வெங்காயம், உருளைக் கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்க வகை செய்யும், “அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்ட மசோதா – 2020″-ஐ மோடி அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரத்தில் இரண்டு விவசாய திருத்தச் சட்ட மசோதாக்களைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்த 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கடந்த செவ்வாய்க் கிழமை (22-09-2020) அன்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர். அந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்ட மசோதா – 2020-ஐ மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொண்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு.
கோடிக்கணக்கான மக்களின் உணவிலும், விவசாயிகளின் வாழ்விலும் மண்ணள்ளிப் போடும் இத்தகைய சட்டத்தை எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் கமுக்கமாக நிறைவேற்றியிருக்கிறது பாஜக. மறைந்திருந்து தாக்குவதையே அறமாகக் கொண்ட ராமனை உயர்த்திப் பிடிக்கும் பாஜக கும்பலிடம் இதை விட வேறு என்ன நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்?
படிக்க :
♦ கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
♦ ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !
தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவை அனைத்தும் இந்திய அரசினால் அத்தியாவசியப் பொருட்களாக பட்டியலிடப்பட்டிருந்தன. மக்களின் அடிப்படை உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இந்த அடிப்படை உணவு வகைகள் அத்தியாவசிய பொருட்களாக 1955 முதல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் இந்தப் பொருட்கள் பெருமளவில் பதுக்கப்படாமலும், இவற்றின் விலை வரம்புமீறிப் போகாமலும் இருந்து வந்தது. பஞ்சம், விளைச்சல் குறைவு போன்ற காலகட்டங்களில் மட்டுமே இவற்றின் விலை உயர்ந்தது. மற்றபடி பதுக்கலின் காரணமாக விலை உயர்வு ஏற்படாமல் தடுக்க ஏற்கெனவே இருந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் வழிவகை செய்தது. இதன் மூலம் இந்தப் பொருட்களை பதுக்கும் வியாபாரிகளைக் கடுமையாக தண்டிக்க வழிவகை செய்தது.
இந்தச் சட்ட மசோதா குறித்துப் பேசிய மத்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக துணை இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹிப் தாதாராவ் குறிப்பிடுகையில், தற்போது நாடு உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து இவற்றை தற்போது நீக்கியுள்ளதாகவும், தேசியப் பேரிடர்கள், போர், விலைவாசி உயர்வுடன் கூடிய பஞ்சம், போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வரம்பு விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது உற்பத்தியில் தன்னிறைவு பெறாததால் ஒரு பொருளை அத்தியாவசியப் பொருள் பட்டியலில் இவ்வளவு நாட்கள் வைத்திருந்ததாக புதியதொரு விளக்கத்தை அளிக்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் என்பவை ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு உறுதி செய்தளிக்கப்பட வேண்டிய – உயிர்வாழ அவசியமான பொருட்களே ஆகும். மக்கள் வாழ அவசியமான உணவுப் பொருட்களை எவ்வித பதுக்கலும் இல்லாமல் தங்குதடையின்றி குறைந்த விலையில் கிடைக்கச் செய்யவே உணவு தானியப் பொருட்களும், எண்ணெய் வித்துக்களும் அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கப்பட்டன. ஆகவே உற்பத்தி தன்னிறைவு பெறுவதற்கும் ஒரு பொருள் அத்தியாவசியப் பொருளா இல்லையா எனத் தீர்மானிப்பதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
எனில் இந்தச் சட்ட திருத்தத்தின் உண்மையான நோக்கம் என்ன ? அதையும் மத்திய இணை அமைச்சரே மேற்பூச்சாக விளக்குகிறார். ‘‘இதுவரை இருப்பு வைக்க தடை இருந்ததால், அவை விவசாய உள்கட்டமைப்பில் முதலீடுகளை தடுத்தன. இந்த தடை நீக்கப்படுவதன் மூலம், விவசாய துறையில் தனியார் துறைகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.” என்கிறார்.
விவசாய உட்கட்டமைப்பில் தனியார், வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்த அத்தியாவசிய பொருட்கள் சட்டம் தடையாக இருந்துள்ளது. உதாரணத்திற்கு, வட இந்தியாவின் பெருவாரியான உழைக்கும் மக்கள் உருளைக் கிழங்கை அதிகமான அளவில் உட்கொள்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் இவ்வளவு நாள் உருளைக் கிழங்கு இருப்பதால், இதன் விலை பெருமளவில் ஏறவில்லை. அதற்கு முக்கியக் காரணம், பெரும் நிறுவனங்களோ, வியாபாரிகளோ உருளைக் கிழங்கை வாங்கி பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி விற்பனை செய்ய முடியாது. தற்போது அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து உருளைக் கிழங்கு நீக்கப்படும் சூழலில், கார்ப்பரேட்டுகளின் பதுக்கல் காரணமாக இதன் விலை கடுமையாக உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால் அமைச்சரோ, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தின் மூலம் இவற்றை கார்ப்பரேட் வேளாண் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் வாங்குவதற்கான வாய்ப்பு இருப்பதால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் அரசின் உறுதிமொழி இலக்கை எட்ட உதவுவதுடன், எளிதாக வர்த்தகம் புரிய வழி வகுக்கும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர்.
படிக்க :
♦ லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
♦ புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
இந்தச் சட்ட திருத்த மசோதாவோடு, மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகளில் விவசாயிகளுக்களுக்கான (அதிகாரமளித்தல் & பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா மூலம் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வதில் இனி அரசு தலையிடாத பட்சத்தில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோரும் அடிமாட்டு விலைக்கு விளை பொருட்களை விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. இந்நிலையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கம் நிறைவேறும் என்று அமைச்சர் கூறுவது வக்கிரத்தின் உச்சம். இந்த விவசாய மசோதாக்கள் சட்டமாக்கப்பட்ட பிறகு விவசாயிகளின் தற்கொலைகள் இரட்டிப்பாவதற்கான அபாயம்தான் இருக்கிறதே ஒழிய வருமானம் இரட்டிபாகப் போவதில்லை.
பல ஆண்டுகளாகவே, வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்கும் முறையை மாற்றுமாறு உலக வர்த்தகக் கழகம் தொடர்ந்து நிர்பந்தித்து வந்ததையும், கடந்த ஜனவரி மாதம் முதல் முகேஷ் அம்பானியும், கவுதம் அதானியும் விவசாய மற்றும் உணவுப் பொருள் விற்பனைத்துறையில் நுழைந்திருப்பதையும் இணைத்தே தற்போது கொண்டுவந்திருக்கும் மூன்று விவசாய மசோதாக்களைப் பார்க்க வேண்டும்.
நாட்டின் அனைத்துத் துறைகளிலும் தங்களது சுரண்டலை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தி வரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், அந்நிய நிதியாதிக்க நிறுவனங்களுக்கும் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த விவசாயத்துறையையும், உணவுப் பொருள் மொத்த மற்றும் சில்லரை விற்பனைத் துறையையும் இந்த மசோதாக்கள் மூலம் அள்ளிக் கொடுத்திருக்கிறது இந்த மசோதா. உணவுப் பொருள் விற்பனையில் அனுமதிக்கப்படும் இத்தகைய கார்ப்பரேட் கொள்ளையை இன்றே தடுக்கத் தவறினால், இதன் விளைவாக ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் காரணமாக பசியாலும் பட்டினியாலும் பெருவாரியான மக்கள் சாகும் நிலையை விரைவில் கண்கூடாகக் காணவிருக்கிறோம் என்பது திண்ணம் !
சரண்