கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் விவாதத்தின்போது, பார்வையாளர்கள் அரங்கிலிருந்து குதித்த இரண்டு இளைஞர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகைக் குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் வீசி “சர்வாதிகார ஆட்சி ஒழிக”, “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் பீம்” என்று முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் புகைக்குண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி, மணிப்பூர் கலவரம், வேலையின்மைக்கு எதிராக இரண்டு இளைஞர்கள் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டுப் போராடிய சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமிட்ட நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே மற்றும் இதற்கு உதவிய லலித் ஜா ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 14 அன்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு போராடிய இளைஞர்களுக்கு ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா (விவசாய சங்கம்) தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மோடி அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு முன்னாள் தலைவரும், பா.ஜ.க.-வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டம் போன்றவற்றில் இணைந்து போராடிய நீலம் ஆசாத் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜிந்த் மாவட்டம் உச்சானாவில் விவசாய தலைவர்கள் பஞ்சாயத்து நடத்தியுள்ளனர்.
படிக்க: நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!
இதில், நீலம் தேவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், போராடியவர்கள் மீது போடப்பட்ட ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் போராடியவர்களின் வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என மூன்று தீர்மானங்களை விவசாயிகள் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.
மேலும், “விவசாயிகள் போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் நீலம் ஊக்கமாகப் பங்கேற்றவர். போராடியவர்கள் மீது ஊபா சட்டம் பாய்ச்சுவதற்குப் பதிலாக ஒன்றிய அரசு அவர்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். போராடுபவர்களின் குரலை ஒன்றிய அரசு நசுக்குகிறது என நீலம் சரியாகக் சொல்லியிருக்கிறார்,” என்றும் அவர் கூறினார்.
இந்த பஞ்சாயத்தில் கலந்துக்கொண்ட சமூக செயற்பாட்டாளர் சிக்கிம் நைன் “வேலை வாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதை நிறைவேற்றத் தவறிவிட்டது… இந்த இளைஞர்கள் அரசாங்கத்தை உறக்கத்திலிருந்து எழுப்ப எண்ணினர்” என்று கூறினார்.
மேலும், “எங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால், இந்த பிரச்சினையை விவாதிக்க மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுப்போம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள காப் பஞ்சாயத்துகள், விவசாயிகள் அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகளை அழைப்போம். நாங்கள் இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்” என்றார்.
ஹரியானா விவசாயிகள் போல, மோடி அரசின் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இந்த இளைஞர்களுக்கு நாடுமுழுவதும் ஆதரவு குரல்கள் எழ வேண்டும். அதனுடன் நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் எழுப்பிய ”சர்வாதிகாரம் ஒழிக!” என்ற முழக்கம் நாடு முழுவதும் பற்றிப் பரவ வேண்டும்.
அகதா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube