மோடி ஆட்சியின் மிகப் பெரிய ஊழலான ரபேல் விமான பேர ஊழல் பற்றி எழுதப்பட்ட நூல் மீது எடப்பாடி – மோடி கூட்டணி ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ ஒன்றை புதன்கிழமை நடத்தியது. பாலக்கோட்டில் மோடி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் புஸ்வானமானதைப் போல, இதுவும் இவர்களுக்குக் கேடாய் வந்து முடிந்தது.

‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் என். ராம் வெளிக்கொண்டு வந்த ரபேல் பேர முறைகேடுகள் தொடர்பான செய்திகளை சுருக்கி தொகுத்து நூலாக ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் கொண்டு வந்துள்ளது. எஸ். விஜயன் இதை தொகுத்துள்ளார். இந்நூலின் வெளியீடு பாரதி புத்தகாலயத்தின் சென்னை கடையில் புதன்கிழமை மாலை நடக்க இருந்தது. பத்திரிகையாளர் என். ராம் இந்த நூலை பெற்றுக்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

புதன்கிழமை நண்பகல் வேளையில் ‘பறக்கும் படை’ என சொல்லிக்கொண்டவர்கள், தேனாம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கைந்து காவலர்களுடன் பாரதி புத்தகாலயம் கடைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த 142 நூல்களை ‘கைப்பற்றி’ சென்றனர். ஆளும் எடப்பாடி அரசு மோடி விசுவாசத்தை காட்டும் வகையில் செய்த இந்த ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’, அவர்களுக்கே ஆப்பாக அமைந்தது.

பி.டி.எஃப். கோப்பு தரவிறக்கம் செய்ய : நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்

பாரதி புத்தகாலயத்தில் ரபேல் பேர ஊழல் நூல் கைப்பற்றப்பட்ட செய்தியும் மாலை நடக்கவிருந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதாக வெளியான செய்தியும் சமூக ஊடகங்களில் தீ போல பரவின.  தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரபேல் பேர ஊழல் நூல், பிடிஎஃப் கோப்பாக மாற்றப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

திட்டமிட்டப்படி, நூல் வெளியீடு நடந்திருந்தால் சில நூறு பேருக்கு அந்த நூல் போய் சேர்ந்திருக்கும். ஆனால், போலீசு நடவடிக்கையால் சிறு வெளியீட்டை பலர் தரவிறக்கம் செய்து, படித்து பரப்பிவிட்டனர்.  சமூக ஊடகங்களில் எழுந்த கடுமையான கண்டனங்கள் காரணமாக ‘கைப்பற்றி’க் கொண்டுபோன நூல்களை திரும்பக் கொண்டு வந்து வைத்திருக்கிறது போலீசு.

பிறகு, நூல் வெளியீடு அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் நடந்திருக்கிறது. நூலை வெளியிட்ட என்.ராம், “நூல்களை இப்படி கைப்பற்றி சென்றது சட்டவிரோதமானது. யாரும் படிக்காத நிலையில், தேர்தல் ஆணையம் வேகமாக செயல்பட்டிருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையரிடமிருந்து எனக்கு மாலை போன் வந்தது. இந்நூலை கைப்பற்றச் சொல்லி அவர் ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லை என்றார். இந்த நூல்களை திரும்ப தந்துவிடுவதாகவும் கூறினார்.

இதற்கு முன் இப்படிப்பட்ட சம்பவம் ஏதும் நடந்ததில்லை. இந்த சிறு வெளியீட்டின் விலை ரூ.15 தான்.  இந்த தேவையில்லாத நடவடிக்கையால் இப்போது வாட்சப்பில் வைரலாகிக்கொண்டிருக்கிறது” என டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“கடந்த மூன்று நான்கு நாட்களாக எலி, பூனை விளையாட்டை நாங்கள் ஆடிக் கொண்டிருக்கிறோம். இந்த நூல் வெளியீட்டுக்காக நான்கு அரங்குகளை பேசினோம். இறுதி கட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டோம். இறுதியாக என். ராமை அழைத்து எங்களுடைய புத்தக கடையிலேயே நூல் வெளியீட்டை செய்யலாம் எனத் தீர்மானித்தோம்” என்கிறார் பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தின் ஆசிரியர் பி.கே. ராஜன்.

“அதிகாரிகள் இந்த நூலை அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்றார்கள். ‘என்ன அனுமதி?’ என நாங்கள் கேட்டோம். தேர்தல் காலத்தில் நாங்கள் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கிறோம். அதன்பின் இவர்கள் இந்த நூலைக்கூட விற்கக்கூடாது என்றார்கள். உடன் வந்திருந்த காவலர் 142 பிரதிகளையும் எடுத்துக்கொண்டார். நூல்களை கைப்பற்றியதற்கான ரசீதைக்கூட கொடுக்காமல் அவர்கள் உடனே கிளம்பிவிட்டனர்” என்றார் ராஜன்.

ரபேல் பேர ஊழல் குறித்த சிறுவெளியீட்டை படுவேகமாக ‘கைப்பற்றிய’ தேர்தல் ஆணையம், மோடியின் பொய் பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கும் வகையில் வாக்குப்பதிவு தேதிக்கு முன் வெளியாக இருக்கும் மோடி படத்துக்கு தடை விதிக்க, மறுப்பது ஏன் என பல பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நிலைமை தங்களுக்கு எதிராக திரும்பியதை உணர்ந்த ஆணையத்துக்கு ஆணையிட்டவர்கள், ஆணையத்தை வைத்தே விளக்கம் கொடுக்க வைத்தனர். “தேர்தல் ஆணையமோ அல்லது ஆணைய அதிகாரிகளோ நூலை கைப்பற்ற எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டிருக்கிறேன்” என சத்திய பிரகாஷ் சாகு ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பினார்.

நூலை கைப்பற்றும்படி ‘பறக்கும் படையை’ அனுப்பியது யார் என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் ‘கண்டுபிடிக்கவில்லை’.

படிக்க:
காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !

தேர்தல் ஆணைய விதிகளின்படி, இத்தகைய நூல்களின் வெளியீட்டைத் தடுக்க எந்த அதிகாரமும் இல்லை. தேர்தல் செலவினம் அல்லது விளம்பரம் என்ற வகையில் நூல் வெளியீடு அமைந்தால் மட்டுமே அதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கும் என்கிறார் தேர்தல் அதிகாரி ஒருவர்.

ஆக மொத்தத்தில், ஊழல் காவலாளிக்கு காவலாளியாக இருக்கும் எடப்பாடி அரசு  தேவையில்லாமல் செய்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காவலாளியின் ஊழலுக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளது.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா


வைரல் வீடியோ … தவறாமல் பாருங்கள்…

பெரிய சிலை பட்டேலு உள்ள பாத்தா ரஃபேலு

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க