கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி டிஜிட்டல் மீடியா கொள்கை 2024-ஐ உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் பல்வேறு அடக்குமுறைகளை அரசு ஏவமுடியும் என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
யோகி ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ள புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024-இன் படி, எக்ஸ் (X), முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை ஆதரித்துப் பதிவிடும் ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் (media influencers) ஆகியோருக்கு நிதி வெகுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நிதி வெகுமதி தொடர்பான வரையறைகள் நான்கு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு ரூ.8 லட்சம் வரை சன்மானம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
படிக்க : சிறை அதிகாரிகள் என்னை ஊனமுற்றவராக உணரச் செய்துவிட்டனர்: பேராசிரியர் சாய்பாபா
அதாவது, எக்ஸ் வலைத்தளத்தில் தனிநபர்கள் மாதம் ரூ.5 லட்சம் வரை பெறலாம் என்றும், முகநூல் வலைத்தளத்தில் ரூ.4 லட்சம் வரை பெறலாம் என்றும், இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மாதம் ரூ.3 லட்சம் வரை பெறலாம் என்றும், யூடியூப் வலைத்தளத்தில் உள்ளடக்கத்திற்கு ஏற்ற வகையில் கட்டண வரம்புகள் மாறுபடும். அதாவது நிலையான காணொளிகளுக்கு மாதம் ரூ.8 லட்சம் வரை பெறலாம். குறும்படங்களுக்கு மாதம் ரூ.7 லட்சம் வரை பெறலாம். பாட்காஸ்டர்கள் மாதம் ரூ.6 லட்சம் வரை பெறலாம். மற்ற உள்ளடக்க வகைகளுக்கு மாதம் ரூ.4 லட்சம் வரை பெறலாம்.
இதைக் கேட்கும்போது கவர்ச்சியாகத் தோன்றலாம்; ஆனால் இது மிகவும் சதித்தனமான நடவடிக்கையாகும். இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அதாவது, அரசுக்கு எதிராகவோ, ஆபாசமாகவோ, ஆட்சேபனைக்குரிய கருத்துகளையோ பதிவிட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுள் தண்டனை விதிக்கும் அளவிற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் சிறப்பாக வேலை செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புபவர்கள், சமய நல்லிணக்கத்தைக் கெடுத்து, சட்டம் ஒழுங்குக்கு ஆபத்து விளைவிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். உ.பி.யின் டிஜிட்டல் மீடியா கொள்கை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ‘முன்னோடி’யாக இருக்கும் என்று திரிபாதி கூறினார்.
படிக்க: “புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | சென்னை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
தேர்தல் தோல்வி பயத்தால், இப்படி சமூக ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, தங்கள் கட்சிக்கு எதிராகப் பதிவிடுபவர்களை ஒடுக்கும் செயல்பாட்டைத்தான் காவி-கார்ப்பரேட் பாசிச யோகி அரசு செய்கிறது என்று புதிய டிஜிட்டல் மீடியா கொள்கையை எதிர்த்து கடுமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
“பா.ஜ.க எதிர்ப்பு அல்லது அரசுக்கு எதிரான கருத்துகள் ‘தேச விரோதமாக’ கருதப்படுமா? ‘தாக்குதல் கருத்து’ என்பதன் வரையறை என்ன? கருத்துச் சுதந்திரத்தை முடக்க இரட்டை எஞ்சின் அரசுகள் இப்போது தயாராகின்றனவா? இண்டியா கூட்டணியின் எதிர்ப்பால், மோடி அரசு கொண்டுவந்த ஒளிபரப்பு மசோதா, 2024 திரும்பப் பெறப்பட்டது. இப்போது அதேகொள்கைகள் வேறு பெயர்களில் பின் வாசல் வழியாகக் கொண்டுவரப்படுகிறதா?” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா தனது X தளத்தில் கூறியுள்ளார்
சுயேச்சையாகக் குரல்களை ஏலம் விடுவதும், அவர்கள் வலையில் விழவில்லை என்றால் ஒடுக்குவதும் தான் இவர்களின் நோக்கம். ஆனால், தேர்தலில் தோல்வியடையப்போகும் இந்த யோகி அரசை எந்த செல்வாக்கு கொண்டவராலும் காப்பாற்ற முடியாது. பாஜக-வுடன் இணைந்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குவார்கள். சமூக ஊடகங்களை தணிக்கைக்குட்படுத்தும் எவ்வித செயல்பாடுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என்று செய்தித்தொடர்பாளர் அமீக் ஜமேய் கூறினார்.
“இந்த சகாப்தத்தில் சமூக ஊடகங்களின் தேவை அதிகரித்து வருகிறது. யோகி அரசின் மீதான விமர்சனங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியே இந்த நடவடிக்கை. பல சுதந்திர ஊடக தளங்கள் பாஜக அரசின் உண்மை முகத்தைப் பொதுமக்களிடையே அம்பலப்படுத்தியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் முன் சொல்லப்பட்ட போலிக் கதைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். எனவே இந்த புதிய டிஜிட்டல் கொள்கை என்பது உண்மையை பேசும் ஊடகங்களை மௌனமாக்குவதற்கும் ஒடுக்குவதற்குமே கொண்டுவரப்பட்டுள்ளது.” என்று உ.பி காங்கிரஸ் பொதுச் செயலாளர் அணில் யாதவ் கூறினார்.
படிக்க : சம்ப்பை சோரன்: மாநிலக் கட்சிகளில் கருங்காலிகள் உருவாவது ஏன்?
கார்ப்பரேட் ஊடகங்கள் பல மோடி அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன. மற்ற கார்ப்பரேட் ஊடகங்கள் எவ்வித எதிர்ப்புக் குரலையும் பதிவுசெய்வதில்லை. அப்படியே பதிவு செய்தாலும் ஓர் வரம்பிட்டுக்கொள்கின்றன. கொரோனா பேரிடரின் போது உத்தரப்பிரதேசத்தின் அவலநிலைகள் சமூக ஊடகங்களின் மூலமாகவே நாட்டு மக்களுக்கு தெரியவந்தது. மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை -கொலைகளில் முதன்மை மாநிலம் என்பது சமூக ஊடகங்களின் மூலமாகவே அம்பலமானது.
அதுமட்டுமில்லாமல், முஸ்லீம் மக்கள் – கிறித்தவர்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காவி பயங்கரவாதிகளின் அடக்கு முறைகளும் சமூக வலைத்தளங்கள் மூலமே அம்பலமாகிவருகிறது. ஏற்கெனவே பல்வேறு சுதந்திர ஊடகங்கள் யோகி அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் நிலையில் அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளில் குரல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் மீதான யோகி அரசின் தாக்குதலைக் கண்டித்து நாடுமுழுவதும் உள்ள ஜனநாயக – முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது.
சந்துரு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram