எதிர்கட்சிகளே, ஒத்த முடிவுக்கு வாருங்கள்!

பா.ஜ.க.வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இதுபற்றியெல்லாம் விவாதித்து ஒருமித்த கொள்கை முடிவுக்கு வந்தாக வேண்டும். பா.ஜ.க. எதிர்ப்புணர்வை அறுவடை செய்துகொண்டு, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதற்கு பெயர் பாசிச எதிர்ப்பு அல்ல.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 10

மோடி அரசால் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் பல்வேறு பெயர்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை, ஜி.எஸ்.டி., குடியுரிமை திருத்த சட்டம், புதிய தொழிலாளர் நலச் சட்டத்தொகுப்புகள், ஆணையங்கள் போன்ற சட்டத்திருத்தங்கள், விதிமுறைகள், அமைப்புமுறை மாற்றங்கள் ஆகியவை ஒவ்வொன்றும் இந்துராஷ்டிரத்தின் அடிக் கட்டுமானங்கள் ஆகும்.

இவற்றை அப்படியே வைத்துக் கொண்டு, தேர்தல் என்ற ஒரு அரங்கில் மட்டும் பாசிசக் கும்பலை வீழ்த்துவது, எந்தவகையிலும் கோடிக் கணக்கான உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதாகவோ, அவர்களது வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்துவதாகவோ இருக்க முடியாது. மாறாக, பா.ஜ.க. மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கே இது வழிவகுக்கும்.

எதிர்க்கட்சிகள் விவாதித்துக் கொண்டிருக்கும் ‘குறைந்தபட்ச செயல் திட்ட’த்தில், தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தைகள்தான் முதன்மையானவையாக உள்ளனவே தவிர, இன்றுவரை மேலே நாம் விவரித்துள்ள பாசிச ஒடுக்குமுறை ஏற்பாடுகளை ரத்துசெய்வது பற்றி பேசப்படவில்லை.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன. ஜி.எஸ்.டி வரிமுறையை ரத்துசெய்வதில் அனைத்து மாநிலக் கட்சிகளும் உடன்படும்; இக்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, காங்கிரசும் ஜி.எஸ்.டி. ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளலாம்.

புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் எதிர்க்கின்றன. தமிழ்நாடு “நீட்” தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளது. டெல்லி குடிமைப் பணி அதிகாரிகள் பணிநியமனம் மற்றும் பணியிடை மாற்றம் தொடர்பான சட்டத்தை எதிர்ப்பதில் கெஜ்ரிவால் உறுதியாக உள்ளார். ஃப்ரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோருவர்.

ஆனால், எந்த ஓட்டுக்கட்சிகளுமே தனியார்மயம், தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரானவை அல்ல. அப்படியிருக்கும் போது எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற பின்னர் பல கார்ப்பரேட் பேரழிவுத் திட்டங்களை ரத்துசெய்யப் போவதில்லை.


படிக்க:தெலுங்கானா தேர்தலில் தாக்கம் செலுத்திய “பீ டீம்” அரசியல்!


புதிய கல்விக் கொள்கையின் காவி அம்சங்களை எதிர்க்கும் தி.மு.க, மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட் திட்டங்களை வேறு பெயர்களில் அமலாக்கிக் கொண்டிருப்பது, நில ஒருங்கிணைப்புச் சட்டம், 12 மணிநேர வேலைச் சட்டம் போன்ற பல நடவடிக்கைகளில் நாம் இதைப் பார்த்தோம். கேரள சி.பி.எம். அரசு, அதானியின் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தையும் பார்த்தோம்.

இன்னொருபக்கம், சில காவித் திட்டங்களை எதிர்ப்பதிலும் எதிர்க்கட்சி கள் ஒத்த முடிவுக்கு வருவது சிரமம். சான்றாக, “இந்தியா”, கூட்டணியிலிருக் கும் சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, எதிர்க்கட்சிகள் மிகத் தீவிரமான கோரிக்கையாகவே கருதுவார்கள். மேலும், இந்துமதவெறி அமைப்புகளிடம் இக்கட்சிகளுக்கு அச்சமும் உள்ளது. தங்கள் மீது “இந்துவிரோதி” என்று முத்திரை குத்தப்படுமோ என்று அஞ்சுகின்றன. கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, “பஜ்ரங்தள் அமைப்பைத் தடை செய்வோம்” என்று சொன்ன காங்கிரஸ் கட்சி, இப்போது அதுபற்றி பேசுவதையே தவிர்த்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வை தடை செய்வது; மோடியின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அத்தனை காவி கார்ப்பரேட் திட்டங்களையும் ரத்துசெய்வது ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்க்கட்சிகள் பெருகின்ற வெற்றியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. மேலும், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகளைத் தடைசெய்வது மட்டுமின்றி, அவ்வமைப்புகள் வேர்விட்டு வளர்வதற்கு பல்வேறு சாதிவெறிக் கட்சிகள் இடமளிக்கின்றன. இந்த ஆதிக்கச் சாதிவெறிக் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.

ஆகவே, பா.ஜ.க.வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் இதுபற்றியெல்லாம் விவாதித்து ஒருமித்த கொள்கை முடிவுக்கு வந்தாக வேண்டும். பா.ஜ.க. எதிர்ப்புணர்வை அறுவடை செய்துகொண்டு, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பதற்கு பெயர் பாசிச எதிர்ப்பு அல்ல.

இவை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள் வளர்வதற்கு பலவகைகளில் உதவி புரிந்துள்ள, அவற்றால் பெரிதும் பயனடைந்துள்ள அம்பானி, அதானி, அகர்வால், மிட்டல், நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளையர்களின் சொத்துக்களும் ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சாய்பாபா, சங்கராச்சாரி போன்ற கார்ப்பரேட் சாமியார்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

மேலும், பாசிச சக்திகளுக்கு பல்வேறு வகைகளில் துணை புரிந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகள் குறித்து தீர விசாரணை செய்து, அனைவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

எனவே, மிகவும் சாமர்த்தியமாக மேற்குறிப்பிட்டவை பற்றியெல்லாம் பேசாமல் கவர்ச்சிவாத, அடையாள இந்துத்துவ பிரச்சாரங்கள் மற்றும் வாக்குறுதிகள் மூலம் தேர்தலை அணுகியுள்ள எதிர்கட்சிகள் இவை குறித்து ஒத்த முடிவுக்கு வர வேண்டும். அவ்வாறு, ஒத்த முடிவுக்கு வந்த பிறகு, அக்கட்சிகள் மக்களிடம் வந்து வாக்கு கேட்கட்டும்.


நன்றி: தேவை பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு (வெளியீடு)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க