நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.

டந்த டிசம்பர் 13-அம் தேதியன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் விவாதத்தின்போது, பார்வையாளர்கள் அரங்கிலிருந்து குதித்த இரண்டு இளைஞர்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகை குண்டுகளை நாடாளுமன்றத்திற்குள் வீசி “சர்வாதிகார ஆட்சி ஒழிக”, “பாரத் மாதா கி ஜெய்”, “ஜெய் பீம்” என்று முழக்கமிட்டவாறே எம்.பி-க்களின் மேசைகளில் ஏறி சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓடினர். ஒரு பெண் உட்பட இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று புகைகுண்டுகளை வீசி சர்வாதிகார ஆட்சி, மணிப்பூர் கலவரம், வேலையின்மைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டு போராடிய சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமிட்ட நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு தங்க இடமளித்த விக்கி சர்மா என்பவரும் அவரது மனைவியும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டுவந்த மேற்குவங்கத்தை சேர்ந்த லலித் ஜா என்ற இளைஞர் நேற்று டெல்லி போலீசிடம் சரணடைந்துள்ளார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் பேசுபொருளானது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே முழக்கமிட்ட இரண்டு இளைஞர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கியது பா.ஜ.க-வை சேர்ந்த எம்.பி. என்பதனால் இந்த சம்பவத்தை பகிரங்கமாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திருப்ப முடியாமல் அடக்கி வாசித்து வந்தது பா.ஜ.க. “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்”, “நாடாளுமன்ற தாக்குதல்”, “நாடாளுமன்ற மாண்பு சீர்குலைந்துவிட்டது” என எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கூச்சலிட்டன.

ஆனால், ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் கைதான அனைவரும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்கள். நிலையான வேலையற்றவர்கள். நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியவர்களில் மூவர் பட்டதாரி இளைஞர்கள். வேலையின்மையால் பாதிக்கப்பட்டவர்கள். வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இவர்கள், சமூக வலைதளங்களில் பகத்சிங் சமூக ஊடக பக்கத்தின் மூலமாக அறிமுகமாகி இணைந்தவர்கள். பகத் சிங், சேகுவேரா, அம்பேத்கர் போன்றவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.


படிக்க: நாடாளுமன்றத்தில் நுழைந்த ‘தீவிரவாதிகள்’ யார்? | தோழர் மருது


நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கமெழுப்பிய நீலம் ஆசாத் போலீசால் கைது செய்யப்படும்போது, “என் பெயர் நீலம். இந்த இந்திய அரசு எங்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்கிறது. எங்களின் உரிமைகளுக்காகப் பேச முடியவில்லை, காவல்துறை லத்தி சார்ஜ் செய்து எங்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்து சித்திரவதை செய்கிறது. எங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு எந்த ஊடகமும் இல்லை. நாங்கள் எந்த சங்கம் அல்லது குழுக்களை சேர்ந்தவர்களும் இல்லை. நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் மாணவர்கள், நாங்கள் வேலையில்லாதவர்கள்” என்றே முழங்கினார்.

42 வயதான நீலம் ஆசாத், நெட் தேர்வில் தேர்ச்சி, பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.எட்., சி.டி.இ.டி., எம்.பில். ஆகிய பட்டங்களை பெற்றிருந்தபோதும் இந்த நாட்டில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையின்மையின் அவலம் குறித்து குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பேசுவதை வழக்கமாக கொண்ட நீலம், மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஆகிய போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

இவருடன் சேர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே முழக்கம் எழுப்பிய 25 வயதான மாகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஷிண்டே, இந்திய ராணுவம் அல்லது போலீசு துறையில் சேர வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். இவர்கள் இருவருமே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே முழக்கமிட்ட இளைஞர்களில் ஒருவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாகர் ஷர்மா ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். வீட்டிலிருந்து டெல்லிக்கு கிளம்பும்போது “நான் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லிக்கு போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துள்ளார்.

மற்றொரு இளைஞரான கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மனோரஞ்சன் ஒரு பொறியியல் பட்டதாரி. பா.ஜ.க. ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்த இவர்தான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டை பெற்றுள்ளார். ஒரு காலத்தில் மோடியின் ரசிகராக இருந்த இவரைப் பற்றி இவரது தந்தை பேசும்போது, மனோரஞ்சன் நூல்கள் படிப்பதிலும் சமூகசேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்கிறார்.

இது தான் இவர்களின் அடையாளம். ஒன்பதரை ஆண்டுகால மோடி ஆட்சி, அதற்கு முந்தைய ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டு குரல்வளை நசுக்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். தாங்கள் பேசவிரும்பும் வேலையின்மை, பணவீக்கம், மணிப்பூர் கலவரம், மோடியின் பாசிச ஆட்சி போன்ற பிரச்சினைகளை பேசுவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்ட பின்னர் வேறுவழியின்றி நாடாளுமன்றத்தை தங்களுக்கான போராட்டக்களமாக மாற்றியுள்ளனர். பகத்சிங்கால் ஈர்க்கப்பட்ட இவர்கள் அவரின் வழியில், யாரும் காயப்படாத வகையில் நாடாளுமன்றத்திற்குள் வண்ணப் புகைகுண்டுகளை வீசி கேளாத செவிகளை கேட்கவைக்க விரும்பியுள்ளனர்.


படிக்க: எதிர்கட்சிகளே, ஒத்த முடிவுக்கு வாருங்கள்!


இந்த முயற்சிதான் தற்போது தீவிரவாத செயலை போல சித்தரிக்கப்படுகின்றது. ஒருபக்கம் சங்கி கூட்டம் இதனை எதிர்க்கட்சிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் எதிராக திருப்பும் முயற்சியை செய்ய தொடங்கியுள்ளது. ஆனால் மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள், இளைஞர்களின் இச்செயலை மோடியின் பாசிச பேயாட்சியின் வெளிப்பாடாக மக்களுக்கு எடுத்துக்காட்டி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தாமல், பாதுகாப்பு அத்துமீறலாகவும் இளைஞர்களை தீவிரவாதிகளை போலவும் சித்தரிப்பது என்பது அப்பட்டமான மக்கள் விரோத போக்கு.

இதனை எதிர்க்கட்சிகள் ஏதோ அறியாமையில் செய்யவில்லை. நேற்று நடந்த இச்சம்பவத்தை மோடி அரசுக்கு எதிரான உத்தியாக கையாள வேண்டும் என்ற உணர்விலிருந்துதான் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளன. அதிலிருந்துதான் இந்த சம்பவம் நடந்த உடனேயே எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தது, எதிர்க்கட்சி தலைவர்கள் இச்சம்பத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவிவிலக வேண்டும் என்று  நெருக்கடி கொடுத்தது, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக குடியரசு தலைவரை சந்திப்பதாக முடிவு செய்தது, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது ஆகியவற்றை செய்தன எதிர்க்கட்சிகள்.

எதிர்க்கட்சிகள் செய்வதை போல இந்த விடயத்தை மோடி அரசுக்கு எதிரான ஆயுதமாக கையிலெடுக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. அதனை செய்ய வேண்டும் என்கிறோம். ஆனால், மோடி அரசுக்கு எதிரான ஆயுதமாக எதனை கையிலெடுத்திருக்க வேண்டும் என்பதே இங்கு விவாதத்திற்குரியது.

பார்வையாளர்கள் அரங்கிலிருந்து நாடாளுமன்ற அவைக்குள் குதித்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து எம்.பி-க்கள் தாக்கும்போது அந்த இளைஞர்கள், “எங்களை தாக்காதீர்கள், நாங்கள் இங்கு போராட்டம் நடத்தவே வந்துள்ளோம்” என்று எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் எழுப்பிய “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்ற முழக்கம் என்பது நேரடியாக மோடி அரசுக்கு எதிரானது. ஆனால், இது தெரிந்தும் எதிர்க்கட்சி எம்.பி-க்களால் “ஆம், சர்வாதிகாரம் கூடாது” என்று அவர்களுடன் இணைந்து முழக்கம் எழுப்ப முடியவில்லை.

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.

உண்மையில், இந்தவகை பிரச்சாரங்கள்தான் பாசிஸ்களுக்கு உண்மையான நெருக்கடியை தருவதாக அமையும். தங்களின் பாசிச ஆட்சியால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் நால்வர் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தங்களை தேடிவந்து எச்சரித்திருக்கின்றனர் என்பதுதான் பாசிஸ்டுகளின் தூக்கத்தை கலைக்கின்ற விடயம். ஆனால், அதனை கைவிட்டுவிட்டு முழுக்க முழுக்க போலி ஜனநாயக புதைசேற்றுக்குள்ளிருந்து கருத்துகளை தெரிவிக்கின்றன, எதிர்க்கட்சிகள்.

இது ஏதோ “எதிர்க்கட்சிகள் ‘தீவிரவாதிகளுக்கு’ ஆதரவு அளிக்கின்றன” என்று பாசிச கும்பல் திசைதிருப்பிவிடுமோ என்ற அச்சத்தினால் எதிர்க்கட்சிகள் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இல்லை. இயல்பிலேயே, எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியல் என்பது மக்கள் விரோதமானதாகவே உள்ளது.

பாசிஸ்டுகளால் இந்தியாவின் உழைக்கும் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்களை, அவர்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு, பரந்துபட்ட உழைக்கும் மக்களின் பா.ஜ.க – பாசிச எதிர்ப்பை எவ்வாறு தங்களது வாக்குவங்கியாக மாற்றிக்கொள்வது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் உள்ளடக்கமாக உள்ளது. அது இச்சம்பவத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.


தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



1 மறுமொழி

  1. “இது ஏதோ “எதிர்க்கட்சிகள் ‘தீவிரவாதிகளுக்கு’ ஆதரவு அளிக்கின்றன” என்று பாசிச கும்பல் திசைதிருப்பிவிடுமோ என்ற அச்சத்தினால் எதிர்க்கட்சிகள் இளைஞர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இல்லை. இயல்பிலேயே, எதிர்க்கட்சிகளின் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியல் என்பது மக்கள் விரோதமானதாகவே உள்ளது.”
    👆 100 விழுக்காடு உண்மை. இன்றைய எதிர்க்கட்சி நாளை ஆளுங்கட்சியானாலும் பெரு முதலாளிகளின் மறைமுக ஆட்சி தான் தொடர போகிறது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க