ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாசிச கும்பலானது ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கட்சியைத் தோற்கடித்து பெரும்பான்மையான பழங்குடி மக்களின் வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்காக முஸ்லீம்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகள் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள பழங்குடி மக்களின் வாக்குகளைப் பெற்றுவதற்கு முஸ்லீம்கள் மீதான மத வெறுப்பு பிரச்சாரத்தை ஆயுதமாக எடுத்தது பாசிச கும்பல். அதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை தேர்தல் ஒருங்கிணைப்பாளராக நியமித்தது.
இக்கும்பலானது பழங்குடிகள் பெரும்பான்மையாக வாழும் ஷாந்தல் பர்கானா உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளில் உள்ள முஸ்லீம் மக்களை வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்கள் நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று மத வெறுப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்தியது.
நவம்பர் 12 அன்று ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவில் கடைசி எம்.எல்.ஏ இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம் என்று பேசினார். ஜார்கண்டில் பா.ஜ.க வெற்றி பெற்றால் அசாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இங்கும் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் என்று ஹிமந்த பிஸ்வா சர்மா பேசினார். ஆனால், இவையெல்லாம் பாசிச கும்பலுக்குத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கவில்லை.
அதனால் முஸ்லீம் மத வெறுப்புப் பிரச்சாரத்தைக் கலவரமாக மாற்றும் விதமாக, முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்து ஜே.எம்.எம் கட்சி ஆதரவாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது போன்ற 53 வினாடிகள் கொண்ட போலியான காணொளி ஒன்றை வெளியிட்டனர்.
பா.ஜ.க கலவரத்தைத் தூண்டும் வகையில் காணொளி வெளியிட்டுத் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது தொடர்பாக நவம்பர் 17 அன்று ஜே.எம்.எம் கட்சி சார்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
படிக்க: பா.ஜ.க. இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம்: வெறுப்பைக் கக்கும் அமித்ஷா
தேர்தல் ஆணையம் உடனடியாக காணொளியை நீக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், காணொளி நீக்கப்படாமல் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பலர் அந்த காணொளியைப் பகிர்ந்து கொண்டுதான் இருந்தனர். இந்த காணொளியைப் பரப்பியவர்கள் யார் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
காணொளி வெளியானது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜே.எம்.எம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சுதிவ்யா சோனு குமார், “சந்தால் பகுதியில் வசிக்கும் முஸ்லீம்கள் பெங்காலி பேசுவதினாலே வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர்கள் என்று பாஜக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறினார்.
இக்குற்றச்சாட்டுகளை மறுத்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் “இந்த ஊடுருவல்காரர்கள் சிறுபான்மையினருக்காக அரசு கொண்டுவரும் திட்டங்களைப் பயன்படுத்தி நாட்டின் குடிமக்களாக மாறி உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பறிப்பதோடு பழங்குடி பெண்களைத் திருமணம் செய்துகொண்டு பழங்குடிகளின் நிலத்தை அபகரிக்கிறார்கள் என்று நாங்கள் நெடுங்காலமாகக் கூறி வருகிறோம்” என்று வெறுப்பை உமிழ்ந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த கஃபூர் என்பவர் “நாங்கள் இங்கே இருப்பதற்கான அனைத்து பதிவுகளும் உள்ளன. சிலர் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இங்கு வாசித்து வருகின்றனர்” காவி கும்பலின் மத வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்தினார்.
மேலும், 55 வயதான அன்சாரி கூறுகையில் “இங்குள்ள சந்தால் பகுதி மக்கள் குளம் மற்றும் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்ற நிலையில் தற்போது விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் குழந்தைகளுக்கு போதுமான கல்வி கிடைக்காததால் அவர்களுக்கு ஏற்ற வேலையும் கிடைக்காமல் கல்குவாரிகளுக்கும் வேறு மாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்கின்றனர். ஆனால் இப்பிரச்சனைகள் குறித்து எந்த கட்சியும் விவாதிக்கத் தயாராக இல்லை” என்று தெரிவித்தார்.
இவ்வாறு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காவிக் கும்பல் தீவிரமான முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால், ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் மத்தியில் அது எடுபடவில்லை.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram