“எங்களுடைய மூன்று அடுக்கு வீடு கட்டி முடிக்கப்பட்டபோது,  கட்டிடத்தின் உயரமான இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என தீர்மானித்தோம்” என்கிறார் முகமது சஜீத். கடந்த ஹோலி பண்டிகையின்போது இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர் இவர். அன்றைய தாக்குதலில் கை உடைந்துபோய் கட்டுபோட்டு அவரால், இன்னமும் சரியாக நிற்க முடியவில்லை, தலையில் அடித்த அடியால் இன்னமும் மயக்கம் வருவதுபோன்ற நிலையிலே இருப்பதாகச் சொல்கிறார்.

கை முறிந்த நிலையில் முகமது சஜீத்

“ஆனாலும், அவர்கள் பாகிஸ்தானுக்கு போ என்கிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும்? இது எங்களுடைய நாடு; இதை நாங்கள் நேசிக்கிறோம். இருந்தபோதும், பாருங்கள் அவர்கள் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று”.

குருகிராமின் விளிம்பில் உள்ள பூப் சிங் நகரில் சஜீத்தின் வீடு உள்ளது.  இந்துத்துவ கும்பலால் உடைக்கப்பட்ட கண்ணாடி சில்லுகளை அந்த வீடு முழுவதும் பார்க்க முடிந்தது. இரத்தத் துளிகளின் சுவடுகள் இன்னமும் தரையில் இருந்தன. கும்பல் தாக்குதலின் அதிர்ச்சி அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் உறைந்து போயிருந்தது. பலர் இன்னமும் கால், தலை, கழுத்து போன்ற பகுதிகளில் கட்டுப்போட்டு படுக்கையில் படுத்திருந்தனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குக்கூட வெளியே போகத் தயாராக இல்லை.

சஜீத்தின் மூத்த சகோதரர் தொடர்ந்து அழுதபடியே இருந்தார். “எங்கள் குடும்பத்துக்கு என்ன ஆகும் என தெரியவில்லை. எப்படி என் குடும்பத்தை காப்பாற்றுவேன்?” என அழுகிறார்.

மீண்டும் தேசியக் கொடியை பறக்கவிட்டது குறித்த பேச்சு எழுந்தது. சஜீத் சொன்னார், “நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”.

“நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”

குருகிராமிலிருந்து 70 கி.மீ. தள்ளியிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பக்பாட் அருகே உள்ள பாஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்களில் ஒருவர் சஜீத். அவர்களுக்கென்று எந்த நிலமும் சொந்தமில்லை. எனவே அவர்களுக்கு வேலை அவசியத் தேவையாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களில் ஒருவர் அப்போதைய நகரமயமாகி வந்த, தொழிற்சாலைப் பகுதியான குர்கானுக்கு வேலை தேடியும், சிறப்பான வாழ்க்கையைத் தேடியும் வந்தார்.  கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் பணியை அவர் தேடிக்கொண்டார். வாய்ப்புகள் பெருகவே, தன்னுடைய சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராக இங்கே அழைத்துக் கொண்டார். அவர்களுடைய மகன்களும் இங்கே வந்தார்கள்.

பகுதியளவில் உடல் குறைபாடுடைய அவருடைய மூத்த சகோதரரும் இங்கே வந்துவிட்டார். அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அவர்களை பள்ளிக்கு அழைத்து போவார். சில நேரங்களில் அவர்களுடைய கடையிலும் அமர்ந்திருப்பார். அவர்களுடைய பணியை எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச் சாமான்களை பழுது நீக்குதல் வரை நீட்டித்தார்கள். 2006-ம் ஆண்டு ஊரில் இருந்த மொத்த குடும்பத்தையும் இங்கே அழைத்து, குர்கானின் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் குடியமர்த்தினார்கள்.

2015-ம் ஆண்டு தன்னுடைய விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கிய போட்சி என்பவரிடமிருந்து சஜீத் வீடு கட்ட நிலத்தை வாங்கினார். அந்த கிராமத்தில் இவர்கள் கட்டிய மூன்று அடுக்கு வீடு மெச்சக்கூடியதாக இருந்தது.  இது அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம், அதுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாயிருக்கும் என தற்போது இவர்கள் கருதுகிறார்கள்.

மார்ச் 21-ம் தேதி ஹோலி பண்டிகையின் போது, நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் சஜீத்தின் வீட்டில் கூடினார்கள்.  பெண்கள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், பெண் குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், பையன்கள் வெளியே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகளும் அடக்கம்.

கதறி அழும் சஜீத்தின் மூத்த சகோதரர்.

திடீரென்று, மூன்று இருசக்கர வாகனங்களில் முகத்தில் வண்ணங்களை பூசிய ஒன்பது நபர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த பையன்களை கேலி செய்தார்கள். அவர்களை முல்லாக்கள் என அழைத்து வம்பிழுத்தார்கள். ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். அவர்களிடம் மூத்த பையன் விவாதம் செய்தான். அவனை இந்த கும்பல் சூழ்ந்துகொண்டது. பயந்துபோன பையன்கள், இனி இங்கே விளையாட மாட்டோம் என கெஞ்சினார்கள்.

உடனடியாக அங்கிருந்து கிளம்பிய பையன்கள் வீட்டுக்குப் போய், கதவை அடைத்துக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் கழித்து, கைகளில் கட்டையுடன் ஒரு கும்பலாக திரண்டு வந்து வீட்டை சூழ்ந்துகொண்டது.  ‘பாகிஸ்தானுக்கு போ’ என கத்த ஆரம்பித்தது அந்த கும்பல். சிலர் கத்தி, ஈட்டியுடனும் சில ஹாக்கி மட்டையுடனும் ஒருவர் துப்பாக்கியுடனும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கண்ணாடி கதவை உடைத்தனர். கண்ணாடியை உடைத்து உள்ளே வர ஆரம்பித்தனர்.

அந்தக் குடும்பம் கதற ஆரம்பித்த நிலையில், ஆண்களை கட்டையால் தாக்கத் தொடங்கிய அந்த கும்பல். வயதான பெண் ஒருவர் அந்த கும்பலின் காலில் விழுந்து ஆண்களை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். கத்தியைக் காட்டி, அந்தப் பெண்களை கன்னத்தில் அறைந்தார்கள். அலமாரியில் ஒளிந்துகொண்ட ஆறு வயது சிறுமியை பிடித்த அவர்கள், அந்தக் குழந்தையை கொடூரமாக அடித்தார்கள். ஒன்றரை வயது குழந்தையின் தலையை கட்டிலில் மோதி அடித்தார்கள். அந்தக் கூட்டுக்குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் கீழ்தளத்தில் இருந்த இரும்பு கதவுக்குள் ஒளிந்துகொண்டார்கள். அந்த கும்பல் அதை உடைக்க முயற்சித்து உள்ளே வந்தது. பிறகு, பார்த்தவரையெல்லாம் அடித்தது. ஒருவரை அடித்து ஜன்னலிலிருந்து வெளியே தூக்கி எறிந்தது.

தாக்கப்படும் இசுலாமிய குடும்பம்.

உடல் குறைபாடுடைய சகோதரர், குழந்தைகள் சிலரை அழைத்துக்கொண்டு இரண்டாம் தளத்தில் இருந்த வராந்தாவில் ஒளிந்துகொண்டார்.  தனிஷ்டா என்ற பதின்பருவ பெண், அந்த நேரத்தில் சமயோஜிதமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு, இந்த கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை செல்போனில் படம் பிடித்தார். அதுதான் இந்தக் கொடூரமான கும்பல் வன்முறை வெளியே தெரிய காரணமாக அமைந்தது.

இந்த குடும்பத்தையும் அது காப்பாற்றியுள்ளதோடு, தங்களுடைய பாதிப்புகளை உலகத்துக்கு காட்டவும் அது உதவியது. இரண்டாம் தளத்தில் இருந்த இரும்பு கதவை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனாலும் தனிஷ்டா வன்முறையை படமாக்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.  துணிவுமிக்க அந்தப் பெண், கேமராவை மறைத்து வைத்தார். அவர்களை மிரட்டியதோடு, அவரை நோக்கி சுடவும் செய்திருக்கிறார்கள்.

தனிஷ்டா படம் பிடித்ததாலேயே அந்த கும்பல் அந்தக் குடும்பத்தினரை கொல்லாமல் விட்டிருக்கிறது. அடுத்த 15 நிமிடங்களில் அந்த கும்பல் இடத்தை காலி செய்திருக்கிறது. “இரண்டரை நிமிட வீடியோவைத்தான் நீங்கள் பார்த்தீர்கள், அதுவே பார்ப்பதற்கு உங்களுக்கு பயங்கரமாக இருக்கும்” என்கிறார் வீட்டில் உள்ள ஒருவர். “அனுபவித்த எங்களுக்கு இது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்”.

இதையெல்லாம் அண்டை வீட்டார் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தை காப்பாற்றும் விதமாக எவரும் அந்த கும்பலை தடுத்து நிறுத்தவில்லை. “அவர்கள் ஏழைகள். அவர்களும் பயந்திருக்கலாம்” என்கிறார் சஜீத்.  அருகில் வசிக்கும் சிலர், பக்கத்தில் வசிப்பவர்களும் கும்பலுடன் சேர்ந்து வீட்டின் மீது கல்லெறிந்ததாக கூறுகின்றனர்.

குடும்பத்தினர் காவல் உதவி மையத்தை அழைத்ததோடு, இருவர் எட்டு கி.மீ. தள்ளியிருக்கும் காவல் நிலையத்துக்கும் சென்றனர். ஆனாலும் கும்பல் கிளம்பிச் சென்ற ஒன்றரை மணி நேரம் கழித்துதான் போலீசு அங்கே வந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட பிரச்சினை என்றுதான் ஆரம்பக்கட்டத்தில் இந்தத் தாக்குதலை போலீசு அணுகியிருக்கிறது. இது ஒரு வெறுப்பு குற்றம் என வீடியோ ஆதாரம் சொன்னது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இரண்டாவது வீடியோவில், நீண்ட இரும்பு கம்பி மற்றும் கட்டைகளுடன் அக்கும்பல் வீட்டை சூழ்ந்துகொண்டது. இந்த தாக்குதல் குருகிராமில் மதக்கலவர சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டது என்பதை அது வெளிப்படுத்தியது.

எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில், கழுத்து திருகப்பட்ட நிலையில் காயம்பட்ட ஆண்களை போலீசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ஆறு நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், பலர் இன்னமும் வலியுடன் வீட்டில் அவதிபட்டு வருவதை பார்க்க முடிந்தது.

இது மதரீதியிலான தாக்குதல் அல்ல, கிரிக்கெட்டால் வந்த பிரச்சினை என்பதைக் காட்டும்வகையில் இந்த முசுலீம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களை அடித்தார்கள் என காட்டுவதற்காக, கலவர கும்பலைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதாக இந்த குடும்பம் சொல்கிறது.

இந்த குடும்பத்தின் உறவினர்கள் சிலர், இந்த இடத்தை விட்டு, முசுலீம்கள் சூழ்ந்த தங்களுடைய கிராமத்துக்கே திரும்பி விடும்படி சொல்லியிருக்கிறார்கள்.  அங்கே ஒரு வேலையும் இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்கள். ஆனாலும் முசுலீம்களுடன் வசிப்பது பாதுகாப்பானது என கருதுகிறது இந்த குடும்பம். இந்த வீட்டை விற்கவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

“எங்களுக்கு நீதி கிடைத்தால், நாங்கள் ஏன் இந்த இடத்தை விட்டு போகப்போகிறோம்? இது எங்களுடைய நாடு. எங்களுக்கு இங்கே வாழவும் பணியாற்றவும் எங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களை ஒரு கும்பல் பயமுறுத்த முடியாது. நாங்கள் இங்கே எங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வந்தோம். நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம்” என்கிறார் சஜீத்.

சில நாட்கள் கழித்து, இந்த முசுலீம் குடும்பத்தில் உள்ள இருவர் மீது குற்ற வழக்கு பதிந்திருக்கிறது போலீசு. இந்த கும்பல் வெறியாட்டத்தை தலைமையேற்று நடத்திய ராஜேந்திரா என்பவன், இந்த இருவரும் தன்னை தலையிலும் வயிற்றிலும் அடித்ததாக சொல்லியிருக்கிறான்.  அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்ட போலீசு தங்களுடைய ‘கடமை’யை ஆற்றியிருப்பதாக கூறுகிறது.

கும்பல் கொலைகள் குறித்து நாங்கள் விசாரித்து அறிந்த அனைத்து வழக்குகளிலும் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குப் பதிவது என்பது படுமோசமான ஒரே மாதிரியான முறையாக இருக்கிறது. மாட்டை வெட்டினார்கள் என்றும், விலங்குகளை கொடுமைப்படுத்தினார்கள் என்றும் மோசமாக வண்டி ஓட்டினார் என்றும்கூட பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலும்கூட அடைக்கப்பட்டார்கள்.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு போராடுவதற்கு பதிலாக, தங்களை தாங்களே இந்த வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில நேரம் போலீசும் கிராமத்தின் பெரிய மனிதர்களும், நீதிமன்றத்துக்கு வெளியேயான ‘சமரசத்திற்கும்’ ஆளாக வேண்டியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர் தன்னை அடித்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை என சொல்வார்; எனவே, போலீசு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியாமல் கைவிடும்.

இதே போன்ற இழிவான உத்தி குருகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் புதிய இந்தியாவின் புதிய நீதி!

இந்தக் குடும்பம் நீதிமன்றம் செல்லவும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அவர்கள் உடைந்து போயிருக்கிறார்கள். குருகிராமில் தொடர்ந்து வாழ்வது என்கிற அவர்களது தீர்மானம் பலவீனமடையலாம். அவர்கள் இந்த இடத்தை விட்டுப் போவது, வருந்தத்தக்க முடிவாக அமையலாம். வேறுபட்ட மத நம்பிக்கை உடையவர்கள் ஒருங்கிணைந்து நட்புடனும் நம்பிக்கை, மரியாதையுடனும் வாழ்வதே இந்தியா என்கிற கருத்தாக்கம். அதன் மீது செலுத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் இது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் அரங்கேறிய கும்பல் வெறியாட்டத்தை, முசுலீம் படுகொலையை நாடு முழுவதும் நடத்திப் பார்க்க இந்துத்துவ கும்பல் திட்டமிடுகிறது. யாருக்கோ நடக்கிறதென பொது சமூகம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்தால், நாளை இந்த கும்பல் வன்முறை நம் மீதும் திரும்பும் ஆபத்து இருக்கிறது.


கட்டுரையாளர் : Harsh Mander
தமிழாக்கம் : அனிதா

நன்றி: Scroll

4 மறுமொழிகள்

 1. இந்த மாதிரியான செய்திகளில் எவ்வுளவு தூரம் உண்மை தன்மை உள்ளது என்று தெரியவில்லை. வினவுவில் வருவதால் இதன் உண்மைத்தன்மை சதேகத்திற்கு உரியதாக இருக்கிறது.

  ஒரு விஷயம் இந்தியாவில் ஹிந்து முஸ்லீம் பிரிவினைக்கு காஷ்மீர் ஒரு முக்கிய காரணமாக உள்ளது, இந்தியாவின் அரசியல் சட்டம் மதசார்பற்ற ஹிந்து சட்டம் அதனால் இஸ்லாமிய சட்டம் உள்ள பாகிஸ்தானோடு இணைய போகிறோம் என்று காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சொல்வதை, உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களும் பல இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு கொடுக்கின்றன.

  இப்படி காஷ்மீர் இஸ்லாமிய தலைவர்கள் ஹிந்துக்களோடு சேர்ந்து வாழமுடியாது என்று சொல்வதும், அதை நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது இஸ்லாமிய தலைவர்கள் ஆதரிப்பதும், முற்போக்கு என்ற பெயரில் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் இந்தியா ஒழிக பாக்கிஸ்தான் வாழ்க என்று சொல்லும் போது இயல்பாகவே அந்த இடத்தில் வெறுப்பு தூண்டப்படுகிறது.

  இதை தான் பாகிஸ்தானும் சீனாவும் விரும்புகின்றன, அதையே தான் நீங்களும் பல இஸ்லாமிய தலைவர்களும் செய்கிறார்கள்.

  • யார் இந்த மணிகண்டன்? இந்த அளவுக்கு மக்கள மேலே வெறுப்பா இருக்கார்…

   • மக்கள் மீது அல்ல வினவு போன்ற தேசவிரோதிகள் மீதும் மக்கள் விரோதிகள் மீதும் தான் வெறுப்பு… இவர்களின் அடிப்படை நோக்கம் பாக்கிஸ்தான் சீனாவிற்காக இந்தியாவை பலவீனப்படுத்துவது அதற்கு எங்களுக்கு தேசத்தின் மீது எல்லாம் பற்று இல்லை மக்கள் மீது தான் பற்று என்று பொய்யான வேஷம் போடுகிறார்கள்.

    இந்தியாவில் பல ஆயிரம் மக்கள் தீவிரவாதத்தால் பலியாவதற்கு முக்கிய காரணங்களில் கம்யூனிசமும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க