ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 5
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி நடந்துமுடிந்துள்ளது. இத்தேர்தலில் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.), காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பிரதானமாக போட்டியிட்டன.
இந்நிலையில், அடுத்தடுத்து வெளிவரும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள், இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெறும் என்கின்றன. காங்கிரஸ்-க்கு அடுத்த இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சியும் பா.ஜ.க-வும் உள்ளன.
ஒருவேளை, காங்கிரஸ் இம்மாநிலத்தில் வெற்றிபெறுமெனில், அது 2014-ஆம் ஆண்டில் தெலுங்கானா உருவாக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் சந்திரசேகர் ராவ்-இன் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதாக அமையும். இதன் மூலம் “பி.ஆர்.எஸ். கட்சி மூன்றாவது முறையும் தெலுங்கானாவில் ஆட்சியமைக்கும்” என்று சொல்லிவந்த சந்திரசேகர் ராவ்-வின் (கே.சி.ஆர்.) கனவு சுக்குநூறாகும்.
உண்மையில், “பி.ஆர்.எஸ். கட்சி மூன்றாவது முறையும் தெலுங்கானாவில் ஆட்சியமைக்கும்” என்று சந்திரசேகர் ராவ் சொல்லிவந்ததற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. இதற்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சந்திரசேகர் ராவ்-விற்கு எதிரிகளே இல்லை என்றே சொல்லப்பட்டது. ஆனால், “கே.சி.ஆர். பா.ஜ.க-வின் பீ டீம்” என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கையிலெடுத்தது பி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிராக திரும்பத் தொடங்கியது.
ஏனெனில், கே.சி.ஆர்-இன் பி.ஆர்.எஸ். கட்சி நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. கொண்டுவரும் பாசிச சட்டங்களை எதிர்க்காமல் சந்தர்ப்பவாதமாக இருந்தாலும் பொதுவெளியில் பா.ஜ.க-வை மூர்க்கமாக எதிர்ப்பதாகவே காட்டிக்கொண்டது. ஆனால், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கே.சி.ஆர்-இன் மகள் கவிதா மீது வழக்கு தொடரப்பட்டதிலிருந்து, கே.சி.ஆர்-இன் பா.ஜ.க. எதிர்ப்பு அணுகுமுறை மாறத்தொடங்கியது. ஒருபக்கம், கே.சி.ஆர். பா.ஜ.க-வை எதிர்ப்பது குறைந்துவர இன்னொருபக்கம், அச்சமயத்தில் கே.சி.ஆர். அமித்ஷாவை ரகசியமாக சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதும் வெளியில் வந்து அம்பலப்பட்டுப்போனது.
படிக்க:மோடி கும்பல் அடித்த ஸ்டண்டுகள்!
இதனையடுத்து, காங்கிரஸ் இவ்விசயத்தை தனக்கு சாதகமாக கையிலெடுத்தது. கவிதா மீது போடப்பட்ட அதே டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிக்கிய டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் கவிதா ஏன் கைதுசெய்யப்படவில்லை? என்று கேள்வி எழுப்பியது காங்கிரஸ். அதற்கு காரணம், கவிதாவின் தந்தை பி.ஆர்.எஸ். கட்சி பா.ஜ.க-வின் பீ டீம் என்பது தான் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தீவிரமாக முன்னெடுத்தது.
இந்நிலையில், தெலுங்கானாவில் 152 சமூக செயற்ப்பாட்டாளர்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் ஊபா போடப்பட்டிருந்த சம்பவங்கள் எல்லாம் வெளியில் வந்து பி.ஆர்.எஸ். கட்சி பா.ஜ.க-விற்கு பீ டீமாக செயல்படுகிறது என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தியது.
மேலும், ஏற்கனவே பா.ஜ.க-வின் பீ டீம் என அம்பலப்பட்டுப்போன ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி-யுடன் கே.சி.ஆர்-யும் இணைத்து இரண்டு கட்சிகளுமே பா.ஜ.க-வின் பீ டீம் தான் என்று முன்னிறுத்தி காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது பி.ஆர்.எஸ். கட்சிக்கு பெரிய அடியாக விழுந்தது. இந்த பீ டீம் பிரச்சாரத்தை சமாளிக்க முடியாத கே.சி.ஆர், “நாங்கள் யாருடைய பீ டீம்-மும் அல்ல. நாங்கள் மக்களுடைய ஏ டீம்” என்று விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இது, பி.ஆர்.எஸ். கட்சிக்கு செல்லவிருந்த கணிசமான பா.ஜக. எதிர்ப்பு வாக்குகளை குறிப்பாக இஸ்லாமியர்களின் வாக்குகளை காங்கிரசை நோக்கி வரவைத்தது.
தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உழைக்கும் மக்களுக்கான நலத்திட்டங்களை எதனையும் சரியாக அமல்படுத்தவில்லை மக்களின் பொருளாதார நலன்களின் மீது அக்கறையும் காட்டவில்லை என்ற கருத்தும் உள்ளது பத்து வருடங்களாக மக்கள் எந்த வளர்ச்சியையும் தெலுங்கானாவில் கொண்டு வரவில்லை என்ற நிலையும் உள்ளது