பாசிச யோகி அரசை அடிபணிய வைத்த உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம்!

விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், பேரணி தொடங்கிய நாளின் இறுதிக்குள் விவசாயிகளிடம் பாசிச யோகி அரசு அடிபணிந்து சென்றது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

டந்த பிப்ரவரி எட்டாம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்துமதவெறி சாமியார் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய குழு அமைத்து எட்டு நாட்களில் முடிவெடுக்கும் என்று வாக்குறுதி அளித்ததால் பேரணியானது நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் விவசாய சங்கத்தினரால் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பாலத்தில் இருந்து மதியம் 12 மணி அளவில் தொடங்கிய பேரணியில் 140க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘வளர்ச்சி’த் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட தேசிய அனல் மின் கழகத்தின் (NTPC) கீழ் இயங்கும் என்.டி.பி.சி. தாத்ரி அனல் மின் நிலையத்திற்காக கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும், கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இணையாக புதிய விவசாய நிலங்களை உருவாக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாகும்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள், விவசாயிகள். கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி, என்.டி.பி.சி. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசு தடுத்து நிறுத்தியதால் அங்கு விவசாயிகள் இரவு பகலாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதாக நியூஸ் கிளிக் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இரண்டு மாதங்களாக போராடிய போதும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலே, விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை அறிவித்தனர். பிப்ரவரி ஏழாம் தேதி, கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர்.


படிக்க: நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!


விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாரதிய கிசான் பரிஷத் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் சுக்பீர் கலீபா, “விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது எனக் கருதி நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இதுவரை அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான் இந்த முறை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த வந்துள்ளோம்” என்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகருக்குள் விவசாயிகளின் பேரணி செல்வதை தடுப்பதற்காக உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி போலீசு கூட்டு சேர்ந்து கொண்டு, மாவட்ட எல்லையில் உள்ள டெல்லி-நொய்டா சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தின. ஆயுதப்படை, விரைவு அதிரடிப்படை போன்ற பல பிரிவு போலீசு, தண்ணீர் பீரங்கிகள், கிரேன்கள், புல்டோசர்கள், கண்ணீர் புகை குண்டு வண்டிகளுடன் நிறுத்தப்பட்டன. ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விவசாயிகளை கைது செய்ய பேருந்துகளும் தயார் நிலையில் இருந்தன.

இதனால் விவசாயிகளுக்கும் போலீசுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் சாலையிலே அமர்ந்து முழக்கங்களையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, நொய்டா விரைவுச் சாலையில் அமர்ந்திருந்த விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்பதாக கௌதம் புத் நகர் போலீசு ஆணையர் லஷ்மி சிங் உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகளுடான பேச்சுவார்த்தையில் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர்.

தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும்; விவசாயிகளின் கோரிக்கைகளை ஆராய்ந்து எட்டு நாட்களில் குழு முடிவெடுக்கும் என்றும் போலீசு ஆணையர் உறுதியளித்ததைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகள் முடிவு செய்தனர்.

உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், விவசாயிகள் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என தெரிவித்துள்ளனர். “அரசு எட்டு நாட்களைக் கோரியுள்ளது. அதுவரை காத்திருப்போம். ஒன்றும் நடக்கவில்லை என்றால் மீண்டும் பெரிய அளவில் அணிதிரள்வோம்” என்று தி பிரிண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் விவசாயி சந்தீப் குமார்.


படிக்க: ‘குடியரசு’ தினத்தன்று மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற டிராக்டர் பேரணி!


விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தற்போது கூறுவதும், தங்கள் போராட்ட அனுபவங்களில் இருந்து யோகி அரசை புரிந்து வைத்திருப்பதால் தான். யோகி அரசும் குழு அமைப்பதாக வாக்குறுதி அளித்து இருப்பதும் விவசாயிகளின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத்தான். எனவே வருங்காலங்களில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விவசாயிகளின் பேரணி நாடாளுமன்றம் வரை செல்வதற்குள் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், பேரணி தொடங்கிய நாளின் இறுதிக்குள் விவசாயிகளிடம் பாசிச யோகி அரசு அடிபணிந்து சென்றது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகளில் காவிகளால் முன்னிறுத்தப்படும் உத்தரப்பிரதேசத்தில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை வைத்து மிகத் தீவிரமாக மாநிலம் முழுவதும் இந்துமதவெறி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட சூழலிலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வந்திருப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயகச் சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விசயமாகும்.

உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டமும்; அண்மையில் நாட்டின் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 484 மாவட்டங்களில் நடைபெற்ற டிராக்டர் பேரணியும் இந்துமதவெறி பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற வர்க்கங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றன; உத்வேகம் அளித்து வருகின்றன என்றால் மிகையாது.


சந்திரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க