பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தோழர் பகத் சிங்கின் 118-வது பிறந்தநாள் இன்று! மனித குலம் சுரண்டலிலிருந்து விடுபடுவதற்கு சோசலிசம்தான் ஒரே தீர்வு என்று அறுதியிட்டுக் கூறியவர் மாவீரன் பகத் சிங். அந்த மாவீரனை நினைவுகூரும் வகையில், மாணவர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எழுதிய கட்டுரையை வாசகர்களுக்கு மீள்பதிவு செய்கிறோம்

***

ன்று பல அதிமேதாவிகள் கூவிக் கொண்டிருப்பது போலவே அன்றும் சிலர் “மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது. அவர்கள் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்க வேண்டும்” என்று கூறிக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட வேண்டிய பொறுப்பிலிருந்து அன்றைய மாணவர்கள் – இளைஞர்களைத் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். ஆளும் வர்க்கத்தின் மனதை மகிழச் செய்வதற்காகத் தாய்நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருந்தனர்.

வெளிப்பார்வைக்கு அதிபுத்திசாலித்தமானதாக தோற்றமளிக்கும் இவர்களது வாதங்களை இக்கட்டுரையின் மூலம் பகத்சிங் தகர்த்தெறிகிறார். அவர்களையும் அவர்களது வாதத்தின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறார். இக்கட்டுரை 1928 ஜூன் கீர்த்தி இதழில் வெளிவந்தது.

மாணவர்களும் அரசியலும்

படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் (மாணவர்கள்) அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சிலர் வீட்டுக் கூரைகளின் மேல் நின்று கொண்டு உரக்கக் கத்துகின்றனர். பஞ்சாப் அரசாங்கமும் அத்தகைய கருத்துக்களைக் கொண்டுள்ளது. மாணவர்கள் கல்வி நிலையங்களில் சேரும் போதே, அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதிமொழியில் கையெழுத்திடுமாறு செய்யப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது கல்வி அமைச்சர் மனோகர் லால், மாணவர்களோ ஆசிரியர்களோ அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது நமது துரதிர்ஷ்டமே. லாகூரில் மாணவர் சங்கங்களாலும் மாணவர் அமைப்புகளாலும் “மாணவர்கள் வாரம்” கொண்டாடப்பட்ட போது சர்.அப்துல் காதரும் பேராசிரியர் ஈஸ்வர் சந்த்தும் மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தினர்.

நாட்டில் அரசியல் ரீதியில் பின்தங்கிய மாகாணமாக பஞ்சாப் வரிசைப்படுத்தப்படுகிறது. ஏன் அவ்வாறு கருதப்படுகிறது? பஞ்சாப் குறைவாகவா தியாகம் செய்துள்ளது. காரணம் என்னவென்றால் நமது கல்வித் துறையின் அதிகாரிகள் கத்துக்குட்டிகள். இன்றைய பஞ்சாப் சட்ட மன்ற அவை நடவடிக்கைகள், நமது கல்வியின் தரம் மிக மோசமான நிலையிலும் பயனற்றதாகவும் இருப்பதையும் நமது நாட்டில் என்ன நடந்தாலும் அதில் இளம் மாணவர்கள் பங்கெடுப்பதில்லை என்பதையுமே நமக்கு காட்டுகின்றன. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி அவர்கள் (மாணவர்கள்) அறியாதவர்களாகவே இருக்கின்றனர். பள்ளிக் கல்வி முடித்து வெகுசிலர் உயர்கல்விக்குச் சென்றாலும் அவர்கள் பேசும் அறிவுக்குப் பொருந்தா குப்பைப் பேச்சுக்களைக் கேட்டு எவரும் சிரிக்காமல் இருக்க முடியாது.

இந்த நாட்டின் ஆட்சியதிகாரம் யாருடைய கைகளுக்குச் செல்லப் போகின்றதோ அந்த இளைஞர்களுக்கு திருப்தியற்ற விதத்தில் கல்வியளிக்கப்படுகிறது. இத்தகைய பெருமுயற்சிகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை யூகிப்பதில் எந்த கஷ்டமும் இல்லை.

மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டும். அவர்களது நேரமும் சக்தியும் முழுவதும் அதற்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் நமது நாட்டின் நிலைமையையும் அந்நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் புரிந்துகொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்வது அவர்களது படிப்பில் ஒரு பகுதி இல்லையா ? அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி பயனற்றது என்றே நான் கருதுகிறேன். அக்கல்வி நம்மை வெறும் எழுத்தர்களாக மட்டுமே ஆக்கக் கூடியது என்றால், அதனை நாம் பெற்றிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அத்தகைய கல்வி நமக்குத் தேவையா?

தந்திரக்காரர்கள் சிலர் கூறுகின்றனர்: “மாணவர்களே, நீங்கள் அரசியலைப் பற்றிப் படிக்கலாம் ; அதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் நடைமுறை அரசியலில் மட்டும் ஈடுபடக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி உங்கள் திறனை வளர்த்துக் கொண்டால் நீங்கள் நாட்டிற்கு அதிகம் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள்”. வெளிப்படையாகப் பார்க்கும் போது இது ஒரு நல்ல ஆலோசனை. ஆனால் இது மேலோட்டமான கருத்து என்பதற்காகவும் நான் இதை நிராகரிக்கிறேன். நான் அதை விரிவாக விளக்குகிறேன். ஒரு மாணவர், பிரின்ஸ் க்ரொபோத்கின் எழுதிய “இளைஞர்களுக்கு அறைகூவல்” (Appeal to the young) எனும் நூலை படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பேராசிரியர், இது ஏதோவொரு வங்காளியின் படைப்பு போல் இருக்கிறதே, அந்த புத்தகம் என்ன புத்தகம் ? என்று விசாரிக்கிறார். அம்மாணவர் பதில் சொல்கிறார்: பிரின்ஸ் க்ரொபோத்கின் பிரபலமான பெயர். பொருளாதாரத்தில் அதிகாரம் பெற்ற மேதை. ஒவ்வொரு பேராசிரியரும் இப்பெயரைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அப்பேராசிரியரின் “திறனைப்” பார்த்து நகைத்துக் கொண்டே அம்மாணவர் மேலும் கூறுகிறார்: அவர் ஒரு ருஷ்ய நாட்டவர். ருஷ்யா என்ற வார்த்தை அப்பேராசிரியருக்கு இடி விழுந்தது போல் கேட்டது. உடனே அவர் சொன்னார்: “நீ ஒரு போல்ஷ்விக் ஏனென்றால் நீ அரசியல் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறாய்”

என்ன ஒரு திறமையான பேராசிரியர் ! பாவம் அந்த மாணவன். அப்பேராசிரியரிடமிருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் ? இத்தகைய சூழ்நிலையில் நமது இளைஞர்களால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

இரண்டாவதாக, “நடைமுறை அரசியல்” என்றால் என்ன என்று நாம் பார்ப்போம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை வரவேற்பதும் அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்பதும் நடைமுறை அரசியல். ஒரு ராயல் கமிஷனை அல்லது வைஸ்ராயை வரவேற்பதற்கு பெயர் என்ன ? அதுவும் கூட அரசியல் இல்லையா? அரசாங்கம் அல்லது நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடையது எதுவானாலும் அரசியல் என்றால், இதுவும் அரசியல் இல்லையா ? ஆனால் என்ன இருந்தாலும் இது அரசாங்கத்தை மனங்குளிரச் செய்கிறது, மற்றதோ அரசாங்கத்தை கோபம் கொள்ளச் செய்கிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நீங்கள் அரசாங்கத்தின் மனமகிழ்ச்சியையும் கோபத்தையும் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள் என்பதே இதற்கு அர்த்தம். பிறந்தது முதற்கொண்டு அரசாங்கத்திற்கு துதிபாடும் கல்வியா மாணவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் ? அந்நிய கொள்ளைக் கூட்டத்தினரால் இந்தியா ஆளப்படும் வரை, அரசாங்க விசுவாசத்தைக் காட்டும் அரசாங்க ஆதரவாளர் (Loyalist) களை நான் துரோகிகள் என்றே கருதுவேன். அவர்கள் மனிதர்களே அல்ல. மிருகங்கள். அவர்கள் தங்களது வயிற்றுக்கு அடிமையானவர்கள் ! இந்த அரசாங்க விசுவாசத்திற்கான பாடத்தைக் கற்குமாறு நமது மாணவர்களை நாம் எவ்வாறு கூற முடியும்?


படிக்க: பகத் சிங் பிறந்தநாள் : இந்திய புரட்சிகரக் கட்சியின் அறிக்கை !


இந்தியாவிற்கு இப்பொழுது, தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, பித்துப் பிடித்தவர்களைப் போல் தங்களது வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்து இந்நாட்டின் விடுதலைக்காக போராடக்கூடிய தேச பக்தர்களே தேவைப்படுகின்றனர். இதை ஏறத்தாழ அனைவருமே ஒப்புக் கொள்வார்கள். அத்தகைய தேசபக்தர்களை வயதானவர்களிடம் நம்மால் கண்டறிய முடியுமா? தங்களது குடும்பம், உலக வாழ்க்கை விவகாரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் புத்திசாலியான மனிதர்களின் மத்தியில் இருந்து அத்தகைய தேசபக்தர்கள் வெளிவருவார்களா ? இல்லை! இத்தகைய விஷயங்களின் பிடியில் இல்லாத இளைஞர்களின் அணிவரிசை களில் மட்டுமே அத்தகைய தேசபக்தர்களைக் காண முடியும். ஆனால் நமது இளைஞர்களுக்கு விஷயங்களைப் பற்றிய நடைமுறை அறிவு கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் மத்தியில் அத்தகைய தேசபக்தர்கள் கிடைப்பார்கள். கணிதம் மற்றும் புவியியல் கேள்விகளுக்கான விடைகளை குருட்டு மனப்பாடம் செய்து கற்றுக் கொள்வது மட்டும் இதற்குப் போதாது.

இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் கல்லூரிகளைத் துறந்து விட்டு ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே ஜெர்மனிக்கு எதிராக போருக்குச் சென்றார்களே, அது அரசியல் இல்லையா? நம்முடைய போதகர்கள் அங்குபோய் அவர்களது படிப்பைத் தொடருமாறு அந்த மாணவர்களிடம் ஏன் சொல்லவில்லை!

தங்களது கல்லூரியைத் துறந்து பரதோலியின் சத்யாகிரகப் போராட்ட வீரர்களுக்கு துணை நின்றார்களே அந்த அகமதாபாத் தேசியக் கல்லூரியின் மாணவர்கள் என்ன முட்டாள்களா ? கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் இளைஞர்களும் மாணவர்களுமே தங்களது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எப்பொழுதும் முன்வரிசையில் இருக்கின்றனர். இந்தியாவின் இளைஞர்களும் மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கியிருப்பதன் மூலம் தங்களது நாட்டைக் காப்பாற்ற முடியுமா ? 1919-ல் இளைஞர்கள் மீது தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அவர்கள் மறக்கலாமா? புரட்சி, இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மாணவர்கள் படிக்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் அதனுடன் கூடவே அவர்கள் அரசியல் அறிவையும் பெறவேண்டும். நேரடி நடவடிக்கை எப்போது தேவைப்படுகிறதோ அப்போது களத்தில் குதிக்கத் தயங்கக் கூடாது. அப்பணிக்காக தங்களது வாழ்க்கையை அவர்கள் அர்ப்பணிக்க வேண்டும். இக் குறிக்கோளுக்காக உயிரைக் கொடுக்கவும் தயங்கக் கூடாது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்கு அது ஒன்றே வழி.

பகத்சிங்


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க