ஒப்பந்த சாகுபடிச் சட்டம்  : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

மிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டத்தை கடந்த அக்டோபர் 30  நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. கடந்த 2018, மே மாதத்திலேயே மைய அரசு இந்தச் சட்டத்தை இயற்றியிருந்தாலும், மாநிலங்களைப் பொருத்தவரையில் தமிழகத்தில்தான் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், உரிய விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறுகிறது, தமிழக அரசு.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநில அளவில் அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வருவாய் நிர்வாகத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்து அரசு அதிகாரிகள்; நிறுவனம் அல்லது கொள்முதலாளர் பிரதிநிதிகள் இருவர், விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் இருவர், வேளாண் வல்லுநர் ஒருவர் என அரசால் முன்மொழியப்படும் ஐந்து பேர் என மொத்தம் 10 பேர் அங்கம் வகிப்பர். ஒப்பந்தச் சாகுபடி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்த அமைப்பு தலையிட்டுத் தீர்த்து வைக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று சட்டவிதிகள் கூறுகின்றன.

சத்தியமங்கலத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.

”இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர்  அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்  விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தங்களது விளைபொருட்கள்  அல்லது கால்நடைகள் அல்லது கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை,  ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்குப்  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பால், இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்” எனக் கூறுகிறது தமிழக அரசு. மேலும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலையைப் பெறுவதில் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டால், அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று உரிய விலை கிடைக்க உத்தரவாதம் செய்யும் என்றும் தமிழக அரசு கூறுகிறது.

”தமிழக அரசின் இந்தப் பிரகடனங்களைக் கேட்கும்போது கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஒப்பந்த சாகுபடி மூலம் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கப் போவதாகவும், அப்படி நிர்ணயிக்கப்பட்ட விலையை எந்தச் சூழ்நிலையிலும் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொல்லும் மத்திய அரசுகள், விளைபொருட்களுக்குத் தாங்கள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை விடயத்தில் இதனைக் கடைப்பிடிக்கிறார்களா?

நெல், கோதுமை, பருத்தி உள்ளிட்ட 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு தீர்மானிக்கிறது. இந்த விலை உற்பத்திச் செலவை ஈடுகட்டக் கூடியதாக, விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் தரத்தக்கதாக இருக்கிறதா? சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி நெல் விவசாயிகளுக்கு 50 சதவீத இலாபம் கிடைக்கும்படி விலை நிர்ணயிக்க வேண்டுமென்றால், இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,428/- என நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு நிர்ணயித்திருக்கும் விலை ரூ.1,815/- இதனால் உழவர்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.613/- நெல்லுக்கு மட்டும் அல்ல, அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் 23 பயிர்களுக்கும் இதேநிலைதான். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்ய மறுத்துவரும் அரசு, ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தின் கீழ் தனியாரிடமிருந்து விவசாயிகள் கோரும் விலையைப் பெற்றுத் தரும் என நம்ப இயலுமா?

நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி கரும்பு விவசாயிகள் எடப்பாடி வீட்டை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு நிர்ணயித்தாலும், இப்பயிர்கள் அனைத்தையும் மைய, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதில்லை. நெல்லும் கோதுமையும் மட்டும்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பயிர்களும்கூட முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை. மொத்த விளைச்சலில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. எஞ்சிய விளைச்சலை விவசாயிகள் வெளிச்சந்தையில்தான், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாகவோ அல்லது இடைத்தரகர்கள் வழியாகவோ விற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விற்கும்போது, வியாபாரிகள், இடைத்தரகர்கள் வைப்பதுதான் விலை.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களோ விவசாயிகளைச் சுரண்டும் கொள்ளைக் கூடாரமாக மாறி வெகுநாளாகிவிட்டது. அங்குள்ள அதிகாரிகள் மண்டி வியாபாரிகளின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறார்களேயன்றி, விவசாயிகள் மீது கிஞ்சித்தும் அக்கறை காட்டுவது கிடையாது.

கடந்த ஜூன் மாதம் 19 தேதி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தபட்சம் ரூ.3,500/- அதிகபட்சமாக ரூ.4,500/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 19 முந்தைய வார ஏலத்தில் ரூ.6000/- விற்பனையான பருத்தி அடுத்த வாரமே ரூ.2,500 வரை சரிந்து விழுந்தது. இந்த அடிமாட்டு விலையை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்ட பிறகுதான் மறுஏலம் நடத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பயிருக்கும் அரசு நிர்ணயித்த விலைகூடக் கிடைக்காமல் விவசாயிகள் நட்டமடைவது பொருளாதார விதி போலவே மாறிவிட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசின் பொதுக் கொள்முதலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால், அரசோ விவசாயிகளின் கோரிக்கைக்கு நேர் எதிராகக் கொள்முதலில் மேலும் தனியாரின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தக் கூடிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், அரசு விவசாயிகளின் பக்கம் நிற்கும் என்பதைக் கேட்கும்போது, கரும்பாலை அதிபர்கள் தமக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தரக் கோரி கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் தான் நமது நினைவுக்கு வந்து போகின்றன.

தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் 2013 முதல் 2016 வரை மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை விவசாயிகளுக்குத் தராமல், ரூ.1217 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர்.  கரும்புக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் விலையை ஆலை அதிபர்கள் உரிய கால வரம்புக்குள் தராவிட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், நிலுவையைத் தரக் கோரிப் போராடும் விவசாயிகளின் மீதுதான் சட்டம் பாய்ந்திருக்கிறதேயொழிய, எந்தவொரு ஆலை அதிபரும் நிலுவையைத் தராத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக, அரசு அவர்களுக்குப் பணச் சலுகைகளை வாரியிறைத்திருக்கிறது.

ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தில் கொள்முதலாளர் அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் என அரசு பொதுவாகக் குறிப்பிட்டாலும், இச்சட்டத்தைப் பயன்படுத்த முனைப்பு காட்டுபவை பேயர், இமாலயா ஹெல்த்கேர், ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், அதானி குழுமம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்கிறார் வேளாண் எழுத்தாளர் பாமயன்.

ஒப்பந்தச் சாகுபடிச் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வீடுகளில் பாலும் தேனும் பெருகி ஓடப் போவதைப் போல அரசு கூறினாலும், அனுபவங்கள் அதற்கு நேர்எதிராக, விவசாயிகளுக்குப் பாதகமாக, மென்மேலும் அவர்களை நட்டமடையச் செய்வதாக, கடனாளியாக மாற்றுவதாகத்தான் அமைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, பாரம்பரியமாக நெல் விளைவித்து வந்த தாய்லாந்து விவசாயிகளை, கரும்பு பயிரிடுவதன் மூலம் அதிக இலாபம் கிடைக்குமென ஆசைகாட்டி, அவர்களை ஒப்பந்த விவசாயத்தில் இறக்கிவிட்டது, தாய்லாந்து அரசு. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஏக்கருக்கு 10 டன்கள் வரை கூடுதலாக விளைந்து விவசாயிகளுக்கு அதிகப்படியான பணம் கிடைத்ததாகக் கூறினார்கள். ஆனால், குறைவாக விளைவித்தபோது கடனின்றி இருந்த விவசாயிகள், ஒப்பந்த விவசாயம் மூலம் கூடுதலாக விளைவித்தாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டதையும், உலக அளவில் ஒப்பந்த விவசாய முறையால் விவசாயிகளுக்கு நன்மை இல்லை என்ற அனுபவத்தையும் பாமயன் சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத்தில் பெப்சி நிறுவனம் தனது அனுமதியின்றி, தனது உருளைக்கிழங்கு ரகத்தைத் தன்னோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளாத விவசாயிகள் பயிரிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, பல கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டதும், அதனை எதிர்த்து விவசாயிகள் போராடிய பிறகுதான் அந்நிறுவனம் பின்வாங்கியது என்பதும் நம் நாட்டு அனுபவம்.

ஒப்பந்த சாகுபடி சட்டத்தின்படி, நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் பயிர் வகைகளை உற்பத்தி செய்து கொடுக்க விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும். இதற்கான விதை, உரம், பூச்சிக் கொல்லிகள், பிற தொழிநுட்பங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனங்களே வழங்கவும் சட்டம் இடமளிக்கிறது. இந்த உள்ளீடு பொருட்களுக்கான தொகையை, அறுவடை முடிந்த பின்னரோ அல்லது இடையிலோ நிறுவனங்கள் வசூல் செய்து கொள்ளவும், விவசாயிகள் அதனைக் கட்ட முடியாது போனால், நிலக் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதன் மூலம் எதை விதைக்க வேண்டும், எந்தவிதமான உள்ளீடு பொருட்களைப் பயிர்களுக்குப் போட வேண்டும் என விவசாயிகள் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை பறிக்கப்படுவதோடு, சிறு, நடுத்தர விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படும் அபாயமும் ஒளிந்திருக்கிறது. மத்திய கால பண்ணையார்கள் இடத்தில் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டுவந்து வைக்கிறது, இச்சட்டம்.

படிக்க :
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

”குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்து, பொதுக்கொள்முதலை விரிவுபடுத்து, தரமான விதை மற்றும் உள்ளீடு பொருட்களை மானிய விலையில் வழங்கு” என்பவைதான் விவசாயிகளின் கோரிக்கை. ”குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதை நிறுத்து, பொதுக் கொள்முதலைக் கைவிடு, கொள்முதல் செய்வது மற்றும் உணவு தானியங்களை சேமிப்பது ஆகிய இரண்டிலும் தனியார் நிறுவனங்களை அனுமதி” என்பதுதான் கார்ப்பரேட்டு முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை. விவசாயிகளின் நலனைக் காப்பது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கோரிக்கையை சட்டமாக்கி, ஒப்பந்த சாகுபடி என்னும் சிலந்தி வலைக்குள் விவசாயிகளைத் தள்ளத் துடிக்கிறது அரசு.

அமுதன்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

1 மறுமொழி

  1. இந்த சட்டம் விவசாயத்தை வணிக நிறுவனங்கள் கையில் சிக்க வைப்பதுடன், இது நாள் வரை அரசு செய்து வந்த, தந்துகொண்டிருந்த சேவைகளை நிறுத்தவும் தான். மேலும் இந்தச் சட்டத்தை வணிகப் போட்டி இருந்தால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எல்லாவற்றையும் வணிகர்கள் கையில் விட்டு விடுகிறது. விவசாயமே அவர்கள் வழிப்படியாக மாற்ற முயல்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க