“பாஜக-வில் இணைந்துள்ள குறைந்தபட்சம் 21 எதிர்க்கட்சி பெருந்தலைவர்களின் வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களை சுத்தம் செய்யப்பயன்படுத்திய மோடி வாஷிங் மெஷின் விலை ரூ.8500 கோடி. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க வாங்கியுள்ள நிதி” என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளில் பலம் வாய்ந்த தலைவர்கள் ஒன்றிய அரசால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள். பா.ஜ.க-வில் அல்லது பா.ஜ.க கூட்டணியில் இணைந்த தலைவர்களின் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல் மீதான வழக்குகளை சமீபத்தில் சிபிஐ ரத்து செய்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது கடும்விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுவரை பிரபுல் பட்டேல் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க தற்போது மோடி வாஷிங் மெஷின் மூலம் அவரை சுத்தம் செய்துவிட்டதாகவும் கேலி செய்துள்ளது.
மார்ச் 30 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”குற்றப் பின்னணி, ஊழல் கறை படிந்த தலைவர்களையும் பாஜக வரவேற்கிறதா?” என்ற டைம்ஸ் நௌ (TIMES NOW) தொலைக்காட்சியின் நெறியாளர் கேள்விக்கு, “(பா.ஜ.க) கட்சி எல்லோருக்குமானது நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்” என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இது தான் பா.ஜ.க-வின் ’ஊழல் ஒழிப்பு’ யோக்கியதை!
படிக்க: செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஊழல்: அம்பலப்பட்ட பாசிச பா.ஜ.க அரசு!
தற்போது நாம் பாஜக வாஷிங் மெஷின் மூலம் சலவை செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலைப் பார்ப்போம்:
மகராஷ்டிரா
1. அஜித் பவார்
2014 இல் மோடியால் ”ஊழல்வாதி” என்று முத்திரை குத்தப்பட்டார், மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய துணை முதல்வர் அஜித் பவார். பா.ஜ.க – ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணியில் கைகோர்த்ததும் ஊழலற்றவராக தற்போது மாறிவிட்டார் அஜித் பவார்.
2. அஷோக் சவான்
1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் மரணித்தவர்களின் மனைவிகளுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் 31 மாடி கட்டிடத்தின் கட்டுமானத்தில் ஊழல் செய்துள்ளதாக அஷோக் சவானும் அவரது குடும்ப உறுப்பினர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். அமலாக்கத்துறையானது (ED) இந்த ஊழலை விசாரித்து வந்தது.
அவருக்கு போட்டியிட சீட் தந்தபோது மார்ச 2014-இல் ”வெட்கங்கட்ட காங்கிரஸ்” என்று விமர்சனம் செய்த மோடி தான், தற்போது அஷோக் சவானை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியுள்ளார். அவரை நட்சத்திர பிரச்சாரகர் என்றும் அறிவித்துள்ளார். அமலாக்கத் துறையும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
3. பாபா சித்திக்
2017 ஆம் ஆண்டில், குடிசை மறுவாழ்வுத் திட்டம் தொடர்பான நில ஒப்பந்த மோசடி வழக்கில் பாபா சித்திக் தொடர்புடைய வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதனால் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவத காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்காக சித்திக், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையும் தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது.
படிக்க: “ஊழல் நாயகன்” மோடி!
4. சாகன் புஜ்பால்
சரத் பவாரின் தேசியவத காங்கிரஸ் கட்சியில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு, மூன்று திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதனால் அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கு இவர் மீது பதிவு செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டில் சாகன் புஜ்பால் கைது செய்யப்பட்டார்.
சாகன் புஜ்பால் தற்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டதால் அவர் ED வழக்கில் இருந்து தற்போது காப்பற்றப்பட்டுள்ளார்.
5. யாமினி ஜாதவ்
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) நிலைக்குழுவின் முன்னாள் தலைவரான யஷ்வந்த் ஜாதவின் மனைவியும், சேனாவின் முக்கிய MLA-வுமான யாமினி ஜாதவ், அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.
யாமினி ஜாதவ், சிவ ஷேனா கட்சியின் – ஷிண்டே முகாமில் சேர்ந்த பிறகு அவர் மீதும் அவரது கணவர் மீதும் அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
6. ஹசன் முஷ்ரிப்
மார்ச் 2023 இல், பணமோசடி வழக்கு தொடர்பாக மும்பை மற்றும் கோலாப்பூரில் உள்ள முஷ்ரிப்பின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஜூலை 2023 இல், அஜித் பவார் தேசிய காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜகவுடன் கைகோர்க்க முடிவு செய்தபோது, முஷ்ரிப்பும் அவருடன் சென்றார். அதன்பிறகு, அவரது வீட்டில் அமலாக்கத்துறை விசாரணையோ அல்லது சோதனையோ நடத்தவில்லை.
படிக்க: அம்பலப்பட்டுப்போன பாசிச மோடி அரசின் ’ஊழல் ஒழிப்பு’ நாடகம்
7. பிரதாப் சர்நாயக்
2021 இல் 5,600 கோடி மதிப்பிலான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (என்எஸ்இஎல்) ஊழல் தொடர்பாக பிரதாப் சர்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்றது.
ஜூன் 2022 இல், தாக்கரே முகாமுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கைகோர்க்க முடிவு செய்தபோது, அதில் ஒருவராக பிரதாப் சர் நாயக் இருந்தார்.
பிரதாப் சர்நாயக், ஏக்நாத் ஷிண்டே பிரிவினருடன் சென்றவுடன், அமலாக்கத்துறை அவர் மீதான விசாரணையை மட்டுப்படுத்திக் கொண்டது.
8. பாவனா கவாலி
2020 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் யவத்மால்-வாஷிம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கவாலி, உத்கர்ஷா பிரதிஸ்தான் என்ற பொது அறக்கட்டளையில் இருந்து ரூ.7 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
சில மாதங்களுக்குப் பிறகு, அவரது நெருங்கிய உதவியாளர் சயீத் கானை அமலாக்கத்துறை கைது செய்தது. 2021 இன் பிற்பகுதி மற்றும் 2022 இல், கவாலி விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பலமுறை அழைக்கப்பட்டார்.
இருப்பினும், ஜூலை 2022 இல், பாவனா கவாலி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் சேர்ந்தார். அங்கு அவர் மக்களவை தலைமைக் கொறடாவாக அறிவிக்கப்பட்டார்.
அதன்பிறகு அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக்கான சம்மனைக் கூட அவருக்கு அனுப்பப்படவில்லை.
படிக்க: ராம ஜென்மபூமி அறக்கட்டளை : தொடர்ந்து அம்பலமாகும் பல கோடி ஊழல் !
9.கிருபா சங்கர் சிங்
காங்கிரஸின் மகாராஷ்டிர அரசாங்கத்தில் அமைச்சராக கிருபா சங்கர் சிங் இருந்தபோது அவர் மீது 230 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியதாக மத்திய புலனாய்வு அமைப்புகளால் கிருபா சங்கர் சிங் விசாரிக்கப்பட்டு வந்தார்.
2021 ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவர் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கோவா
10. திகம்பர் காமத்
முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மற்றும் மாநில பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சர் சர்ச்சில் அலெமாவோ ஆகியோர் லஞ்ச வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கு முதலில் சிபிஐயால் கையாளப்பட்டது பிறகு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது.
திகம்பர் காமத் மற்றும் அவரது அமைச்சர் சர்ச்சில் அலெமாவோவுக்கு எதிராக 2015 இல் தொடங்கிய விசாரணை 2021 இல் தீவிரமடைந்தது.
அதன் பிறகு செப்டம்பர் 2022 இல், திகம்பர் காமத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலருடன சேர்ந்து பாஜகவுக்குச் சென்றுவிட்டார்.
ஆந்திரப் பிரதேசம
11. சி.எம். ரமேஷ் மற்றும் 12. ஒய்.எஸ்.சௌத்ரி
2021 இல் சி.எம். ரமேஷ் மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி பாஜக வில் இணவதற்கு முன்பு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் கண்காணிப்பில் இருந்தனர். இவர்கள் இருவரும் தெலுங்க தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !
மேற்கு வங்காளம்
13. சுவேந்து அதிகாரி
2017 இல், சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) இருந்தபோது, நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கு தொடர்பாக அவருக்கு பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதன் பிறகு 2020-இல் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். 2021 சட்டசபை தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது மேற்கு வங்க சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் சுவேந்து அதிகாரி.
14. தேபாஷிஷ் தார்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு தொடர்பாக தேபாஷிஷ் தார் மீது 2022 இல் மாநில சிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் மீதும், ரோஸ் வேலி சிட் ஃபண்ட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் சுதிப்தா ராய் சவுத்ரி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமீபத்தில் தனது பணியை ராஜினாமா செய்த மேற்கு வங்க முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தேபாஷிஷ் தார், பிர்பும் தொகுதியில் பாஜக வேட்பாளராக தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்.
படிக்க: ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
ஹரியானா
15. நவீன் ஜிண்டால்
ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நவீன் ஜிண்டால் மீதான மூன்று வழக்குகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் கண்காணிப்பில் இருந்தது.
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் கடந்த வாரம் பா.ஜ.க கட்சியில் இணைந்த சில மணி நேரங்களிலேயே ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தேர்தல் பத்திரங்களின் டாப் பத்து நன்கொடையாளர்களில் ஜிண்டால் குழுமமும் உள்ளது. இதுவரை 202 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை ஜிண்டால் குழுமம் வாங்கியுள்ளது.
ஜார்கண்ட்
16. கீதா கோடா
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் ஊழல் மற்றும் சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2017ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவி தான் கீதா கோடா.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்.பி.யான கீதா கோடா கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார்.
இன்னும் இப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் பலர் உள்ளனர். எதிர்க்கட்சியினரை இவ்வாறு அச்சுறுத்தி தங்கள் கட்சியின் பக்கம் இழுத்துக்கொள்வது தான் பாசிச பா.ஜ.க-வின் ’ஊழல் ஒழிப்பு’ நடவடிக்கை.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube