாகவோ உறுதியளித்தால் நாங்கள் கலைந்து செல்வோம் என ஆசிரியர்கள் இம்முறையும் எதிர்பார்ப்பது கால எல்லையுடன் கூடிய அதே வாக்குறுதியைத்தான்.

ஆனால் 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை வருத்திக் கொண்டு, குடும்பத்துடன் போராடிவரும் இவர்களை திட்டமிட்டே அரசு புறக்கணிப்பதன் நோக்கம், போராட்டத்தை சீர்குலைப்பதும், ஆசிரியர்களின் மனவலிமையைக் குறைத்து “இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை” என்ற விரக்தி மனநிலைக்குத் தள்ளி மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தடுப்பதும்தான்.

அரசின் செலவுகளை குறைப்பதற்காகத்தான் தகுதி குறைக்கப்பட்டு, சம்பளம் குறைக்கப்படுகிறது என 6-வது ஊதியக்குழுவில் சொல்லப்பட்டது. இப்போதும் அதைச் சொல்லித்தான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைப்பது, நிதிப் பற்றாக்குறை என்று நாடகமாடுவது எல்லாம் தொடர்கிறது. “ஆட்சி அமைத்து சில மாதங்களிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி  ஆசிரியர்களுக்கான ஊதியத்தில் செலவிடப்படுவதாக கூறியதே இதற்கு சாட்சி”

தனியார் பள்ளிகளில் 25 சதவிகத ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என சொல்லி கல்விக் கொள்ளையர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் அரசு. ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியில் 1/3 பங்கு மட்டுமே ஒதுக்குகிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு ஒதுக்குகின்ற நிதியை எடுத்து அரசுப் பள்ளி கட்டமைப்புகளை சரி செய்யலாம் இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கலாம். ஆசிரியர்களுக்கு சரியான ஊதியத்தை கொடுக்கலாம்.

ஆனால், தி.மு.க செய்வது என்ன? “இல்லம் தேடி கல்வி”, “எண்ணும் எழுத்தும்”, “நம்ம ஸ்கூல்” திட்டம் என பல வழிகளில் புதிய கல்விக் கொள்கையை திராவிட மாடல் போர்வையுடன்  நடைமுறைப்படுத்துவது.

மேலும், “சம வேலை சம ஊதியம்” என்ற கோரிக்கையை 13 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருப்பது. 2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த 70,000 பேர் இன்றுவரை பணிக்காகப் போராடி வருகின்றனர். 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு நேரடி நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை டெட் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்து வேலையை உறுதிப்படுத்திக்கொள்ளச் சொல்வது, இவையெல்லாம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் திராவிட மாடல் ஆட்சியிலும் நீடிக்கும் அவலம்தான். இதுவரை தீர்வுகாணப்படவில்லை. அந்த நோக்கமும் தி.மு.க-விற்கு இல்லை.

ஊதியக்குறைப்பு, அரசுத்துறையில் செவிலியர், துப்புரவுப் பணியாளர்களைப் போல நிரந்தர ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்த முறையை புகுத்துவது என செலவினங்களை மிச்சப்படுத்துவதும், மறுபுறம் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் 6 மாதங்களிலே 2774 தற்காலிக ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் 5 மாதத்திற்கு நியமித்து காண்ட்ராக்ட் மயமாக்கும் நடவடிக்கைகளும்தான் இந்த சமூக நீதி ஆட்சி சாதித்தது.

படிக்க : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

இவையெல்லாம் கல்வித்துறையை தனியாருக்கு திறந்து விடுவது, காண்ட்ராக்ட் மயமாக்குவது என தனியார்மய – தாராளமயக் கொள்கையின் அங்கமே. இவற்றை அமல்படுத்துவதே எல்லா ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் பிறவிக் கடன், திமுக இதனை திறம்படச் செய்கிறது.

சம வேலை சம ஊதியம் கோரி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்து இடைநிலை ஆசிரியர் பணிக்காக  காத்திருப்பவர்களின்  போராட்டம், நீட் – புதியக்கல்விக் கொள்கைக்கு எதிரான மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம். என அனைத்தையும் ஒன்றிணைப்போம்.!

ஓட்டுக்கட்சிகளின் போலி வாக்குறுதிகளை நம்பியது போதும், ஒருங்கிணைந்த முறையில் கல்வித் தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்!

வினவு களச்செய்தியாளர்  

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க