ன்று தோழர் பகத்சிங்கின் 114-வது பிறந்தநாள் ! மனித குலம் தன் மீதான அனைத்து விதமான சுரண்டலிலிருந்து விடுதலை பெற்று மீண்டெழுவதற்கான ஒரே தீர்வு சோசலிசம்தான் என்று அறுதியிட்டுக் கூறிய மாவீரன் பகத் சிங் ! நாட்டை அடிமையாக்கி மக்களின் உழைப்பை வரிகள் மூலம் ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பகத் சிங் !

பகத் சிங்கும் பல்வேறு புரட்சியாளர்களும் இணைந்து செயலாற்றிய இந்திய புரட்சிகர அமைப்பை நிறுவியவர்களுல் ஒருவர் சசிந்திர நாத் சன்யாலால். ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் (Hindustan Republican Association) என்ற அந்த புரட்சிகர அமைப்பின் முன்னணியாளர்கள் வெள்ளை அரசாங்கத்தால் வேட்டையாடப் பட்ட பின்னர், சந்திரசேகர் ஆசாத், பகத்சிங் முதலானோர் வெள்ளையாதிக்கத்தை தூக்கியெறியும் புரட்சிகரப் பணியில் இறங்கினர். இந்த அமைப்பின் செயல்பாடுகளை, காந்தி உள்ளிட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த ‘பெருந்தலைவர்களின்’ கண்டனக் குரல்களால் முடக்க முடியவில்லை.

படிக்க :
♦ நான் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பிலிருந்து விலகியது ஏன் ? ஜெய் கோலியாவின் அனுபவம்
♦ நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்

“இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன்” என இந்த அமைப்பின் பெயரில் சோசலிசத்தையும் இணைத்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல் புதிய சோசலிசக் குடியரசை உருவாக்குவதையும் தமது இலட்சியமாகக் கொண்டு செயல்படத் துவங்கினர். இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன் அமைப்பு துவக்கப்பட்ட போது, 1924-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நள்ளிரவிலிருந்து  மறுநாள் 1925-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி விடிகாலைக்குள் வட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது இந்தக் கட்சி அறிக்கை.

இந்தக் கட்சி அறிக்கையில் ** குறியீடு செய்யப்பட்டுள்ள பத்தியைத் தவிர அனைத்து அம்சங்களையும் பகத்சிங் ஏற்றுக் கொண்டார். அந்த குறிப்பான பத்தியில் ஏன் தமக்கு உடன்பாடில்லை என்பதை தனது “நான் ஏன் நாத்திகன்” என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார் பகத் சிங்  ! பகத் சிங்கின் 114-வது பிறந்த நாளான இன்று அவரது நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! அவரது கனவான ஒரு சமதர்ம அரசை கட்டியமைப்போம் !

000

இந்திய புரட்சிகரக் கட்சிப் பத்திரிக்கை*
ஜனவரி 1, 1925

தொகுதி -1
(நேர்மையான இந்தியன் ஒவ்வொருவரும் இதனை முழுமையாகப் படிக்கவும், தனது நண்பர்கள் மத்தியில் சுற்றுக்கு விடவும் வேண்டும்).

இந்திய புரட்சிகரக் கட்சி அறிக்கை

புதிய நட்சத்திரம் ஒன்று உதிப்பதற்கு அமைதியற்ற நிலை அவசியம்” ஒரு புதிய உயிரின் பிறப்பு, வலியோடும் வேதனையோடும் இணைந்ததே. இந்தியாவும் இன்று ஒரு புதிய பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தவிர்க்க முடியாத விளைவாகிய அமைதியற்ற நிலையையும் வேதனையையும் இப்போது கடந்து கொண்டிருக்கிறது. எல்லா முன்கணிப்புகளும் – பயனற்றவையென நிரூபணமாகவிருக்கும் வேளையில் அறிவாளிகளும் பலசாலிகளும் மிக எளியவர்களாலும் பலவீனமானவர்களாலும் தடுமாற்றமுறப் போகும் வேளையில், மாபெரும் பேரரசுகள் நொறுங்கி விழவும் புதிய தேசங்கள் உதித்தெழவும் போகின்ற வேளையில், இந்தியர்கள் தங்களுக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட பங்கை ஆற்றுவார்கள். அவர்கள் தங்களுக்கே உரிய அனைத்து புகழொளியாலும் பெருஞ்சிறப்பாலும் மனித குலத்தையே வியப்பில் ஆழ்த்துவார்கள்.

உலகத்தை அதன் அடி ஆழத்தில் இருந்து உலுக்கிக் கொண்டிருக்கும் இந்தப் புதிய சக்தி – திரை மறைவில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்தப் புதிய எழுச்சி, இந்தியாவின் இளைஞர்களிடத்திலும் வெளிப்படுகிறது. அது, அறிவாளிகளாலும் படித்தவர்களாலும் இகழ்ச்சியாகக் கருதி புறக்கணிக்கப்பட்டதும் – ஒருசில பைத்தியக்காரர்களின் காட்டுமிராண்டிக் கனவு என்று வர்ணிக்கப்பட்டதுமான ஒரு இயக்கத்தின் வடிவத்தை எடுத்துள்ளது. இளம் இந்தியாவின் புரட்சிகர இயக்கமே கவனித்தற்குரிய அந்த இயக்கமாகும்.

இப்புரட்சிகர இயக்கமானது, பலவீனமானவர்களை குலைநடுங்கச் செய்கிறது. உடல் உறுதியும் ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கோ எழுச்சியூட்டுகிறது. ஆனால் தன்னலப் பெருக்குடைய அறிவாளிகளையும் படிப்பாளிகளையும் திகைப்படையச் செய்கிறது. வசந்தத்தின் வருகையை எவ்வாறு ஒருபோதும் தடுத்து விட முடியாதோ, அவ்வாறே இந்த இயக்கத்தையும் ஒருபோதும் அழித்துவிட முடியாது. அது எதற்காக உருவெடுத்ததோ அந்த அரசியல் செயல் திட்டத்தை அது நிறைவேற்றும் வரைக்கும் அது ஒருபோதும் அழியாது. கொடுங்கோலர்கள் அதை ஒடுக்குவார்கள். அவநம்பிக்கையுடையவர்கள் அதை பழித்துரைப்பார்கள். குழப்பமுற்றவர்கள் பலரறிய அதை கண்டனம் செய்வார்கள். ஆனால் சிந்தனைகளையும் கொள்கைகளையும் வாள் வலிமையால் ஒருபோதும் அழித்துவிட முடியாது. உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து பிறந்த உன்னதமான உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கவோ பழித்துரைக்கவோ முடியாது.

தேசத்தில் பிறந்திருக்கும் புத்துயிரின் வெளிப்பாடே இந்தப் புரட்சிகர இயக்கம். இவ்வுயிரை கண்டனம் செய்வது என்பது, ஒருவர் தனது சொந்த அறிவையே கண்டனம் செய்வதாகும்.

இருபது ஆண்டுகால ஈவிரக்கமற்ற அடக்கு முறையால் இதனை அழித்துவிட முடியவில்லை. புகழ் பெற்ற மக்கள் தலைவர்களின் பழி தூற்றல்களால், புண்படுத்தும் கண்டனங்களால் இந்த இயக்கத்தின் நிலையான வளர்ச்சியை தடுத்துவிட முடியவில்லை. இந்த இயக்கம் முன்பிருந்ததைக் காட்டிலும் இன்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இப்புரட்சிக்கரச் கட்சியின் வெற்றிவாய்ப்புகள் இப்போது இருப்பதைப் போல் முன்னெப்போதும் இவ்வளவு பிரகாசமாய் இருந்ததில்லை எதிர்காலம் உறுதி செய்யப்பட்டதாய் இருக்கிறது.

எந்தவொரு இந்தியனும், அந்நிய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை கண்டிப்பதற்காக வேண்டி, இப்புரட்சிகரக் கட்சியின் இருப்பை மறுதலிக்காமல் இருக்கட்டும். இந்தியாவை ஆள்வதற்கு அந்நியர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே அவர்கள் கண்டனம் செய்யப்பட வேண்டும். இந்த நாட்டை விட்டே துரத்தப்பட வேண்டும். அவர்கள் ஏதோவொரு குறிப்பிட்ட வன்முறைச்செயல் அல்லது குற்றம் செய்து விட்டார்கள் என்பதற்காக அல்ல. இவையெல்லாம் அந்நிய ஆட்சியின் இயல்பான விளைவுகளே. இந்த அந்நிய ஆட்சி கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும். இந்தியாவை ஆள்வதற்கு வாள் வலிமையின் நியாயத்தைத் தவிர வேறெந்த நியாயமும் அவர்களுக்கு இல்லை . ஆகவே புரட்சிகரக் கட்சியும் கூர்வாளைக் கையிலெடுக்க நேர்ந்தது. ஆனால் புரட்சிகரக் கட்சியின் கூர்வாளோ அதன் நுனியில் கொள்கைகளையும் தாங்கி நிற்கிறது.

அமைப்புரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட, ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம், இந்திய ஐக்கிய மாநிலங்களின் கூட்டாட்சிக் குடியரசை (Federal Rebublic of United States of India) நிறுவுவதே அரசியல் அரங்கில் புரட்சிகரக் கட்சியின் உடனடி நோக்கமாகும். இக்குடியரசின் இறுதி அரசியலமைப்பானது, இந்திய மக்கள் பிரதிநிதிகள், தங்களது முடிவுகளை செயல்படுத்துவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கும் வேளையில் வடிவமைக்கப்பட்டு அறிவிக்கப்படும். ஆனால், பொதுவாக்குரிமையும், மனிதன் மனிதனால் சுரண்டப்படுவதை சாத்தியமானதாக்கும் எல்லாவிதமான அமைப்பு முறைகளையும் இல்லாதொழிப்பதுமே இக்குடியரசின் அடிப்படைக் கொள்கைகளாக இருக்கும்.

படிக்க :
♦  ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

உதாரணத்திற்கு, ரயில்வேக்கள் மற்றும் பிற போக்குவரத்துத் தகவல் தொடர்பு சாதனங்கள், சுரங்கங்கள் மற்றும் உருக்கு, கப்பல் உற்பத்தி போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஆகிய அனைத்தும் தேசவுடைமையாக்கப்படும். இக்குடியரசில், வாக்காளர்கள் விரும்பினால் தங்களது பிரதிநிதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமையினையும் அவர்கள் பெற்றிருப்பார்கள். அவ்வாறு இல்லையெனில் ஜனநாயகம் என்பது ஒரு கேலிக்கூத்து ஆகிவிடும். இக்குடியரசில், நிர்வாகத் துறையினரைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் தேவையேற்பட்டால் அவர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரத்தையும் சட்டமன்றம் பெற்றிருக்கும்.

வெவ்வேறு தேசங்களின் வேறுபட்ட நலன்களை மதிப்பதன் மூலமும் அவற்றிற்கு உத்தரவாதமளிப்பதன் மூலமும் உலகில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதே இக்கட்சியின் இறுதி இலக்கு. எனவே, புரட்சிகரக் கட்சி ஒரு தேசியக் கட்சி அல்ல. மாறாக, அதன் உள்ளுணர்வில் அது சர்வதேசியக் கட்சியாகும். இது, வெவ்வேறு தேசங்கள் மற்றும் அரசுகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்குமேயொழிய, அவற்றிற்கிடையிலான போட்டியை அல்ல. இதைப் பொறுத்தவரை புகழோங்கியிருந்த கடந்த காலத்தின் மகா இந்திய ரிஷிகளின் அடிச்சுவட்டையும் நவீன காலத்தில் போல்ஷ்விக் ரஷ்யாவின் அடிச்சுவட்டையும் கட்சி பின்பற்றும். மனிதகுலத்தின் நன்மை என்பது இந்தியப் புரட்சியாளர்களுக்கு பயனற்ற சொல்லோ வெற்றுச் சொல்லோ அல்ல. ஆனால் பலவீனமானவர்களால், கோழைகளால், அதிகாரமற்றவர்களால் தங்களுக்கும் நன்மை செய்ய முடியாது ; மனிதகுலத்திற்கும் நன்மை செய்ய முடியாது.

மதவாதப் பிரச்சனையைப் பொறுத்தவரை, மற்ற மதத்தினரின் நலன்களோடு எவ்விதத்திலும் முரண்படாத வரையிலும் பல்வேறு மதத்தினர் கோரும் எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டுமென்று புரட்சிகரக் கட்சி சிந்திக்கிறது. அதுவே மிகக் குறுகிய எதிர்காலத்தில் வெவ்வேறு மதத்தினரிடையே மனப்பூர்வமான, ஓருயிர் போன்ற ஒற்றுமைக்கு இறுதியாக இட்டுச் செல்லும்.

பொருளாதார மற்றும் சமூக நல அரசியல் அரங்கில் கட்சியானது, எத்தனை பெரிய அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு கூட்டுறவு உணர்வைப் பேணி வளர்க்கும். தனியார் மற்றும் ஒருங்கு திரட்டப்படாத வியாபார நிறுவனங்களுக்குப் பதிலாக கட்சியானது கூட்டுறவு சங்கத்திற்கு ஆக்க மளிக்கும்.

ஆன்மீக அரங்கில் கட்சியானது, புறக்கணிக்கப்படுவதற்கும் இழிவாக நினைக்கப்படுவதற்கும் இந்த உலகம் ஒரு மாயையோ கற்பிதமோ அல்ல; மாறாக அது அனைத்து அதிகாரங்கள், அனைத்து ஞானம் மற்றும் அனைத்து அழகின் முழுமுதல் மூல ஆதாரமாக விளங்கும் தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆன்மாவின் வெளிப்பாடு எனும் உண்மையை நிலைநாட்டுவதையும் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.**

புரட்சிகரக் கட்சியானது, தனக்கென சொந்தமான கொள்கையினையும் செயல் திட்டத்தையும் கொண்டுள்ளது. வெளிப்படையாகத் தெரிந்த காரணங்களுக்காக கட்சி தனது இரகசியங்கள் அனைத்தையும் வெளியிட முடியாது. ஆனால் நமது சொந்த மக்களைக் காட்டிலும் அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக் கூடும் என்பது உறுதி செய்யப்படும்போது, கட்சியின் திட்டம் மற்றும் செயல்முறைகளைப் பற்றி எவ்வித தயக்கமும் இன்றி பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படும்.

இப்புரட்சிகரக் கட்சியானது காங்கிரசுடனும் அதன் வெவ்வேறு கட்சிகளுடனும், எப்போது சாத்தியமோ அப்போது ஒத்துழைப்பு; எங்கே தேவையோ அங்கே விலகிச் செல்லுதல் என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. ஆனால் இக்கட்சி, இந்நாட்டில் நடைபெறும் அரசியலமைப்பு சார்ந்த போராட்டங்கள் அனைத்தையும் வெறுப்போடும் ஏளனத்தோடுமே பார்க்கிறது. அரசியலமைப்பே இல்லாத இடத்தில், அரசியலமைப்பு சார்ந்த வழிமுறைகளின் மூலம் இந்தியாவின் கடைத்தேற்றம் சாத்தியம் எனச் சொல்வது ஒரு கேலிக்கூத்து.

சமாதானபூர்வமான, சட்டப்பூர்வமான வழிமுறைகளின் மூலம் இந்தியாவின் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியும் என்று சொல்வது ஒரு சுய ஏமாற்று வேலை. தன்னுடைய வசதிக்கேற்ப சமாதானத்தை முறிப்பதில் தீர்மானகரமாக எதிரி இருக்கும்போது, ஒரு தரப்பினர் மட்டும் ‘என்ன ஆனாலும் சமாதானத்தை கைவிடக்கூடாது’ என தனக்குத் தானே உறுதியெடுத்துக் கொள்ளும் போது, “சட்டப்பூர்வமான” எனும் நேர்த்திமிக்க சொற்றொடர் தனது கவர்ச்சி, முக்கியத்துவம் அனைத்தையுமே இழந்துவிடுகிறது.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கட்சிக் கோட்டையை பலப்படுத்துவோம் !

அந்நிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற முழுமையான சுயாட்சியினையே இந்தியா விரும்புகிறது என்று தெளிவான வார்த்தைகளில் சொல்வதற்கு நமது மக்கள் தலைவர்கள் தயங்குகின்றனர். அவர்கள், மாபெரும் கொள்கைகளால் பெறப்படும் உந்துதல் மூலமாகவே தேசங்கள் பிறக்கின்றன என்ற உண்மையை அறியாதவர்களாக இருக்கின்றனர். முழுமையான சுயாட்சி எனும் உணர்வை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஆன்மீகக் கொள்கையானது, வெளித் தோற்றத்தில் மாண்புமிக்கதாகத் தோன்றினாலும் அதனை ஆன்மீகம் என்று அழைப்பது கடினமே. மிகத் தெளிவான வார்த்தைகளில் உண்மையைச் சொல்வதற்கும், கொள்கை என்று பெயர் சொல்லத் தகுதியான கொள்கை ஒன்றை இத்தேசத்தின் முன் வைப்பதற்கும் வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளது.

எங்களது கொள்கை, அமைப்பு ரீதியிலானதொரு வழியில் மனிதகுலத்திற்கு சேவை செய்வது. ஆனால், அடிமைத்தளை அல்லது அடிமைத்தனத்தின் கீழ் இந்தியா இருக்கும் வரையிலும் – அது பிரிட்டிஷ் இந்தியாவாக இருக்கும் வரையிலும் – இந்தியாவால் இக்கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்க முடியாது. இக்கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுமானால் இந்தியா, தனித்த, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும். இச்சுதந்திரத்தை, சமாதானபூர்வமானதும் அரசியலமைப்பு சார்ந்ததுமான வழிமுறைகளின் மூலம் ஒருபோதும் பெற முடியாது. பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் சட்டங்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவையுமல்ல; அவற்றின் மீது இந்தியர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என்பதை ஒரு குழந்தை கூட புரிந்து கொள்ள முடியும். பிரிட்டிஷ் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் மூலமாக, பிரிட்டிஷ் இந்தியாவை, ஒரு இந்திய ஐக்கிய மாநிலங்களின் கூட்டாட்சிக் குடியரசாக ஒருபோதும் மாற்ற முடியாது.

இளம் இந்தியர்களே, உங்களது கனவுகளை உதறித் தள்ளுங்கள். துணிவான இதயத்துடன் யதார்த்தங்களை எதிர்கொள்ளுங்கள். போராட்டங்களையும் துன்பங்களையும் தியாகங்களையும் தவிர்க்காதீர்கள். தவிர்க்க முடியாதது எதுவானாலும் அது வந்தே தீரும். இனிமேலும் தவறாக வழிகாட்டப்பட்டவர்களாக இருக்காதீர்கள். அமைதியையும் நீடித்த சமாதானத்தையும், சமாதானப்பூர்வமான, சட்டப் பூர்வமான வழிமுறைகளின் மூலம் உங்களால் அடையவே முடியாது. மாபெரும் ஆங்கில எழுத்தாளராகிய திரு. ராபர்ட்சனின் பின்வரும் நினைவிற் கொள்ளத்தக்க வார்த்தைகள் இந்தியாவின் அறிவாளிகளை மேலும் அறிவாளிகளாக ஆக்கக்கூடும்:

  • “(ஐரிஷ் மக்களை) கொடுமையின் மூலம் அடக்கி வைக்க இங்கிலாந்தால் முடியுமேயொழிய; நீதி மற்றும் பரந்த மனப்பான்மைக்கு உள்ளே நின்று அதனால் வாதம் செய்ய முடியாது எனும் உயிர் இரகசியத்தை பிரிட்டிஷாரின் வாக்குமூலங்கள் எவருக்குக் காண்பித்ததோ, அந்த ஐரிஷ் தலைவர்கள் மற்றும் ப்ராட்டஸ்டன்ட் தலைவர்களின் சாதனைதான் சீர்திருத்தத்திற்கான இந்த இயக்கமும் செயல் திட்டமும்” (ஹானோவர்களின் கீழ் ஆங்கில மக்கள் (English under the Hanoverians) பக்கம். 197).

இந்திய மக்கள் தலைவர்களோ இன்னமும் இந்த உயிர் இரகசியத்தை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் அறிவிலிகளாகவே இருப்பதற்குத் தேவையான அளவிற்கு முட்டாள்தனமான அறிவாளிகளாக இருக்கின்றனர்.

ஆயுத பலத்தின் மூலம் இந்தியாவை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் பற்றுக் கொண்டிருப்பது முட்டாள்தனமானது என்று இந்தியாவிலுள்ள அறிவாளிகள் சொல்கின்றனர். ஆனால், உலகிலுள்ள மொத்த மனித இனத்தில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் இந்திய மக்களை, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஆங்கிலேயர்களால், ஆயுதபலத்தைக் கொண்டு அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியும் என்பதும் அதற்குச் சமமான அல்லது இன்னும் அதிகமான முட்டாள்தனமே என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஒரு நூற்றாண்டு ஆண்டார்கள் என்ற வரலாற்று உண்மையின் நம்பகத்தன்மை குறித்தே வருங்கால சந்ததியினர் சந்தேகம் கொள்வர். அவர்களுக்கு இது நினைத்துப் பார்க்கவே முடியாததாக இருக்கும்.

பயங்கரவாதம் மற்றும் அனார்க்கிஸம் பற்றி இன்னும் ஒருசில வார்த்தைகள். இந்த இரண்டு வார்த்தைகளும் இந்தியாவில் இன்று மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் புரட்சியைப் பற்றி ஏதேனும் குறிப்பிட வேண்டியது வருகிறதோ அங்கெல்லாம் இவ்வார்த்தைகள் மாறாமல் தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால், இந்தப் பெயர்களுக்குப் பின்னால் புரட்சியாளர்களை பழித்துரைப்பது மிகவும் வசதியானதாக இருக்கிறது. இந்தியப் புரட்சியாளர்கள், பயங்கரவாதிகளோ அனார்க்கிஸ்டுகளோ அல்ல. அவர்கள் நாட்டில் குழப்பம் விளைவிப்பதை ஒருபோதும் இலக்காகக் கொண்டவர்களில்லை. எனவே அவர்களை அனார்க்கிஸ்டுகள் என்று அழைப்பது ஒருபோதும் பொருத்தமானது அல்ல. பயங்கரவாதம் ஒருபோதும் அவர்களின் நோக்கமல்ல. எனவே அவர்களை பயங்கரவாதிகள் என்றும் அழைக்க முடியாது.

பயங்கரவாதம் மட்டுமே இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டுவந்துவிடும் என்று அவர்கள் நம்பவில்லை. பதிலடி கொடுப்பதற்கு பயனுள்ளதொரு வழிமுறையாக அவ்வப்போது பயங்கரவாதத்தைக் கையிலெடுக்கக் கூடும் என்ற போதிலும், பயங்கரவாதம் என்பதற்காகவே பயங்கரவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அந்நியர்கள் வெற்றிகரமாக இந்திய மக்களை அச்சுறுத்தி வைத்திருக்க முடிந்திருப்பதன் காரணத்தினாலேயே தற்போதைய அரசாங்கம் நிலைத்திருக்கிறது. இந்திய மக்கள், தங்களது ஆங்கில எஜமானர்களை நேசிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் இங்கிருப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷாரைப் பார்த்து அவர்கள் பயந்து நடுங்கும் காரணத்தினால் அவர்களுக்கு உதவி செய்கின்றனர். இந்த பயம்தான், இந்தியர்களை புரட்சியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டவிடாமல் தடுக்கின்றதேயொழிய; அவர்களை நேசிக்கவில்லை என்பதனால் அல்ல.

அதிகாரப்பூர்வ பயங்கரவாதம் (அரசு பயங்கரவாதம்) கட்டாயமாக எதிர் – பயங்கரவாதத்தின் மூலம் எதிர்கொள்ளப்பட வேண்டும். இன்று நமது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் முற்றிலும் நிராதரவானதொரு உணர்வே ஊடுறுவிப் பரவியுள்ளது. சமுதாயத்தில் இருக்க வேண்டிய சரியான உணர்வுகளை மீட்டெடுப்பதற்குரிய பயனுள்ளதொரு வழிமுறை பயங்கரவாதமே. அத்தகைய உணர்வுகள் இல்லையென்றால் முன்னேற்றம் கடினமானதாகவே இருக்கும். அது மட்டுமின்றி, ஆங்கில எஜமானர்களும் அவர்களால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் கைக்கூலிகளும் இடையூறுகள் ஏதுமின்றி, வரம்புகளின்றி தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சாத்தியமான அனைத்து இடைஞ்சல்களையும் தடைகளையும் ஏற்படுத்த வேண்டும். பயங்கரவாதம் சர்வதேச முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. ஏனெனில் பயங்கரவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் இங்கிலாந்தின் ஜென்ம விரோதிகள் அனைவரையும் ஒருமிக்க இந்தியாவை நோக்கித் திருப்பலாம்.

அந்நிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் தங்களது சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் இழைக்கப்படும் கொடுஞ்செயல்களின் மூலம் புரட்சியாளர்களின் உணர்ச்சிகள் தூண்டிவிடப்படுகின்றன. இருந்த போதிலும் தற்போதைய இயக்கத்தில் எவ்வித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று புரட்சிகரக் கட்சியானது வேண்டுமென்றே தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது. ஏனென்றால் கடைசி அடியைக் கொடுப்பதற்கான தருணத்திற்காக புரட்சிகரக் கட்சி காத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், சூழ்நிலையின் தேவை கோரும் போது, கட்சியானது, எவ்விதத் தயக்கமும் இன்றி பயங்கரவாத நடவடிக்கைகளில் துணிந்து ஈடுபடும். அப்போது, அந்நிய ஆட்சியாளர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் – அவர்கள் இந்தியனாகவோ ஐரோப்பியனாகவோ இருந்தாலும் சரி, உயர்ந்தவனாகவோ தாழ்ந்தவனாகவோ இருந்தாலும் சரி அவர்கள் ஒவ்வொருவரும் உயிர்வாழ்வதே சகித்துக் கொண்டிருக்க முடியாததாக ஆகிவிடும். ஆனால் அப்போதும் கூட, பயங்கரவாதம் என்பது தங்களின் நோக்கமல்ல என்பதை கட்சி ஒருபோதும் மறக்காது.

தாய்நாட்டின் அரசியல் மற்றும் சமூக விடுதலைக்காக தங்களின் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க சித்தமாய் இருக்கும் சுயநலமற்ற, அர்ப்பணிப்பு மனம் கொண்ட தொண்டர்களின் படை ஒன்றை அமைப்பதற்கு கட்சியானது இடைவிடாது முயற்சி செய்யும்.

தேசங்களின் உருவாக்கம் என்பது, தங்களது சொந்த வசதிகள் அல்லது நலன்ககளைக் காட்டிலும், தங்களது சொந்த உயிர்கள் அல்லது தங்களால் நேசிக்கப்படுபவர்களின் உயிர்களைக் காட்டிலும், தங்களது நாட்டைப் பற்றிய எண்ணத்திலேயே அதிக கவனம் செலுத்தக்கூடிய – பெயர் அறியப்படாத ஆயிரமாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களின் தியாகங்களையே வேண்டுகிறது என்பதை அவர்கள் எப்போதும் நினைவிற் கொண்டிருப்பர்.

(ஒப்பம்) வி.கே.,
தலைவர்,
மத்தியக்கமிட்டி, இந்தியப் புரட்சிகரக் கட்சி.

0-0-0-0

*ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோஷியேசன் (HRA) -ன் இக்கட்சி அறிக்கை 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சசிந்த்ர நாத் சன்யாலால் எழுதப்பட்டது. இக்கட்சி அறிக்கை 1924 டிசம்பர் 31-க்கும் 1925 ஜனவரி 1-ம் நாளுக்கும் இடைப்பட்ட இரவில் ஏறத்தாழ வடஇந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் வினியோகிக்கப்பட்டது என்று சிவவர்மா எழுதுகிறார்.
ஆதாரம்: ‘தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ – சிவவர்மா, 1986 வெளியீடு.

** இந்தப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள விசயங்களில் தனக்கு உடன்பாடு துளியும் இல்லை என்பதை பகத்சிங் “நான் ஏன் நாத்திகன்” கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார்.

நூல் : கேளாத செவிகள் கேட்கட்டும் …
தொகுப்பும் தமிழும் : த. சிவக்குமார்
வெளியீட்டகம் : நெம்புகோல் பதிப்பகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க