இடைத்தரகர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதையடுத்து நாள் ஒன்றிற்கு 300 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மேற்கு வங்கத்திலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் 12 பேர் சென்னை வந்தனர். ஆனால், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இடைத்தரகர் தனக்கான கமிஷன் பணத்தை வாங்கிக் கொண்டு இவர்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிச் சென்றுள்ளான்.
எங்குத் தேடியும் வேலை கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததால், செப்டம்பர் 13 ஆம் தேதியன்று சொந்த ஊருக்குத் திரும்ப, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். வழியில் ஒரு குளத்திலிருந்த மீன்களைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். ரயில் நிலையத்தை அடைந்ததும், மூன்று நாட்கள் வேலைக்குப் பிறகு கிடைத்த பணத்தைக் கொண்டு திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
அவர்களில் ஐந்து பேர் பாதி சமைத்த உணவைச் சாப்பிட்டதால் வாந்தி எடுக்கத் தொடங்கினர்; வயிற்றுப்போக்கு அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். பின்னர், களைப்பு மற்றும் பசியின் காரணமாக அவர்கள் மயங்கி விழுந்தனர்.
அருகிலிருந்தவர்கள் பீதியடைந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து மயக்கமடைந்த தொழிலாளர்களை மீட்டு உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழுவிலிருந்த மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு ஆண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
உணவு வாங்குவதற்குக் கையில் பணமில்லாததால் கிடைத்த உணவை உண்டு பசியை ஆற்ற வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மூன்று பேர் குணமடைந்து தங்கள் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சமர்கான் (Samar Khan) என்பவர் அதிக பாதிப்பிற்கு ஆளானதால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் செயலிழந்து செப்டம்பர் 30 ஆம் தேதி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் அவருடைய சொந்த மாவட்டமான பூர்பா மீட்னிபூர்க்கு (Purba Medinipur) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
படிக்க: காசா: அப்பாவி பாலஸ்தீன மக்களை கொலைசெய்யும் பாசிச இஸ்ரேல் | படக்கட்டுரை
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 34,87,974 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாகவும் வேலையின்மை காரணமாகவும் மேற்கு வங்கம் மட்டுமில்லாமல் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்களிலிருந்தும் அதிகமான தொழிலாளர்கள் வேலை தேடி தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு வருகின்றனர்.
எந்தவொரு சமூகப் பாதுகாப்பும் அற்றவர்களாக உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் அவர்களை ஏமாற்றி விடுகின்றனர். பின்னர் சொற்ப ஊதியத்திற்காக வேலை பார்க்கும் நிலை ஏற்படுகிறது.
இச்சம்பவம் குறித்துப் பேசிய தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் குமார் “கட்டுமானத் தொழில், தொழிற்சாலைகள், பனியன் தொழிற்சாலை, நூற்பாலை, கோழிப்பண்ணை, உணவகங்கள், சலூன்கள் என எல்லா இடங்களிலும் அவர்கள் (புலம்பெயர் தொழிலாளர்கள்) பணிபுரிகின்றனர். ஏஜெண்டுகள் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுகின்றனர், சில நேரங்களில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலையில் அமர்த்திவிடுகின்றனர். தொழிலாளர் நலத்துறை இவர்கள் அனைவரையும் பதிவு செய்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்று கூறினார்.
பத்தாண்டுக்கால பாசிச மோடி ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதன் விளைவாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் இறுதியில் பசியால் இறக்கும் கொடூர நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. மோடி ஆட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்றாகும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram