சம்ப்பை சோரன்: மாநிலக் கட்சிகளில் கருங்காலிகள் உருவாவது ஏன்?

பா.ஜ.க எதிர்க்கட்சிகளை உடைக்கிறது என்பது அக்கட்சிகளை அழிக்கத் துடிக்கும் அதன் பாசிசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.க-வால் எப்படி கட்சிகளை உடைக்க முடிகிறது?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபு சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளும் கட்சியாக உள்ளது. அவரது மகனான முதல்வர் ஹேமந்த் சோரனின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சம்ப்பை சோரன். முதல்வர் ஹேமந்த் சோரன் பணப் பரிமாற்ற (PMLA) வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் பிணையில் விடுதலையாகி வெளியில் வரும் வரையில் கட்சியின் விசுவாசியாக இருந்து  ஏறக்குறைய ஆறு மாத காலம் முதல்வர் பொறுப்பை வகித்தவர் சம்ப்பை சோரன். முதல்வர் பிணையில் திரும்பி வந்தவுடன், நம் ஊர் ஓ.பி.எஸ்-ஐ போலவே பொறுப்பைப் பவ்வியமாக ஒப்படைத்தார்.

ஆனால் ஒரே மாதத்தில் பா.ஜ.க-வின் சகுனியான அமித்ஷாவைச் சந்தித்தார். நாளை (ஆகஸ்ட் 30) பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக அறிவித்து விட்டார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே பாஜகவின் தலைமையுடன் ரகசிய உறவில் இருந்திருக்கிறார் என்று தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பா.ஜ.க-வின் சகாப்தத்தில் இப்படிப்பட்ட பச்சோந்திகள் உருவாவது ஒன்றும் அதிசயம் அல்ல புதியதுமல்ல.

கட்சித் தலைமை தமது இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகவும், தனக்குரிய மரியாதை அங்கு வழங்கப்படவில்லை என்றும் தற்போது குற்றம் சாட்டுகிறார். அதனால் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடலாம் என்று எண்ணியதாகவும், இறுதியில் மோடியின் மீது நம்பிக்கை வைத்து பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் புதிய வாழ்வைத் தொடங்கி விட்டார் ‘பழங்குடி மக்களின் தலைவர்’ சம்ப்பை சோரன்.

தொடர்ந்து ஐந்து முறை அந்தக் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதனால் என்ன? சிவ சேனையில் ஏக்நாத் ஷிண்டே விவகாரத்தில் கையாண்ட அதே பழைய ஃபார்முலாவைத் தான் பா.ஜ.க இங்கும் கையாண்டிருக்கிறது.


படிக்க: ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்


கட்சியின் தலைவரை ஏதோ ஒரு குற்றச்சாட்டில் சிக்க வைத்து கைது செய்து சிறையில் அடைப்பது; அடுத்த நிலையில் இருப்பவரிடம் பதவிக்கும் பணத்திற்கும் பேரம் பேசுவது; படியவில்லை என்றால் தலைவனுக்கு நேர்ந்ததே உனக்கும் நேரும் என்று மிரட்டல் விடுப்பது – இது தான் அந்த பார்முலா. பணம் பதவி மிரட்டல் மூன்றுக்கும் அஞ்சாதிருக்கும் அளவுக்கு சம்ப்பை சோரனிடம் கொள்கை அடித்தளம் ஒன்றும் கிடையாது.

பணிந்து விட்டால் அனைத்தும் ஷேமம் என்பதுதான் இது போன்ற கருங்காலிகளின் இறுதி முடிவு. இப்படி கொள்கைகளை இழந்த கருங்காலிகளும் கிரிமினல் ரவுடிகளும்  இந்து மத வெறி ஜாதி வெறி கொண்ட கும்பலும்தான் இன்று பாஜகவில் நிரம்பி வழிகிறது.

முடிந்தால் சாதி மதக் கலவரத்தை உருவாக்கி மக்களைப் பிளவு படுத்தி மோத விட்டு பெரும்பான்மையின் பக்கம் நின்று ஆட்சியைப் பிடிப்பது. அதில் எதிர்பார்த்த வெற்றி அமையவில்லை என்றால், அடுத்த திட்டம். அதாவது மாற்றுக் கட்சியை உடைப்பது தான் பா.ஜ.க கையாண்டு வரும் நடைமுறை. அதற்குப் பிறகு ரைடு – கைது – சிறை – மிரட்டல் – பணம் – பதவி ஆகியவற்றால் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் சிலரைக் கருங்காலிகளாக்கி அக்கட்சியைப் பிளவு படுத்துவது. ஒரு பகுதியை தனதாக்கிக் கொள்வது மறுபகுதியை சிதறடிப்பது. இதைத்தான் தொடர்ந்தும் செய்து வருகிறது பா.ஜ.க.

தமிழ்நாட்டின் அ.தி.மு.க-வுக்கும் அதே ஃபார்முலாப் படிதான் ஓ.பி.எஸ்-ஐ தயார்ப்படுத்தினார்கள். ஆனால் சசிகலாவும் தினகரனும் இல்லாமல் ஓ.பி.எஸ் ஒன்றுமில்லை என்பதை முன்னறிய முடியாமல் தம் முயற்சியில் தோல்வி அடைந்தது பா.ஜ.க. எடப்பாடி தற்காலிகமாகக் கட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளார்.


படிக்க: எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!


ஜார்கண்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டின் தி.மு.க அ.தி.மு.க, மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ், ஒரிசாவின் நவீன் பட்நாயக் என்று யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படக்கூடும்.

பா.ஜ.க எதிர்க்கட்சிகளை உடைக்கிறது என்பது அக்கட்சிகளை அழிக்கத் துடிக்கும் அதன் பாசிசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.க-வால் எப்படி கட்சிகளை உடைக்க முடிகிறது? எப்படி ஷிண்டேக்களையும் சம்ப்பை சோரன்களையும் உருவாக்க முடிகிறது என்பதை நாம் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள், பாசிச எதிர்ப்பைத் தங்கள் கொள்கையாகக் கொள்ளாமல், பிழைப்பு வாதமாகவும் சந்தர்ப்பவாதமாகவும் நடந்துகொள்வது தான் ஷிண்டேக்களையும் சம்ப்பை சோரன்களையும் உருவாக்குவதை பா.ஜ.க-விற்கு எளிமையாக்குகிறது. எனவே, தங்களது கட்சிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்குக் கூட, பாசிசத்தை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பவையாக அக்கட்சிகள் இருந்தாக வேண்டும்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க